20. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5

இது பிரவீன் கதை

பிரவீனுக்கு ஏதோ பிரச்சனை என்று கண்டுகொண்டபோது பதினோரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. டெவலப்மெண்ட் டிலே, முளைவளர்ச்சிக்குறைபாடு அல்லது காது கேட்பதில்லை என்பதாக மருத்துவர்கள் ஆளுக்கொரு காரணங்களைச்  சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பெற்றோருடன் பிரவீன் (கட்டத்தில் இருப்பவர்)

சமூக சேவகரான அந்த தகப்பனும், ஆசிரியையான அந்த தாயும் தங்கள் பணிகள் போக மற்ற நேரத்தில் விடாமல் ஊர் ஊறாகச்சுற்றி ஒவ்வொரு மருத்துவரிடமும் குழந்தை பிரவீனை காட்டிக்கொண்டிருந்தார்கள். அக்குழந்தை நான்குவயதை நெருங்கும் போது, ஆட்டிசம் பாதிப்பு தான் இருக்கவேண்டும் என்று உறுதிபட, சேலம் அரசு மனநல மருத்துவர் சொல்லி இருக்கிறார். (இத்தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள், பிரவீன் மூன்றாவது )

இதன் பிறகே, அக்குழந்தைக்கு தெரபிகள் தொடங்கப்பட்டுள்ளன. தான் பார்த்துக்கொண்டிருந்த, ஆசிரியர் வேலையை உதறிவிட்டு முழுமூச்சாக குழந்தையுடன் தன் முழு நேரத்தையும் செலவழித்தார் அந்த தாய். சொந்த பந்தம், அக்கம்பக்கத்தினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வேறு ஊருக்கு போய்விடலாம் என்று அத்தம்பதியினர் முடிவடுக்கின்றனர்.

நல்ல காற்றும், இயற்கைக்காட்சிகள் நிறைந்த இடமும் குழந்தையின் வளர்ப்பில் உதவிட வாய்ப்புள்ளதாக மருத்துவர் சொன்னதை அடுத்து, பார்த்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அச்சிறுவனின் தாய், தன் கணவருடன் ஏற்காடுக்கு கீழ் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு ஊருக்கு இடம்பெயர்ந்தனர்.

சமூக சேவகர் என்பதால் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கும் பணி அச்சிறுவனின் அப்பாவுக்கு. ஊரில் வந்து குடும்பத்துடன் இருக்கும் நாட்களில் தனக்கு பிடித்தமான ஓவியங்கள் வரைவதில் பெரும் பொழுதை போக்கிக்கொண்டார்.

அம்மாவின் கையில் பிரவீன்

சிறுவனின் அம்மாவோ, அங்கே இருந்த தொண்டுநிறுவன பள்ளியில் பையனைச்சேர்த்துவிட்டு, இவரும் ஆசிரியர் பணியைத்தொடர்ந்தார். மாதாமாதம் சேலம் சென்று ஆட்டிசம் என்று சொன்ன மருத்துவரிடம் சிறுவனைக் காட்டி, ஆலோசனைகளையும் மருந்துகளையும் பெற்றுக்கொண்டு வந்தனர். கொஞ்ச நாட்களிலேயே மருந்துகளினால் குழந்தை மேலும் முடக்குவதை உணர்ந்ததும் மருந்துகள் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றனர்.

சிறுவன் வளரத்தொடங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக பேச்சும் வந்தது. ஆனால் தெளிவற்று, கோர்வையாக இல்லாமல் இருந்தது. படிப்பில் எல்லாம் ஆர்வம் இல்லை. கையில் கிடைக்கும் அப்பாவின் ஓவியப் பொருட்களை எல்லாம் எடுத்து, படம் வரையத்தொடங்கினான். கண்ணில் பார்ப்பதை எல்லாம் படமாக வரையத்தொடங்கி, அதனுடனே பேசி விளையாடத்தொடங்கினான். மற்ற பயிற்சிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தாலும், இவனின் வரையும் ஆர்வத்தினை அப்பாவும் அம்மாவும் தடை போட்டதே இல்லை. புதுப்புது பிரஷ் வாங்கிக்கொடுப்பதில் தொடங்கி, ஆயில் பெயிண்ட் வரை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். வீட்டின் வெளிச்சுவர் தொடங்கி இவன் படம் என்று கிறுக்காத இடமே இல்லை.

அருகில் யாரோ இருப்பதாக நினைத்துக்கொண்டு, தனியாக பேசிக்கொள்ளும் பழக்கமும் இருந்திருக்கிறது. அத்தாயின் விடா முயற்சியால் பதினோரு வயதில் தனித்து, பேசுவதை விட்டு வெளியே வருகிறான்.

பெற்றோர் மற்றும் தங்கையுடன் பிரவீன்!

பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பின், சென்னை ஓவியக்கல்லூரியில் சேர்ந்து, ஓவியம் சிற்பம் எல்லாம் கற்றுக்கொள்கிறான். க்ளேயில் பொம்மைகளை உருவாக்கி, அனிமேசன் படமாகவும் தயாரித்து எல்லோருடைய கவனத்தையும் பெற்றான்.

இவனுடைய திறமையைக் கண்டு, ஸ்காலர் ஷிப்பில் மேற்படிப்புக்கு லண்டன் செல்வதற்கான சலுகையை பிரிட்டீஸ் அரசாங்கம் வழங்குகிறது. அங்கே மாஸ்டர் படிப்பை முடிக்கிறார். பின், இங்கே வந்து சில இடங்களில் வேலை பார்த்துவிட்டு, இன்று சொந்தமாக அனிமேசன் ஸ்டூடியோ அமைத்து, திறன்பட செயலாற்றி வருகிறார்.  விளம்பரங்கள், திரைப்படங்கள் என்று அனிமேசன் துறையில் மிகவும் பிஸியான நபராக இருக்கிறார். இவர் பெயர் பிரவீன். இவர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வசித்துவருகிறார்.

(பிரவீன் குறைபாடு பற்றி அவரின் அம்மா எப்போதும் எங்கேயும் சொன்னது கிடையாது. சமூகத்தின் ஏளனப்பேச்சுக்கு பயந்தும், குழந்தையின் எதிர்காலம் கருதியும் பழைய சம்பவங்கள் குறித்து, பேசுவதை தவித்தே வந்திருக்கிறார். பிரவீன் ஆட்டிசத்தின் பிடியில் இருந்து மீண்டுவிட்ட போதிலும்,   குடும்பத்தினர் தவிர்த்து ஒருவருக்கும் சொல்லமலேயே  இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ந்த அம்மாவின் மரணத்திற்கு பின்தான் பிரவீனுக்கு தனக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்துள்ள விபரமே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், அவரால் சிறுவயது சம்பவங்கள் எல்லாவற்றையும் நினைவுகூற முடியவில்லை.)

பத்தாயிரத்தில் ஒருவர் ஆட்டிசத்தின் பிடியில் இருந்து வெளியில் வருவதாக சொல்கிறார்கள். முறையான கணக்கு விபரங்கள் இல்லை. அப்படி மீண்டு வந்தவர்களைப் பற்றிய செய்தி மேலைநாடுகளில் அதிகம் காணக்கிடைக்கிறது. நம் நாட்டில் அப்படியான நபர்கள் இருக்கலாம். ஆனால் ஆட்டிசத்திலிருந்து மீண்டு வந்தவன் என்பதை வெளியில் சொல்ல இவர்கள் முன்வருவதாகத்தெரியவில்லை.

கடுமையான தேடல்களின் பயனாக, ஆட்டிசத்திலிருந்து முற்றிலும் வெளியே வந்து, இயல்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் இரு நபர்களை நான் இதுவரை சந்தித்துள்ளேன். ஒருவர் பதினோராம் வகுப்பு படித்துவருகிறார். எவ்வளவோ பேசிப்பார்த்தும் அவரோ, அவரின் பெற்றோரோ வெளியில் சொல்ல தயாராக இல்லை.(இத்தனைக்கும் இவரின் தாய் சிறப்புக்குழந்தைகளுக்கான பள்ளி வைத்துள்ளார்) வெளியில் சொல்வதினால் எதிர்காலத்தில் ஏதும் சங்கடங்கள் வரலாம் என்று அச்சப்படுகின்றனர். அவர்களின் அச்சத்தையும் குறைசொல்வதற்கில்லை. நம்மூர் நிலவரம் அப்படி.

இன்னொருவர் பிரவீன். முதலில் ஏற்பட்ட, அனுபவமே இவரிடமும் ஏற்படப்போகிறது என்ற எண்ணத்துடன் தான் ஒரு ஞாயிறு காலை இவரைப் போய் பார்த்தேன். இயல்பாகவே பேசத்தொடங்கினார். தயக்கத்துடன் உங்களின் கதையை வெளி உலகுக்கு சொல்வதில் ஏதும் தடை உள்ளதா என்று கேட்டேன். இல்லை என்றும், ஆனால் மறைந்த தன் அம்மா வெளியில் சொல்லாமலேயே தான் வைத்திருந்தார் என்றும், தான் சொல்லுவதினால் உங்களைப் போன்ற பெற்றோருக்கு நம்பிக்கை கிடைக்கும் என்றால் தாராளமாக பதிவு செய்யலாம் என்று சொன்னபோது, எனக்கு கண்கள் நிறைந்தது. (தற்போது ஆட்டிசத்தின் பாதிப்பு ஏதும் இல்லை என்று மருத்துவச்சான்றிதழ் பெற்று வைத்துள்ளார்)

அனேகமாக நம் நாட்டிலேயே ஆட்டிசத்தின் பிடியில் இருந்து வெளியே வந்து, இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பதாக முதலில் சொல்லியவர் இந்த பிரவீனாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிரவீன், தனக்கு நினைவில் உள்ள சிறுவயது நிகழ்ச்சிகளை சொல்லும் போதே நமக்குள் வியப்பு மேலிடுகிறது. ஆட்டிசக்குழந்தையின் ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு காரணம் இருக்கும் என்பதும், மற்றகுழந்தைகளைப் போல அல்லாமல் ஒரு கற்பனை உலகில் அவர்கள் எப்போதும் சஞ்சரித்துகொண்டே இருக்கிறார்கள் என்பதும் எளிதில் புரியும்.

பள்ளிக்காலங்கள் பற்றி குறிப்பிடும் போது, எப்போதுமே தனக்கு பள்ளி வாழ்க்கை பிடித்ததில்லை என்று சொல்கிறார். மற்றவர்களின் நடுவில் தான் மட்டும் தனித்து இருப்பதைப் போன்றே உணர்ந்த கதையைச்சொல்லும் போது இன்று அவருக்கே சிரிப்பு வருகிறது. சாதரண மாணவனாகத்தான் பள்ளி வாழ்க்கை வாழ்ந்துள்ளார். பாடங்களைப் புரிந்து படிப்பது போன்ற காரியங்கள் இயலாது என்பதால் எல்லா பாடங்களையும், அப்படியே மூளையில் ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு, தேர்வில் எழுதிவிடுவாராம். தேர்வு எழுதிய பின் அந்த ஸ்கேன் பக்கங்கள் அழிந்து போய்விடும் என்று சொல்லிவிட்டு, எனக்கு மெமரி ரேம் சின்னது பாஸ் என்று சிரிக்கிறார். 🙂

தான் படித்த காலங்களிலேயே ஓவியக்கல்லூரி காலம் மட்டும் தான் வசந்தகாலம் என்று குறிப்பிட்டுச்சொல்கிறார்.

சின்னவயதில் தான் கண்ட கற்பனை உலகமே இன்று தன்னை சிறந்த கிரியேட்டராக உருவாக்கி உள்ளது என்று சொல்லும் போதே பிரவீன் முகத்தில் பெருமிதம் தெரிகிறது. உண்மையில் பிரவீன் எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையின் பெற்றோருக்கும் பெரிய நம்பிக்கை நட்சத்திரம் தான்.

________________

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 20. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.