பேய் வீடு

உங்களுக்கு பேய்கள் பற்றிய பயமுண்டா.. அது பற்றிய கதைகள் கேட்டு இருக்கிறீர்களா.. சிறுவயது முதல் விதவிதமான பேய்கள், வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. இன்னும் கூட பெருநகரவாசனை அறிந்திடாத ஊர்களில் இவை உயிர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் என் அக்காவின் குழந்தைகள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போகும் போது நிறைய பேய்கதைகளை விரும்பி கேட்டுவிட்டுத்தான் போவார்கள். அவர்களின் ஊருக்குப் போனதும் சகமாணவர்களிடம் இது பற்றி சொல்லி, அவர்களை வாய்பிளக்கச்செய்வார்களாய் இருக்கும்.
ஆனால் எனக்கு அவை பற்றிய பயம் (நம்பிக்கை) இப்போது இல்லை. பயம் தெளிந்திற்கு காரணம் என் பாண்டி சித்தப்பா. நானும் பயந்த காலம் ஒன்று இருந்தது. கொஞ்சம் இருட்டினாலே.. கொல்லைப் பக்கம் போக துணைக்கு ஆள் தேடியதெல்லம் இப்போதும் நினைவில் இருக்கிறது. கனவு கண்டு பயந்து நடு இரவில் எழுந்து அம்மாவின் கதகதப்பான கைகளுக்குள் சுருண்டு தூங்கிய நாட்கள் இப்போதும் நினைத்தாலும் சுகமானவை. அந்த அன்பான கைகளைத்தாடி.. ஒரு பேய்யும் கனவில் கூட வந்ததில்லை என்பது விளங்காத ஆச்சரியம்.
எங்களூரில் கிழக்குத்தெரு, சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தொடங்கி கடற்கரையில் போய் முடியும். அந்த தெருவின் கடைசில் கடற்கரையை ஒட்டினார்ப் போல ஒரு பாழடைந்த பங்களா ஒன்று இருந்தது. பாதியாய் சாத்திக்கிடக்கும் பெரிய மரக்கதவு. அதன் மீது விதவிதமான வேலைப்படுகள் செய்யப்பட்டிருக்கும். அது போல வேலைப்படுகளை கோவில் கதவில் மட்டுமே பார்க்க முடியும். தனி வீட்டின் அப்படியான ஒரு வேலைப்படுகள்
நிறைந்த கதவைப் பார்க்கும் போது பிரம்மிப்பு தோன்றும். அந்த நாட்களில் எல்லா வீட்டுத் திண்ணைகளும் திறந்து தான் இருக்கும்.(இப்போது திண்ணைகளே இல்லை என்பது வேறு விசயம்) தெருவில் வருவோர் போவோர் என யார் வேண்டுமென்றாலும் அமர்ந்து இளைப்பாறிச் செல்லலாம். ஆனால் அந்த பங்களா வீட்டைச் சுற்றிலும் ஆளுயரத்திற்கு கோட்டைச்சுவர் கட்டி வைத்திருந்தார்கள். அங்கு திண்ணை கிடையாது. கோட்டைச் சுவற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் வீடு ஆரம்பித்து விடும். கோட்டைச் சுவறின் வாசலில் இரும்பு கிரில் கேட் போட்டு சாத்தி வைத்திருந்தார்கள்.
எனக்கு விபரம் தெரிந்து அந்த வீட்டில் யாரும் வசித்ததாக நினைவு இல்லை. அந்த வீட்டைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அதில் ஒன்று தான். ஜமீந்தாரின் அந்த வீட்டை வடநாட்டு பணக்காரர் வாங்கி குடி வந்ததாகவும், குழந்தைகள் இல்லாத அவரும் அவர் மனைவியும் அடிக்கடி புரியாத மொழியில் சண்டை போட்டுக்கொள்ளுவார்களாம், ஒரு நாள் அந்த பெண் தீயில் எரிந்தபடி தெருமுழுக்க ஓடி செத்து விழுந்ததாகவும், அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்றும், அந்த பணக்கரர் கொலை செய்து விட்டார் என்றும், வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி அந்த பணக்காரர் இறந்து போனதாகவும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதன் பின் அந்த வீட்டில் அவர்களின் பேய் உலாவுவதாக எல்லோரும் பேசத்தொடங்கினார்கள்.
தம்பி, தங்கச்சியை பயப்படுத்த நானே கூட பேய்கதைகள் சொல்லி இருக்கிறேன். சிறுவயதில் வீட்டின் பெரிய திண்ணையில் அமர்ந்து மின்சாரம் தடைபட்ட இரவில் தன் கணீர் குரலுடன் எங்களுக்கெல்லாம் பாண்டி சித்தப்பா பேய் கதை சொல்லுவார். அகண்ட கண்களும், கன்னத்தை மறைக்கும் பெரிய மீசையுமாய் லாந்தர் ஒளியில் அவரே பயங்கரமாகத் தெரிவார். பாண்டி சித்தப்பாவின் அனேக பேய் கதைகளின் களம் அந்த பங்களா வீட்டைச் சுற்றிதான் இருக்கும். அவர் வேலைக்குப் போய் வந்த பிறகு தெருக்குழந்தைகளை எல்லாம் அழைத்து திண்ணையில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிப்பார். கதை முடிவதற்குள் பலர் வீட்டிற்கு ஓடிவிடுவார்கள். சிலரை அம்மாக்கள் வந்து அழைத்துப் போய் விடுவார்கள். நானும் என் சின்ன அண்ணனும் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டபடியே கதை கேட்டுக் கொண்டிருப்போம். பல நாட்களில் பாண்டி சித்தப்பாவின் கதை கனவில் வந்து பயந்து அலறி இருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மா சித்தப்பாவை வைது கொண்டே துருநீரு போட்டு தூங்க வைப்பாள். அடுத்த நாள் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வரும் போது, சேர்த்து வைத்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்த்திடுவாள் அம்மா. அவரும் சிரித்துக்கொண்டே இனி பேய் கதை சொல்லமாட்டேன் என்று போய் விடுவார். ஆனாலும் மாலையே வந்துவிடுவர்.. திரும்பவும் கதை சொல்ல!
ஊரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த்து. அந்த பங்களா வீட்டுப்பக்கம் என்னைப் போன்ற சிறுவர்கள் யாருமே போவதில்ல. அதுவும் சுட்டெரிக்கும் மதிய வேலையிலும், மாலையில் விளக்கு ஏற்றிய பின்னரும் பெரியவர்கள் கூட அந்த பக்கம் போய் வருவதில்லை. குறுக்குச் சந்தின் வழி அடுத்த தெருவுக்குள் போய் அந்த பக்கமாகத்தான் கடற்கரைக்கு போய் வந்தார்கள். பங்களாவின் பல பகுதிகளில் காரை பெயர்ந்து விழுந்து, சுண்ணாம்புச் சுவர் தெரிந்தது. கதவு இல்லாத சன்னல்கள் வழியே உள்ளே பார்க்கும் போதே அச்சம் ஏற்படுத்தும் அந்த பங்களாவின் இருட்டு. ஆளுயரம் வளர்ந்த எருக்கச்செடிகளும் பங்களாவினுள் இருக்கும் பறவைகளின் கூடும் கூடுதலான அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன.
பள்ளியில் எழுதாத சட்டமே இருந்தது. யாரும் அந்த பங்களாவின் பக்கம் போகக்கூடாது என்று. பங்களாவைப் பற்றிய கதைகள் ஊர் முழுக்க பலரால் பல விதத்தில் பரப்பப்பட்டு இருந்த்து. எல்லா வாலிபர்களுக்கும் வயசாலிகளுக்கும் அந்த பங்களா குறித்து, சண்டை போடுவது மாதிரி காரசாரமாக பேசிக்கொள்ளுவார்கள்.
சைக்கிள் ஓட்டிப் பழகிய ஒரு மாலைப் பொழுதில் இடம் கவனிக்காது பங்களாவின் பக்கம் வந்துவிட்டேன். நாடகம் நடிக்க வந்த பட்டிணத்துக்காரி ஒருத்தியுடன் பாண்டிச்சித்தப்பா பதுக்கியதைப் பார்த்ததிலிருந்து எனக்கு அந்த பேய் பங்களாவின் மீது பயமற்றுப் போனது.








பாலா, இந்த கதையை படித்தவுடன் என்னவோ தெரியவில்லை. இதே கதையை எனது நடையில் டைப் செய்ய ஆரம்பித்து விட்டேன். நான்கு பத்திகளை தாண்டியதும் இன்று இந்த கதையை முடிக்க முடியாதென தோன்றியது. பிறகு இது ஒரு நாவலாய் விரியுமென தோன்றியது. அதற்கும் பிறகு இன்னொருத்தர் கற்பனையில் எவ்வளவு தூரம் பயணம் போவது என குழப்பமேற்பட்டது. தற்காலிகமாக டைப் அடிப்பதை நிறுத்தி விட்டு இந்த மறுமொழியினை எழுதுகிறேன். நாளைக்கு நான் எழுதும் உங்கள் கதை கணிப்பொறியின் மின் குப்பை தொட்டியில் நசுக்கபட்டு தன் மரணத்தை சந்திக்கலாம். அல்லது ஒரு சிறு கதையாய் பூத்து நிற்க கூடும். அல்லது நாவலாய் விஸ்வரூபமெடுக்கலாம். யார் கண்டது.
பேய்க்கதையைக் கேட்காத அல்லது விரும்பாத இளவயசு இருக்கா என்ன?
எங்க சின்னக்கா சொல்லும் கதைகளில் கணவன் எதிர்பாராத சமயம் வீட்டிற்கு வந்தால்….. அடுப்பு தகதகன்னு எரிய சோறு ஆக்கிக்கிட்டு இருப்பாள் இளமனைவி. இதிலெங்கே பேய்?
அடுப்புக்கு முன்னே கால் நீட்டி உட்கார்ந்திருப்பாள்.எரியும் விறகு அவள் கால்களே!!!
அப்ப ஊர்ல இருக்க பல பேய் பங்களா இதுக்காக உருவானதுதானா?
சாய்ராம்.. உங்கள் கதையை படித்தேன். நன்றாக வந்திருக்கிறது. இப்படி சிந்திக்கத் தெரியாமல் போச்சேன்னு வெட்கம் வந்தது உண்மை! சீக்கரம் பதிவா போடுங்க!
துளசியம்மா… யாருக்கும் பேய்கதை பிட்க்காமல் இருந்ததில்லை. அது குழந்தை பருவத்தின் அடையாளம் (ஆங்கில காட்டேரிகளை விட நம்ம மோகினிகள் மீது தான் எனக்கு காதல்). நீங்க சொல்லுகின்ற மாதிரி காட்சியை ஜெகன்மோகினியில் வைத்திருப்பார் அதன் இயக்குனர் விட்டாலச்சாரியா! (இந்தியாவின் ஸ்பீல்பெர்க்குன்னு இவரை சொல்லலாம் என்பது அடியேனின் கருத்து)
முரளி.. உண்மையில் பேய் வீடுகளின் பின்னால் சொல்லப்படுகின்ற கதைகளில் இருக்கும் சோகத்தை விட.. அதனுள் இருக்கும் அரசியலும், அதன் பயன்பாடும் மிக முக்கியமானது. “பயன்பாடு” என்று எப்போதோ நான் எழுதிய கவிதையை உரைநடையாக்கி இங்கே கொடுத்திருக்கிறேன். சாய்ராம் அழகான கதையாக எழுதி இருக்கார். அதையும் அவசியம் பாருங்க!
அருமை. நன்றி . கற்றுக்கொண்டேன் சில இலக்கணங்கள்
அன்பு பாலா,
கதையை எனது வலைப்பதிவில் (
http://poetry-tuesday.blogspot.com/2008/05/ghost-house-tamil-short-story.html ) பதித்திருக்கிறேன். மீண்டும் நன்றி.
- சாய் ராம்
பாலா கதை நல்லா இருக்கு, முடிவு என்னவா இருக்குமுன்னு யூகிக்க முடியலை.. ஆனா சட்டென்று கதை முடிந்த மாதிரி ஒரு தோற்றம்.
எல்லா ஊரிலும் குறைந்தபட்சம் ஒரு பேய்வீடு உண்டு. சமீபத்தில் 1980களில் நான் குட்டிப்பையனாக இருந்தபோது ராம.நாராயணன் இயக்கிய பேய்வீடு படம் பார்த்து பயந்திருக்கிறேன். ரொம்ப காலத்துக்கு முன்பு, அதாவது ரெண்டு மூனு மாசத்துக்கு முன்பு அதே படத்தை பார்த்தபோது சப்பை படமாக தெரிந்தது
தோழர் வரவனை கூட தன் நட்சத்திர வாரத்தின் போது ஒரு பேய்வீட்டை பற்றி எழுதியிருந்தார்.
சந்தோஷ் சொன்னது போல சட்டென்று முடிந்துவிட்டது. க்ளைமேக்சுக்கு வாசகர்களை ஆயத்தம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இரவில் என்னை பயமுறுத்தியதற்கு பாலாண்ணாவை வன்மையாக கண்டிக்கின்றேன்.
romba nalla irukku