பொதுவாக குழந்தைகளுக்கு முடிவெட்டுவதென்பது சிரமம். அதிலும் சென்ஸரி பிரச்சனைகளின் ஊடாக வாழும் ஆட்டிச நிலையாளர்களின் கதையைச்சொல்ல வேண்டாம். எங்கள் பகுதியில் எல்லா சலூன் கடைகளிலும் என்னையையும் கனியையும் பார்த்தால், அலறிவிடுவார்கள்.

அம்புட்டு அலப்பறை கொடுத்திருக்கிறான் பையன். சரி சாதாரண சலூன் கடைகள் தான் பிரச்சனை; கொஞ்சம் உயர்தரத்தில் இருக்கும் பியூட்டிபார்லருடன் இணைந்த சலூன் அழைத்துப்போகலாம் என்று போனால் அங்கேயும் அதே கதைதான். ஒரு பியூட்டி சலூன் விடாமல் எல்லாவற்றியும் அடுத்த தடவை போக முடியாமல் போயிற்று. அவர்களே லேட் ஆகும் சார் என்று அனுப்பி விடுவார்கள். 🙂

வீட்டில் இருந்தே கழுத்து, உடல் எல்லா இடங்களிலும் பவுடர் போட்டுப்போய் முடிவெட்டினோம்.. ரெயின் கோட்டு போட்டுவிட்டு, கழுத்துடன் இறுக்கிப்பிடித்துக்கொண்ட ஆடைகள் போட்டுவிட்டுப்பார்த்தோம். எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. சரி தன் கையே தனக்கு உதவித்திட்டத்தின் படி ஒரு முடிவு எடுத்தோம்.

ட்ரிம்மர் எல்லாம் வாங்கி நாங்களே வீட்டில் வெட்டி விடலாம் என்று முயன்றால்.. கனியை அழுத்திப்பிடித்து உட்காவைக்க முடியவில்லை. அவன் தூங்கும் போது கூட டிரிம்மர் போட முயற்சித்திருக்கிறோம். தலைவருக்குத்தான் ஆழ்ந்த தூக்கமே கிடையாதே, எனவே அந்த டிரிம்மரின் அதிர்வுகளில் முழித்துவிடுவான். இந்த சிக்கலை மற்ற ஆட்டிச நிலையாளரின் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்ட போது சிலர் க்ரீன் ட்ரென்ட்ஸ் போய் பாருங்க. அவங்களுக்கு இவர்களை கையாளும் பயிற்சி கொடுக்கப்படுகிறது என்று சொன்னார்கள்.

நாங்களும் அங்கே போனோம். முதல் தடவை என் மடியில் இருக்கும் கனியை ஐந்து பேர் சூழப்பிடித்துக்கொண்டு முடிவெட்டி முடித்தோம். அங்கு பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அடுத்தடுத்த விசிட்டின் போதும் இதே ரகளை தான்.

இவனுக்கு தன்னியல்பிலேயே இசையில் ஆர்வம் அதிகம் எனதால், மியூஸிக் தெரபிஸ்ட்டிடம் இக்கதையைச்சொன்னோம். அவர் புதியதாக ஐந்து பஜன் பாடல்களைப் பாடி, பதிவு செய்து கொடுத்தார். அடுத்தமாதம் அப்பாடல்களை மொபைலில் இறக்கிக்கொண்டு போனோம். சரியாக முடி வெட்டத்தொடங்கும் சமயம் பாடலை ஒலிக்கச்செய்தோம். இன்ப அதிர்ச்சியுடன் கனியார் பாடல்களில் லயித்து இருந்த நேரத்திற்குள் முடிவெட்டப்பட்டது.

அடுத்தடுத்த மாதங்களில் இதே முறையை பின்பற்றத் தொடங்கிவிட்டடோம். இப்போது சிறுசினுங்கல் தான் இருக்கிறது. பெரியதாக அழுகை இல்லை. முன்பெல்லாம் கனிக்கு முடி வெட்ட வேண்டும் என்று முடிவெடுத்தால் ஒரு வாரம் முன்பிலிருந்தே உள்ளுக்குள் உதறலாக இருக்கும். அவனைத் தயார் செய்வது, எங்களை நாங்களே பதற்றமின்றி இருக்க வேண்டும் என்று தயார் செய்து கொள்வது, அவனுக்கான லஞ்சங்களை யோசிப்பது என்று ஏதோ வருடாந்திரத் தேர்வை எதிர்கொள்வது போல முஸ்தீபுகளோடு கழியும். இந்த வாரயிறுதியில் முடிவெட்டி விட வேண்டும் என்று வீட்டம்மா சொன்னபோது ஒரு சின்ன தலையாட்டலோடு மற்றெந்த பெற்றோரையும் போல இலகுவாக அடுத்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன். இது போலவே அவனது இதர வேலைகளும் பிற குழந்தைகள் போல எளிமையாகவும், இயல்பாகவும் செய்துவிடும் நிலை ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.

படம் உதவி: clipartlogo.com


Comments

3 responses to “முடிவெட்டிக்கொள்ளுதல் யாவருக்கும் எளிதல்ல”

  1. தலையாய பிரச்னைதான்!

  2. மோகன் Avatar
    மோகன்

    என் மகன் கவினுக்கும் இந்த பிரச்னை இருந்தது. நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கடைக்கு கூட்டிப் போவேன். ஒரே அழுகைதான். ஒருமுறை என்னால் போக முடியாததால் என் மனைவி வீட்டின் அருகே உள்ள ஒரு சிறிய கடைக்கு கூட்டிப்போனார். அவன் அம்மா மிரட்டினால் அமைதியாக இருப்பான். எனவே அன்று அவன் அழவில்லை. அதன் பிறகு அவனுக்கு முடிவெட்டும் பயம் போய்விட்டது. இப்பல்லாம் ”ஹேர் கட் பண்ண போலாமா” என கேட்கிறான்.

  3. இது போலவே அவனது இதர வேலைகளும் பிற குழந்தைகள் போல எளிமையாகவும், இயல்பாகவும் செய்துவிடும் நிலை ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.

    நிச்சயம் வரும். கவலை வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *