Jul 14
கவிதைகள்..
பார்வைகள்
கத்தியின் பிடிகளை
ஆராய்கிறாய் நீ
அது
பட்டுப்போய்
வந்திருக்குமா
பச்சையாய்
வந்திருக்குமாவென
யோசிக்கிறதென் மனம்.
~~~~
இருப்பு
மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.
~~~
அடையாளம்
தூசுகளால் நிறைந்த
கண்ணாடி கதவில்
பெயரெழுதிச் செல்கிறது
கோடைச்சாரல்.
~~~
இலக்கு
உனக்கும் எனக்குமான
பாதை ஒன்றுதான்
ஆனால்
எதிரெதிர் திசைகளில்
போய்க்கொண்டிருக்கிறோம்
நான் வாருவதற்குள்ளாக நீயும்
நீ வருவதற்குள்ளாக நானுமென
என்றாவதொரு நாள்
நேரெதிராய் சந்திக்க
நேரும் போது
ஒரே திசையை நோக்கியிருக்கும்
நம் பயணம்.
~~~
சொற்களற்ற சூன்யவெளியில்..
ஒருபோதும் சோர்ந்து போனதில்லை
மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில்
சோகங்கள்
துரோகங்கள்
வருத்தம்
மகிழ்ச்சி
என எதுபற்றியேனும்
பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது
பல சமயங்களில்
முன் சிரித்து
பின் கூறு போடுபவர்கள்
இருக்கின்ற போதிலும்
இவர்களை ஒதுக்கிவிட
தோன்றியதில்லை
பூனை,நாய்,கிளி
ஏன் கடவுள்களே கூட
பதில் பேசாமலிருக்கையில்
ஏதாவது பேசும்
மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.
~~~
ங்கொய்யால…
கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை
கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்
புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்
யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்
அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்
எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி
அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று
குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்
மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.
~~~
சிரங்குகள்
உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில்
ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில்
ஆரோக்கியம் சேர்க்குமென
ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால்
விளைந்தவை இவை
களிம்புகளை வழங்கியவர்களும்
சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள்
இருந்தும் மோகம்
குறையவில்லை மக்களுக்கு
முதலில் அதன்
விளைவைப் பற்றி விளக்க வேண்டும்
பின்னரதனை அழிக்கவேண்டும்
அப்போது தான்
சரிபடும் தேகமும், தேசமும்!
~~~
இதெல்லாம் கொஞ்சம் பழசு. பழைய தளத்திலிருந்து இங்கே இடம் மாற்றி இருக்கிறேன். அவ்வளவே! இதுவும் மீள் பதிவு தான்.
Popularity: 3% [?]
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
3 responses so far கவிதை

Write in Indian Languages..
பொன்ஸ்
அண்ணாச்சி கவிதைலாம் கலக்கல் ஏ சூப்பருப்பா
அருமையான கவிதைகள் பாலா.. எழுதி நாளாகிவிட்டது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. எழுத்துக்கள் என்றுமே பழசாவதில்லை.. திருக்குறள் படித்தால் இன்றும் புதிதாக தோன்றுவதில்லையா??
சரி சரி.. இதெல்லாம் நாங்களே பழைய வூட்டுக்குப் போய் படிச்சிக்கிறோம்.. பெரியார் கதையை எழுதுங்க..