சிறார் இலக்கியம்: எதிர்காலம்

 

படம் நன்றி - புத்தகம் பேசுகிறது

படம் நன்றி – புத்தகம் பேசுகிறது

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க?” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன்.

“எப்படித்தான் இன்னும் இதையெல்லாம் படிக்கிறியோ?” என்று சலித்துகொண்டார். நல்ல வேளை சமீபத்தில் வெளிவந்த என்னுடைய சிறார் நாவல் பற்றி அவருக்கு ஏதும் தெரியாது. நகைச்சுவைக்காக இதனைச் சொல்லவில்லை. நிஜமும் இப்படித்தான் இருக்கிறது. நவீன இலக்கியத்தின் பால் ஆர்வம் கொண்ட உங்கள் நண்பர்களையோ, நீங்கள் மதிக்கும் எழுத்தாளரிடமோ, இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு பிடித்த பத்து, வேண்டாம். ஐந்து சிறார் இலக்கிய படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புக்களையும் சொல்லச் சொல்லுங்களேன். நிச்சயமாக கேள்விக்கான சரியான பதில் கிடைக்காது. இன்று தீவிர இலக்கிய வாசிப்பாளர்களிலும் சரி, இலக்கியவாதிகளிலும் சரி பலர், சிறார் இலக்கியம் எனும் வகையை சற்று மாற்றுக் குறைவானதாகவே ஏன் எண்ணுகிறார்கள் என்பது புரியவில்லை. காவியங்கள் படைப்போரும் படிப்போரும் கூட அரிச்சுவடியிலிருந்துதான் ஆரம்பிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம்.

குழந்தைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதுவும் படிக்கத் தேவையில்லை என்று எண்ணும் பெற்றோர் ஒருபுறம், தீவிர வாசிப்பு கொண்ட சிறுகுழுவுக்குள்ளும் சிறுவர் இலக்கியம் என்பதெல்லாம் இரண்டாந்தரம் என்று எண்ணும்போக்கு ஒரு புறம் என எல்லாப் புறமும் அலட்சியமாகவே பார்க்கப்பட்டாலும், சிறார் இலக்கிய வகைமை நூல்கள் முற்றாக இல்லாது போய்விடவில்லை.

தமிழில் இன்று வந்துகொண்டிருக்கும் வணிக/ இடை வணிக/ சிறு இலக்கிய பத்திரிக்கைகளில் சிறார் இலக்கியத்திற்கான இடமிருக்கிறதா என்று பாருங்கள். அவ்வளவு ஏன், சிறார் நூல்களுக்கு விமர்சனமோ, அறிமுகமோ கூட செய்வதில்லை. அரிச்சுவடி படிக்காமல் நேரடியாக கல்லூரிக்கு செல்லும் வழியறிந்தவர்கள்தான் இந்த நவீன வாசகர்கள்/ எழுத்தாளர்கள்.

தான் சிறுவயதில் படித்த புத்தகங்களையும், அதன் மூலம் தன்னுள் துளிர்த்த வாசிப்பின் சுவையையும்,படைப்பூக்கத்தையும் உணர்ந்த சிறுபான்மை மனிதர்களின் இடைவிடாத ஆர்வத்தால் சிறுவர் இலக்கியம் என்பது இன்னமும் தமிழ்ச்சூழலில் ஒருபுறமாக இயங்கியபடித்தான் உள்ளது.

நவீன படைப்பாளிகளில் சிலர் மட்டுமே சிறார் இலக்கியத்தில் பங்காற்றி வருவதோடு, இங்கே இயங்குபவர்களையும் ஊக்குவித்து வருகின்றனர்.

தான் சிறுவயதில் வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்களின் பெயர்களை எல்லாம் வரிசைகட்டிச்சொல்லும் பலரும் இன்று தம்பிள்ளைகளுக்கு சிறார் நூல்களை அறிமுகப்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே? காரணம் இன்றும் சிறார் இலக்கியத்தில் சிறப்பான நூல்கள் வந்து கொண்டிருக்கும் விஷயம் இவர்களுக்கு தெரிவதில்லை. நவீன படைப்பாளிகளோடு இவர்களின் வாசிப்பு முடிந்து போய் விடுகிறது.

நவீன படைப்புக்களை படிக்கும் வாசகர்கள், தங்களின் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நூல்களை வாசிக்ககொடுக்கிறார்கள் என்று பார்த்தால் மிகுந்த ஆயாசமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த பலர் ஆங்கில கதைகள் வாசிப்பதையே ஊக்குவிக்கிறார்கள். இதற்கு குழந்தை ஆங்கிலவழிக் கல்வி கற்று வருவதை மட்டும் காரணம் சொல்லிவிடமுடியாது. இவர்கள் சிறார் இலக்கியத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்றோ அல்லது குழந்தைகளுக்காக விரிக்கப்படும் மந்திர உலகத்தினை தங்களின் இன்றைய அறிவியல் அறிவோடு அணுகத்தொடங்கிவிட்டனர் என்றோதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொன்னூறுகளின் தொடக்கத்தியில் இருந்தே, சிறார் இலக்கியத்தில் ஒருவித தேக்கம் ஏற்படத்தொடங்கியது என்று சொல்லலாம். தொலைக்காட்சி, கணினியின் வருகை, பின்னர் மொபைல் போனின் வருகை போன்றவை குழந்தைகளை தம் பக்கம் ஈர்க்கத் தொடங்கியது. இதன் விளைவாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மெல்ல மெல்லகுறையத் தொடங்கியது. தற்போதைய காலம் சிறார்இலக்கியத்தின் முக்கியமான காலகட்டம் என்று அறுதியிட்டு சொல்ல முடியும். அரசு, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சியில் சிறார் நூல்களுக்கு நல்ல சந்தையும் உருவாகிஉள்ளது. நேரடியான தமிழ் படைப்பு, பிறமொழியில் இருந்து நல்ல படைப்பு என தமிழிலில் சிறப்பான படைப்புக்களையும் சிறார் இலக்கிய படைப்பாளிகள் தந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் சில, நவீன படைப்பாளிகளுக்குத்தான் சிறார் இலக்கியம் பற்றிய ஞானம் கைகூடாமல், அஞ்ஞானவாசத்தில் இருக்கின்றனர்.

(2016 அக்டோபர் மாத புத்தகம் பேசுகிறது இதழில் வெளியான கட்டுரை)

This entry was posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.