சாமியாட்டம்
சிறுகதைகளே பிடிக்காத என்னை சிறுகதை வாசகியாய் மாற்றி விடுவார்கள் போல .
ஒவ்வொரு கதையும் ரொம்ப அனுபவிச்சு படிச்சேன் .
கோட்டிமுத்து, துரைபாண்டி ,நம்பிக்கை – என்னை அழ வச்சுடீங்க பாலபாரதி சார் .
நம்பிக்கை கதைபோலவேதான் இறப்பின் போது எங்கள் ஊரிலும் உப்பு வீசிட்டு போவாங்க அதே கதைதான் .உப்பு பொறுக்கிட்டு வரதுக்குள்ளே பொழுது விடிஞ்சிடும் . அதே மாதிரி இறந்தவர்களை புதைத்த இடத்தின் மேல் பிரண்டை நட்டு வைப்பர். அந்த பிரண்டை அங்கே முளைத்து வந்தால் ஜீவன் அங்கேயே அடக்கமாகி விட்டதாகவும் அங்கே வைத்த பிரண்டை முளைக்காவிட்டால் இறந்தவர்களின் ஆன்மா அங்கு இல்லை அவர்களின் வீட்டிலேயே இருப்பதாகவும் கதை சொல்வர் .
விடிவெள்ளி – இங்கே வரும் நம்பித்தாய் படித்ததும் சாமி வந்து ஏய் காத்தவராயா என் காலில் விழு என்று என் அத்தை சாமி வந்து ஆடியதை இன்றும் நாங்கள் கிண்டல் அடித்து பேசுவது நியாபகம் வந்தது .
சாமியாட்டம் – இதனைக் கதைகள் இருக்கையில் புத்தகத்துக்கு தலைப்பாய் ஏன் இக்கதை எடுக்கப் பட்டது என்ற எதிர்பார்ப்பிலேயே படிக்க ஆரம்பித்தேன் .அப்படியே ஊர் கோயில் திருவிழா படமாக ஓட ஆரம்பித்தது . பக்கம் பக்கமாக எழுதி உரக்கச் சொல்லியும் ஒருவர் காதிலும் விழாமல் போகும் செய்தி நச்சுன்னு இரண்டே வரிகளில் முடிச்சுபுட்டீங்களே . நான் சொல்ல வருவது கதையின் முடிவு நான் ஊகித்தது சரிதானா ? சிறுகதைகளில் எனக்கு வரும் பெரிய பிரச்னை புரிதல் . இங்கேயும் அது இருக்கு .
வேண்டுதல் கதையின் முடிவு எனக்கு புரியல . அடுத்து விடிவெள்ளி ,இதிலாவது ஏதோ கொஞ்சம் புரியுற மாதிரி இருந்தது .
புத்தகம் முழுவதும் நெருடிய இரண்டு விஷயங்கள்
நிறைய இடங்களில் இருக்கும் பிழைகள் அடுத்த முறை கொஞ்சம் கவனம் அதிகம் இதில் வேண்டும் .
கோவில் என்றே பல இடங்களில் இருந்தது . நான்தான் தவறாக படித்து வந்தேனா அல்லது என் தமிழ் ஆசிரியர் எனக்கு சொல்லித் தந்தது தவறா ? . கோவில் என்பது தவறு கோயில் என்று அழைப்பதே சரி என்று அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் எனக்கு சரியாகவே பட்டது . தவறென்றால் சொல்லுங்கள் நான் திருத்திக் கொள்கிறேன் . கோவில் =கோ +வில் , கோ கடவுள் அல்லது அரசன் வில் என்பது அரசனின் அல்லது கடவுளின் ஆயுதம் . கோயில் = கோ +இல் , இல் என்பது இல்லம் , இருப்பிடம் கடவுள் அல்லது அரசன் இருக்கும் இடம் . எது சரி தவறு ?
நன்றி:- கூகிள் ப்ளஸில் மதார்