மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 7]

முதல் மாடியில் இருந்து பார்ப்பது போல் இல்லாமல், பலமாடி கட்டடத்தின் மிகவும் உயரமான ஜன்னல் வழியாக, கீழே பார்ப்பது போலிருந்தது. என்ன செய்வது மரப்பாச்சியின் உருவம் அப்படி! வீட்டில் இருந்து வெளியே வர உதவிய கேபிள் டிவியின் வயர் எங்கே செல்கிறது என்று கவனித்தது மரப்பாச்சி. அது கீழ்வீட்டுக்குச் சென்றது. ஐடியா… இந்த வயரையே பிடித்துக் கீழ்வீட்டுக்குச் சென்று அங்கிருந்து நாம் வெளியேறிவிடலாம் என்று திட்டமிட்டது. இந்தக் கீழ்வீட்டில் தானே அந்தத் தாத்தாவும், பாட்டியும் இருக்கிறார்கள். அவர்களையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு, போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டது. கேபிள் வயரைப் பிடித்துக்கொண்டு, சறுக்கியபடி இறங்கியது. கீழ்வீட்டின் ஜன்னல் வழியே அந்த வீட்டுக்குள் வந்து சேர்ந்தது மரப்பாச்சி.

அது வந்து சேர்ந்த இடத்தில் ஒரு தலையாட்டி பொம்மை இருந்தது. அதைப் பார்த்ததும் மரப்பாச்சிக்கு மகிழ்ச்சியாகி விட்டது. அதன் அருகில் சென்று அதன் தலையைத் தட்டிவிட்டு, அதைப்போலவே தலையாட்டிப் பார்த்தது. பின் அருகில் இருந்த சாய்ந்தாடும் பொம்மையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, தனது காலால் கீழே ஓர் உந்து உந்தியது. உடனே அது ஒருபக்கம் சாய்ந்து பின் நிமிர்ந்தது. வந்த வேலையை மறந்து இப்படி விளையாடிக் கொண்டிருந்தபோது, பாட்டியின் குரல் உச்சமாகக் கேட்டது, “த்தூ… நீயெல்லாம் மனுஷனாய்யா… இத்தனை வயசுக்கு அப்புறம் இப்படிப் புத்தி போயிருக்கே.. இன்னிக்கே உன் பையன்கிட்ட போன் பண்ணிச் சொல்லுறேன்.” விளையாட்டை நிறுத்திவிட்டு, மெல்ல கீழிறங்கிய மரப்பாச்சி, மெதுவாக அடிமேல் அடிவைத்து குரல் வந்த திசை நோக்கிச் சென்றது.

அங்கே தாத்தா அமர்ந்திருந்தார். பாட்டி நின்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே புடவை தலைப்பைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, ஒழுகும் மூக்கையும் அதே தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தார்.

“அவன் கிட்ட சொல்ற அளவுக்கெல்லாம் இங்க ஒன்னும் நடக்கலை. தேவையில்லாம நம்ம பையன்கிட்ட சொல்லிட்டு இருக்காதே… அந்தப் பூஜா பொண்ணு பொய் சொல்லுது”

“ஆமாய்யா… அந்தப் பச்சப்புள்ள பொய் சொல்லுதுன்னு சொல்றியே, உனக்கு வெக்கமா இல்ல. தப்பு செஞ்சுப்புட்டு இல்லைன்னு சாதிக்கிற பாரு… உன்னைய பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. ஏதோ அவங்க நல்லவங்களாக இருக்கப்போயி… நீ தப்பிச்ச. இல்லாட்டி போலீஸு கேஸுன்னு அசிங்கப்பட்டிருப்ப…”

“ஆமாண்டி… நீயே கத்தி, தெரு முழுக்கக் கேட்குற மாதிரி சொல்லிடு” என்று குரலை உயர்த்திப் பாட்டியின் மேல் எரிந்து விழுந்தார் தாத்தா.

“எக்கேடும் கெட்டுப்போங்க… நாளைக்கு அவங்க அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துடுங்க… இதையெல்லாம் பார்க்கனும்கிறது என் தலைவிதி” என்று தன் தலையில் அடித்துப் புலம்பியபடியே அந்த அறையில் இருந்து போனார் பாட்டி.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த மரப்பாச்சிக்குக் கோபம் தலைக்கேறியது. தப்பைச் செய்துவிட்டு, செய்யவே இல்லை என்று சொல்கிறாரே… இவரைச் சும்மா விடக்கூடாது. சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணியபடியே சுற்றும் முற்றும் பார்த்தது.

அதே வேளையில், தாத்தா கட்டிலில் இருந்து எழுந்து, பாத்ரூம் நோக்கிப்போனார். மரப்பாச்சிக்கு கையும் காலும் பரபரத்தது. அவர் அமர்ந்திருந்த கட்டிலின் காலுக்கு அருகில் ஒரு பாட்டில் தெரிந்தது. அந்தப் பாட்டிலை நோக்கி, வேகமாக ஓடியது மரப்பாச்சி. அது ஏதோவொரு எண்ணெய் பாட்டில். அதனுள் பாட்டியின் கால்வலிக்குத் தடவுவதற்கான தைலம் இருந்தது. அதை அசைத்துப் பார்த்தது. அசைக்க முடிந்தது, இதற்கிடையே தாத்தா பாத்ரூமுக்குள் சென்றுவிட்டார். வேகவேகமாக அந்தப் பாட்டிலை பாத்ரூமின் வாசலை நோக்கி, உருட்டியபடியே கொண்டுபோனது. பாத்ரூமின் வாசலை அடைந்ததும், பக்கவாட்டில் படுத்து இருந்த பாட்டிலின் மீதேறி, தனது பலத்தைத் திரட்டி, அதன் மூடியை திறந்தது. அவ்வளவுதான் குபுக் குபுக் என்று தைலம் கொட்டி அந்த இடம் முழுவதும் பரவியது.

பாட்டிலின் மீது தவழ்ந்து பின்பக்கமாகக் கீழே குதித்து, வேகமாக ஓடிப்போய் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டது. பாத்ரூம் கதவைத் திறந்தும் கொட்டப்பட்ட எண்ணையில் கால் வைத்தார் தாத்தா. “ஆஆஆஆ” என்று கத்தியபடியே வழுக்கி, நிலை தடுமாறி, பாதி உடல் பாத்ரூமிற்குள்ளும், மீதி அறைக்குள்ளுமாகக் கீழே விழுந்தார். நிலைமை உணர்ந்து அவர் அடுத்தச் சத்தம் போடும் முன்னேரே பின் மண்டையிலும் அடிபட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த பாட்டி, தாத்தா விழுந்து கிடக்கும் கோலம் கண்டு பதறியடித்து, அவரை எழுப்பிவிடப் போனார். ஆனால் அதற்குள்ளாக அவர் மயங்கிவிட்டார். 

**

மரப்பாச்சி சொன்னதைக்கேட்ட ஷாலு, “சரியான தண்டனை கொடுத்திருக்க… அப்புறம் என்ன ஆச்சு” என்றாள்.

“இன்னும் நான் முழுசாவே சொல்லி முடிக்கலையே, அப்புறம் பாட்டி பக்கத்து வீட்டுக்காரங்களை உதவிக்குக் கூப்பிட்டு, ஆம்புலன்ஸுக்கு போன் செய்து, அதுல அவரை மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப்போனாங்க”

“ம்… அப்புறம்”

“தாத்தாவுக்கு ஒரு கை உடைஞ்சு போச்சு, கட்டுப் போட்டிருக்காங்க. இடுப்பு எலும்புலயும் ஒரு விரிசல் விழுந்திடுச்சு. அதனால இனி அவர் ஆறுமாசத்துக்கு நடக்கக்கூடாதாம். ஃபுல்லா பெட் ரெஸ்ட்தான் எடுக்கனுமாம். இனி அவர் படுத்த படுக்கைதான்.. ஹா..ஹா…” என்று சிரித்தது மரப்பாச்சி. அதன் சிரிப்பில் ஷாலுவும் சேர்ந்துகொண்டாள்.

“செமையான காரியம் பண்ணினே… சரி, இப்போ ஸ்கூலுக்கு நேரமாச்சு. நான் குளிச்சுட்டு ரெடியாகி வந்துடுறேன். கிளம்புவோம். அங்கே போய், பூஜாகிட்ட மிச்சத்தைக் கேட்டுக்கொள்வோம்” என்று பாத்ரூம் நோக்கிப் போனாள் ஷாலு.

*************

யூனிபார்ம் அணிந்து, சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டு, தயாராகி, பள்ளி வாகனத்திற்காகக் காத்திருந்தாள் ஷாலு. புத்தகப் பையினுள் மரப்பாச்சியையும் தூக்கி வைத்திருந்தாள்.

“இந்தாடி.. லஞ்ச்பாக்ஸ். ஹோம் ஒர்க் எல்லாம் முடிச்சுட்டியா? “

“ம்… அதெல்லாம் முடிச்சுட்டேம்மா..”

“சரி… அம்மாவுக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு. வேன் வந்ததும் சொல்லு, வாசலுக்கு வாரேன்” என்றபடியே உள்ளே போய்விட்டார்.

அம்மா அந்தப் பக்கம் போன கொஞ்ச நேரத்தில் வாசலில் வேனின் ஹாரன் சத்தம் கேட்டது.

“அம்மா… வேன் வந்துடுச்சு…” என்றபடி புத்தகப் பையையும், சாப்பாட்டுக் கூடையையும் தூக்கிக்கொண்டு வாசலை நோக்கி ஓடினாள் ஷாலு.

“ம்.. இதோ வந்துட்டேன்” என்றபடியே பின்னால் ஓடிவந்தார் அம்மா. வாசல் கேட்டைத்திறந்து, வேனில் அவளை ஏற்றிவிட்டு, வேன் புறப்பட்டதும், டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றார் அம்மா.

வேனுக்குள் ஏறி, இடம் பார்த்து அமர்ந்தபின், பூஜாவைத் தேடினாள் ஷாலு. அவள் வேனில் இல்லை. எப்பவும் வந்துவிடுவாளே… இன்று ஏன் வரவில்லை. ஒருவேளை அவளை அவங்க மாமா வீட்டிலேயே பூட்டி வச்சுட்டாங்களா? இனிமேல் ஸ்கூலுக்கே வரமால் போயிடுவாளோ? ஷாலுவின் சிந்தனை நாலாபக்கமும் ஓடியது.

மெதுவாக எழுந்து, வேன் கதவருகில் அமர்ந்திருந்த நர்சரி டீச்சரின் அருகில் போனாள். “மிஸ்… பூஜா வரலையா?” என்று கேட்டாள்.

“வரலை. அவ வீட்டு வாசலில் ஐஞ்சு நிமிசம் நின்னு ஹாரன் அடிச்சுப்பார்த்தோம். ஆளைக்காணாம். வந்துட்டோம். சரி… போ… போய் உட்காரு”

“சரிங்க மிஸ்” என்றபடியே தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

Box NEWS

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை: களிமண்ணினால் செய்யப்பட்ட இப் பொம்மையின் தலை உள்ளே சிறு கம்பி பொருத்தப்பட்டிருக்கும். பொம்மையின் உடலில் இருக்கும் இடத்தில் கம்பியின்மேல் செங்குத்தாக நிலைநிறுத்தினால், தலை ஆடிய வண்ணம் இருக்கும். இதனால் இக்காரணப்பெயர் பெற்றது. உடலின் அடிப்பாகம் சம்மணமிடப்பட்ட இதன் தலை மட்டும் காற்றிலும்கூட ஆடிய வண்ணம் இருக்கும்.

BoxNews:

சாய்ந்தாடும் பொம்மை : இப்பொம்மைகளின் தலைப்பாகம் கூம்பு வடிவிலும் அடிப்பாகம் அரைக்கோள வடிவிலும் இருக்கும். இதனுள் அதிக எடையுள்ள சிறிய இரும்பு கோலிக்குண்டு. அல்லது எடைகூடிய மண் நிரப்பப்பட்டிருக்கும். கூம்பு வடிவ தலைப்பாகத்தைத் தள்ளிவிடும் போது, கோளவடிவ அடிப்பாகம் புவியீர்ப்பு விசையின் காரணமாக நேர் செங்குத்தாகவே வந்து நிலை நிறுத்திக்கொள்ளும். எத்தனை முறை தள்ளிவிட்டாலும் பழைய நிலைக்கு வந்துவிடும். ஊர்பெயரைத்தாங்கி இப்பொம்மைகளை அழைக்க அரசு புவியியல் அடையாள சட்டபடி (ஜியோகிராபிக்கல் இண்டிகேஷன்-geographical indication) ஒப்புக் கொண்டுள்ளது.

This entry was posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *