விடுபட்டவை 2 ஜூன் 2008
வீட்டை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். சமைத்த சமயங்களிலும் கூட வேலைக்கு போகும் அவசரத்திற்கு தகுந்த மாதிரி கலவைச் சோறு சமைத்து ஓடி இருக்கிறேன். வீட்டில் சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன். வீட்டு சாப்பாட்டிற்கு ஒரு மணம் உண்டு! தொடர்ந்து வீட்டுச்சாப்பாடு ருசித்து வருபவர்களுக்கு அது பிடிபடாமல் போய் இருக்கலாம். ஆனால்.. என்னைப் போல.. ஆளற்றவர்களுக்கு அதன் வாசம் நிச்சயம் நன்கு தெரிந்திருக்கும்.
நான் வசிக்கும் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி ஒரு வீட்டில் விசேசம். திருமணவிழா அது. யார் எவர் என்று எல்லாம் எனக்கு தெரியாது. வாழையிலையில் பதார்த்தங்களுடன் சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆனதால்.. உள்ளே போய் சாப்பிட்டு விடுவது ஆசை வந்து விட்டது. ஐம்பத்தி ஒரு ரூபாயை எடுத்து மொய்கவரில் போட்டுக் கொண்டேன். மணவிழா விட்டுக்குள் நுழைந்தேன். என்னையை யாரும் அடையாளம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஷ்டிக் நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டேன். எல்லோருக்கும் ஏதாவதொரு வேலை இருந்தது. உள்ளே போன சில நிமிடங்களிலேயே.. அது பெண் வீட்டாரின் வீடு என்பதை உணர்ந்து கொண்டேன். அருகில் இருந்தவரிடம் பெண்ணின் அப்பா எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார். ‘அவரு போய் பல வருசமாச்சுங்களே..!பொண்ணுக்கு அண்ணன் தான் இருக்கான்’ என்றார். நானும் விடாமல் ‘சரி..அவரு எங்கே?’ என்று கேட்க, தூரத்தில் வெள்ளைச் சட்டை போட்டு நின்ற ஒருவரைக் காட்டினார். எழுந்து அவரிடம் போனேன். ‘சார்.. ஒரு நிமிசம்’ என்று அவரை அழைத்தேன். புதிய முகமாக தெரிந்த என்னைப் பார்த்து குழம்பியவராக..”சொல்லுங்க சார்” என்றார். ‘சார்.. இங்கே பக்கத்து தெருவுல தான் குடி இருக்கேன். என் பேரு பாலா. —– நிறுவத்துல வேலை பார்க்கிறேன். தனிக்கட்டை. வீடு, வாசல் சொந்தம் பந்தம்னு யாரும் பக்கத்துல இல்ல, தினமும் வெளியில ஓட்டல் சாப்படுல நாக்கு செத்துப் போச்சு. இங்கே கல்யாண சாப்படு சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு வந்துட்டேன். மொய் எல்லாம் வச்சு இருக்கேன். சாப்பிடலாங்களா..?’ என்றேன். என் அணுகுமுறை அவர் வியப்பில் ஆழ்த்தி இருக்க வேண்டும். ஒரு நிமிடம் வித்தியாசமாகப் பார்த்தார். ஒருவரி அழைத்து, ‘தம்பியை பந்தியில ஒக்கார வையுங்க.. நமக்கு வேண்டப்பட்டவர்’ என்று சொல்லி விட்டு, என் காதருகில் குனிந்து சொன்னார்…, ‘ சாப்பிடுங்க தம்பி, மொய் கிய் எல்லாம் வேணாம்.. வயிறும் மனசும் நிறையிற மட்டும் சாப்பிடுங்க!’ என்று சொல்லி விட்டு, போய் விட்டார். என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது. ( சாப்படு பிரமாதமாக இருந்தது என்பதை சொல்லாவிட்டால் எப்படி)
-OoO-
இனி தினம் இந்த குறிப்புகளை எழுத முடியுமா தெரியவில்லை. :( வேலைப் பளு அதிகமாகி விடும். இணையத்தின் பக்கம் வருவதற்குள்ளாகவே நாக்கு தள்ளப் போகிறது. வாரம் முன்று முறையாவது எழுதி விடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனாலும் தினம் எழுதுவதற்கான முனைப்பும் இருக்கிறது. பார்க்கலாம் சமயம் வாய்க்கவேண்டும்.
-OoO-
சென்னையில் இரவு நேரங்களில் குல்பி ஐஸ் விற்பவரை பார்த்திருப்பீர்கள். அவரின் ஒரு நாள் கலெக்சன் (மாலை 4மணி முதல் இரவு 11வரை) எவ்வளவு தெரியுமா..? சாதாரணமாக ரூ.800/- என்றார் ஒரு குல்பிகாரர். அதுபோல.. பானிபூரி தயாரித்து கொடுக்கும் ஒருவர் தினம் ரூ. 400/-க்கு குறையாமல் சம்பாதிப்பதாக சொன்னார். பாண்டிபஜார் பகுதியில் ரோட்டோர சப்பாட்டுக்கடை நடத்தும் ஒருவரின் தினவருமானம் ரூ. 8000/- என்பது நம்ப முடியாத உண்மை. அதிகம் படிக்காமல்வெளிமாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் போய் கஷ்டப்படும் நம்மவர்கள் சென்னையில் சின்னதாக சாப்பட்டுக் கடை திறந்த.. (எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருக்கு) பிச்சுக்கிட்டு ஓடும். பேச்சுலர்கள் இருக்கும் வரை நோ ப்ராபளம்.
-OoO-
சில வருடங்களுக்கு முன் சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம்.(மும்பை , டெல்லி வேலையை விட்டு விட்டு சென்னையில் செட்டில் ஆகவேண்டும் என்ற கனவுடன் வந்திறங்கி இருந்தேன்.) நண்பரின் நண்பர் அறையில் எம்.ஜி.ஆர் நகரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன்.அந்த நண்பர் மருந்து விற்பனை பிரதிநிதி. அவர் வேலைக்குப் போன பின், நான் கிளம்பிப் போவேன் வேலை தேடி! அப்போது பக்கத்து அறையில் சில இளைஞர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் சினிமாவில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தவர்கள் இருவரும். வாய்ப்பு தேடும் இருவருமென மொத்தம் நால்வர் குழு அது. அவர்களில் ஒருவர் எனக்கு நெருக்கமான நண்பராக மாறிப் போனார். நிறைய நூல்கள் குறிது பேசிக்கொள்வோம். ‘எப்படியும் படம் பண்ணியாகனு பாலா’ என்று அடிக்கடி சொல்லுவார். என் சிறுகதை ஒன்றை சினிமா ஸ்டைலில் திரைக்கதையாக சொல்ல.. நான் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். என் கதையை எனக்கே வேறு வடிவில் சொல்லுவார். பெரிய ஆளாக வருவார் என்று நம்பினேன். எனக்கு வேலை கிடைக்காமல் போகவே.. மீண்டும் மும்பைக்கு ஓடிப் போனேன்.
சமீபத்தில் வடபழனி பிரசாத் ஸ்டியோவுக்கு ஒரு வேலையாக போய் இருந்தேன் நண்பருடன். மதிய நேரமானதால்.. சாப்பிட்டுப் போகலாம் என்று முடிவு செய்து.. ஒர் ஓட்டலுக்குள் நுழைந்தோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே.. அந்த பழைய நண்பர் இன்னொருவருடன் அங்கே சாப்பிட வந்தார். அவரின் பெயரைச் சொல்லி அழைத்ததும், என்னை திரும்பிப்ப் ஆர்த்தவர் சில வினாடிகளுக்குப் பின் அடையாளம் கண்டு கொண்டு பேசினார். புதியதாக ஒரு படம் பண்ணப் போவதாகவும், பட பூஜைக்கு வா என்று சொல்லி அழைப்பிதலும் கொடுத்தார். மொபைல் எண்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம். அந்த நண்பரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தேன். படத்தின் பெயர் என்ன தெரியுமா? “வெண்ணிலா கபடி குழு”
-oOo-
சோபா சக்தியின் பிரபலமான கொரில்லா நாவல் மென்நூலாக கிடைக்கிறது. நன்றி:- நூலகம்








என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது Pavan
மீண்டும் ஒருமுறை.. இந்த பதிவு முரை அசத்தலா இருக்குது.
அதற்கு நடை மட்டும் காரனமல்ல நீங்க எழுதுற விஷயங்களும். தினசரி அதே சுவாரஸ்யமான விஷயங்கள். இத்தனை நாளா போட்ட மொக்கைகளுக்கெல்லாம் புண்ணியம் தேடிட்டீங்க.
ங்கொய்யால! உன்னை கெஞ்சி கூப்பிட்டேனே! வாய்யா 3 நாள் நம்ம வீட்டிலே இருந்துட்டு போ போன்னு, லாடு லபக்கு தாஸ் மாதிரி மொய் வச்சாராம் அழுதாராம்…… யோவ் உன் வீட்டிலே உன்னை வாசி மேய்க்கிறது ரொம்ப கஷ்ட்டம்யா….
செம கடுப்புடன்
அபிஅப்பா
‘ சாப்பிடுங்க தம்பி, மொய் கிய் எல்லாம் வேணாம்.. வயிறும் மனசும் நிறையிற மட்டும் சாப்பிடுங்க!’ என்று சொல்லி விட்டு, போய் விட்டார். என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது.///
இத இதத்தான் எதிபார்க்கிறோம் கவிஞரே!
விடாதீர்கள் எழுதுங்கள்
ராமநாதபுரம் மண்ணிற்கு ஒரு வாசம் உணடு!
நல்லா இருக்கு. நேரம் கிடைக்கும்பொழுது நிறைய எழுதுங்கள்.
//வீட்டு சாப்பாட்டிற்கு ஒரு மணம் உண்டு! தொடர்ந்து வீட்டுச்சாப்பாடு ருசித்து வருபவர்களுக்கு அது பிடிபடாமல் போய் இருக்கலாம். ஆனால்.. என்னைப் போல.. ஆளற்றவர்களுக்கு அதன் வாசம் நிச்சயம் நன்கு தெரிந்திருக்கும்//
அன்பின் பாலா,
சற்றுமுன்னர்தான் லக்கிலுக் பதிவில்,”கால காலத்துல கல்யாணம் செய்திருந்தா” இப்படி சிலுக்குவார்பேட்டைக்கு போக அவசியம் இருக்காதே என்று உங்களை கலைத்து ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்..
உங்கள் இந்த பதிவை படித்தபின்னர் மனது மிகவும் கனக்கிறது..
எப்ப வேண்டுமானலும் எங்க விட்டுக்கு (பெங்களூர்). வாங்க.உரிமையோடு உங்க சொந்த அண்ணன் வீடுபோல் நினைத்து சாப்பிட்டு போங்க.
அன்புடன்
அரவிந்தன்
//வீட்டில் சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன். //
நெசமாவாச் சொல்றீங்க? பேசாமக் கிளம்பி வாங்க. ஒரு மாசம் வீட்டுச் சாப்பாடு போடத்தயார்.
இந்த ‘விடுபட்டவை’ப் பதிவுகள் அருமையா இருக்கு பாலா.
மனதில் இருந்து பேசும் சொற்கள்.
ரொம்பப் பிடிச்சிருக்கு.
\தினமும் வெளியில ஓட்டல் சாப்படுல நாக்கு செத்துப் போச்சு. இங்கே கல்யாண சாப்படு சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு வந்துட்டேன். மொய் எல்லாம் வச்சு இருக்கேன். சாப்பிடலாங்களா..?’\
\வீட்டில் சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன்.\\
மனம்திறந்து வெளிப்படையாக இவ்வார்த்தைகளை எழுத தைரியமும் நல்ல மனசும் வேணும்,
மனதிலிருந்து பேசும் சொற்களுடன் உங்கள் பதிவு நல்லாயிருக்கு:))
நான் சமைப்பதை சாப்பிடும் தைரியம் இருந்தால் அண்ணனுக்கு இலவசமாக தங்குவதற்கு ஒரு வீடும் தரப்படும்
கலக்கலா போயிக்கிட்டிருக்கு விடுபட்டவை
கொரில்லா படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. டவுன்லோடு லிங்க் கொடுத்ததற்கு நன்றி!
புதுவேலை கிடைச்சாச்சி… பொண்ணு பார்த்துடலாமா?
தல இந்த மாதிரி சுயப்பரிதாபம் வேணாம் நமக்கு. விழுந்தாலும் மண்ணு ஒட்டாத கதையா வாழ்க்கைய நாம எட்டி ஒதச்சிட்டே இருக்கனுமே தவிர நம்ம முதுக காட்டிட கூடாது.
எனக்கென்னவோ சதுரங்க குதிரைகள் படிச்சதிலேர்ந்து சரியில்லை தல
பாத்து சீக்கிரமா நீங்களே கல்யாண சாப்பாடு போடுங்க
//
புதுவேலை கிடைச்சாச்சி… பொண்ணு பார்த்துடலாமா?
//
எப்போதிருந்து இந்த வேலை லக்கிண்ணா?
\\வீட்டில் சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன்\\
தல குற்ற உணர்ச்சியை ஏற்படித்திட்டீங்க
\\ஒருவரி அழைத்து\\
\\சின்னதாக சாப்பட்டுக் கடை திறந்த.. (எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருக்கு) பிச்சுக்கிட்டு ஓடும்\\
\\என்னை திரும்பிப்ப் ஆர்த்தவர் \\
தலை உணர்ச்சி வேகத்துல அடிச்சிட்டீங்க போல
//அதிகம் படிக்காமல்வெளிமாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் போய் கஷ்டப்படும் நம்மவர்கள் சென்னையில் சின்னதாக சாப்பட்டுக் கடை திறந்த..//
நல்ல யோசனை…..
அதன் பின் யாராவது இதை மொத்தமாக குத்தகை எடுக்க, அரசு அனுமதிக்க அதை சிலர் எதிர்க்க என்று பொழுது போகும்
:) 
/நான் சமைப்பதை சாப்பிடும் தைரியம் இருந்தால் அண்ணனுக்கு இலவசமாக தங்குவதற்கு ஒரு வீடும் தரப்படும் ;)/
தூயாவுக்கு ரிப்பீட்டேய் :))
வூட்டுச் சாப்பாடுலாம் இம்புட்டுதானுங்கனா
கல்யாண மண்டப விஷயத்தை பற்றி படித்தவுடன் உண்மையிலே அதிர்ச்சி ஏற்பட்டது. உங்களது முன்கோபத்தால் உங்களை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது.
பாலாபாய்,
// மொய் எல்லாம் வச்சு இருக்கேன். சாப்பிடலாங்களா..?’//
கூப்பிடாத யாருன்னே தெரியாத கல்யாணமண்பத்துல எல்லாம் புகுந்து வீடியோ, போட்டோல விழாம சமாளிச்சு ச்சும்மா ஒரு த்ரிலுக்காகவும் நல்ல விருந்துக்காகவும் சிலமுறை சாப்டதுண்டு.
ஆனா, இந்த வார்த்தை என் நடுமண்டைல ‘நங்கு’ன்னு குட்டுனமாதிரி இருக்கு!
பசிவந்தால் பத்தும் பறந்துபோகுங்கற காலத்துல நீங்க செய்தது பண்பான செயல்
Nanri!
இந்தப் பதிவுக்காக மட்டுமில்லே, பொதுவாச் சொல்றேன்… வாழ்க்கையிலே நீங்க ரொம்பப் பெரிய ஆளா வருவீங்க…
இந்த இடத்துல ஒண்ணுமே எழுதாம அப்படியே விட்டுட்டு போகத்தான் எனக்கு ஆசை. எத எழுதுனாலும் அது என் மனசுக்கு பொய்யாகத்தான் முடியும். அந்த வேதனையை என்னால் தாங்க முடியாது.