டிஸ்லெக்ஸியாவா? அச்சம் வேண்டாம்!

பிள்ளைகளுக்கு எழுத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குறைபாட்டினை டிஸ்லெக்ஸியா என்று சொல்கிறது மருத்துவ உலகம். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளின் பெற்றோர், தேவைக்கு அதிகமாகவே அச்சப்படுகின்றனர். ஆனால் அது தேவையில்லை என்கிறது மருத்துவம். உலகம் வியக்கும் பல பெரியமனிதர்களும் சிறுவயதில் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பலர் அறியாத செய்தி.

இப்பிள்ளைகள் எழுத்தை மாற்றிப்போட்டு எழுதுவதும், மாற்றிப்போட்டு வாசிக்க இயலாமல் திணறுவதுமாக இருப்பார்கள். மற்ற குறைபாடுகளைப்போல பார்வைக்கு நேரடியாக தெரியாத குறைபாடு இது என்பதால் இதனை உணர்ந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது. பல மேலைநாடுகளைப்போல நம்மூரில் இந்த கற்றல்குறைபாடு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் இன்றுதான் பேசத்தொடங்கி இருக்கிறோம். சென்னையில் கற்றல்குறைபாடுடைய குழந்தைகளின் மேம்பாட்டுக்காக இயங்கி வருகிறது மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோஸியேஷன் என்ற அமைப்பு. (தொலைபேசி எண்:- 044- 28156697, 28157908).

டிஸ்லெக்ஸியா பற்றிய விழிப்புணர்வுக்காக இவ்வமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு, கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி, தமிழ்வழியில் பயிலும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு எப்படி பாடங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடுசெய்திருந்தது பல பள்ளிகளிலுமிருந்து தமிழ் ஆசிரியர்கள் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இப்பயிற்சியினை வழங்கியவர், மலேசியாவில் இருந்து வந்திருந்த முனைவர் முல்லை இராமையா. இவர் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேயே கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்றபின், கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு பட்டயக்கல்வி படித்துமுடித்து, இன்று இக்குழந்தைகளுக்காக இயங்கிவருகிறார்.

”பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் பாடம் நடத்துவதுபோல, சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ளவேண்டிய டிஸ்லெக்ஸியா, மெதுவாக பாடம் கற்கும் திறனுடையவர்கள் போன்ற குழந்தைகளுக்கு நடத்தமுடியாது. பொதுவாக ஒலி வழியாக மொழியை படிக்கவேண்டும். அப்போதுதான் வாசிப்பது சுலபமாகும். கற்றல் குறைபாடு உடைய குழந்தையின் தன்மை அறிந்து, பாடங்களை போதிக்கவேண்டும். அ + ம் + மா = அம்மா என்று ஒவ்வொரு எழுத்தாக  சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக, அம் + மா = அம்மா என்று அசை பிரித்துக்கொண்டு சொல்லிக்கொடுத்தால், அவர்களால் இலகுவாகப் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவர்களுக்காக சிறப்பு பாடங்களை வடிவமைத்து, அதன் வாயிலாக பயிற்சிகொடுத்து வருகிறேன். நல்ல முன்னேற்றமும் கிடைக்கிறது. இதனைத்தொடர்ந்து, தமிழ் மாணவர்களிடம் இந்த பாடத் திட்டத்தைப் பரவலாக்கும் பணியைச் செய்துவருகிறேன்” என்றார் முல்லை.

(நன்றி: செல்லமே ஜூலை 2015)

 

கற்றல் குறைபாடு தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்:-

Madras Dyslexia Association

No 94, Park view, First floor,
G. N.chetty Road, T. Nagar,
Chennai – 600017
Phone Number: 044-28157908 / 044-28156697
E-mail: ananyamdachennai@gmail.com , web:- http://www.mdachennai.com/