காது குத்தல் அல்லது காதணி விழா

எட்டாம் வகுப்பு படிக்கும் போது கோடை விடுமுறையில் போய் வந்த சுற்றுலா பற்றிய கட்டுரையை எழுதச்சொன்னார்கள். எல்லோரும் தாங்கள் போய் வந்த வெளியூர் பயணம் குறித்து எழுதினார்கள். அதில் அநேகரும் தாய்மாமன் வீட்டுக்கு போய் வந்த்தைப் பற்றியே எழுதி இருந்தார்கள்.  நான் மட்டும் மற்றவர்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். ஏனெனில் எனக்கு எந்த தாய்மாமனும் இல்லை.

என் அம்மாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் அதில் ஒரு தங்கை. மற்றது எல்லாம் அண்ணன்மார்கள். ஆறு மாமாக்கள் எனக்கு இருந்திருக்கிறார்கள். ஆம்.. இருந்திருக்கிறார்கள்.., நான் பிறக்கும் முன்னே.. அவர்களின் இளவயதில் ஒவ்வொருவராக அம்மை, டைபாய்டு என்று நோவில் விழுந்து மாண்டு போனார்களாம் அடிக்கடி அம்மை சொல்லி வருத்தப்படுவார். என்னுடன் பிறந்தவர்களில் இரண்டொரு பேருக்கு மட்டும் தான் தாய்மாமன் மடியில் அமர்ந்து காதுகுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  தாய் மாமன் என்று சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லாதது எனக்கு அப்போது பெரிய வருத்தமாக இருந்ததில்லை.

ஆனால்.. எனக்கு இதை எங்க மாமா வாங்கி தந்தார்.. என்று ஒவ்வொரு பொருளையும் உடன் படிக்கும் நண்பர்கள் வந்து காட்டும் போது, ச்சே.. ஒரு மாமாவாவது உயிரோடு இருந்திருக்கலாம் என்று தோணியதுண்டு.

கருப்பையா என்பவரைத் தான் நாங்கள் எல்லோரும் ’மாமா’ என்று உரிமையோடு அழைத்திருக்கிறோம். அவர் எங்களுக்கு சொந்தம் கிடையாது என்ற போதிலும் எங்கள் அப்பாவின் நண்பர். அப்பாவின் அடிக்கு பயந்து குறைந்த மதிப்பென்கள் பெறும் போதெல்லாம்..பிராகரஸ் ரிப்போர்ட்டில் கூட அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறேன் நான்.

ராமேஸ்வரம் பக்கமெல்லாம் காதுகுத்துக்கு கண்டிப்பாய் கிடாய் வெட்டு நடக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப கிடாய் எண்ணிக்கை உயரும். அதே போல பந்தியில் ‘கப்’ அடிக்கும் போது.. இலையின் முன் உட்காந்திருப்பவரின் நெருக்கம் (தகுதி, சொந்தம் என எல்லாம் அடங்கும்) அறிய,  இலையில் விழும் சதை துண்டம், எலும்பு துண்டத்தை வைத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்.

உடன் படித்த நண்பன் ஒருவன் வீட்டில் அவனது கடைசி தம்பியின்  காதுகுத்து நிகழ்ச்சியில் சின்ன தாய்மாமனை சரியாக மதிக்காத்தால்.. கிடாய்யோடு மனிதர்களும் வெட்டிக்கொண்டார்கள். பின் காவல் நிலையத்திற்கும், அரசு மருத்துவமணைக்கும் ஓடியது சொந்தங்கள். இத்தனை களோபரங்களுக்குப் பிறகும் பந்தியோ, மொய் வசூலிப்பதோ நிற்கவில்லை என்பதும் நினைவில் உள்ளது.

என் பெரியக்காவின் மகனுக்கு எனது பெரியண்ணன் மடியில் வைத்து காது குத்தினார்கள். சொந்த பந்தங்கள் புடைசூழ.., தாய்மாமன் மடியில் இருந்தான் மருமகன். அவனிடம் பேச்சுக்கொடுத்தபடியே இருந்தார் காதுகுத்துபவர். வயதானவர் என்பதால் அவரின் முகத்தையே பார்த்தபடி சிரித்துக்கொண்டிருந்தான் மருமகன். தேன் நிப்பில், வாழைப்பழம், கற்கண்டு, சாக்லேட் என நிறைய இனிப்பு வகைகளை அவன் முன்னால் ஒரு தட்டில் வைத்திருந்தார்கள்.

பேச்சினூடாக திண்பதற்கு இனிப்பு வகையைக் கொடுத்ததும் அதனை சப்புக்கொண்டிக் கொண்டிருக்கும் போதே.. அண்ணன் கண்களால் ஜாடை காட்ட.. கையிலிருந்த கூர்மையையான ஊசி போன்றதொரு சாதனத்தால் போட்டார் ஓட்டை. பாவம் குழந்தையின் அலறல் மண்டபத்தின் வெளியேயும் கேட்டது. ஒரு காது குத்தியாகிவிட்டது. இரண்டாவது காது குத்துவதற்குள் பெரிய களோபரமே நடந்த்து. வலது காதில் ஒர் ஓட்டையும் இடது காதில் இரண்டு ஓட்டையுமாய் அந்த காதணிவிழா இனிதே நடந்து முடிந்தது.

அதன் பின் அக்கா ஊரில் இருந்த ஒருவாரகாலமும் மருமகன் பெரியண்ணின் பக்கம் போகவே இல்லை என்பதும், அவரைக் கண்ட மாத்திரத்திலேயே வீறிட்டழுததும் தனிகதை.

என் பையனுக்கும் ஒரு தாய்மாமன் உண்டு. ஆனால்.. அவரின் முகம் எனக்கே நினைவில்லை. அப்படி தான் எங்கள் உறவு அவருடன்.  கனிவமுதனுக்கு காதுகுத்தலாம் என்று நாங்கள் முடிவெடுத்ததும், கன்ஷாட் மூலம் காது குத்துவது என்பதில் உறுதியாக இருந்தோம். கடந்த வாரத்தில் ஒரு நாள் வீட்டில் வைத்தே காது குத்துவது என்று முடிவு செய்தவுடன்… துணைவியாரே தன் தோழியர் சிலரை அழைத்திருந்தார். எங்களிருவருக்கும் பொதுவான தோழர்களிலும் அருகிலிருக்கும் சிலரை மட்டும் அழைப்பது என முடிவு செய்தோம். பின்ன நடுராத்திரி ஏழு மணிக்குன்னா, யாரு வருவா? (நமக்கெல்லம் விடியிறதே காலை 10மணிக்குத்தானே?)  அவர்களில் நம்ம நந்தாவும் அவரது அண்ணன் நரேஷும் அடக்கம்.

குத்துமிடம் குறிக்கப்படுகிறது

குத்துமிடம் குறிக்கப்படுகிறது

சூளை மேட்டில் ஒரு பியூட்டி பார்லரில் வேலையில் இருக்கும் நண்பர் ஒருவர் தான் காதுகுத்த  வந்திருந்தார். கன்ஷாட்டில் குத்துவது நிமிட வேலை என்றால் அதற்கு முன் தயாரிப்பு வேலைகள் தான் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. ஒரு ஜெல்மாதிரியான கிரீம் எடுத்து முதலில் தடவினார். சிறிது நேரத்திற்கு பிறகு எங்கு காது குத்தவேண்டும் என்று மார்க் வைக்கப்பட்டது.

மாமன் மடியில் வைத்து குத்துவது தானே முறை.. நந்தா அல்லது நரேஷ் இருவரில் எவர் மடியில் வைத்தாவது காதுகுத்தலாம் என்று எண்ணி இருந்தேன் நான் ஆனாலும், என் துணைவி, அவரது சகோதரனை நினைத்து வருத்தப்படுவாரே என்ற எண்ணத்தில் என் மடியில் வைத்து குத்தலாம் என்றேன்.

மாமன் மடியில் மருமகன்..

மாமன் மடியில் மருமகன்..

ஆனால்.. அவரோ.., மாமன் மடியில் இருத்திதான் காதுகுத்தனும், நந்தாவை உட்காரச்சொல்லுங்க என்று சொல்லி விட்டதால்.. தயக்கம் ஏதுமின்றி உடனடியாக நந்தா மடியில் அமர்த்தி, கன்ஷாட் மூலம் நிமிட நேரத்தில் காது குத்தினோம்.

காது குத்தப்படுகிறது..

காது குத்தப்படுகிறது..

சைடு போஸ்

சைடு போஸ்

நந்தா கையிலிருந்த கேமிராவை நரேஷ் வாங்கிக்கொண்டு படமெடுத்தார். அலறலில்லை, கதறலில்லை.. சின்னதாய் ஒரு அழுகை. அவ்வளவு தான் மிக எளிமையாக ஒரு நிகழ்வு நடந்து முடிந்தது.

கனிவமுதன்

கனிவமுதன்

மனதுக்கும் இனிமையாக, நிறைவாக நல்லிதயங்களின் வாழ்த்துக்களுடன் என் மகனின் முதல் கல்யாணம் நிறைவடைந்தது.  (காதுகுத்தையும் கல்யாணம்னுதான் சொல்லணுமாமில்ல? 😉  )

தொடபுடைய ஒரு சுட்டி:- ஒரு காதணிவிழா படங்களை பார்க்க.. இளவஞ்சியின் பதிவுக்கு போகவும்.. 🙂

This entry was posted in அனுபவம், அப்பா, குழந்தை வளர்ப்பு and tagged , , . Bookmark the permalink.

30 Responses to காது குத்தல் அல்லது காதணி விழா

  1. காது குத்தல் வைபவம் நல்லாத்தான் இருக்கு. நந்தா குழந்தையை பிடித்திருப்பதை பார்த்தாலே தாய்மாமன் போல தான் இருக்கு.

  2. 🙂

    வாழ்த்துக்கள்

  3. கனிவமுதன் செம க்யூட்! 🙂

    ப்ளாஷ்பேக்கை குறைச்சுட்டு கனிவமுதன் பத்தி இன்னும் சொல்லியிருக்கலாம்..:-))

  4. மஞ்சூரண்ணா, சென்ஷி, சந்தனமுல்லை நன்றி!

    சந்தனமுல்லை@ நிச்சயம் சொல்லலாம்..எண்ணமிருக்கு.. சொல்லும் அளவுக்கு அவர் இன்னும் வளரவில்லை. 🙂

  5. //நிச்சயம் சொல்லலாம்..எண்ணமிருக்கு.. சொல்லும் அளவுக்கு அவர் இன்னும் வளரவில்லை. :)//

    இதை இப்ப இங்க சொன்னதுக்கு பின்னாடி நொம்ப ஃபீல் பண்ணுவீங்கன்னு நெனைக்கறேன் 🙂

  6. கையேடு says:

    வாழ்த்துகள்- கனிவமுதனுக்கும், குடும்பத்தாருக்கும்.

  7. குசும்பன் says:

    //அப்பாவின் அடிக்கு பயந்து குறைந்த மதிப்பென்கள் பெறும் போதெல்லாம்..பிராகரஸ் ரிப்போர்ட்டில் கூட அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறேன் //

    ஆக ஒரு முறை கூட அப்பாக்கிட்ட கையெழுத்து வாங்கியது இல்லையாணே நீ?

  8. குசும்பன் says:

    //மனதுக்கும் இனிமையாக, நிறைவாக நல்லிதயங்களின் வாழ்த்துக்களுடன் என் மகனின் முதல் கல்யாணம் நிறைவடைந்தது. (காதுகுத்தையும் கல்யாணம்னுதான் சொல்லணுமாமில்ல? )//

    கனிவமுதன் காது குத்துக்கு பா.க.சவை கூப்பிடாததுக்கு தலைக்கு காதில் கடப்பாறை குத்தும் விழா வரும் மே 15 நடைபெறும், டைம் எல்லாம் ஒன்னும் கிடையாது யார் எப்பொழுது வந்தாலும் கடப்பாறை குத்தலாம்!

  9. குசும்பன் says:

    //என் மடியில் வைத்து குத்தலாம் என்றேன்.//

    வீட்டில் விசேசம் நடக்கும் பொழுது எப்படின்னே உனக்கு இது மாதிரி டெரர் யோசனை வருது, அந்த குட்டி புள்ளைய நினைச்சு பார்த்தியா?

  10. ஒரு போன் பண்ணிருகலாம்ல… போண்ணே உம் பேச்சு கா.

  11. அதிஷா says:

    ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். என்னதான் இருந்தாலும் மேன்மக்கள்!

  12. Naresh Kumar says:

    கனிவமுதன் அழகு!!! திருஷ்டி படக் கூடாது என்பதற்காக நந்தா!!!

    பை த பை, அந்த த்ரீ ரோஷஸ் டீ விளம்பரம் கணக்கா நீங்க காஃபி குடிச்சதை சொல்ல மறந்துட்டீங்களே!!!

  13. kusumbuonly says:

    //ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். என்னதான் இருந்தாலும் மேன்மக்கள்!
    //

    யோவ் அதிஷா இங்க மட்டும் என்னா இப்படி? ஒழுங்கு மரியாதையா நல்லபதிவு நன்றி நர்சிம் என்று சொல்லுய்யா! அப்ப நாங்க மட்டும் தான் உனக்கு தொக்கா?:(((

    மேன்மக்கள் மேன்மக்களே!

  14. வாழ்த்துக்கள் தம்பி பாப்பா. !!!! மாமா வந்து உன்னை பாக்கறேன் ஓக்கே ?

  15. நான் ஆதவன் says:

    க்யூட்

    வாழ்த்துகள் 🙂

  16. Romeo says:

    பையன் சூப்பரா இருக்கான் தல ..

  17. வாழ்த்துகள

  18. damodarchandru says:

    வாழ்த்துக்கள் நண்பா. நாம் முதன் முதலில் கோவை பட்டறையில் ஓசைசெல்லா இடத்தில் சந்தித்தோமே ஞாபகம் இருக்கிறதா?…
    மென்மேலும் கனிவமுதன் சிறப்பாக வளர்வதற்கு வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சந்துரு

  19. வாழ்த்துக்கள்:)!

  20. //ஆனால்.. அவரோ.., மாமன் மடியில் இருத்திதான் காதுகுத்தனும், நந்தாவை உட்காரச்சொல்லுங்க என்று சொல்லி விட்டதால்//
    படித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு பேருமே ஒரே மாதிரி தான் யோசிச்சிருக்கீங்க 🙂

    கனிவமுதனுக்கு வாழ்த்துகள்.

  21. பழைய சம்பிராதயங்களும் புதிய அணுகுமுறைகளும் சந்திக்கும் ஓர் இடைப்பட்ட காலகட்டத்தில் இருக்கிறோம் நாம். பல தலைமுறைகள் கழித்து பாலா உங்களுடைய இந்த பதிவு அது குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு புது புது தகவல்களை அள்ளி தரக்கூடும். 🙂

  22. Nataraj says:

    வாழ்த்துக்கள் பாலபாரதி. “எனக்கு ஐஜிய தெரியும். ஆனா ஐஜிக்கு என்ன தெரியாது”ங்கற மாதிரி உங்களுக்கு என்னை தெரியாது :D. ஆனால் லக்ஷ்மிக்கு என்னை தெரியும். அவரின் இன்போசிஸ் நண்பன். குழந்தை ரொம்ப ரொம்ப அழகு. லக்ஷ்மியிடம் திருஷ்டி சுற்றி போட சொல்லுங்கள். இந்தியா வருகையில் கண்டிப்பாக உங்களை சந்திக்க முயற்சி செய்வேன்.

  23. thangavel says:

    கனிவமுதனுக்கு என் வாழ்த்துக்கள்

  24. புள்ளைக்கு முதல் கல்யாணம் பண்ணிய அப்பனுக்கும் வாழ்த்துக்கள்!

  25. அபிஅப்பா says:

    ஆஹா கனிவமுதன் கல்யாணம் நல்லபடியா நடந்துச்சா! வாழ்த்துக்கள்!!!

  26. அக்காகி அகாகியோவிச் says:

    விஞ்சான பூர்வமா காது குத்தல் தேவையா தேவை இல்லையான்னு யாராவது பதிவெழுதினா தேவல…

    எனி ஹவ்.. ஆல் தி பெஸ்ட் கனிவமுதா..

  27. rachinn says:

    vaazhthukal

  28. dharumi says:

    சமத்துப் பயலுக்கு அன்பும் வாழ்த்தும்

  29. shyam says:

    வாழ்த்துக்கள், அண்ணனுக்கும், கனிவமுதனுக்கும்!

    ////பழைய சம்பிராதயங்களும் புதிய அணுகுமுறைகளும்///////

    பழைய சம்பிராதயங்களில் தேவையானவற்றை, புதிய அணுகுமுறையில் செய்யலாம் தான்!
    (ஆனால், சம்பிரதாயம் என்ற சொல்லாடலே, தேவை இல்லாத நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களை தானே சொல்கிறார்கள்??)

    குழந்தைக்கு முடி எடுப்பது (மொட்டை அடிப்பது) தேவையான ஒன்றாக இருக்கலாம்! அதற்கு கோவிலுக்கு போகாமல், சலூனில் மொட்டை போடலாம்! இது வேறு….
    ஆனால் காது குத்தல் தேவையா? அதுவும் அண்ணன் னோட குழந்தைக்கு???

    பெண் குழந்தைக்கே (இந்த ‘கே’ இழுப்புக்காக, என்னை ஆணாதிக்கவாதின்னு என் காதுல குத்தாதீங்க!:) ) காது குத்தல் தேவையாங்கற காலத்துல… அதும் ஆண் குழந்தைக்கு?

  30. thubairaja says:

    வாழ்த்துக்கள். 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.