ஆட்டிசத்திற்கான சிகிச்சை முறைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஏற்கனவே முந்தைய பல கட்டுரைகளில் சொன்ன ஒரு விஷயத்தை முதலில் நினைவு படுத்திக் கொள்வது நலம். ஆட்டிசக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய சிக்கல்கள் ஓரே மாதிரியானவையே தவிர்த்து ஒன்றேதான் எனச் சொல்ல முடியாது. எனவே எந்தவொரு சிகிச்சையையும் முழுமுற்றான தீர்வு எனக் கொள்ள முடியாமையே இங்க நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்.
மேலும் பல மருத்துவ நிபுணர்கள் , ஆட்டிசம் ஒரு நோய் அல்ல; குறைபாடு (Not a disease it’s a disorder) தான் என்று சொல்லி வருகிறார்கள். இது உண்மையும் கூட! எனவே இதன் சிகிச்சை முறைகள் யாவுமே அப்பிரச்சனையின் தாக்கத்தைக் குறைத்து, இயல்பான ஒரு வாழ்வை வாழ அக்குழந்தையைப் பயிற்றுவிக்கவே முயலும். எனவே இரண்டு மாதம் இந்த சிகிச்சை எடுத்தேன், பிறகு குணமாகி விட்டது என்பது போன்ற அணுகுமுறைகள் சாத்தியமே இல்லை. அதற்காக ஆயுள் பரியந்தம் தெரப்பிகள் தேவைப்படுமோ என்று பயப்படத் தேவையில்லை. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு தன் சொந்த முயற்சியில் அவர்களே தங்களது பிரச்சனைகளை சமாளித்துக் கொள்ள முடியும் என்கிற அளவுக்கு தயாராகிவிடுவார்கள்.
முதன்மையாக நான்கு வகையான தெரப்பிகள் தேவைப்படுகின்றன.
1. நடத்தை சீராக்கல் பயிற்சிகள் – behavioral therapies
2. வளர்ச்சிக்கான பயிற்சிகள் – developmental therapies
3. கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் – educational therapies
4. பேச்சுப் பயிற்சி – speech therapy
இந்த நான்கு பயிற்சிகளும் அனேக குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இப்பயிற்களின் வழியே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
1. நடத்தை சீராக்கல் பயிற்சிகள்:
இவை முக்கியமாக ஆட்டிசக் குணாதிசயங்களைக் குறைப்பதற்காக செய்யப்படுபவை. எடுத்துக்காட்டாக சென்சரி பிரச்சனையில் நாம் பேசிய சில ஆட்டிச குணாதிசயங்களை எடுத்துக் கொள்வோம்.
வாய்பகுதியில் ஹைப்பர் சென்சிடிவிட்டி கொண்ட ஒரு குழந்தைக்கு கீழ்க்கண்ட சிகிச்சைகள் தரப்படும்.
1. சுடுநீராலும், ஐசாலும் மாறி மாறி ஒத்தடம் தரப்பட வேண்டும்.
2. வாயின் உட்பகுதி மசாஜ் செய்யப்பட வேண்டும் – இதற்கு வைப்ரேட்டர் உள்ள ப்ரஷ்கள் பயன்படுத்தப்படலாம்.
3. ஊதல், உறிஞ்சுதல் போன்ற செயல்கள் ஊக்குவிக்கபட வேண்டும்.
அதே போல் தன் உடலின் இருப்பை அறிவதில் இருக்கும் சிரமங்களுக்கு காரணம் மூட்டுகளில் இருக்கும் சென்சரி மையம் பலவீனமாக இருப்பதே காரணம். எனவே மூட்டுக்களை தனிப்பட மசாஜ் செய்வது, பேண்டேஜ் துணி கொண்டு இறுகக் கட்டி வைப்பது போன்றவை இந்த உணர்ச்சியைத் தூண்டும்.
நேர்கோட்டில் நடக்கப் பயிற்சி அளிப்பது, ஒரு செயலுக்கு பாராட்டாக அவர்கள் விரும்பும் ஒரு பரிசு தருவதன் மூலம் பயிற்றுவிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த நடத்தை சீராக்கலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
2. வளர்ச்சிக்கான பயிற்சிகள்:
குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்(Developmental Milestones) அவர்கள் ஒவ்வொரு பருவத்திலும் கற்றுக் கொள்ளக்கூடிய செயல்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. 3 மாதத்தில் தலை நிற்பது, 8 மாதத்தில் தவழுதல், 1 வருடத்தில் நடப்பது என்பது போன்ற படிநிலைகள் சாதாரண குழந்தைகளுக்கு இயல்பாகவே நடந்துவிடும். மேலும் கண்ணாடி நியூரான்களின் உதவியோடு தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்த்து அக்குழந்தைகள் தான் செய்ய வேண்டிய செயல்களைக் கற்றுக் கொள்ளும் பண்பையும் கொண்டிருக்கும். ஆனால் ஆட்டிசக் குழந்தைகள் சூழ இருக்கும் மனிதர்களின் செயல்களை கவனிப்பதும் இல்லை, அவற்றைப் போலச் செய்து பார்க்க முயற்சிப்பதும் இல்லை. எனவேதான் இவர்களின் வளர்ச்சிப் படிநிலைகளில் தேக்கம் ஏற்படுகிறது.
எனவே தானாகக் கற்றுக் கொள்ளாத இக்குழந்தைகளுக்கு செயல்களை நாமாக கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக மாடிப்படி ஏறுவது, நேர் கோட்டில் நடப்பது, இரு கால்களையும் தூக்கி குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை நம் உதவியோடு முதலில் செய்ய வைத்துப் பழக்க வேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவர்களே அவற்றைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
வளர்ச்சிப் படிநிலைகளின் படி ஒரு குழந்தை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
3. கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள்:
கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் என்பது எழுத்துக்கள், எண்கள், வார்த்தைகள், வடிவங்கள், வண்ணங்கள் போன்ற அடிப்படை விஷயங்களைச் இக்குழந்தைகளுக்குப் புரியும் படி சொல்லித் தருவதில் ஆரம்பிக்கும். தொடர்ந்து அந்தந்த வயதுக்குத் தகுந்த விஷயங்களை இக்குழந்தைகளுக்கு மிகுதியும் செயல் முறையில் சொல்லித் தர வேண்டியிருக்கும்.
சாதாரண வகுப்பறைச் சூழலில் கலந்து படிக்கக்கூடிய நிலையை இவர்கள் எட்டும் காலம் வரை இந்த சிறப்புக் கல்வி(special education) முறையையே தொடர வேண்டியிருக்கும். மாண்டிசோரி கல்வி முறை போன்ற செயல்கள் மூலம் கற்பிக்கும் முறையே இவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். இதற்கென ஆசிரியப் பயிற்சிக் கல்வியிலும் தனியான பாடப் பிரிவும் இருக்கிறது. எனவே அத்தகைய பயிற்சியுடையோர் மூலம் இக்குழந்தைகளைப் பயிற்றுவிக்கலாம்.
மேலும் சிறப்புக் கல்வி என்பதை நாம் தனியாக அளித்தாலும் கூட வழக்கமான பள்ளிக்கு மற்ற சாதாரண குழந்தைகளுடன் அனுப்புவதும் மிகவும் முக்கியம். (சிறப்பு கல்வி தேவைப்படும் இக்குழந்தைகளை சாதாரண மாணவர்களில் பள்ளிகளில் சேர்ப்பதே சிறந்தது. மேலை நாடுகளில் இந்நிலை இயல்பானதாக இருந்தாலும், இங்கே நம் நாட்டில் அப்படி ஒரு சூழல் இல்லை என்பதும், சிறப்பு பள்ளி என தனிப்பள்ளிகள் செயல்பட்டு வருவதும் வருந்தக்கூடியது)
4. பேச்சுப் பயிற்சி:
ஆட்டிசக் குழந்தைகளில் சிலர் பேச்சுக்கான தூண்டல்களே (speech stimuli) இல்லாது இருப்பர். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சியாளரைக்(Speech-language pathologists ) கொண்டு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும்.
பேச்சுப் பயிற்சி என்று ஒட்டு மொத்தமாக அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் இதில் மூன்று படிநிலைகள் உண்டு.
1. பேச்சுப் பயிற்சி – வாய், தொண்டை, சுவாச உறுப்புகள் போன்றவற்றின் செயல்பாட்டில் உள்ள குறைகளை கண்டறிந்து சீராக்குவது
2. மொழிப் பயிற்சி – மொழியின் அடிப்படைக் கூறுகளை புரிய வைப்பது. வார்த்தைகள், வாக்கிய அமைப்பு, இலக்கணம் போன்றவற்றை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லித்தருவது
3. தொடர்பு மொழி பயிற்சி – பேசுவதற்கான ஆவலை உருவாக்குவது, மனிதர்களோடும், சூழலோடும் பொருந்தும் படி பேச பயிற்சி அளிப்பது போன்றவை இதில் அடங்கும்.
(தொடரும்)
—————
மேலும் ஆட்டிசம் தொடர்புடைய கட்டுரைகளுக்கு:-
I have seen many young men who are proud of their Autistic condition. They want no cure. They want to be left alone in their own world. TGS Prasad has wriitten an excellent novel From the Eye of the Mind which realistically portrays the life of a young girl in the spectrum.
Art has been an amazing tool : Drama, music, painting, photography, pottery have helped them to manage stress and tantrums. Our attempt through art for autism festivals have been to unearth the hidden talents. Come join us at Chennai Muttukadu and watch them perform their Autism.
ஐயா எனது மகனுக்கு 13 வயது ஆகிறது. இதுவரை தாய் தந்தையை கூட தெரியவில்லை. அவனுக்கு பிடித்தமானது மொபைல் போன்தான் ஏதாவது மியூசிக் சத்தம் வரும் பொருளையே விரும்புகிறான். அதை தேடி அது இருக்கும் இடத்துக்கு உருண்டு போய்விடுகிறான். ஆனால் அவன் பெயரை சொல்லி அழைத்தாலும் பார்ப்பதில்லை. தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது எல்லாம் படுத்த நிலையில்தான். உட்கார கூட தெரியவில்லை. நாங்களும் (தெரியாததால்) முறையான பயிற்ச்சி கொடுக்கவில்லை. பேச்சும் இல்லை எங்கு கொண்டுபோவது, என்ன சிகிட்ச்சை செய்வது என்று தெரியவில்லை. இப்படி உள்ள குழந்தைகளுக்கு எங்கு கொண்டு செல்வது? தாங்களி யோசனையை பெற விரும்புகிறேன். அரசாங்க ஊனமுற்றோர் புத்தகத்தில் நூறு சதவீதம் ஊனம என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனது மெயில் முகவரிக்கு தாங்கள் எனக்கு யோசனை வழங்கவும். அன்புடன் அமீன். எனக்கு மயிலாடுதுறை.
ஐயா, நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை பார்த்தால், ஆட்டிசமாக மட்டும் இருக்கும் என்று தோன்றவில்லை. வேறு ஏதேனும் குறைபாடாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. உள்ளூரில் உள்ள குழந்தை நல மருத்தவரிடமோ, குழந்தை மன நல மருத்துவரிடமோ ஆலோசனை பெறவும். என்ன குறை என்பதை கண்டு பிடித்தால் அதற்குறிய சிகிச்சையை கொடுக்கலாம். அரசு மருத்துவமனையைக்கூட நீங்கள் அனுகலாம்.
அய்யா வணக்கம் ,ஆட்டிசியம் புத்தகம் இங்கு கிடையாது தயவுசெய்து VPP ல் அனுப்ப முடியுமா ,SRINIVASAN F235 TNPL COLONY KAGITHAPURAM KARUR 639117
ஐயா,
கீழ்காணும் பதிப்பக முகவரிக்கு கடிதம் எழுத வேண்டுகிறேன்.
நன்றி
புக் ஃபார் சில்ட்ரன், (பாரதி புத்தகாலயம்)
எண்: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018
தொலைபேசி:- 044- 24332424
அய்யா ! எனது மகள் 3 1 /2 வயது ஆகிறது இன்னும் பேசவில்லை , 18 மாதம் வரை நடக்காமல் இருந்தால் நாங்கள் கொஞ்ச கொஞ்சமாக நடை பயிற்சி கொடுத்து நடந்தால் பின் கால்கள் நேராக வைக்கவில்லை அதற்க்கு கடந்த ஒரு வருடமாக physiotherapist தினமும் பயிற்சி அளித்து இப்போது பரவில்லை இன்னும் அவள் பேச முயற்சி செய்யவில்லை அதற்காக இப்போது ஒரு மூளை நரம்பியல் மருத்துவரை அனுகிருக்கிறோம் ,அவர் ஆறு மாதம் மருந்து சாப்பிடுமாறு பரிந்துரைதிருக்கிறார் மூளை, காது , கண் அனைத்தும் பரிசோதனை செய்து எல்லாமே நன்றாக இருக்கிறது என்கிறார்கள் .அவள் பார்வை எங்களை பார்க்கும் போது கொஞ்ச நேரத்தில் கண்கள் பக்கவாட்டில் பார்க்கிறாள் . இதற்க்கு வேறு ஏதேனும் சிகிச்சை இருக்கிறதா என தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் . நான் தஞ்சாவூர் சேர்ந்தவன் அருகில் எதாவது மருத்துவமனை இருந்தால் கூறவும் நன்றி .
அன்பு சிவக்குமார்,
முதலில் உங்கள் குழந்தைக்கு என்ன குறைபாடு என்பதை கண்டறியவேண்டும். மற்ற சிகிச்சைகள் எல்லாம் பின்னார்தான். நான் முன்னமே நிப்மெட் என்ற அரசின் ஆய்வுநிறுவனம் பற்றி எழுதி உள்ளேன். அக்கட்டுரையை நீங்கள் http://blog.balabharathi.net/?p=1559 என்ற சுட்டியில் படிக்க இயலும். சென்னையில் உள்ள இந்த நிறுவனத்திற்கு குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து, சோதனை செய்யுங்கள். அவர்கள் மிகச்சிறப்பான முறையில் பரிசோதனை செய்து, மேல்விபரங்களை உங்களுக்குச்சொல்லுவார்கள். அப்படியே உங்கள் ஊருக்கு அருகில் உள்ள எந்த பயிற்சி வகுப்புக்கு செல்லவேண்டும் என்பதையும் அவர்களே சொல்லுவார்கள். கண்டிப்பாக இது உங்களின் துயரத்திற்கு பெரும் மருந்தாக இருக்கும். நிப்மெட் பார்த்தபின் தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி
ஐயா எனது மகனுக்கு 8வயது அவனுக்கு மைல்டு ஆட்டிசம் என்று டாக்டர் சொன்னார் அவனுக்கு 3வயதில் இருந்துகுறை சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அனைவரையும் சந்தித்து விட்டேன் அவர்கள் பயிற்சி மட்டும் தான் என் கூறி விட்டனர் அவனுக்கு தற்போது பயிற்சி கொடுத்து வருகிறோம் ஆனால் இரவில் தூக்கம் இல்லாமல் சேட்டை. செய்கிறான் இதற்கு வழி கூறுங்கள்
ஐயா எனது மகனுக்கு 8வயது அவனுக்கு மைல்டு ஆட்டிசம் என்று டாக்டர் சொன்னார் அவனுக்கு 3வயதில் இருந்துகுறை சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அனைவரையும் சந்தித்து விடடேன் அவர்கள் பயிற்சி மட்டும் தான் என் கூறி விட்டனர் அவனுக்கு தற்போது பயிற்சி கொடுத்து வருகிறோம் ஆனால் இரவில் தூக்கம் இல்லாமல் கோபப்பட்டு. தரையில் முட்டி கொள்கிறான் அவனுக்கு இன்னும் பேச்சு வரவில்லை இதற்கு தீர்வு கூறுங்கள்
இரவில் தூக்கமில்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உளவியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெருவதே சிறந்தது.
இதையும் முயற்சித்துப் பாருங்கள்
1. சர்க்கரை போன்ற இனிப்புகளை அவரது உணவில் இருந்து தவிருங்கள்.
2. பகலில் உறங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
3. ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நடப்பது போன்ற உடற்பயிற்சிகளை ரெகுலராக செய்யுங்கள்.
4. இனிமையான இன்ஸ்டுமெண்டல் இசையை ஒலிக்கவிடுங்கள். (புல்லாங்குழல், வீணை, வயலின் போன்றவை)
மகனுக்கு சக்கரை/ இனிப்பு சார்ந்த பொருட்களை கொடுக்காதீர்கள். அது ஹைப்பர் ஆக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. பகலில் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சைக்கிள், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுத்தினால் இரவு உறக்கம் நன்றாக வரும் வாய்ப்பு உள்ளது. இக்கருத்துக்களை உங்கள் தெரபிஸ்ட்(அ) மருத்துவரிடம் ஆலோசித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும்.