டிஸ்கால்குலியா… டிஸ்கிராஃபியா… டிஸ்லெக்ஸியா… மாணவர்களை வதைக்கும் கற்றல் குறைபாடுகள்..!

 

dinakaran

“ஒன்பதாம் வாய்ப்பாடு மனப்பாடமா சொல்லத்தெரியல… ஆனா.. சினிமா கதையை மட்டும் மறக்காமப் பேசு…”

“எத்தன தடவை இந்த பாடத்தை எடுத்திருப்பேன். இவ்வளவு கம்மியா மார்க் வாங்கி இருக்கியே? பாடத்தை விட, பராக்கு பார்க்குறதுலதானே உனக்கு ஆர்வம்! நீ எல்லாம் ஏன் படிக்க வர்ற…?”

“ஒரு கேள்விக்கும் சரியா பதில் எழுத்தத் தெரியல.. பாட்டு டான்ஸுன்னா மட்டும் முன்னாடி வந்து நின்னுடு!”

இப்படி விதவிதமான திட்டுக்கள் வாங்கும் பிள்ளைகளை நாம் பள்ளியிலோ, வீட்டிலோ பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் நம்மில் சிலரும் கூட இப்படி திட்டுக்கள் வாங்கி இருப்போம். பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருக்கும் பாடங்கள் தவிர இதர விஷயங்களில் ஆர்வமாகவும் திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் எல்லாப் பிள்ளைகளுமே இப்படியான திட்டுக்களையும் அவமானங்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

இன்னும் சில இடங்களில், ‘திமிர்த்தனத்தால் படிக்காமல் அலைகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டும் இப்படியான மாணவர்களின் மேல் வைக்கப்படுகிறது. ஆசிரியராலும், பெற்றோராலும் ‘மக்கு’ என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டு, சக மாணவர்கள் மற்றும் உடன் பிறந்தோரால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் இக்குழந்தைகள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். ஆம். அவர்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை எவரும் எளிதில் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். இப்படியான பிள்ளைகளில் பலர் ‘learning disability’ என்று அழைக்கப்படும் கற்றல் குறைபாடு உடையவர்களாகவே இருப்பர் என்பதை நாம் அறிவதில்லை. அதென்ன கற்றல் குறைபாடு? எழுதவும் படிக்கவும் அதனைப் புரிந்து கொள்ளவும் ஏற்படும் சிரமங்களைக் ‘கற்றல் குறைபாடு’ என்று வகைப்படுத்துகின்றனர். இதில் ஆறுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், முக்கியமாக மூன்று வகைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

1. Dyscalculia – கணித ஆளுமைத்திறன் குறைபாடு
2. Dysgraphia – எழுத்தாளுமைத்திறன் குறைபாடு
3. Dyslexia – மொழியாளுமைத்திறன் குறைபாடு

டிஸ்கால்குலியா

பாரதியாருக்கு அவரின் தந்தை கணக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அழைக்கும் போதெல்லாம்… ‘கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு’ என்று தமிழால் அடுக்குத் தொடர்போல சொல்லிக்கொண்டே போவாராம். ஆம். மகாகவி பாரதியாருக்கு கணக்குப்பாடம் என்றாலே வேப்பங்காய்தான். இன்றும் நம் பிள்ளைகளில் சிலர் மற்ற பாடங்களில் காட்டும் ஆர்வத்தைக் கணிதத்தில் காட்டுவதில்லை. கூர்ந்து கவனித்தால் இப்படியானவர்கள் அநேகமாக, ‘டிஸ்கால்குலியா’ என்னும் குறைபாடு உடையவர்களாக இருக்கலாம். இவர்களுக்கு எண்கள், கணிதத்துக்கான குறியீடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. சாதாரணமாக மணி பார்ப்பதில் தொடங்கி, பொருட்களை எண்ணுவது வரை எண்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயமுமே இவர்களுக்குச் சிரமம் தரும்.

டிஸ்கிராஃபியா

எழுத்துக்களின் வடிவத்தில் இவர்களுக்குக் குழப்பம் இருக்கும். சீரான இடைவெளி இல்லாது எழுதுவது, எழுத்துப் பிழைகள், மோசமான கையெழுத்து, வாக்கியத்தை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிப்பது என எழுதுவதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்திப்பார்கள். நான்கு கோடு போட்ட நோட்டே கொடுத்தாலும் கோணல் மாணலாகத்தான் இவர்களால் எழுத முடியும்.

டிஸ்லெக்ஸியா

“தாரே ஜமீன்பர்” என்ற இந்திப்படம் பார்த்தவர்கள் இக்குறைபாட்டைப் பற்றி ஓரளவு அறிந்துகொண்டிருக்க முடியும். எழுத்து மயக்கம் இருக்கும். அதாவது, மொழி சார்ந்த கற்றல் குறைபாடான இதில் எழுதுவது, படிப்பது, படித்ததை புரிந்து கொள்வது, மனதில் பதித்துக் கொண்டு பின் தேவைப்படுகையில் நினைவுகூர்வது போன்ற திறன்கள் பாதிக்கப்படலாம்.

உகங்ளால் இதந் வாக்கியத்தை இகுலவாக வாசிகக் முடிறகிதா எறுன் பாருகங்ள். அபப்டி வாசிகக் முடிதாந்ல் நிசச்யம் பாட்ராடுகள்.

-மேற்கண்ட வாக்கியத்தை உங்களால் இலகுவாக வாசிக்க முடிகிறதா? ‘ஆம்’ என்றால் உங்களுக்குப் பாராட்டுகள். ஆனால் இதுபோல உங்களால் இலகுவாக எழுத முடியுமா? என் கேள்வி குழப்புகிறதா? டிஸ்லெக்‌சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி மாற்றிப் போட்டு எழுதுவதும் உண்டு. பள்ளி மாணவர்களில் பலரும் இப்படி எழுதுவதைக் காணமுடியும். இதன் காரணமாகவே தேர்வுகளில் தோற்றுப்போகிறவர்களும் உண்டு. எழுதியதை திரும்பப் படித்தால் திருத்திக் கொள்வார்களோ என்று நினைக்க முடியாது. எத்தனை முறை படித்தாலும் அவர்கள் தவறாக எழுதியிருப்பதாக அவர்களால் உணரவே முடியாது. வார்த்தையை பிரித்து உச்சரிப்பதிலும் (syllabification -அசை பிரிப்பது) இவர்களுக்கு சிக்கல்கள் இருக்கும்.

அடையாளம் காணுங்கள்

இப்படியான பிரச்னைகளை சந்திக்க நேரும் குழந்தைகளுக்கு, தான் இப்படி ஒரு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது. அவர்களைச் சுற்றி இருக்கும் பெற்றோரோ, ஆசிரியர்களோ தான் இக்குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. பின் எப்படி எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் மட்டும் சரியானவையாக இருக்க முடியும். பொதுவாகக் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு, ஆடல், பாடல், படம் வரைதல் போன்ற கலைகளின்பால் இருக்கும் ஆர்வம் பாடங்களின் மேல் இருப்பதில்லை. இன்று நாம் கற்பிக்கும் முறையில் இம்மாணவர்களால் பாடங்களை உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. தனக்குக் குறைபாடு இருக்கிறது என்று தெரிவதும் இல்லை. இதனால் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடுஞ்சொற்களால் மன ரீதியில் பெரும் பாதிப்படைகின்றனர். மாணவர்களை அடிப்பது மட்டும் குற்றமல்ல. மனரீதியிலான காயங்களை ஏற்படுத்துவதும் குற்றம் என்பதை நாம் எப்போது உணர்ந்து கொள்கிறோமோ, அப்போதுதான் இம்மாணவர்களுக்கு விடுதலை.

இக்காரணங்களினாலேயே பல மாணவர்கள் பள்ளி செல்ல மறுத்து அடம் பிடிக்கின்றனர். மேலும் இன்றைய கல்விமுறையில், புரிந்துகொண்டு படிப்பதைவிட, மனப்பாடம் செய்யும் வழக்கத்தையே நாம் அதிகமாக்கி வைத்திருக்கிறோம். எழுத்துக்களும், மொழியும் சேர்ந்து ஏற்கனவே இம்மாணவர்களை மிரட்டிக் கொண்டிருக்கும்போது பாடங்களைப் புரிந்துகொள்ளாமல், வெறும் மொட்டை உருப்போடுவது என்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்துகிறது. புத்திசாலிகளாக இருந்தாலும் இக்குறைபாடு உடையவர்கள் குடத்துக்குள் இட்ட விளக்கு போலவே இருக்கின்றனர்.

தனிக் கவனம் தேவை

மேலை நாடுகளில் கற்றல் குறைபாடு உடையவர்களையும், ‘slow learners’ என்று சொல்லப்படுகின்ற மெதுவாகக் கற்கும் திறனுடையோரையும் தனியே அடையாளம் கண்டு, சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இம்மாணவர்களை ஒருபோதும் ஆசிரியர்களோ, சக மாணவர்களோ காயப்படுத்துவதில்லை. அவர்கள் கருணையோடும், கூடுதல் அன்போடும் நடத்தப்படுகின்றனர். சுற்றி இருப்பவர்களின் துணைகொண்டு, வாழ்வில் உயரங்களை இவர்கள் தொடுகிறார்கள். இவர்களுக்கான பாடங்களை வழக்கமான முறையில் இல்லாமல், சிறப்புக்கவனம் எடுத்து சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்கும். “ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற” என்ற பழமொழிக்கேற்ப குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ப பாடங்களை வடிவமைப்பதே சிறப்புக் கல்வி என்றழைக்கப்படுகிறது.

சிறப்புப் பயிற்சிகள்

கரும்பலகையில் எழுதிப்போட்டு, அதைப் படித்துக் காண்பித்து, மாணவர்களை ஒப்பிக்கவோ/எழுதவோ சொல்லும் வழமையான முறையை மறந்துவிட்டு மாணவர்களுக்கு பல்லுணர்வு முறையில் (VAKT – Visual, Auditory, Kinesthetic and Tactile) முறையில் எப்படிப் பிடிக்கிறதோ அப்படிப் பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். பார்வை (Visual) மூலம் கற்றுக் கொள்ளும் திறனுடைய மாணவர்களுக்கு நிறைய படங்கள், சார்ட் எனப்படும் வரைபடங்கள் போன்றவற்றின் மூலம் கற்பிக்க வேண்டும். கேள்விப் புலன் (Auditory) மூலம் கற்றுக் கொள்ளும் திறனுள்ள பிள்ளைகளுக்கு இசையோடு சேர்த்து பாடங்களைச் சொல்லித் தரலாம். இவர்களுக்கு வாய்மொழியாகப்பயிற்று விப்பதே சிறந்தது. இயக்கம் (Kinesthetic) மூலம் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு நம் மரபான வகுப்பறைக் கல்வி சற்றும் பொருந்தாது.

முழு உடலாலும் இயங்கும் போது மட்டுமே இவர்களால் நன்கு கற்க முடியும். விளையாட்டின் வழி கல்வி மூலமே இவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். இவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவார்கள். தொடு உணர்வு(Tactile) மூலம் கற்கும் குழந்தைகளுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைக் கொண்டு கற்பிப்பது சி
றப்பு. உப்புத்தாள், மணல் போன்றவற்றில் எழுத்தை சொல்லித் தருவது, ’அபாகஸ்’ மணிச்சட்டங்களை வைத்து எண்களைச் சொல்லித் தருவது என அவர்களால் தொட்டு உணரக்கூடிய பொருட்களின் மூலம் சொல்லித் தந்தால் இக்குழந்தைகள் நன்கு புரிந்துகொள்வர். கற்றல் குறைபாடு என்பது தீர்க்கவே முடியாத பிரச்னை அல்ல. மாணவர்களின் நிலை அறிந்து, சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டு பாடங்களை நடத்தினால் கற்றல் குறைபாடுடைய மாணவர்களை மேம்படுத்த முடியும். நம்நாட்டில் இன்றைய தேவையும் இதுதான்.

நன்றி:- தினகரன் கல்விமலர் இணைப்பிதழ் 14.07.2016