அவள் + வலி = வாழ்க்கை. -அ.வெண்ணிலா

அவன் - அது= அவள்

வலி. வேறுபாடுகளைக் கடந்து மனித இனத்திற்குப் பொதுவான உணர்வாக வலி உணரப்படுகிறது. அன்பு செய்தலும், உணர்வுகளை சுகித்தலும் பொதுவான சந்தோஷங்கள். வலி – பொதுவான துக்கம். வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான வலிகள்; லௌகீக விஷயங்களின் போதாமை உண்டாக்கும் வலி; உறவுகளின் புறக்கணிப்பின் வலி; ஆணுக்கொரு வலி; பெண்ணுக்கொரு வலி; குழந்தைக்கொன்று; பருவங்களுக்கேற்ப மாறுபடும் வலி; ப்பா… எத்தனை விதமான வலிகள்; ஒவ்வொரு வலியின் துக்கத்துடன் வெறொன்றை எந்தக் கணத்திலும் ஒப்பிட்டுவிட முடியாத அளவுக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு தனித்துவமாயிருக்கிறது? மனித ராசிகள் உருவாகும் போதே ஒவ்வொன்றும் எப்படித் தனித்த அடையாளத்துடன் இயற்கையாக உருவாகிறதோ, அத்தனை விதமாக இருக்கின்றன வலிகள்.

இயற்கையில் படைக்கப்பட்ட திருநங்கைகளுக்கும் வலி என்று ஒன்று உண்டு என்பதையே இப்பொழுதுதான் தனித்த அடையாளத்துடன் உணர முடிகிறது. ஆணின் வலியாகவும் அற்று, பெண்ணின் வலியாகவும் அற்று, ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருமாறத் துடிக்கிற இயற்கையின் வலியை சமூகம் உணர மறுத்திருக்கிறது. தனக்குப் புரியாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை கொடுமைப் படுத்தி புறக்கணிப்பது நம் சமூகத்திற்கு எளிதாக இருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் வலியிலிருந்து ஒரு வலி மொழிவழி நம் மனதைக் குத்திக் கிளறுகிறது. அழுகி, நாற்றமெடுத்துப், புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூக அமைப்பின் மரியாதைக்குரிய பிரஜை நீயும்தானே என முகத்தில் காறித் துப்புகிறது. ‘மிகையாக உணர்ச்சிவசப் படும் தருணத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துப் போ’ என நம்மை விரட்டுமோ என்ற பயம் தூக்கத்திலும் கொப்பளிக்கிறது. ‘நான் கடவுள்’ படத்தில் வரும் அயோக்கியத்தனமான வசனமான ‘வாழத் தகுதியற்றவர்களுக்கு வழங்கப் படும் மரணம் வரமே’ போன்ற ஆதிக்க வெறியினால் எத்தனை உயிர்கள் காலங்காலமாக இந்த மண்ணை விட்டு வெளியேறியிருக்கக் கூடும்?

யெஸ். பாலபாரதி எழுதியுள்ள அவன் – அது = அவள் நாவலின் கடைசிப் பகுதியிலிருந்து துவங்கி அந்த நாவலுக்குள் செல்லலாம் என நினைக்கிறேன். ‘இனி என்ன பண்ன முடியும் சொல்லு? பொட்டயாப் பொறந்ததே தப்பு. அதுலயும் கல்யாணம் காட்சின்னு ஆசப்படுறது அதவிட தப்பு. பாக்கலாம்…. இன்னும் எத்தனை காலத்துக்குன்னு. முடியிற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு முடியாம போகுதோ… அன்னிக்கு எதாவது டிரெயினுக்கு முன்னால பாஞ்சுடுவேன்’ என்று எழுந்து நடக்கத் தொடங்கினாள் கோமதி.

சாவின் விநாடியை கணந்தோறும் அனுபவித்துக் கொண்டே, வாழ்வின் கடைசி வரை முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்ற தீராக் காதலுடன் வாழ்பவர்கள் திருநங்கைகள். அப்படியான தீராக் காதலுடன் உள்ள கோபியாக இருந்து கோமதியாக மாறிய திருநங்கையே நாவலின் மையம். கற்பனை பாத்திரங்களற்று, பொய்க்கலப்பற்ற உண்மைச் சம்பவங்களின் புனைவே இந்நாவல். இந்நாவலில் சமூகத்தின் பிரதிநிதிகளாக வரும் அநேக ஆண்களும் பெண்களும் வேடிக்கை பார்க்கிறார்கள்; கேலி பேசுகிறார்கள்; வன்கொடுமை செய்கிறார்கள்; பலாத்காரம் செய்கிறார்கள்; வெறி கொப்பளிக்கும் மிருகம் ஒன்றினைப் போல் பல்லிளித்துக் கொண்டு மேல் விழுந்து பிராண்டியிருக்கிறார்கள். இவற்றில் எழுதுகின்ற நானும், படிக்கிற நீங்களும் கூட நமக்கான சிறு பங்களிப்பை நிச்சயம் செய்திருப்போம் என்ற குற்றவுணர்விலிருந்து மேலெழ முடியவில்லை.

ஆணாய் இருந்து பெண்ணாய் மாறத்துடிக்கும் உடலின் பரிதவிப்பு. ஆணின் உடலுக்குள் வாழ நேரும் பெண் மனசின் வெட்கம். இயல்பாகவே நாணம் கமழ, புதிய ஆண்களிடமிருந்து விலகி நின்றுத் தவிக்கும் இயல்பு… நாவலின் சின்னச் சின்ன வரிகளில் கடக்கின்றன. பெண் மனசும் ஆண் உடலுமாய் இருக்கும் கோபிக்கு உடலின் சிறு பாகமும் வெளித்தெரிவது கூச்சமேற்படுத்துகிறது. கைலியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு நடப்பது நிர்வாணமாய் இருக்கிற உணர்வை உண்டாக்குகிறது. கடைக்குப் போக நேர்கிற தருணங்களில் எல்லாம் காலிப் பசங்களை கடக்க நேர அவனின் மனம் படும் பாடு; தழைய கட்டியிருக்கும் கைலியை அவன்களுக்காக வேண்டி முட்டிக் கால் அளவுக்கு மடித்துக் கட்டிக் கொண்டு செல்வதும்; மனம் கூச்சத்திலும் வெட்கத்திலும் தடுமாறுவதும்; தன்னை ஒம்போது எனக் கூப்பிடப் போகிறார்களே என்ற பயமும்; சின்னஞ் சிறிய காட்சியென்றாலும் நுட்பமாக பதிவாகியுள்ளது.

பெண் பற்றிய சித்தாந்தக் கேள்வியெல்லாம் தொலைத்து விட்டு திருநங்கைகள் பெண்ணின் இயல்புகளை வலியப் பிடித்துக் கொள்கிறார்கள். விதவிதமாய் அலங்காரம் செய்து கொள்வது, கைநிறைய வளையல்களை அணிவது; அழுத்தமான வண்ணங்களில் ஆடைகளைத் தேர்ந்தெடுத்தல், இல்லாத மார்பகத்தை, மிகையாக்கி, இரண்டு மடங்கு பெரியதாக்கிக் காட்டுதல், நீள நீளமாய் பூவைத்தல், கண்மையும், உதட்டுச் சாயமும் அழுத்தமாய் வைத்தல்… என பல வழிகளைக் கையாண்டு தன்னை பெண் என எப்படியும் அடையாளப் படுத்திவிட வேண்டும் என்ற தவிப்பு திருநங்கைகளிடம் அதிகமிருக்கிறது. கோபி முதன் முதலில் கல்யாணி அக்காவின் பாவாடை தாவணியைப் போட்டுக் கொண்டு கன்னம் வீங்க சங்கரண்ணனிடம் உதை பட்டாலும் பெண்ணின் உடையை அணிய வேண்டும் என்ற வேகம் குறையவில்லை. காரணம், பெண்ணின் ஆடைதான் பெண் என நம்புவதற்கான, அடையாளப் படுத்துவதற்கான ஆயுதமாக கோமதியின் மனம் தீவிரமாக நம்புகிறது. கோபி தன்னையொத்த திருநங்கைகளிடம் உறவு வைத்துக் கொண்டதும், கூவாகத் திருவிழாவிற்குச் சென்றதும், மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பின்னும் கூட, வீட்டின் பாதுகாப்பான வாழ்வு தேடித் திரும்பவில்லை. வீட்டிற்குச் சென்றால ஆணின் உடையணிய வேண்டும் என்ற வெறுப்பின் மிகுதியிலேயே தன்னைக் கண்டெடுத்த திருநங்கைத் தாயுடன் மும்பைக்கு கிளம்புகிறான். பேச்சின் நடுவில் அவனின் புதிய தாய் அவளை ‘டீ’ போட்டுக் அழைத்தவுடன் உண்டாகும் மனச் சந்தோஷம் நமக்குப் புரியுமா என்பது சந்தேகமே.

வாழ்வின் சகல தரப்பு மனிதர்களாலும் கைவிடப்பட்ட திருநங்கைகள் தங்களை ஒரு குழுவாக (ஜமாத்) இணைத்துக் கொள்கிறார்கள். பிறந்து வளர்ந்த இடங்களில் அடையாளம் கண்டறிந்த பின்னர் அவமானப் படுத்தப்பட்டு , கொடுமைப் படுத்திய பின் வெண்தணலாய் சுடும் சமூகத்தின் நடுவீதிகளில் வீசியெறியப் படுகிறார்கள். முட்டுச் சந்துகளில் மோதிப் பார்த்து, பார்த்து விடா முயற்சியினால் மனம் தளராமல் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் குருட்டெலிகளைப் போல், திருநங்கைகள் தனக்கான குழுவைச் சென்றடைகிறார்கள். அதற்குள் வாழ்வின் முன் பாதி படுகொலைக் காதையாய் விரிவடைகிறது. உறவுகளால் துரத்தியடிக்கப் பட்ட இவர்களுக்கு ஜமாத்தில் புது உறவு உருவாகிறது. ஆண்களே இல்லாத குடும்பங்கள்; ஆணுக்கான விழைவுடன். அம்மா- மகள் – அக்கா- தங்கை-பாட்டி-பேத்தியாய் நீளும் உறவுகள்.

உறவுகளுக்குள் நிலவும் அன்பு உண்மையானது; பனித்துளியைப் போல தூய்மையானது;பாதுகாப்பற்ற சமூக வெளியில், அவர்கள் இறுகிக் கோர்த்த கரங்களோடு பாதுகாப்பு வளையங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். சின்னஞ்சிறிய கூட்டுக்குள் அன்பு வளர்த்து, பெருவெளியில் உலவுகிறார்கள். தொட்டதிற்கெல்லாம் தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பதும், கட்டியணைத்து அன்பு செய்தலும், சிறைகளற்ற அன்பும் அவர்களுக்கானது. ரத்த பந்தமே இல்லாமல் உருவாக்கப் பட்ட உறவிற்காக உயிரையும் தரத் தயாராயிருக்கும் உறவுகள்; பிச்சையெடுத்து வாழ்ந்தாலும், தந்தா பண்ணி வாழ்ந்தாலும், அந்தப் பணத்தை தனதாக்கிக் கொள்வதில்லை. பொது; அங்கு எல்லாம் பொது; வேலை, பணம், சொத்து, சுகம், துக்கம், வலி… எல்லாம் பகிரப்படுகிறது. ஆதித் தாயின் தாய்வழிச் சமூகத்தின் பொதுவுடமை கோட்பாட்டின் கூட்டு வாழ்வே திருநங்கைகளின் வாழ்வு. தனம்- சுசீலா – சுந்தரி – கோமதி – இவ்வாழ்வின் தொடர்ச்சிகள்.

பொது நீரோட்டத்திலிருந்து விலகி நிற்கும் நரிக்குறவ இனத்தின் தனித்துவ மொழி இன்றைக்கும் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. திருநங்கைகளும் தமக்கான பிரத்யேகமான வார்த்தைப் பிரயோகங்களை வைத்துள்ளனர். வட இந்திய மொழிகள், இந்தி ஆகிய மொழிகளின் கலப்புடன் ஏராளமான வார்த்தைகள் – சேலா, பாம்படத்தி, ஜியோ, சக்கா, தந்தா, மோரி, சண்டாஸ், ரிவாஜ், சக்ஜா, இஜடா, ஆஸிக் போன்ற ஏராளமான வார்த்தைகள் அவர்கள் புழக்கத்தில் உள்ளன. நாவலில் திணிக்கப் படாமல் வரும் இவ்வார்த்தைப் பிரயோகங்கள நாவலாசிரியரின் ஆளுமையை அடையாளப் படுத்துகின்றன.

‘ஏ வயத்தக் கழுவிப் பொறந்த பயடா’ என வருந்திக் கொண்டு கோபியை கைப்பிடிக்குள் இருந்து நழுவ விட்டுவிடக் கூடாது என பரிதவிக்கும் கோபியின் அம்மா மங்களம் – தாய்மை உணர்வின் பரிதவிப்போடு பதிவாகியிருக்கிறார்.

சமூகம் விரித்த கண்ணியில் தான் பிழைத்த கதையின் துக்கம் கண் இமைக்குள் முள்ளாய் இருக்கையில், தன்னைப் போலொரு சிறுவனும் தன்னந்தனியனாக மாட்டிக் கொண்டு வாழ்வின் கோர முகத்தை சந்தித்துவிடக் கூடாது என்ற பதற்றத்துடன் வரும் திருநங்கை அகஸ்டின்…. சில காட்சிகளில் பதிவானாலும் மிக முக்கிய பாத்திரமாய் பரிணமிக்கிறார். கோபி – கோமதியாகும் ஆசையால் அவசரப் படாமல் இருந்திருந்தால், அகஸ்டின் கோபியை கலெக்டராக்கவில்லை என்றாலும் கண்ணிவெடிக்குள் சிக்காமலாவது அகஸ்டின் காத்திருப்பார். தன் துயரத்தை பாதுகாப்பு வளையமாக விரித்துப் பிடித்திருந்த அகஸ்டினை கோபி மண்ணுக்குள் ஊறிச் செல்லும் புள்ளப் பூச்சியாய் கடந்து செல்கிறான்.

பேய் பிடித்ததால்தான் தன் மகன் இப்படி புத்தி குழம்பி நடக்கிறான் என மங்களம் பேயோட்ட, நாட்டு உளவியல் நிபுணரான சாமியார் மணியப்பிள்ளையை அழைத்து வருகிறார். இயல்பாக சாமியாரும், கோபியும் பேசிக் கொள்ளும் உரையாடல் காட்சி நகைச்சுவையையும், மூட நம்பிக்கையின் முகத்திரையையும் ஒருசேர வெளிக் கொணர்கிறது. பெரியளவிற்கு பிரயத்தனங்களற்று பண்பாட்டு மீறலை வெளிப்படுத்துகிறது இவ்வுரையாடல்.

திருநங்கைகளை நெருங்கிச் செல்வதற்கு பொருத்தமான காரணங்களோடு இரு பத்திரிக்கையாளர்கள் ராஜா-அன்பு அறிமுகம் இருக்கிறது. அன்பு கோமதியை கசக்கிப் பிழிவதும், கொடுமை செய்வதும், திடீரென குடிகாரனாக மாறுவதும் நாவலில் செயற்கைத்தனம் சேர்க்கிறது. எல்லா இயல்பான பாத்திரங்களைப் போலவே இப்பாத்திரங்களும் இருந்திருக்கலாம்.

முழுப் பெண்ணாய் மாற நிர்வாணம் (ஆண்குறி அகற்றும் செயல்) செய்யும் தருணங்கள் உடலை தூக்கி தூக்கிப் போடுகின்றன. ஆப்பிரிக்காவில் பாலுறவு பாதுகாப்பிற்காக பெண்களுக்குச் செய்யப்பட்ட ‘சுன்னத்’- தின் கொடுமையை மீண்டும் பார்ப்பது போல மனம் உடைந்து நொறுங்குகிறது. மயக்க மருந்துகளற்றுத் தாயம்மாவின் கைகளால் அறுத்தெறியப் படும் ஆண்குறியின் வழியே அறுத்தெரியப் படுவது ஆணின் அடையாளம் மட்டுமல்ல; பல தருணங்களில் அவனது உயிர். இது குறித்து பயமும், தயக்கமும் அற்று திருநங்கைகள் தாயம்மாக்களை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்; வாழும் ஆசையைக் கொன்று. நிர்வாணம் சரியாக நடைபெறாத பெண்ணுக்கு, சாவு தனியாக வரவேண்டியதில்லை. பெண்ணாகித் தீர வேண்டும் என்ற தீரா வெறியில் காவு கொடுக்கப் படுகின்றன திருநங்கைகளின் வாழ்வு.

திருநங்கைகள் அதிகம் சீரழியும் இடம் காவல் நிலையங்களாக இருக்கின்றன. காவலர்களின் வல்லுணர்வையும், வக்ரத்தையும் தனியாக ஆய்வு செய்தால், ஆய்வாளர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூட ஆய்வின் முடிவை எழுதி விடலாம். வக்கிர மிருகங்களின் அடையாளமாக இந்நாவலிலும் உள்ளனர் ஏராளமான காவலர்கள்.

கல்லி(சந்து)-யிலும், நாக்கா(நால்முனைச் சாலை)விலும் கவனிப்பாரற்று ரத்தச் சகதியில் கிடக்கும் திருநங்கைகளின் வாழ்வை, மொழியின் துணையோடு வெளிச்சப் படுத்தியுள்ள என் இனிய தோழனும் நாவலாசிரியருமான யெஸ். பாலபாரதிக்கு என் இனிய பாம்படத்தி (கை கூப்பிய வணக்கம்).

************************************************************
—-
கடந்த மாதம் புத்தகம் பேசுகிறது இதழில் வெளி வந்துள்ள விமர்சனம், – புத்தகம் பேசுகிறது, ஜூன் 2008

இதே நூலுக்கு இணையத்தில் வந்திருக்கும் விமர்சனங்களை.. நம் இணைய நூலகர் பாஸ்டன் பாலாஜி தொகுத்துள்ள பக்கம். http://snapjudge.blogspot.com/2008/07/balabharathi-avan-athu-aval-book.html அவருக்கும் என் நன்றிகள்.

தமிழ்மணத்திற்கும் நன்றிகள்

This entry was posted in வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் and tagged , , . Bookmark the permalink.

5 Responses to அவள் + வலி = வாழ்க்கை. -அ.வெண்ணிலா

  1. வேறு யாராவது எழுதியதை பதிவில் இடுபவர்கள் …… இன்னாரால்…. இங்கு எழுதப்பட்டது என்ற குறிப்பை தயவு செய்து இடுகையில் ஆரம்பத்திலேயே தர வேண்டுகிறேன்

  2. பாலா சார்

    ஏன் திருநங்கைகள் பயன்படுத்தும் வார்த்தைகள் “இந்தி போல்” இருக்கின்றன ??

    அது என்ன மொழி

  3. மிக அருமையான விமர்சனம்ண்ணே.. பகிர்ந்தமைக்கு நன்றி

  4. அண்ணே,

    இந்த புத்தகத்தை சென்னை புத்தகக் காட்சியில பார்க்கும் போது யாரோ எழுதினதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்- ஒரு சின்ன பொறிதட்டி, வந்து வலைப்பூக்களைத் தேடிப்பார்த்தா – கண்டுபிடிச்சிட்டேன். ஆனா இன்னும் வாசிக்கலை. கூடிய சீக்கிரம் வாசிச்சிடுவேன்.

    உங்கள் உழைப்புக்கு வணக்கங்கள்.

  5. நன்றி பாலபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.