”இப்பயெல்லாம் யாருடா சாதி பார்க்குறா?”

“டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா? இல்ல..”

“இதுல.. என்னடா யோசிக்க வேண்டி இருக்கு, மெட்ராஸுல பார்க்குறத தாண்டா சொல்லுறேன்”

“என்ன பார்த்த.. என்னத்த சொல்லுறியோ.. சொமக்குறவனுக்குத்தாண்டா.. சொமையோட வலி தெரியும். போகப்போக.. நீயே தெரிஞ்சுக்குவ..”

“அதையே தான் நானும் சொல்லுறேன். கண்ணைத்திறந்து உலகத்தை பாருங்கடா”

”போடா இவனே..நீயே இப்படி பேசிகிட்டு இருக்குறது சரியா படல. கடைசியா கேக்குறேன், நாங்க ஆரம்பிச்சு இருக்குற அம்பேத்கர் மன்றத்துல சேர்ந்துக்கிற ஐடியா இருக்கா, இல்லையா.. அத மட்டுமாச்சும் சொல்லு”

”சாரிடா, நான் இருக்குறதோ மெட்ராஸுல, இங்க சங்கத்துல சேர்ந்து என்ன செய்யப்போறேன். அதனால நான் வரலைடா?”

“தெரியும்டா.. நீ இப்படித்தான் பேசுவான்னு தெரியும், நல்ல நெலமைக்கு வந்த பின்னாடி.. நீங்களும் மாறித்தான் போயிடுறீங்க, பழசை மறந்து தான் போயிடுறீங்க..”

“நீங்க என்ன வேணும்னா சொல்லுங்கப்பா.. நான் என்னோட கருத்த சொல்லீட்டேன். நான் கிளம்புறேன்.. இதுக்கு மேலையும் இப்படி ஒக்காந்து பேசிகிட்டு இருந்தேன்னா.. எங்க ஆத்தா.. கொண்ணுப்புடும்.”

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடையைக்கட்டினேன். பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னோடு ஒன்றாக படித்தவர்கள். எல்லொரும் பாதியிலேயே படிப்பை கைவிட்டு, ஊரிலேயே தங்கிவிட்டவர்கள். நான் மட்டும் எப்படியோ படித்து முடித்து, சென்னையில் வேலையில் இருக்கிறேன்.

நகரம். மாநகரம். பலதரப்பட்ட மக்கள் நிறைந்த இடம். நான் வேலைக்குச் செல்லும் அலுவலகத்திலோ, தங்கி இருக்கும் மேன்சனிலோ எங்குமே எவருமே என் சாதி குறித்து விசாரித்ததில்லை.

இன்னும் சொல்லப்போனால், உடன் பணியாற்றும் உயர்சாதியினர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கூட போட்டிருக்கிறார்கள். யதார்த்தம் இப்படி இருக்க.. இன்னும் சாதிய வேறுபாடுகள் பார்க்கப்படுகிறது என்று இவர்கள் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

முனிசிபாலிட்டியில் வேலை பார்க்கும் என் அப்பவுக்கு வேண்டுமானால் இந்த விவகாரங்கள் புரியாமல் போகலாம். அவர் பழைய மனிதர். ஆனால் இவர்கள் இந்தகால இளைஞர்களாக இருந்தும் இப்படி சாதிய எண்ணத்துடன் இருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஊருக்கு திரும்பி வந்திருக்கிறேன். அதுவும் ஆடி மாத கோவில் திருவிழா சமயம் என்பதால் இரண்டு நாள் விடுப்பில் இன்று காலையில் தான் வந்து இறங்கினேன்.

எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாத திருவிழா மிகவும் விசேசமானது. கடற்கரையை ஒட்டி இருக்கும் உஜ்ஜய்னி மகாகாளி கோவில் வாசலில் தீமிதிப்பதற்காக விறகுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். ஊரில் இருக்கும் அத்தனை காவல் தெய்வங்களும் ஊர்வலமாக சென்று தீ மிதிப்பதை பூக்குழி இறங்குவது என்று சொல்லுவோம்.

சாதி வித்தியாசம் பார்க்காமல் அத்தனை சாமியாடிகளும் எல்லா ஏரியாவுக்குள்ளும் புகுந்து ஊர்வலம் போகும். உஜ்ஜய்னி கோவில் பூசாரி சங்கரன் பிள்ளை முதலில் கிளம்புவார். வடக்கு தெருவில் இருக்கும் வீரபத்திரன் கோவில் பூசாரி நடராஜன் சேர்வை, தெற்கு கரையோரம் இருக்கும் முனியசாமி கோவில் பூசாரி சதாசிவ பிள்ளை, பேச்சியம்மன் கோவில் பூசாரி சிகாமணி நாடார் என எல்லா சாதி சாமியாடிகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் சேரிக்கும் வரும், அங்கே இருந்து நொண்டிகருப்பன் கோவிலின் பூசாரியையும் அழைத்துக்கொண்டு, ஊர்வலம் கிளம்பி உஜ்ஜய்னி கோவில் வாசலை அடையும். பின்னர் ஒவ்வொரு சாமியாக குறி சொல்லி, தீக்குள் இறங்கி, மறுபக்கத்தை அடைவார்கள்.

எல்லா சாமியும் இறங்கிய பின் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒன்றை தொடுவார் உஜ்ஜய்னி கோவில் சாமியாடி. அந்த பெட்டிக்குள் இருக்கும் வண்ண பட்டாடையைப் பொறுத்து, எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்ற ஆரூடம் சொல்லப்படுவது தான் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வு.

மற்ற கோவில்கள் போல, எங்கள் கோவிலுக்கு நிரந்தர சாமியாடி கிடையாது. இரண்டு தமிழ் மாதத்திற்கு ஒரு குடும்பம் என்று சுழல் வடிவில் அந்த பொறுப்பு சுற்றி வரும். இம்முறை திருவிழாவுக்கு சாமியாடியாக இருக்கும் வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு வாய்த்திருக்கிறது. அதனாலேயே ஆத்தாளுக்கு தலைகால் புரியவில்லை. கட்டிக்கொடுத்த அக்காவையும் திருவிழாவுக்கு அழைத்திருந்தாள். இருக்காதா பின்னே.. பல வருடங்களுக்கு பிறகு எங்கள் குடும்பத்திற்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

வீட்டு வாசலை அடைந்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்டது அக்காவின் நான்கு வயது பெண். அவளைத் தூக்கி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்.

“ராசா.. வந்துட்டியாப்பா.., ஒன்னையத்தேடி வரணுமோன்னு நெனைச்சேன்.. நல்லவேள வந்துட்ட.. பின்னாடி போய் சீக்கரம் குளிச்சுட்டு, புது உடுப்பு எடுத்து வச்சிருக்கேன், அதை போட்டுட்டு ரெடியாகு, ஒங்க அப்பா இப்ப வந்திருவாரு..” பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் அம்மாவின் பரபரப்பு. நான் பின் கட்டுப்பக்கம் போய் குளித்து முடித்துவிட்டு வீட்டினுள் வருவதற்கும், அப்பா வரவும் சரியாக இருந்தது.

வழக்கத்துக்கு மாறாக மெலிந்து போய் இருந்தார். சாமியாடி என்பதால், தீமிதிக்க நாற்பது நாள் விரதம் இருந்திருப்பார் போல. கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக்கொண்டிருக்கும் போதே.. குளித்துமுடித்து, மஞ்சள் வண்ணத்தில் வேட்டியுடன் உள்ளே வந்தார்.

“அடியே.. நான் கோவிலுக்கு போறேன். நீங்க எல்லாம் பின்னாடியே வந்திருங்க” என்றபடியே ஓட்டம் பிடித்தார்.

அம்மா, அக்கா, அத்தான், குழந்தை சகிதமாக நாங்கள் கோவிலை அடைந்த போது, எங்கள் காமராஜர் நகர் முழுவதும் குழுமி இருந்தது. பூசாரியின் குடும்பமே தாமதமாக வந்ததை வினோதமாகப் பார்த்தார்கள்.

தோளுக்கு இரண்டு பக்கமாக மாலை போட்டிருந்தார் அப்பா.. கையில் வெள்ளி பூன் போட்ட பிரம்பு ஒன்று இருந்தது. பறை சத்தம் பலமாக இருந்தது.

டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்…டின்..டின்..

கொட்டுசத்தத்துக்கு ஏற்றவாறு அப்பா ஆடிக்கொண்டிருந்தார். பெண்கள் வரிசையாக வந்து நின்று குடம் குடமாக நீரை ஆடிக்கொண்டிருந்த அப்பாவின் காலில் ஊற்றினார்கள். இடுப்பில் இருந்த சுருக்கு பையிலிருந்து அவர் திருநீறு பூசும் போது, மூக்கில் மேல் கைவைத்து பவ்வியமாக பூசிக்கொண்டார்கள். ஆட்டமும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்.

காலனிக்குள் மற்ற சாமியாடிகள் கொட்டு சத்தத்துடன் பிரவேசிக்கத் தொடங்கியபோது, பறையின் வேகம் கூடியது. எங்கும் பறையெலி எதிரொலித்தது.

உஜ்ஜய்னி சாமியாடி முதலில் வந்து நின்றார். ஒர் அடி இடைவெளியில் எட்டுக்கும் மேற்பட்ட சாமியாடிகள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நொண்டிகருப்பு சிலையைப் பார்த்தபடியே.. நின்ற உஜ்ஜய்னி சாமியாடி.. மெதுவாக முன்னும் பின்னும் அசந்தபடி இருந்தார்.

டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்.
டண்டக்கும்..டண்டக்கும்..டின்..டின்.. டண்டக்கும்..டண்டக்கும்…டின்..டின்..
டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டண்டக்கும்…டின்..டின்.. டண்டக்கும்..டின்.. டண்டக்கும்.. டின்.. டண்டக்கும்..

பறையொலியின் வேகம் கூடக்கூட உஜ்ஜய்னி சாமியாடி.. வேகமாக ஆடத்தொடங்கினார். அவர் ஆட்டம் அதிகமானதும் அத்தனை சாமியாடிகளும் வேகமாக ஆடத்தொடங்கினார்கள்.

“ம்..ர்ர்ர்ம்ம்ம்ம்.. சூ..ம்ர்ம்ர்ம்ர்ம்ர்ம்ர்” என்று வினேதமாக ஓசை எழுப்பியபடி நாக்கை வெளி நீட்டி உள்ளுக்கும் மடித்து, செந்தூரம் பூசப்பட்ட முகத்திலிருந்து விழிகளை பிதுக்கி உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கி குதித்தார் உஜ்ஜய்னி சாமியாடி.

கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து, வேகமாக நடக்கத்தொடங்கியது சாமி. பின்னாடியே எல்லா சாமிகளும்.. வேகமெடுத்தன. அப்பாவும், தலையில் கரகத்துடன் பின் தொடர.. நாங்களும் கூட்டமாக தொடர்ந்தோம்.

காலணிக்கு வெளியே வரும் வரை இருந்த வேகம், வெளியே வந்ததும், குறைந்தது. கடற்கரை நோக்கி போகவேண்டுமென்றால்.. கள்ளர் தெருவாழியாக போய், மறவர் தெருவை அடைந்து, இட்டிப்பிள்ளை சந்துவழியாக கிழக்குத்தெருவையும் கடந்து விட்டால்.. அடுத்து கோவில் இருக்கும் சன்னதி தெரு வந்து விடும்.

ஒவ்வொரு தெரு வழியாக போகும் போதும், பெண்கள் குடம் குடமாக தண்ணிர் ஊற்றி, ஒவ்வொரு சாமியாடியிடமும், திருநீறு பூசிக்கொண்டார்கள். காலில் தண்ணீர் ஊற்றும் போது மட்டும் சாமியாடிகள் ஆடாமல், ஒரே இடத்தில் நின்று, முன்னும் பின்னுமாக அசைவார்கள். திருநீறு பூசிக்கொள்ளும் சமயங்களில் சிலருக்கு குறி சொல்லுவதும் நடந்தது.

நான்கு தெருக்களை கடந்து, கடைசியாக சன்னதி தெருக்குள் நுழையும் போது தான் கவனித்தேன். எல்லா சாமியாடிகளின் கால்களிலும் ஈரமிருந்தது. அப்பாவின் காலில் மட்டும் ஈரமில்லை. தூசுகளால் நிறைந்திருந்தது. இடுப்பில் இருந்த சுருக்கு பை கூட பிரிக்கப்படாமலேயே இருந்தது.


உரையாடல் போட்டிக்காக..

Popularity: 3% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Tags: , , ,

23 Comments to “சுமை – உரையாடல் போட்டிக்காக..”

  1. Jagadhees says:

    ஒரு திருவிழாவிற்கு சென்று வந்தது போல் உள்ளது.
    கதையை கையாண்ட விதம் அருமை..
    வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  2. மின்னுது மின்னல் says:

    இன்னும் இப்படி தானே இருக்கு பல ஊர்களில்.. :(

    பள்ளிகூட புக்கில் முதல் பக்கம் ஞாபகம் வருது..!!

  3. லாஸ்ட் பால் சிக்சர் :) :)

    வாழ்த்துக்கள்

    20ல் ஒன்னு நிச்சயம்

  4. ila says:

    சாதி இன்னும் இருக்கு..

  5. ம்ஹூம்!

    இன்னும் கூட இருந்துகொண்டுதானிருக்கின்றன இச் சாதி என்னும் பேய்கள்!

  6. சிங்கம் களம் இறங்கிருச்சு..

    ஏய் ஓடுங்கப்பா..!

  7. அருமையான (உண்மை) கதை பாலா.. நகரங்களில் பொருளாதார நிமித்தம் அலையும் மக்கள் சாதியைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை, ஆனால் கிராமங்களில் இன்னமும் சாதி உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று பொட்டில் அடித்தார்போல சொல்லிட்டீங்க.. வெற்றிக்கு வாழ்த்துகள்..

    //
    காலணி
    //
    காலனி… (காலணின்னா செருப்பு)..

    சுபாவின் ஒரு துப்பறியும் கதையில் ஒரு கோட்வேர்டு “மூன்று யானை செருப்பு” என்று இருக்கும். அதை நாயகன் (செல்வா என்று நினைக்கிறேன்), “மூன்று, ஜம்போ காலனி” என்று கண்டுபிடிப்பான். அது நினைவுக்கு வந்தது..

  8. தல என்னமா எழுதியிருக்கீங்க. ரொம்ப நல்லாயிருக்கு…சில இடங்களில் மனம் கணத்து விட்டது.

  9. கடைசி வரி தாக்கிவிட்ட்து பாலா.

    நாம் மாறவில்லை என்ற உண்மை சுடுகிறது. வெற்றிக்கு வாழ்த்துகள்.

  10. குசும்பன் says:

    செம கலக்கல்!

  11. குசும்பன் says:

    அண்ணே பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது, நல்லவேளை உங்க முகத்தை வெளிநாட்டு ரோட்டு சுவரில் வரைஞ்சு வெச்சு இருக்காங்க!

    இங்க நம்ம ஊரில் என்றால் எல்லாம் என்ன ஆகியிருக்கும் உங்க நிலமை:))

  12. உணர்வுபூர்வமான கதை.

    எளிமையான எழுத்துநடையில் காட்சிகள் கண்முன்.

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  13. செந்தழல் ரவி says:

    இடுப்பில் இருந்த திருநீறு சுருக்கு பை என்று இருந்திருக்கலாமோ ? இன்னும் அழுத்தமாயிருந்திருக்கும்…

    பாதியிலேயெ பாதியிலேயே
    இன்னோது இப்போது
    விசேசமானது விசேடம் அல்லது விசேஷம். இதென்ன விசேசம் ?

    சாதியை பற்றி பேசும் அந்த உரையாடல் தேவையானதா ? சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. இடையில் எங்காவது கொண்டுவந்திருக்கலாமோ ?

    வட்டார வழக்கு அதிகம் இல்லாமல் இருப்பது மொறுமொறுப்பு குறைந்த கோபி மஞ்சூரியன் மாதிரி இருக்கிறது என்னைப்பொறுத்தவரை..

    ஏன் என்றால் கிராமம் பூமிதிக்கறது கோயில் திருஷா என்று வட்டார வழக்குக்கு உகந்த கதைக்களமில்லையா ? அதான்…

    தீம் சூப்பர். சொல்லப்பட்ட விதத்தில் சிக்ஸோ போரோ அடிக்காமல் முக்கி முக்கி மூன்று ரன்கள் எடுக்கிறது.

    அடியேனின் நேர்மையான விமர்சனத்தை ஜாலியாக எடுத்துக்கொள்ளாமல் சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்…

  14. radha says:

    I enjoyed the story esp the finishing..
    I hope the last ball hit bring you the winning runs..

  15. அருமை தலை.

    அசத்திட்டீங்க

  16. மேம்போக்காக பார்த்தால் சாதி இல்லையென்பதுபோல்தான் தெரிகிறது. ஆனால் சாதி இன்னும் ஒழியமல் ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நச்சென்று கடைசி வரியில் பொட்டில் அடித்தார்போல் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு பரிசு நிச்சயம் என்பது என் கணக்கு. அட்வான்ஸ் வாழ்த்துகள். (ட்ரீட் வேணும் ஆமாம்.)

  17. பொன்ஸ் says:

    கதை நல்லா இருக்கு.. ஆனா இதெல்லாம் நீங்க பதிவுக்கு வந்த புதுசுலயே எழுதிட்டீங்க போலிருக்கே.. இன்னும் சிறப்பா செய்திருக்கலாம்னு தோணுது..

    முன்னாள் பதிவரா இதுக்கு மேல பேசினா உதை விழப் போகுதுன்னு பயம்மமாவும் இருக்கு :-)

  18. நல்லா இருக்கு பாய்..

  19. மாம்ஸ்,

    கதையோட முதல் பத்தி (மன்றம்) சல்லி இல்லாமே இருந்துருந்தா நல்லா வந்திருக்குமின்னு தோணுது… :)

  20. /// அதிஷா says:
    July 1, 2009 at 9:54 am
    சிங்கம் களம் இறங்கிருச்சு..

    ஏய் ஓடுங்கப்பா..!
    ///

    ரிப்பிட்டேய்

  21. raki (ராகி) says:

    க‌தை வாசித்தேன்.. வாசித்தேன் என்ப‌தையும் அது எப்ப‌டி புரிந்து கொள்ள‌ப்ப‌ட்ட‌து என்ப‌தையும் ப‌திவாக‌ த‌ருவ‌து அவ‌சிய‌ம் என்ப‌தால், இந்த‌ க‌ருத்துரை..

    க‌தைக்க‌ள‌ம், அத‌ற்கான‌ பாத்திர‌ப்ப‌டைப்புக‌ள் ந‌ல்ல‌ சிந்த‌னை.. குறிப்பாக‌, ஊரின் தெரு பெய‌ர்க‌ள்.. பாத்திர‌ப்ப‌டைப்புக‌ளில் வ‌ரும் ஜாதியின் பெய‌ர்க‌ள் அதை உண‌ர்த்தி விடுகின்ற‌ன‌… இருந்தாலும் சில‌ சில‌ நெருடல்க‌ள் ஏற்ப‌ட்டு போயின‌.. முத‌லாவ‌து, ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் அம்பேத்க‌ர் ம‌ன்ற‌த்துல‌ சேருவ‌து ப‌ற்றிய‌ விவாத‌ம் எப்போது ந‌டைபெறுகிற‌து? அதைத் தொட‌ர்ந்து ந‌டைபெறும் ஊர்த் திருவிழாவா? அல்ல‌து ஊர்த் திருவிழா ந‌டைபெற்ற‌ பிற‌கு ந‌ண்ப‌ர்க‌ள் ச‌ந்திப்பு ந‌ட‌ந்து அத‌ன் பிற‌கு நிக‌ழும் பின்னோக்க‌லா? இதில் கொஞ்ச‌ம் சில‌ வார்த்தைக‌ளை சேர்த்திருக்க‌லாம்.. ”நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஊருக்கு திரும்பி வந்திருக்கிறேன்” ந‌ண்ப‌ர்க‌ளின் உரையாட‌லை தொட‌ர்ந்து வ‌ருகிற‌து என்ப‌தை கொஞ்ச‌ம் திரும்ப‌வும் ப‌டித்து பார்த்தால்தான் புரிகிற‌து.

    சுமை த‌லைப்பை போல‌வே ப‌டித்து முடித்த‌தும் லேசான‌ சுமையை உண‌ர‌ முடிகிற‌து.. ந‌ன்றாக‌ இருக்கிற‌து எழுத்துக்க‌ளின் ந‌டை, கையாண்ட‌ லாவ‌க‌ம்.. குறிப்பாக‌ அந்த‌ ப‌றையொலி… ஆனால் நேரில் பார்த்த‌ விஷ‌ய‌ங்க‌ளை, ச‌ந்தித்த‌ அனுப‌வ‌ங்க‌ளை உங்க‌ளுடைய‌ ப‌திவில் ப‌டித்து விட்டு அந்த‌ துள்ள‌ல் ந‌டையை இந்த‌ சிறுக‌தையில் தேட‌ வேண்டிய‌தாக‌ உள்ள‌து. சிறுக‌தைக்காக‌ அந்த‌ இல‌க்க‌ண‌த்துக்காக‌ உங்க‌ள் ந‌டையை மாற்றிக் கொண்ட‌து போல‌ ப‌டுகிற‌து. ஒரு வ‌ட்ட‌த்தை போட்டு விட்டு அத‌ற்குள் சுற்றி வ‌ரும் அவ‌ஸ்தை தெரிகிற‌து…

    தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்…

    வாழ்த்துக்கள்..

  22. janarthana senapathi says:

    உணர்வுபூர்வமான கதை.

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Note: This post is over 8 months old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.