சென்சரி பிரச்சனைகளால் குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்பட சாத்தியமுள்ள மாற்றங்களும், அதற்கு சில தீர்வுகளும்:

  1. மிகச் சில உணவு வகைகளை மட்டுமே உண்பது: சில வகை உணவுகளின் கட்டமைப்பு (கொழ கொழப்புத் தன்மை, கரடு முரடாக இருப்பது etc) அக்குழந்தைகளுக்கு பிடிக்காது போகலாம். முதலில் அவர்களுக்குப் பிடித்த வகையிலேயே உணவுகளை கொடுக்க வேண்டும். மெல்ல மெல்ல மற்ற வகை உணவுகளுக்கு அவர்களது வாயை பழக்க வேண்டும்.
  2. வாயின் மூலம் செய்யக் கூடிய சோப்பு நுரைக்குமிழ்(பபிள்ஸ்) விடுவது, ஊதல் கொண்டு ஊதுவது போன்ற செயல்களை ஊக்குவிக்கலாம்.

    2. உணவுப் பொருட்கள் அல்லாத பொருட்களையும் மெல்லுவது/கடிப்பது: இப்படிச் செய்வதில் அவர்களின் சென்சரி தேவைகள் குறைவதாக சில குழந்தைகள் உணர்வர். இத்தகைய குழந்தைகளுக்கு ரப்பரில்லாத ட்யூப்கள், ஸ்ட்ராக்கள், கடிக்க சிரமமான உணவுகள் போன்றவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தரலாம். இவை அதே சென்சரி தேவையை பூர்த்தி செய்யும். மெல்ல மெல்ல உணவல்லாத பொருட்களை கடிப்பதும் நிற்கும்.

  3. மலத்தில் விளையாடுவது – அந்த கட்டமைப்புத் தன்மை அக்குழந்தைக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். அதனால் அதை கையில் எடுத்து சில குழந்தைகள் விளையாடுவார்கள். அந்த நாற்றமும் அதற்கு உறுத்தாமல் போயிருக்கலாம். ஜெல்லி போன்ற தன்மையுள்ள மாற்றுப் பொருட்களை கொடுத்து விளையடப் பழக்க வேண்டும்.
  4. சில வகை உடைகளை அணிய மறுப்பது – அந்த உடைகளின் இழையமைப்பு பிடிக்காது போவது அல்லது அந்த ஆடை தோலில் உரசுவது பிடிக்காமல் போகலாம். சில குழந்தைகள் புதுத் துணிகளை அணிய மறுக்கலாம்.  ஆடைகளை நன்கு பரிசோதித்து அதிலிருக்கும் லேபிள்களை நீக்க வேண்டும். அல்லது புதுத் துணிகளை கூட சில முறை துவைத்து பின் அணிய வைக்கலாம்.

    5. தூங்குவதில் சிரமம் – அவர்களது கேட்டல் மற்றும் பார்த்தல் உணர்வுகளை நிறுத்துவதில் சிரமம் இருக்கலாம். பாடல் கேட்டுக் கொண்டே தூங்கும் முறையில் வெளி சத்தங்களை தவிர்க்கலாம். ப்ளைண்டர் போன்றவற்றின்மூலம் கண்களை மூட வைக்கலாம்.6. வகுப்பறையில் கவனிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் – நிறைய கவனத்தை கலைக்கும் விஷயங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். மணி அடிப்பது, பேச்சு சத்தம், பெஞ்ச், நாற்காலிகள் தள்ளப்படும் ஓசை போன்ற சத்தங்களோ, சில மனிதர்கள், படங்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் கவனச் சிதறலோ இதற்கு காரணமாகலாம்.  கதவு, மற்றும் ஜன்னலிலிருந்து தொலைவிலிருப்பது போல், அக்குழந்தைகளை அதிகம் பாதிக்காத இடத்தில் அமரச் செய்யலாம். கனமான கோட் போன்றவற்றை அணிந்து கொள்ளச் செய்யலாம். சாதாரண பெஞ்ச், அல்லது நாற்காலிக்கு பதில் காற்று நிரம்பிய பந்து போன்ற இருக்கைகளில் அமரச் செய்யலாம். மேலை நாடுகளில் இம்முறை அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற விஷயங்களை பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், மியூசிக் தெரபிஸ்ட் போன்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஓவ்வொரு கட்டிடத்திலும் ஊனமுற்றோர் தங்களது சக்கர நாற்காலியில் பயணிக்க வசதியாக சாய்வு மேடை அமைத்துக் கொடுப்பதை போலவே மனரீதியிலான சிக்கல்கள் கொண்ட இக்குழந்தைகளுக்கும் ஏற்றவாறு நாம் நமது வீடு மற்றும் பள்ளிச் சூழல்களை சற்றே மாற்றியமைக்க முன்வர வேண்டும்.

இச்சிறு மாற்றங்கள் அக்குழந்தைகளை இயல்பான வாழ்வுக்கு மீட்டு வரும். வளர்ந்த பின்னர் அவர்களே இத்தேவைகளை முறையான வழியில் சமாளித்துக் கொள்ளவும் முடியும்.

(சென்சரி பிரச்சனைகள் முடிவுற்றது.)

(அடுத்து, ஆட்டிசக்குழந்தைகளின் உணவு பழக்கவழக்கங்களில் பற்றிய GFCF DIET குறித்துப் பார்ப்போம்)

இதுவரை வந்த சென்சரி பிரச்சனைகள் குறித்த மற்ற கட்டுரைகளின் சுட்டிகள் கீழே:

ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1

ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2

ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-3

ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-4

++++

ஆட்டிசம் குறித்த மற்ற கட்டுரைகளை கீழ்க்காணும் சுட்டியில் காண்க:

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25


Comments

One response to “ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-5”

  1. தீர்வுகளுக்கு நன்றி…

    எனது நண்பருக்கு உங்கள் தளத்தை சொல்லி உள்ளேன்… அவரின் குழந்தைக்கும் ஒரு தீர்வு கிடைத்தால் மிகவும் சந்தோசம்… தீர்வு கிடைக்கும்… கிடைக்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *