14. ஆட்டிசம்- பத்துகட்டளைகள்

ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சொல்லுவதற்கு பல விசயங்கள் உண்டு. முன்னமே பல முறை சொன்னது போல, ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையும் ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அதனால் அக்குழந்தைகளை கையாள்வது என்பதற்கு எவரும் இதுதான் வழிகள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது.

அதேசமயம், இன்னொரு ஆட்டிசக்குழந்தையின் பெற்றோரிடம் பேசும் போது, அவர்களின் வாயிலாக பல அனுபவங்களைப் பெறமுடியும். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளையும், அவர்களுக்கு என இயங்கிவரும் பல தெரபிகளையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். என் அனுபவத்தில் எனக்குத்தெரிந்து ஆட்டிசப்பதிப்புக்குள்ளான ஒரு குழந்தையின் பெற்றோர் தம் அனுபவங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள தயாராகவே இருக்கின்றனர். இதுதான் இக்குழந்தைகளின் பெற்றோருக்கு பெரிய ஆறுதலான விசயம்.

Jene Aviram என்ற மேலைநாட்டவர் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான குழந்தையின் பெற்றோருக்கு, பத்துகட்டளைகளை குறிப்பிட்டுள்ளார்.

இதே செய்தியினை நாம் முந்தைய கட்டுரைகளை பார்த்திருக்கக்கூடும். அவை நான் பார்த்த பெற்றோர்களின் வழியாகவும், தெரபிஸ்டுகள், மருத்துவர்கள் வழியாகவும் கிடைக்கப்பெற்றவை. ஆனாலும், இக்கட்டளைகள் எனக்கு மிகவும் முக்கியமானதாகப்படுவதால்.. அதனை தமிழில் தந்திருக்கிறேன்.

++++++

1. வருந்துவதில் தவறில்லை.

உங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்ற விஷயத்தைக் கேட்ட உடனேயே உங்கள் மனதை பயம் கவ்வக்கூடும். இந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? நண்பர்கள் இருப்பார்களா? திருமணமாகுமா? முதலில் பேச முடியுமா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பும். உங்கள் குழந்தையைப் பற்றிய கனவுகள் நொறுங்கும் நொடியில் ஏன் என்ற ஒற்றைச் சொல் கதறலாய் உங்களிடமிருந்து வெளிப்படலாம்.

இப்படியெல்லாம் குமுறுவதில் தவறேயில்லை. ஆனால் அதற்கு ஒரு கால வரையறை செய்து கொள்வது நல்லது. உங்கள் ஆற்றலையெல்லாம் அழுகையில் வீணடிக்காது விரைவில் உங்கள் குழந்தையை வாழ்வுக்கு தயார் செய்ய ஆர்மபியுங்கள்.
2. உங்களை நீங்களே நம்புங்கள்

ஆட்டிசத்திற்கான சிகிச்சையில்  ABA, RDI, Son Rise, OT, PT பேச்சுப் பயிற்சி, விட்டமின்கள், உணவு கட்டுப்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் உண்டு. எதிலிருந்து துவங்குவது என்ற குழப்பம் இயல்பானதுதான். உங்களைப் போன்ற மற்ற பாதிக்கப்பட்ட பெற்றோருடன் கலந்து பேசுவது உங்களுக்குத் தெளிவைத் தரக்கூடும். உங்கள் முன்னாலிருக்கும் சிகிச்சை முறைகளைப் பற்றி ஆராயும் முன் ஒரு விஷயத்தை உங்கள் மனதில் பதித்துக் கொள்ளுங்கள் – உங்கள் அளவுக்கு உங்கள் குழந்தையை சரியாகப் புரிந்து கொள்ளக்கூடியவர் வேறு யாரும் இல்லை. ஒரு சிகிச்சை முறை உங்கள் குழந்தைக்கு சரியான விளைவைத் தரவில்லை என்று தோன்றினால் அதை உடனடியாக நிறுத்த தயங்க வேண்டாம். அதுவரை அம்முறையில் செலவழித்த காலத்தையும், பணத்தையும் நஷ்டமாக எண்ண வேண்டாம். உங்கள் குழந்தைக்கு எது ஒத்து வரும் என்பதை அறிந்து கொள்வதில் ஒரு படி முன்னேறியிருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
3. பெருமையடையுங்கள்

ஒரு பொது இடத்தில் வரிசையில் நிற்கையில் உங்கள் குழந்தை திடீரென அமைதியிழந்து கைகளைத் தட்டவோ குதிக்கவோ செய்யலாம். உடனடியாக நீங்கள் சுற்றியுள்ளோரை மன்னிப்புக் கேட்கும் வகையில் பார்க்காதீர்கள். ஏனெனில் சுற்றியுள்ளவர்கள் அதை வைத்தே உங்கள் குழந்தையை குறைத்து மதிப்பிடுவர். அது உங்கள் குழந்தையின் சுயமதிப்பை குறைக்கும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மைப் போல் நடந்து கொள்வதில்லை என்பதனாலேயே அவர்கள் செய்கை தவறானதல்ல. பொறுமையுடன் உங்கள் குழந்தையை நோக்கிப் புன்னகையுங்கள். அதுவே சுற்றியிருக்கும் மற்றவரின் செய்கையை மாற்றும். அவர்கள் உங்கள் குழந்தையை கனிவோடும், உங்களை மரியாதையோடும் பார்க்கத் துவங்குவார்கள். உங்கள் குழந்தை மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றால் முதலில் நீங்கள் அதைச் செய்து காட்டுங்கள்.

4. நாட்கள் ஓடுவதை எண்ணிக் கவலை வேண்டாம்.

நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு சில மைல்கற்களை நிர்ணயம் செய்து கொண்டு அதன்படி நடக்காவிட்டால் கவலைப்படுகிறார்கள். ஐந்து வயதிற்குள் பேச வேண்டும், பத்து வயதுக்குள் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும் என்பது போன்ற இம்மாதிரியான பதட்டங்கள் தேவையில்லை. இன்று சகஜமான வாழ்வு வாழ்ந்து வரும் எத்தனையோ ஆட்டிச பாதிப்புக்குட்பட்ட மனிதர்கள் பத்து வயது வரை ஏன் அதற்கு மேலே கூட பேச்சு வராமலிருந்தவர்கள்தான். இன்று அவர்கள் ஒரு பயனுள்ள வாழ்வை வாழவும், அர்த்தமுள்ள உறவுகளைப் பேணவும் முடிகிறது.

எதோ ஒரு மாய நொடியில் திடீரென உங்கள் குழந்தை எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம் அல்லது நிதானமாகவும், படிப்படியாகவும் கற்றுக் கொள்ளலாம். உங்கள் கடமை எப்போதும் உங்கள் குழந்தைக்கு துணை நிற்பதும், தான் நினைக்கும் எதையும் தன்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கையை அந்தப் பிஞ்சு மனதில் விதைப்பதும்தான்.

5. தேவையில்லாத குற்றவுணர்வு

வேலைக்குப் போவது, குழந்தையின் தெரப்பிக்கு அழைத்துப் போவது, வேறு தெரப்பி மாற்ற வேண்டியிருந்தால் முடிவு செய்வது, குழந்தையை குளிப்பாட்டுவது, சமைத்தல், குழந்தையின் உணர்ச்சி வெளிப்பாடுகளை சமாளித்தல் என ஒரு சிறப்புக் குழந்தையின் பெற்றோராக உங்கள் சுமை மிகவும் அதிகம். வேலைகளுக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போது உங்களை குற்றவுணர்வு வாட்டலாம். நான் இப்படி ஓய்வெடுக்கக் கூடாதோ, இந்த நேரத்திலும் கூட குழந்தைக்கு உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசிக்கும் அதே நேரம் மற்ற பெற்றோர்கள் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்ற ஆச்சரியமும் உங்களுக்குள் எழும். சொல்லப் போனால் எல்லாப் பெற்றோருமே இப்படியான சிந்தனைகளோடுதான் போராடுகிறார்கள்.  இந்த தேவையற்ற குற்ற உணர்வை உதறுங்கள். உங்கள் வலிமிகுந்த, சிக்கலான வாழ்வில் சிறிது நேர ஓய்வு உங்களுக்கு அத்யாவசியமானது. உங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டால்தான் உங்கள் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும்.

6. பார்வைக் கோணத்தை மாற்றுங்கள்

நம்மில் பலரும் நல்ல படிப்பு வேலை, நல்ல வேலை, நிறைய சம்பளம், திருமணம், குழந்தை என்பதுதான் ஒரு மகிழ்சியான வாழ்விற்கான சூத்திரம் என்று எண்ணுகிறோம்.  உண்மையில் இந்த பட்டியல் மட்டுமே மகிழ்சியான, நிறைவான வாழ்வு என்பதை வரையறுப்பதில்லை. இதே வரிசையில் நம் குழந்தையின் வாழ்வு அமையாமல் போய்விடுமோ என்றே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் பெரும்பாலும் பயப்படுகின்றனர். நிச்சயமாக உங்கள் குழந்தை தான் விரும்பும் வாழ்வை வாழ முடியும் – ஆனால் அது உங்கள் வரையரைக்குள் வரவேண்டும் என்பதில்லை. நாம் எபப்டி இருக்கிறோமோ அப்படியே நம்மை மற்றவர்கள் நேசிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் பொதுவான எதிர்பார்ப்பு. ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்டவர்களும் அப்படியே எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து நம் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காமல் அவர்கள் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு துணை நில்லுங்கள்.
7. வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்

ஒரு சில நாட்கள் உங்கள் குழந்தை மிக நட்புடன் எல்லோரிடமும் நடந்து கொண்டு, உங்களுக்கு மகிழ்ச்சியூட்டலாம். அன்றைய தருணங்களை ஒரு டைரியில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். என்றேனும் சில நாட்கள் உங்கள் குழந்தை மன அழுத்தத்தால் தாறுமாறாக நடந்து கொண்டு உங்களை சோர்வுறச் செய்யலாம். அத்தகைய நாளில் முன்னால் எழுதி வைத்த நாட்குறிப்பை படித்துப் பாருங்கள் – உங்கள் சோர்வு பறந்து போகும்.
8. சுயமாக வாழக் கற்றுக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைக்கு சுயமாக வாழக் கற்றுத்தர முயற்சியுங்கள். தன் உடையின் சிப்பை போட குழந்தை தடுமாறும் போது நாமே அதைப் போட்டுவிட கை துறுதுறுக்கும்தான். ஆனால் பொறுமையாக எப்படிப் போடுவது என்பதை சொல்லித்தருவதே சரியான அணுகுமுறை. நீங்கள் எப்போதும் உதவிக்கொண்டே இருந்தால் தனித்து இயங்க முடியாத நிலையில் உங்கள் குழந்தை அவஸ்தைப்பட நேரிடலாம். தேவையான உணவுகளைத் தயாரித்துக் கொள்வதில் தொடங்கி எந்த ஒரு விஷயத்தையும் அதன் நுனி முதல் அடிவரை சரியான முறையில் உங்கள் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். தெரியாத விஷயத்தை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள். சுயமதிப்புடனும், தைரியமாகவும் உங்கள் குழந்தை வாழ வழி செய்யுங்கள்.
9. அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்

நிபந்தனையற்ற அன்பும், ஏற்றுக் கொள்ளுதலும்தான் நாம் தரக்கூடிய மிகச்சிறந்த பரிசாகும். உங்கள் குழந்தையின் பார்வையிலிருந்து யோசித்துப் பாருங்கள் – தொடர்ந்து அதன் செய்கைகள் திருத்தப் படுகின்றன. குழந்தை பேசும் விதமும், பழகும் விதமும் தவறு என்று சொல்லப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. விரும்பும் செய்கைகள் அனைத்தும் தவறு என்று சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தால் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை என்னாவது? எனவே இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தான் மாற்றப்படுவது எதற்காக என்பதை குழந்தைக்குப் புரியவையுங்கள். குழந்தை செய்வது தவறு என்பதால் அல்ல அது மற்றவர்களுக்குப் புரியாது என்பதால்தான் அப்படிச் செய்ய வேண்டியிருக்கிறது என்று உணர்த்துங்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு போதும் மற்றவர்களைப் பற்றி முன்முடிவுகள் கொள்வதில்லை. சுற்றியுள்ள மனிதர்களை அவர்கள் எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் உலகம் அவர்களை அப்படி எடுத்துக் கொள்வது இல்லை என்பதுதான் எவ்வளவு துயரமானது.
10.  வித்தியாசமாக இருக்கத் துணியுங்கள்

உங்கள் குழந்தையின் வித்யாசமான செய்கைகள் முதலில் அதிர்ச்சியூட்டலாம். ஆனால் போகப்போக அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை நீங்கள் உணர முடியும். ஆட்டிசத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் புதுமையான சிந்தனைகள் கொண்டவர்களாகவே பெரும்பாலும் இருப்பர். நீங்கள் கற்றுத்தரும் அதே அளவு விஷயங்களை அவர்களிடமிருந்து நீங்களூம் கற்றுக் கொள்ள முடியும் என்பதை மறக்காதீர்கள். அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேஇருங்கள். மிகப் பெரிய விஷயங்களை சாதித்த எல்லோருமே கூட்டத்தில் உள்ளவர்களைப் போலில்லாமல் வித்தியாசமாக இருந்தவர்கள்தான். நீங்கள் மிகச் சிறப்பான ஒரு குழந்தைக்கு பெற்றோராகும் பேறு பெற்றிருக்கிறீர்கள் என உணருங்கள். உங்கள் குழந்தையின் திறமைகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள். அவர்கள் விரும்புவதை செய்ய துணை நில்லுங்கள். ஒவ்வொரு சின்ன விஷயத்தை குழந்தை கற்றுக் கொள்ளும் போதும் மகிழ்வோடு கொண்டாடுங்கள்.

ஆட்டிசம் என்று கண்டறியப்படுவது முடிவல்ல – ஆரம்பம் என்று உணருங்கள்.

மூலம்:- இங்கேயிருந்து எடுக்கப்பட்டது

++++++++++++

மேலும் ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு சுட்டியைச் சொடுக்குக:-

http://216.185.103.157/~balabhar/blog/?page_id=25

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to 14. ஆட்டிசம்- பத்துகட்டளைகள்

 1. Shunmuga Sundaram .V.A says:

  Mikka Nandri . Kurippaga Autism Pathikkappatta Kuzhanthaikalin Parents Intha Aalosanaikalai Arinthu Kolvathu Migavum Avadiyam .Nandri Nanbare Nandri .

 2. Ganesan says:

  Where will get treatment for this type of children’s.

 3. prabhavathy says:

  எனக்கு மிகவும் தேவை பட்டது இப்படி ஒரு வழிநடத்தல் தான் …மிகவும் நன்றி ..இனி என் குழந்தையை எப்படி அணுக வேண்டும் என்று புரிந்து கொண்டேன்..உங்களுடன் அவ்வபோது என் சந்தேங்கங்களை கேட்டு தெளிவு பெற்று கொள்கிறேன்..முதலில் இந்தியாவில் இடை பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்…என் மாமியார் என் வளர்ப்பு சரி இல்லை என்று குற்றம் சொல்கிறார்..இவர்களை எப்படி எதிர் கொள்வது என்பதையும் சொல்லுங்கள் அண்ணா ….

 4. எவர் என்ன சொன்னாலும் புறந்தள்ளுங்கள். குழந்தையை பெற்றவர்களுக்குத்தெரியும் அதனை வளர்க்க என்று சொல்லி விடுங்கள். மருத்துவரின் ஆலோசனியின் பேரில் தொடர்ந்து சிகிச்சை/ பயிற்சி கொடுத்துவாருங்கள்..!

 5. santhosh says:

  Thank you so much for wonderful information, It’s give strenth for me. Because my son have same problem we know only last may.He is 3years 6 months now. we are geting OT treatment, and speech theraphy,but still not yet talk?…

 6. Antony says:

  Thank you very much. This is excellent. And you have put it in Tamil. This will help people who dont understand English!

  Excellent, Thanks once again. Thanks very much.

 7. நந்து says:

  என் மகனுக்கு ஆட்டிசம் உள்ளது.அடிக்கடி பற்களை நரநர என்று கடிக்கிறான்.பற்கள் கருப்பு கரை உள்ளது ஏன்

 8. கோகிலா சிவராமச்சந்திரன் says:

  மிக்க நன்றி என் மகனை எவ்வாறு கையாள்வது என்று புரிய வைத்தற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.