மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 6]

பூஜா வீட்டுக்குள் நுழையும் போதே, அப்பா ஹாலில் அமர்ந்து வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார். இது தினப்படி வழக்கம். காய்கறிகளை அப்பா வெட்டினால் அம்மா சமையல். அம்மா வெட்டினால் அப்பா சமையல். இன்று அம்மா கிச்சனில் இருந்தார்.

கதவு திறந்த சத்தம் கேட்டு, ஹாலுக்கு வந்த அம்மாவின் முகம் கடுகடுவென இருந்தது.

“எங்கடி போயிட்டு வர்ற..?”

“டான்ஸ் கிளஸுக்கும்மா..”

“அது தெரியுது… ஆனா… ஸ்கூல் விட்டு வீட்டுக்கே வரலையாம்மே… கீழே தாத்தா சொன்னாரே…” என்று அம்மா கேட்டார்.

பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகத் தலைகுனிந்தபடி நின்றாள் பூஜா.

“கேக்குறேன்ல… சொல்லுடி..”

கையில் இருந்த மரப்பாச்சியைப் பார்த்தாள். அது இவளுக்கு மட்டும் தெரியும்படி ‘சொல்லு’ என்பது போலச் சைகை காட்டியது.

“வந்ததும் வராததுமா… ஏன் அவ மேல பாயுற… கீழ் வீட்டுல இருந்திருப்பா… இல்லாட்டி டான்ஸ் கிளாஸ் முடிய லேட் ஆகி இருக்கும்…” என்றார் அப்பா.

“ஆமா… இப்படியே அவளுக்குச் செல்லம் கொடுங்க. ஸ்கூல் விட்டு அவ கீழ்வீட்டுக்கு வரவே இல்லையாம்…” அம்மாவின் குரலில் கோபம் கூடி இருந்தது.

“அப்படியா செல்லம்…” என்று கேட்ட அப்பா, அம்மாவின் பக்கம் திரும்பி, “முதல்ல அவ ஃப்ரஷ் ஆகிட்டு வரட்டும். அப்புறம் கேட்டுக்கயேன்.” என்றார்.

“அதெல்லாம் முடியாது. முதல்ல அவ பதில் சொல்லட்டும்… சொல்லுடி..”

“நேரா டான்ஸ் கிளாஸுக்கு போயிட்டேம்மா… க்ளாஸ் முடிஞ்சு.. ஷாலினி வீட்டுக்குப் போயிட்டு வந்தேம்மா…”

“வீட்டுக்கு வராம ஏன் நேரா க்ளாஸுக்கு போன… அதுக்குப் பதில் சொல்லுடி”

அமைதியாக நின்றிருந்தாள்.

”சொல்லுடி” என்று அம்மா அதட்டவும், “வீட்டுக்கு வர பிடிக்கலைம்மா..” என்றாள் பூஜா.

“என்னது வீட்டுக்கு வர பிடிக்கலையா…” என்று பூஜாவின் கன்னத்தில் ஓர் அறைவிட்டார் அம்மா.

அவ்வளவுதான். அதுவரை அடக்கி வைத்திருந்த சங்கடங்கள் அழுகையாக வெடித்தது. அழுதபடியே குடுகுடுவென ஓடிச்சென்று அப்பாவின் அருகில் அமர்ந்துகொண்டு அழத் தொடங்கிவிட்டாள். அப்பா ஆதரவாக இவளின் தலையைத் தடவிக்கொடுத்தார். தோளில் மாட்டி இருந்த ஸ்கூல் பேக்கை கழட்டிவிட்டார். அணைத்துக்கொண்ட, அப்பாவின் மேல் சாய்ந்துகொண்டு, அவர் பனியனைத் தன் கண்ணீரால் நனைத்தாள் பூஜா. அந்தப்பக்கம் பார்க்காமலேயே அம்மா தன்னை முறைப்பது அவளுக்குத் தெரிந்தது.

“இப்படிப் பதில் சொன்னா, அம்மாவுக்குக் கோபம் வராம என்ன செய்யும்…? ஏம்மா… வீட்டுக்கு வர பிடிக்கலை? என்று அப்பா கேட்டார்.

கொஞ்ச நேரத்தில் அழுகை விசும்பலாகி நின்றது. அதன்பின் கீழ் வீட்டுத் தாத்தா செய்தவற்றைப்பற்றிக் கூறினாள் பூஜா. அவள் சொன்னதைக்கேட்டு அப்பாவும் அம்மாவும் உறைந்து போனார்கள்.

“என்னடி சொல்ற”

“ஆ.. மா..ம்..மா…” என்று வார்த்தையை மென்று முழுங்கிச் சொல்லும்போதே, அவளுக்குத் திரும்பவும் அழுகை வந்தது.

“ஐயோ… ஐயோ..” என்று அம்மாவும் ஓடிவந்து சோபாவில் அமர்ந்துகொண்டு, பூஜாவை வாரி அணைத்துக்கொண்டார்.

***

“அப்புறம்…” என்று கேட்டாள் ஷாலு. மறுநாள் விடியற்காலை. படுக்கையிலே உட்கார்ந்திருந்தாள். அவளது தலையணையில் ஒய்யாரமாய்ச் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தது மரப்பாச்சி.

“அப்புறமென்ன… கொஞ்ச நேரம் பூஜா அழுதாள். அவளைச் சமாதானப்படுத்தினாங்க.”

“ம்..”

“அப்புறம்… அவளோட அம்மாவும் அப்பாவும் பூஜாவை உள்ளறைக்குப் போகச்சொல்லிட்டு, பேசினாங்க”

“என்ன பேசினாங்க..?”

“எனக்கென்ன தெரியும். நான் பூஜாவோட ரூமுக்குள்ள இருந்தேனே…”

“ஐயையோ…” என்றாள் ஷாலு.

“கொஞ்ச நேரம் கழிச்சு, பூஜாவை கூப்பிட்டு, நீ வீட்டுலயே இரும்மான்னு சொல்லிட்டு, அம்மாவும் அப்பாவும் கீழே தாத்தா வீட்டுக்குப் போய்ச் சண்டைப்போட்டாங்க”

“சண்டைப்போட்டாங்களா…?”

“ஆமா! எதையோ தள்ளிவிட்ட மாதிரி, டம்… டமால்ன்னு பயங்கரமா சத்தம் எல்லாம் கேட்டுச்சு. அப்புறம் மேலே வந்தவங்க… மாமா வீட்டுக்குப் போலாம்னு பூஜாவைக் கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. கிளம்புற அவசரத்துல பூஜா என்னையை விட்டுட்டு போயிட்டா… எப்படியோ கஷ்டப்பட்டு நான் இங்கே வந்துட்டேன். இனி நடந்ததை அவதான் வந்து சொல்லனும்” என்றது மரப்பாச்சி.

“வெறும் சண்டைபோட்டுட்டு போயிட்டாங்களா… தப்பு செஞ்ச அந்தத் தாத்தாவைப் பனிஷ்ட் பண்ணலையா?”

“அதுக்குத்தானே நான் இருக்கேன். நான் சரியான தண்டனை கொடுத்துட்டு வந்துட்டேன்.” என்று உற்சாகமாகச் சொன்னது மரப்பாச்சி.

“என்னது, நீ தண்டனை கொடுத்துட்டியா?” என்றாள் ஷாலு வியப்பாக. ‘ஆமாம்’ என்பதுபோலத் தலையாட்டியது மரப்பாச்சி.

“கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லேன்” என்று கேட்டாள் ஷாலு.

“சொல்றேன்… சொல்றேன்…” என்று அங்கே நடந்தவற்றைக் கூறத்தொடங்கியது மரப்பாச்சி.

****

கதவைப் பூட்டிவிட்டு பூஜாவும் அவள் அம்மா அப்பாவும் கிளம்பிப்போன பின், வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வழியைத்தேடியது மரப்பாச்சி. வாசல் கதவு பக்கத்தில் இருந்த ஜன்னல் திறந்திருந்தது.

அதன் வழியாக வெளியேறிவிடலாம் என்று முடிவு செய்து, பக்கத்தில் இருந்த ஸோபாவின் மீது ஏறியது. அதன் சாயும் பகுதிக்குப் பின்னால் இருந்தது ஜன்னல். அதனால் ஸோபாவின் ஓரமாகச் சென்று அதன் விளிம்பு பக்கமாக ஏறத்தொடங்கியது. சிரமப்பட்டு ஏறி முடித்தபின் தான் மரப்பாச்சி அதைக் கவனித்தது. ஆம்… ஜன்னல் முழுவதும் வலை மாட்டப்பட்டிருந்தது. பூச்சிகள் கொசுக்கள் வராமல் இருக்க மாட்டுவார்களே அதே வலை. இப்போது எப்படி வெளியே செல்லப்போகிறோம் என்று கவலை அதற்கு வந்தது.

ஏறி நின்ற இடத்திலேயே சோர்ந்து போய் அமர்ந்து ஜன்னலையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் அதன் மேல் பக்கத்தில் இருந்து, கேபிள் டிவியின் வயர் வீட்டுக்குள் வருவதைக் கவனித்தது. வயர் வரும் இடத்தில் மட்டும் வலை கொஞ்சம் நெகிழ்ந்து போய் இடைவெளி தெரிந்தது. அதன் வழியாகச் சென்றுவிடமுடியும் என்பதை அறிந்ததும் அதற்கு உற்சாகம் பீறிட்டது.

தான் அமர்ந்திருந்த ஸோபாவின் ஓரத்திற்கு ஓடியது. கேபிள் டிவியின் வயரை எட்டிப் பிடுத்துக்கொண்டு, ஏறத் தொடங்கியது. அந்த வயர் கொஞ்சம் வழுக்குவது போல இருந்தாலும், தனது ஒவ்வொரு பிடியையும் விடாமல் பற்றிக்கொண்டு, முன்னேறியது மரப்பாச்சி. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் ஏறியபின், ஜன்னலின் ஓரத்தில் கிடைத்த இடைவெளி வழியே வெளியே வந்து நின்றது. கீழே பார்த்தால் கிடு கிடு பள்ளம்.

Box news

பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் (Safe Touch – Unsafe Touch) தொடர்ச்சி: எவரின் தொடுதல் உங்களுக்குக் கூச்சம் ஏற்படுவதைப்போல, ஒரு மாதிரியான உணர்வைத் தருகிறதோ, அதுவே பாதுகாப்பற்ற தொடுதல் என்பதை உணர வேண்டும். நீங்கள் ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ உங்கள் அந்தரங்க பகுதியை யாரையும் தொட அனுமதிக்காதீர்கள். அம்மா, அப்பாவிடம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்றாலும் விடாமல் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். அப்போதுதான் அப்படித் தப்பு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் பேசலாம். இன்னும் தெரிந்துகொள்ளப் பெற்றோரிடமே இதுபற்றிக் கேளுங்கள்.

This entry was posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *