வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து – அகநாழிகை பொன். வாசுதேவன்

வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து : யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ – அகநாழிகை பொன். வாசுதேவன்

யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ என்ற இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளன. இக்கதைகள் பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளியானவை.

திருநங்கைகள் தொடர்பான ஆர்வம் காரணமாக நான் பல ஆண்டுகளாக கூவாகம் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வந்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததுதான் எஸ்.பாலபாரதி எழுதிய ‘அவன் – அது = அவள்’ என்ற புத்தகம். மூன்றாம் பாலினமாக அங்கீகாரம் பெற்றிருக்கும் திருநங்கைகளின் வாழ்வின் வலிகளைப் பேசிய இப்புத்தகத்தின் வழியாகத்தான் எனக்கு அவர் அறிமுகம். அதன் பிறகு இணையத்தில் எழுத வந்தபிறகு நேரிலும் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்ற கேள்வி காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இலக்கியம் என்று ஒரு பிரிவினரும், இதெல்லாம் இலக்கியமில்லை என்று மற்றொரு பிரிவினரும் தத்தம் தரப்பை உரக்கச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவரவர் திராணிக்கு ஏற்றபடி, அனுபவ மதிப்பீட்டு அளவில் படித்ததும் பிடித்தது எல்லாம் இலக்கியம்தான்.

பொதுவாக சிறுகதைத் தொகுப்புகளை கடைசிக் கதையிலிருந்து வாசிப்பது என்னுடைய வழக்கம். பாலபாரதியின் கதைகளையும் அப்படித்தான் வாசித்தேன். இத்தொகுப்பின் மீதான என் அகமதிப்பீடை இது உயர்த்திக் கொள்ளச் செய்தது. காரணம் முதல் கதையிலிருந்து வாசித்திருந்தால், இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய பார்வை வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும். பாலபாரதியிடம் இந்த கருத்தைச் சொன்னதும், எழுதிய காலவரிசைப்படி இக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது என தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை நினைவுபடுத்தினார். ஒரு படைப்பாளியின் எழுத்தின் வீச்சை அறிவதற்கான ஒரு உத்தியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தொகுப்பின் பனிரெண்டு கதைகளும் எழுதியே ஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், வாழ்க்கையில் அடித்தட்டு மக்களின் வலியுணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவை என்பது இக்கதைகளில் நான் உணர்ந்த பொதுத்தன்மை.

காற்றில் உந்தப்பட்ட காகிதம் அது செல்கிற திசையெல்லாம் சென்று அலைக்கழிக்கப்படுவது போல வாழ்க்கை முழுவதும் நிலையற்று உழல்கிற அடித்தட்டு மக்களின் வாழ்தலுக்கான அவஸ்தை, எதிர்கொள்கிற இழப்பு, ஏற்படுகிற வலி இதுதான் இந்தக்கதைகளின் அடிநாதம். பாலபாரதியின் சுய வாழ்வனுபவம் அவருக்கு இக்கதைகளின் வழியாகச் சொல்ல உதவுகிறது.

ஒரு நுனியில் ராமேஸ்வரம் மற்றொரு நுனியில் பம்பாய் என கைகளில் சுற்றிக் கொண்டு இதனூடாக அவிழ்க்க முடியாத அச்சிக்கலின் முடிச்சுகள் வழியே தன் பார்வையை கதைகளாக ஆக்கியிருக்கிறார்.

பாலபாரதியின் கதைகளில் காணக்கிடைக்கிற விவரணைகள் மிக நுட்பமானவை. இவருக்கு சொல்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. ஒரு இடத்தை விவரிக்கும் போதே உடன் பயணிக்கிற உணர்வு நமக்கும் ஏற்பட்டு விடுகிறது. ‘நகரம்‘ என்ற கதையில், பொங்கல் வீடு எனப்படும் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்குகிற கதை நாயகனை விவரித்துக் கொண்டேவரும் போது அப்பகுதியின் அவலமான சூழல், வேலை செய்கிறவர்களின் நிலை என எல்லாவற்றைப்பற்றியும் ஒரு சித்திரமும், அனுதாபமும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.

அதேபோல ‘சாமியாட்டம்‘ கதையில் ‘டண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என பறையொலி ஒருஇதமான இசையோட்டமாக ஆரம்பிக்கின்ற சாமியாடியின் ஊர்வலத்தை சொல்லிக்கொண்டே வந்து, நிறைவடையும் நேரத்தில் அதே ‘டண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என்ற வார்த்தைகளை உச்சத்தொனியில் நம்மை உணரச் செய்து விடுகிறார்.

மனித சமூகத்தில் எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் நம்மை மீறிய ஒன்றிடம் ஒப்புக்கொடுப்பது என்பது ஒரு விதமான தப்புவித்தல். இது மனித குண இயல்புகளில் ஒன்று. ‘கடவுள்என்பது ஒரு நம்பிக்கை‘ அவ்வளவுதான். ‘வேண்டுதல்‘ என்ற கதையில் தொலைந்து போன மகன் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் முறையிடச் செல்கிற இடத்தில் அங்கு நடக்கிற ஒருசம்பவம் நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை உறைக்க வைக்கிறது.

அடிமைகளாக சிக்கி நகர வாழ்வில் செக்கு மாடுகளாக சுற்றிக் கொண்டிருக்கும் வளரிளம்பருவத்தினரைப் பற்றிய கதையான ‘துரைப்பாண்டி‘ என்ற கதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. மேலும் இத்தொகுப்பில் உள்ள விடிவெள்ளி, தண்ணீர் தேசம், கடந்து போதல்,பொம்மை ஆகிய கதைகளும் என்னைக் கவர்ந்தவை.

சிறுகதையின் முக்கிய நோக்கம் ‘Creating a Single Effect’ என்கிறார் எட்கர் ஆலன் போ. எந்தப் படைப்பும்வாசித்த உடன் ஒரு உணர்வை திறம்பட ஏற்படுத்த வேண்டும். அவ்வகையில் ‘சாமியாட்டம்‘தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஒரு ஆரம்பம், கதைக்களம், முடிவு என அமைந்திருக்கின்றன. வரிசைக்கிரமமாக அமைந்திருக்கிற பாலபாரதியின் இந்த எழுத்துப்பாணி படித்து முடித்ததும் திருப்தியான ஒரு உணர்வைத் தருகின்றன.

யெஸ்.பாலபாரதியின் இந்த முதல் சிறுகதைத்தொகுப்பின் வாயிலாக கதைசொல்லியாக அவர் ஆரோக்கியமான முன்னகர்தலை மேற்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.  தொடர்ந்து பல சிறப்பான ஆக்கங்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

•

‘சாமியாட்டம்‘ (சிறுகதைகள்)

– யெஸ்.பாலபாரதி

வெளியீடு :

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

விலை : ரூ.70/- (128 பக்கங்கள் )

நன்றி – அகநாழிகை பொன் வாசுதேவன், http://www.aganazhigai.com/2012/01/blog-post_15.html

நூலை வாங்க..

நேரில்- கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் கடையில் கிடைக்கும்.

ஆன் லைனில் – டிஸ்கவரி ஆன் லைனில் கிடைக்கும்


Comments

2 responses to “வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து – அகநாழிகை பொன். வாசுதேவன்”

  1. ராஜசுந்தரராஜன் Avatar
    ராஜசுந்தரராஜன்

    அகநாழிகை சொல்லி இருக்கிறார். நம்பி வாங்கலாம். ‘டிஸ்கவரி பேலஸ்’தானே, வாங்கிவிடுவோம்.

    //பொதுவாக சிறுகதைத் தொகுப்புகளை கடைசிக் கதையிலிருந்து வாசிப்பது என்னுடைய வழக்கம். //

    கவிதைத் தொகுப்புகளையும் கூட நான் இப்படித்தான் வாசிப்பேன். strange co-incidence. நாவல்களைக் குண்டக்க மண்டக்க வாசிப்பதும் உண்டு (non-linear வாசிப்பு). அதில் சராசரிக்கும் குறைவான எழுத்துத்திறன் இளித்துவிடும்.

    நல்ல மதிப்புரை. நல்லன செய்கிறீர்கள், ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன்.

  2. //அகநாழிகை சொல்லி இருக்கிறார். நம்பி வாங்கலாம். ‘டிஸ்கவரி பேலஸ்’தானே, வாங்கிவிடுவோம்.

    //பொதுவாக சிறுகதைத் தொகுப்புகளை கடைசிக் கதையிலிருந்து வாசிப்பது என்னுடைய வழக்கம். //

    கவிதைத் தொகுப்புகளையும் கூட நான் இப்படித்தான் வாசிப்பேன். strange co-incidence. நாவல்களைக் குண்டக்க மண்டக்க வாசிப்பதும் உண்டு (non-linear வாசிப்பு). அதில் சராசரிக்கும் குறைவான எழுத்துத்திறன் இளித்துவிடும்.

    நல்ல மதிப்புரை. நல்லன செய்கிறீர்கள், ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன்.//

    நன்றிண்ணே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *