துலக்கம் – மறுபதிப்பு

2014ஆம் ஆண்டு விகடன் பதிப்பகத்தின் வழியாக வெளியானது துலக்கம் நாவல்.

அமெரிக்காவில் காணாமல் போன ஆட்டிச நிலையாளச் சிறுவன் ஒருவனை மூன்று நாட்களுக்குப்பின் வசிப்பிடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடித்ததாகவும்; அப்படிக் கண்டுபிடிக்க அவர்கள் அடைந்த சிரமத்தையும் விவரித்தது செய்தி.
மற்ற நாடுகளை விடக் கொஞ்சம் புரிதல் உள்ள அமெரிக்கா மாதிரி மேலைநாடுகளிலேயே ஆட்டிச நிலையாளச் சிறுவர்கள் காணாமல் போவதும், அவர்களைக் கண்டுபிடிக்க அந்தக் காவல்துறை திணறுவதுமான பல செய்திகள் காணக் கிடைத்தது. போதிய விழிப்புணர்வு இல்லாத நம் ஊரில் இப்படியான ஒரு சிறுவன் காணாமல் போனால், இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்ற எண்ணமே இக்கதைத் தோன்றக் காரணமானது.
இக்கதை எழுதும் போது நம் நாட்டில் இப்படியான சம்பவங்கள் பெரியதாக நிகழவில்லை. அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஆம்! ஆட்டிச நிலையாளர்கள் காணாமல் போவதும், அவர்களில் சிலர் உயிருடனும் சிலர் உயிரற்ற உடலாகவே திரும்பக் கிடைப்பதும் இங்கேயும் நிகழத்தொடங்கிவிட்டன.

2019இல் மும்பையில் தொலைந்துபோன தருண்குப்தாவை இன்றும் அவனது பெற்றோர்தேடி வருகின்றனர். இத்தருணத்தில் தான் அச்சில் இல்லாத எனது துலக்கம் நாவல் 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டிச விழிப்புணர்வு மாதமான ஏப்ரல் 2024 இல் வெளியாகி உள்ளது.
இம்முறை இந்த நாவலை மயில்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலினைப் பெற விரும்பும் நண்பர்கள் கீழ்காணும் சுட்டியின் வழியே பெற்றுக்கொள்ளலாம்.

https://bookpick.in/books/thulakkam/

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆவணம், தன் முனைப்புக் குறைபாடு, புனைவு, மதியிறுக்கம், மனிதர்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , , , , , , , | Leave a comment

ஆட்டிசம் – துண்டு அறிக்கை

ஆட்டிசம் எளிமையாக உணர்ந்துகொள்ளும் வழிகள் என 20 ஓவியங்களைக் கொண்டு, ஒரு துண்டு அறிக்கை தயார் செய்து பரவலாக மக்களிடையே கொண்டு சேர்ந்த்தோம்.

அந்த துண்டு அறிக்கையை மக்கள் பலரும் கேட்பதால் அந்த கோப்பை இணையத்தில் வலையேற்றி வைத்துள்ளோம். வேண்டுவோர் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யலாம்.

துண்டறிக்கை

சுட்டியை சொடுக்கவும்: ஆட்டிசம் விழிப்புணர்வு துண்டு அறிக்கை

++++++++++++++++++~~~~~~~~~~~~~~~~~~~~~++++++++++++++++

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , | Leave a comment

அபூவின் செல்லக்குட்டி – புதிய சிறார்நாவல்

விரைவில்..
Posted in சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை | Tagged , , , | Leave a comment

அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

“எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன்.

இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம்.

“நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது.

“எப்படிடா கிடைச்சது..?”

“மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மாடிக்குப் போனேன். அங்கே காக்கைகள் கூட்டமாக அமர்ந்து, ‘கா..கா..’ன்னு கரைஞ்சுகிட்டு இருந்துச்சு. என்னடான்னு பார்த்தேன். ரெண்டு கிளிக் குஞ்சுகளை அதுங்க கூட்டமாகச் சேர்ந்து கொத்திக்கிட்டு இருந்துச்சுங்க. நான் ஓடிப்போய், ஒரு துணியை எடுத்து, காக்கைகளை விரட்டி அடிச்சேன்” என்று தனது சாகசத்தைச் சொன்னான்.

“ம்! அப்புறம்?” 

“யாருக்கும் தெரியாம அந்த ரெண்டு கிளிகளையும் அட்டைப் பெட்டிக்குள்ள போட்டு, மாடிப்படிக்குப் பக்கத்திலேயே ஒளிச்சு வச்சிருக்கேன்.”

“மூச்சு முட்டாது?”

“அதெல்லாம் ஆவாதுடா… அட்டைப்பெட்டியில் சின்னச் சின்னதா ஓட்டைகள் போட்டிருக்கேன்!”

“எனக்கு ஒண்ணு குடுடா!” என்று கேட்டான் ஹரிஹரன்.

“இருடா அவசரப்படாதே… அது எப்படியும் குஞ்சு பொரிக்கும். அப்ப உனக்குத் தாரேன்.”

“அப்ப எனக்கு?”

“எனக்கும் ஒண்ணுடா?”

“எல்லாருக்குமே தருவேன்டா..” என்றான் அப்துல்லா.

விளையாட்டு வகுப்பு முடிந்து, அடுத்த பாடவேளைக்கு வகுப்பறைக்குள் வந்தும்கூட அவனது மனம் அந்தக் கிளிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

பள்ளி விட்டதும் முதல் ஆளாய் பாய்ந்து வெளியில் வந்தான் அப்துல்லா. ஓட்டமாய் ஓடித் தன் வீட்டை அடைந்தபோது, கதவு சாத்தி இருந்தது. உள்ளே அம்மா இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டவன், புத்தகப் பையை வாசல் ஓரமாக வைத்துவிட்டு, இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மொட்டை மாடிக்கு ஓடினான்.

அங்கே இருந்த தட்டு முட்டு சாமன்களுக்குள் ஒளித்துவைத்த அட்டைப்பெட்டியைத் தேடினான்; அதைக் காணவில்லை.

சுற்றும் முற்றும் தேடினான்; எங்கும் கிடைக்கவில்லை. ஓடிவந்த களைப்பும் சோர்வும் சேர்ந்துகொள்ளப் பெட்டியை யார் எடுத்திருப்பார்கள் என்ற குழப்பத்துடன் கீழே இறங்கினான்.  வாசலில் வைத்த பையைத் தூக்கிக்கொண்டு, கதவைத் தட்டினான்.

அம்மா அசினா வந்து கதவைத் திறந்தார். இவனது முகத்தைக் கண்டு, “ஏண்டா மூஞ்சி என்னவோபோல இருக்கு?” என்று கேட்டார்.

இவன் பதில் ஏதும் சொல்லவில்லை. மனத்தில் கிளிகள் நிறைந்திருந்தன. வகுப்பு நண்பர்களின் முகங்களும் வந்து வந்து போயின.

“சொல்லுடா!” என்று அம்மா, அன்பாக அவனது தலையை வருடிக்கொடுத்ததும் அடைத்துக்கொண்டிருந்த துக்கம் அழுகையாய் வெடித்தது.

அழுதுகொண்டே கிளிகளைப் பற்றிச் சொன்னான். அம்மா அசினா, அறைக்குள் சென்று அந்த அட்டைப் பெட்டியை எடுத்து வந்தார்.

“இந்தப் பெட்டிதானே?” என்று நீட்டினார்.

கண்களைத் துடைத்துக்கொண்டு, அட்டைப் பெட்டியை மிகுந்த ஆர்வத்துடன் பறித்து, திறந்து பார்த்தான்.

காலில் நூல் கட்டப்பட்டிருந்த கிளிகள் காயம்பட்ட தன் சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டன.

“இந்தக் கிளிகள என்ன செய்யப்போற?”

“காயத்துக்கு மருந்து போட்டு, நாமே வளர்ப்போமா?  ஒரு கூண்டு வாங்கிக் கொடுத்துடுங்கம்மா!”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அதைப் பறக்க விட்டுவிடு.”

“மாட்டேன். நான்தான் வளர்ப்பேன்.”

“உனக்கு விமலா டீச்சரைப் பிடிக்கும்தானே? கிளிகளை என்ன செய்யறதுன்னு அவங்கக்கிட்டயே கேப்போம்” என்ற அம்மா, அப்துல்லாவின் வகுப்பு ஆசிரியர் விமலாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவரிடம் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார் அசினா.

“இந்தாடா! உங்கள் டீச்சர் உன்கிட்டயே பேசுகிறார்களாம்!” என்று மொபைலை இவனிடம் நீட்டினார் அம்மா.

“ஹல்லோ டீச்சர்.”

“இந்த பாரு தம்பி, பறவைகள் சுதந்திரமாகப் பறக்க வேண்டியவை. அவற்றைக் கூண்டில் அடைச்சு வளக்குறது தப்பு. அப்படிச் செய்யக்கூடாதுன்னு சட்டமே இருக்கு.”

“யாருக்கும் தெரியாமல் வளர்க்கலாமே!”

“நல்லா படிக்கிற பையன் பேசுகிற பேச்சா இது? தப்புடா தம்பி! சட்டம் கூடாதென்று சொல்லுறப்போ, அதை மீறி நாம எதையும் செய்யக்கூடாது. அதுமட்டுமில்ல, இது இயற்கைக்கு எதிரானதும் கூட!”

“அப்படியென்றால்?”

“மீன் தரையில் வாழுமா? மனுசன் தண்ணீருக்குள்ள வாழ்வானா? முடியாதில்லையா? அது மாதிரி, பறவைகளும் பறந்து வாழவேண்டியவையே.”

“அப்ப, இதை என்ன செய்வது டீச்சர்?”

“வன இலாக்காவின் எண் வாங்கியோ அல்லது ப்ளூ கிராஸ் எண் வாங்கியோ அவங்களுக்குச் சொல்லிடு. காயம் பட்ட கிளிகளை அவங்களே வந்து வாங்கிட்டு போய் மருந்து போட்டுக் காப்பாற்றி, சுதந்திரமாகப் பறக்க விடுவாங்க” என்றார் ஆசிரியர் சத்யா.

===

மூன்று வாரங்களுக்குப் பின் அப்துல்லா மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தான். அருகிலிருந்த வேப்ப மரத்தில் கிளிகள் கூட்டமாக வந்து அமர்ந்தன. அவற்றில் இரண்டு கிளிகள் இவனைப் பார்த்து ‘கீ..கீ.. கீ’ என்று பேசின. இவனுக்குத்தான் அவை அடையாளம் தெரியவில்லை.

  • தேன்சிட்டு -அக்டோபர் 2023 இதழில் வெளியான கதை

 +++++++++++++++

Posted in சிறுகதை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை | Tagged , , , , , , | Leave a comment

பூரணம் -பெற்றோர் ஒன்றுகூடல்

பூரணம் அழைப்பிதழ்

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஈரோடு ஜெயபாரதி அம்மாவின் அழைப்பில் சித்தார்த்தா பள்ளிக்குச் சென்று சிறப்புக்குழந்தைகளின் பெற்றோரிடம் உரை நிகழ்த்தினேன்.

அக்கூட்டத்தில் பேசிய விஷயங்களில் ஒன்று சிறப்புத்தேவை உடைய பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதின் அவசியம் . அதன் தேவை குறித்தும் பேசிவிட்டுத் திரும்பினேன். அடுத்த சில மாதங்களிலேயே அங்கே பெற்றோரின் சங்கம் ஒன்று தொடங்கப்பட்ட து.

மாதம் ஒரு துறைசார் வல்லுநரை அழைத்துவந்து உரையாடவைப்பது என்று அவர்களின் செயல்பாடுகளின் தொடக்கமாக இருந்தது.

இதோ இப்போது மீண்டும் அதே பள்ளியில் பெற்றோரிடம் உரையாட அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆம்! இம்முறை நீங்கள் குடும்பத்துடன் வந்து உரையாடுங்கள். கனி பாட்டுப் பாடட்டும் என்று ஜெயபாரதி அம்மா அழைத்தபோது மறுக்கமுடியவில்லை.

எங்களைப் போலவே எங்கள் செல்வன் கனியின் வளர்ச்சியைக்கண்டு பூரிப்பவர் அவர். அழைப்பிதழில் கனியின் பெயரையும் போட்டுவிடுகிறோம் என்று அவர் சொன்னபோது எங்களால் மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.

வரும் டிசம்பர் 23ஆம் தேதி பூரணம் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈரோடு பயணமாகிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். (அழைப்பிதழில் எண் உள்ளது)

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் ஈரோட்டில் உள்ள சிறப்புத்தேவை உடைய குழந்தைகளின் பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

~~~~

தொடர்புடைய சுட்டிகள்:

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , | Leave a comment