சின்னச்சின்ன ஆசை- சிறுவிளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தியை படித்தேன் இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆட்டிசநிலைச் சிறுவன் தினம்தோறும் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை தன் வீட்டு முன்னால் ஏற்றி வருகிறான். அந்த செய்தியை ஒட்டி அச்சிறுவன் மற்றும் அவன் தாயாரின் பேட்டிகளை பார்க்க நேர்ந்தது அப்பேட்டியில் அச்சிறுவன் சொல்லியிருந்த ஒரு விஷயம் என் மனதில் தைத்தது. ஒவ்வொரு நாளும் “காலையில் எழும்போது எதற்காக இன்று எழவேண்டும் என்ற என் கேள்விக்கு இந்த கொடியேற்றும் செயல் ஒரு நல்ல பதிலாக இருக்கிறது” என்றான் ஜோஷ் எனும் அச்சிறுவன். ( அச்செய்தியின் சுட்டி இங்கே: https://www.bbc.com/news/av/uk-england-hampshire-44717719/teenager-flies-the-flag-for-autism)

கிட்டத்தட்ட இதே போன்றதொரு கேள்வியை கனியும் தினந்தோறும் கேட்பதுண்டு; ”எங்க போறோம்?” என்ற கேள்வியுடன் தான் அவனது ஒவ்வொரு நாளும் விடியும். வார நாட்கள் எனில் பள்ளி என்றும், அவனுக்கு பிடித்த நீச்சல் வகுப்பு, இசை வகுப்பு என்று சொல்லி சமாளிப்போம். விடுமுறை நாட்கள் எனில் நிச்சயம் அவனுக்கு ஒரு லாங்க் ட்ரைவ் தேவை. அதாவது குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் டூவீலரில் எங்கும் நிறுத்தாமல் வண்டியை ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும். நன்றாக பேசக்கூடிய அந்த இங்கிலாந்து சிறுவன் சொன்ன பிறகுதான் கனியின் கேள்விக்கு பின்னால் இருக்கும் உணர்ச்சிகளை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது

ஆட்டிஸம் என்பதையே தமிழில் தன்முனைப்பு குறைபாடு என்று நாங்கள் சொல்கிறோம். அவர்களின் தன்முனைப்பை தூண்டுவதற்கு ஒவ்வொரு நாளையும் பொருளுள்ளதாக ஆக்குவதற்கு ஏதேனும் அவன் விருப்பத்தை உணர்ந்து அந்நாளை அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அர்த்தம் என்பது நமது சராசரி மனங்களின் அகராதிப்படி அல்ல; அக்குழந்தைகளின் உள்ளார்ந்த ஈடுபாடை ஒட்டிய ஏதேனும் ஒரு செயலாக அது இருக்க வேண்டும்.

இப்படியான பயணத்தை நான் மட்டும் தொடங்கவில்லை. பலரும் பல வழிகளில் முயன்றுள்ளனர். எனக்குத்தெரிந்து ஒரு தாய், சில மாதங்களுக்கு முன் திருவான்மியூரில் அமைந்துள்ள ஒரு ஷாப்பிங் மாலில் குழந்தைகள் விளையாடும் இடத்திற்குச்சென்று தம் குழந்தையைப் பற்றி சொல்லி அனுமதி கேட்க, குழந்தைகளை விளையாட ஐநூறு ரூபாய் வரை வசூலிக்கும் அவர்கள்  தனி நேரம் ஒதுக்கி, இலவசமாகவே அனுமதி அளிக்க முன்வந்தனர். அதும் 15 குழந்தைகள் வரை! அந்தத் தாய் தனக்குத் தெரிந்த பல சிறப்புக்குழந்தைகளையும் அழைத்துச்சென்றுள்ளார்.

சின்னச்சின்ன ஆசைகள் எனும் தலைப்பின் கீழ் எனது அனுபவங்களை எல்லாம் எனது தளத்திலும் இங்கே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதன் காரணம் பெருமை பீற்றிக் கொள்ளவோ அல்லது சுய பிரதாபத்திற்காகவோ அல்ல. அந்த இங்கிலாந்து சிறுவன் எனக்கு அளித்த குறிப்பை போல எனது இந்த பதிவுகளும் மற்றவர்களுக்கு எதையேனும் உணர்த்தக் கூடும் என்பதே என் எதிர்பார்ப்பு.

எல்லோரும் இதே பாணியில் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை அக்குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டுணர்ந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டுவதை நோக்கி குழந்தையை அழைத்துப் போவது பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணர்ந்தவே சின்னச்சின்ன ஆசைகளை பதிவு செய்கிறேன்.

அதனால்தான் கனிக்கு பிடித்தமான மனிதர்களை, இடங்களை அழைத்துப்போய் காட்டுவது என்ற முடிவுக்கு வந்தோம். இதை எல்லாம் ஏதோ நான் பத்திரிக்கையாளனாக இருப்பதால் எதையும் சாதித்துவிடவில்லை. ஓர் ஆட்டிச நிலைக்குழந்தையின் தகப்பனாக எல்லா இடங்களுக்கும் அனுமதி கோரி கடிதம் அனுப்புகிறேன். பல இடங்களில் நேரில் சென்று பேசுகிறேன். சிலரிடம் தொலைபேசியில் பேசுகிறேன். அணுகும் எல்லா இடங்களிலும் அனுமதி கிடைத்துவிடவில்லை. பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சில எண்கள் வேண்டி உதவிகேட்ட பல பத்திர்க்கை நண்பர்கள்கூட அதன் பின் என் தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதுகூட இல்லை. இப்படி பல அனுபவங்கள் உண்டு. நான் பத்திரிக்கையாளனாக முயன்றிருந்தால் ஒருவேளை மகனின் ஆசைகளை எப்போதே நிறைவேற்றி இருக்க முடியும். அதைச் செய்யாமல் சாதாரண தகப்பனாகவே எல்லா இடங்களிலும் முட்டி மோதுகிறேன். எனக்கும் என் மகனுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் அன்பு+கருணையின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. மாறாக நான் பத்திரிக்கையாளன் என்பதற்காக அல்ல என்பதையும் இங்கே அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.

சமூக ஆர்வல அன்பர்களுக்கு அப்படியே ஒரு சிறுவிண்ணப்பம் என்னைப்போன்று சிறப்புக்குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களால் இயன்ற அளவு உதவ வேண்டுகிறேன்.

உங்கள் பிள்ளைகளுடன் ஆட்டிசநிலைச்சிறுவர்களை கலந்து பழகவும் விளையாடவும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள்.

புறந்தள்ளப்படும் இச்சமூகத்தில் இருந்து தனித்தீவாகப் போய்க்கொண்டிருக்கும் சிறப்புக்குழந்தைகளுடைய குடும்பங்களுக்கு (அவரவர் வீட்டுப்பகுதியில் இருப்பவர்களுக்கோ அல்லது உறவு/ நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கோ) துணை நின்று, தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் குழந்தைகளின் விருப்பம் அறிந்து, அவர்களை விளையாட்டுப் பூங்கா, உங்கள் இல்லம், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பினை மனமுவந்து எடுத்துக்கொண்டால், சொந்தக்குழந்தைபோல நீங்கள் பார்த்துக்கொண்டால் இக்குழந்தைகளுடன் வாழும் பெற்றோரின் நிலைமையை நன்கு உணரவும், அவர்களுக்காக நீங்கள் நிஜமான அக்கரையுடன் பேசவும் முடியும்.

நாள் முழுவதும் அக்குழந்தையுடன் நேரம் செலவழிக்கும் குடும்பத்தினருக்கும் உங்களால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அவர்கள் தயார் செய்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி படங்கள் : Shutterstock, google

Posted in அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

சின்னச்சின்ன ஆசை

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூட ஒவ்வொரு ஆட்டிச நிலையாளரின் தனித்துவமான மன உணர்வுகளை இன்னமும் நம்மால் சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லைதான்.

அனுபவத்தினால் ஓரளவுக்கு பெற்றோர்/காப்பாளர்கள் சில அனுமானங்களைக் கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட தினம் தினம் புதுப் புது படிப்பினைகளும் பெற்றபடியேதான் இருக்கிறோம்.

அவர்கள் உலகைப் புரிந்து கொள்வது ஒரு சவால் என்றால், அவர்களை நம் உலகிற்கு இழுத்து வருவது அதை விடவும் பெரிய சவால். ஆனாலும் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்யன் போல நாங்களும் எங்கள் மகனை நம் உலகத்திற்குள் இழுத்துவரும் முயற்சியுடன், அவனது உலகையும் புரிந்துகொள்ள முடியுமா என்று பார்த்து வருகிறோம். அதிலொன்று மனிதர்கள் சூழந்த இவ்வுலகை அவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. அதாவது அவனுக்கு எதுவெல்லாம் பிடிக்கிறதோ, அதுபற்றிய விளக்கத்தை செயல்வடிவில் காட்டுவதுடன் அதன் பின்னிருப்பவர்கள் மனிதர்கள்தான் என்பதை அவனுக்கு உணர்த்தும் முயற்சியாகவும் சில விஷயங்களைச் செய்யத்தொடங்கி உள்ளோம். அதைப் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக தொலைகாட்சிகள் குழந்தைகளுக்கு ஆகாது என்பார்கள். ஏனெனில் அது ஒருவழிப் பாதை. அது பேசிக்கொண்டே இருக்கும். நாம் வாய் பிளந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்போம். இதன்காரணமாகவே சிறுபிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சி முன்னால் அமரவைத்தால் அவர்களின் பேச்சு தாமதப்படும் என்று சொல்வார்கள்.

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலும் தினமும் அதைப் பயன்படுத்துவதில்லை. எப்போதாவது ஒருநாள் ஓடும். அதுவும் மகன் வீட்டில் இருக்கும் போது, அவன் விரும்பும் சானல் மட்டுமே ஓடும். உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக” என்பதுமாதிரி அடிவயிற்றில் இருந்து கத்தும் விளம்பரங்கள் அவனுக்கு அலர்ஜி என்பதால் ஜெயா டிவியும், ராஜ் டிவியும் தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பெரும்பான்மை நேரம் அத்தொலைக்காட்சிகள் சத்தம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும், இவன் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பான்.

அதில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்களுக்கு மட்டும் அவன் ஒலிவைத்து கேட்பான். மற்ற விளம்பரங்களை பெரும்பாலும் மியூட் செய்துவிடுவான். அதிலும் அவனுக்கு ஜெயா டிவி லோகோ மீது அப்படி என்ன அதித பிரியமோ தெரியாது. ஜெயா டிவி லோகோவை வரைந்து, அதில் வரும் நிகழ்ச்சிகளை எழுதி, அழிப்பது அவனுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்று. அந்த லோகோ மீதிருக்கும் அவனது ஆசையை அறிந்துகொண்டதும் அவனை ஜெயா டிவி அலுவலகத்திற்கு அழைத்துச்செல்ல நினைத்தோம்.

அங்கு பணியாற்றும் அண்ணன் திருமலையிடம் விபரம் சொல்லி, அலுவலகத்தில் இருக்கும் பெரிய சைஸ் லோகோவுடன் நின்று படம் எடுக்கவேண்டும் என்று சொன்னேன். அவரும் அலுவகத்தில் பேசி, நேற்றுக்காலை வரச்சொன்னார். இரண்டு நாளாக கனியிடம் நாம ஜெயா டிவி அலுவலத்திற்கு ஞாயிறன்று போகிறோம் எனச்சொல்லிச் சொல்லி அவனை மனதளவில் தயார் படுத்தினோம்.

நேற்று காலை, நானும் தம்பி சரவணன் பார்த்தசாரதியும் கனியை அழைத்துக்கொண்டு ஜெயா டிவி அலுவலகம் சென்றோம். திருமலை அண்ணன் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டார். இருப்பினும் எங்கள் வருகை குறித்து, அங்கிருப்பவர்களிடம் அவர் சொல்லிச்சென்றிருந்தார்.

உள்ளே நுழைந்ததும் வரவேற்பறையில் இருந்த பெரிய ஜெயா டிவி லோகோவைப் பார்த்ததும், பையனுக்கு பயங்கர எக்ஸைட்மென்ட். கிட்டச்சென்று தொட்டுப் பார்த்தான். அவனுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது என்பதை அவன் முகத்திலே உணர முடிந்தது. ஏற்கனவே இவனுக்கு ஒலியை உள்வாங்குவதில் சென்சரி (auditory sensory) பிரச்சனைகள் இருப்பதால், எப்போதும் இயர் மஃப் (ear muff) காதுகளில் மாட்டிவிட்டிருப்போம்.

அதிக மகிழ்ச்சி (excitement) அடையும் நேரங்களில் காதுகளை பொத்திக்கொள்வதும் இவனது வழக்கம். ஜெயா டிவி லோகோ பார்த்த மகிழ்ச்சியில் காதில் மாட்டி இருந்த இயர்மஃபை எடுக்கவே விடவில்லை. சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். அடுத்ததாக உள்ளே செல்லலாம் என்று பார்த்தால் அதற்கான வாய்ப்பு அங்கே அமையவில்லை.

அதனால் அடுத்தாக புதியதலைமுறை சானல் செல்லலாம் என்று முடிவெடுத்து, அண்ணன் கார்மல் அவர்களுக்கு தொலைபேசினேன். அவர் வெளியூரில் இருப்பதாகச் சொல்ல, ‘பாண்டியன் அல்லது தென்னவனிடம்’ பேசுங்களேன் என்றார்.

அடுத்து சானலில் தலைமை ஒளிப்பதிவாளர் அண்னன் தென்னவனுக்கு போன் போட்டேன். விஷயத்தைச் சொன்னதும் உடனடியாக அலுவலகத்தில் இருந்த இன்னொரு ஒளிப்பதிவாளருக்கு தகவல் சொல்லிவிட்டு, எங்களை போகச்சொன்னார்.

அங்கே சென்று, நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு ஆகும் இடங்களைக் காட்டினோம். ஸ்டூடியோவையும் ஒளிப்பதிவு செய்யப்படும் விதங்களையும் அவனுக்கு சொல்லிக்கொடுத்தேன். புரிந்துகொண்டானா என்பது தெரியாது. ஆனால் வியப்பாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தான். கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு அவன் வர, காதுமாட்டியை கழட்டி விட்டேன்.

கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு, அப்புறம் அங்கிருந்து கிளம்பினோம். மாலை முழுவதும் சானல்கள் சென்றுவந்ததை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டே இருந்தோம்.

ன்று காலையில் தூங்கி எழுந்ததும், “நேற்று எங்கே போனோம்?” என்று கேட்டதும், கனியின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

‘ஜெயா டிவி’ என்றான்.

அப்புறம் என்று கேட்டபோது, ‘புதியதலைமுறை’ என்றான்.

”ஆர் யூ ஹாப்பி?” என்று கேட்டபோது, குதித்துக்கொண்டே “ஹாப்பி! ஹாப்பி!!” என்று சொன்னவன். என்னை கழுத்துடன் கட்டிக்கொண்டான்.

அவன் கவனிக்காவிட்டாலும் பரவாயில்லை என நானும் ‘மீ டூ ஹாப்பிடா பையா’ என்று சொல்லி, அவனை அணைத்துக்கொண்டேன்.

(தொடரும்)

நன்றி: கேட்டதும் எப்போதும் உதவுகின்ற நண்பர்களுக்கு!

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, தன் முனைப்புக் குறைபாடு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

குழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று

தமிழில் குழந்தைக்கவிஞர் என்றால் அது அழ.வள்ளியப்பா தான். இந்த அடைமொழியுடன் சில நூல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள். (நவம்பர் 7)

வங்கில் பணியில் இருந்தாலும் தம் வாழ்நாளில் குழந்தைகள் இலக்கியதிற்காக பெரும் தொண்டாற்றி உள்ளார் என்றால் அது மிகையல்ல.

பண்டித ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் வள்ளியப்பா. தொடர்ந்து பல பாடல்களை நேருவை கருப்பொருளாக வைத்து எழுதி இருக்கிறார். இவை தவிர, நேருவின் வாழ்க்கை வரலாற்றை பாடல் வடிவிலும், கட்டுரைவடிவிலும் எழுதியுள்ளார்.

நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி, இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே நாளில் ஒரு நூலையாவது வெளியிடுவது என்ற வழக்கத்தைக்கொண்டிருந்தார் வள்ளியப்பா. அவர் மட்டுமல்ல, அக்காலகட்டத்தில் குழந்தைகளுக்காக எழுதிய பலரும் இதே நாளில் தங்களது புதிய நூற்களை வெளியிட்டு, அந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் எழுத்தாளர் சங்கமும் இப்பணியை செய்தது.

வள்ளியப்பா, பல மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுக்கு தந்திருக்கிறார். காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழுக்கு கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

அவர், கோகுலத்தில் பொறுப்பில் இருந்தபோது, கோகுலம் உறுப்பினர் சங்கம் என்றொன்றை தொடங்கினார். (பெயர் குழப்பம் எனக்கு உள்ளது) அவ்விதழில் வெளியாகும் கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தால், அழ.வள்ளியப்பாவின் கையெழுத்து போடப்பட்ட உறுப்பினர் அட்டை, நமக்கு அஞ்சலில் வரும். நான் அதில் உறுப்பினராக இருந்தேன். கோகுலத்தில் பாடல், துணுக்கு, சிரிப்பு போன்றவற்றை எழுதி அனுப்பும் போது, நமது உறுப்பினர் எண்ணையும் குறிப்பிட்டு எழுதினால் பிரசூரமாகும் போது நம் பெயருக்குக்கீழ் உறுப்பினர் எண்ணும் பிரசூரமாகும். தபால்காரர் கொண்டுவந்துகொடுத்த அந்த உறுப்பினர் அட்டையை தபால்காரர் என் அப்பாவிடம் கொடுத்துவிட்டுப்போக, படிக்கிறதை விட்டுட்டு பாட்டு எழுதுறியா பாட்டு என என் அப்பா அடி பிண்ணி எடுத்துவிட்டார். அப்புறம் எனக்கு எழுதும் ஆசை இல்லாமல் போய்விட்டதெல்லாம் தனிக்கதை.

தமிழ் மொழி இருக்கும் வரைக்கும் அழ.வள்ளியப்பாவின் புகழ் இருக்கும். அவரது படைப்புக்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கி உள்ளது. அவை இணையதிலேயே கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு நல்ல சந்தம்கொண்ட பாடல்களும் நற்போதனைக் கதைகளையும் அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர், கீழ்க்காணும் சுட்டியில் இருந்து அவரது நூற்களை தரவிக்கிக் கொள்ளலாம்.

 

குழந்தைக்கவிஞரும் நேரு மாமாவும்

படம்: தில்லியில், 1956 நவம்பர் 14ஆம் தேதி, அனைத்திந்திய புத்தகக்கண்காட்சியை சாகித்ய அகாதமி நடத்தியது. அதில் தமிழ்ப் பிரதிநிதியாகக் குழந்தைக்கவிஞர் கலந்துகொண்டார். அப்போது, தமிழ்ப்பகுதிக்கு வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

அழ.வள்ளியப்பா நூற்களைப் பெற: https://goo.gl/viHP6h

 

Posted in சிறுவர் இலக்கியம், தகவல்கள் | Tagged , , , , , , | Leave a comment

குழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்

மு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர்.

தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார்.
பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார்.

அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய இக்குட்டி நூற்கள் ஒவ்வொன்றும் ரூ.10/.
8 நூற்களும் சேர்த்து ரூ.80/- மட்டுமே!

 

சின்னச்சின்னக் கதைகள் 1,2
அன்புள்ள குழந்தைகளுக்கு..
நீர் இன்றி
நொறுக்கும் தீனி
வந்தது யார்?
நெகிழி பூதம்

எனும் தலைப்புடைய இந்நூற்களில் இருக்கும் கதைகள் எல்லாமே இவை எல்லாம் பிரச்சாரக்கதைகள்தான் எனினும், அது முகத்தில் அறையாதபடி, கலைவடிவாக அழகாகச் சொல்லி இருக்கிறார்.

உங்கள் பிள்ளைகள் நூல் வாசிப்பின் வழி நல்லவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றோ புதியவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்றோ விரும்பும் பெற்றோர் அவசியம் இந்த எட்டு நூல்களையும் வாங்கிக்கொடுக்கலாம்.

பக்கத்திற்குப் பக்கம் படமும், வடிவமைப்பும் காமிஸ்க் புத்தகம் படிக்கும் தோற்றததை ஏற்படுத்துகிறது.

நூற்களைப் பெற விரும்புகின்றவர்கள் கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளவேண்டுகிறேன்.

தொடர்பு எண்: 9444147373

Posted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , | Leave a comment

ஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்!

பொதுவாக எந்த வேலை செய்தாலும் அதன் விளைவென்ன என்று அறியத் துடிப்பது பொது இயல்பு. பொது வேலைகளில் வேண்டியது சில/பல மாதங்களில் கிடைத்துவிடுவதுண்டு. விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அதன் விளைவுகள் அவ்வளவு சீக்கிரமாக, வெளிப்படையாக தெரிவதில்லை. நாம் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். எந்த வினையும் இன்றி எதிர்பார்ப்பின்றி உழைப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும்.

ஆட்டிசம் குறித்த எனது விழிப்புணர்வு பணிகளிலும் இதே கதைதான். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டிச நிலைக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகிழ்வைத் தொலைத்து விடாது இருக்க வேண்டும் என்பதை முக்கியத்துவப் படுத்தி எழுதியும், பேசியும் வருகிறேன். ஹேப்பி பேரண்டிங் எனும் இந்த தலைப்பில் ஆட்டிச நிலைக் குழந்தைகளை பெற்றோர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எடுத்துவருகிறேன். அதுபோலவே இக்குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தந்தையரின் பங்கு பற்றிய பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறேன்.

இதற்கு முன் நடத்திய தந்தையருக்கான இரண்டு பயிலரங்கங்களும் தனியார் ஏற்பாடு செய்தவை என்பதால் அங்கு வந்து கலந்து கொண்ட தந்தையரோடு எனக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லை. எனவே நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களிடம் அவ்வப்போது பேசும்போது, நல்ல மாற்றம் தெரியுது சார் என்று அவர்கள் பொதுப்படையாக சொல்வதோடு முடிந்து போகும்.

சென்ற வாரம் நடந்த சென்னையில் தந்தையருக்கான ஒரு பயிலரங்கம் நடந்தது. அதுவும் வாய்ஸ் எனும் பெற்றோர் அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பெற்றோர் குழுமத்தின் நாங்களும் இருக்கிறோம். கடந்த ஞாயிறு மதியம் நடந்த பயிலரங்கில் சுமார் 40 தந்தையர்கள் கலந்து கொண்டது பெரியவிஷயமக எனக்குத் தோன்றியது. என் நிபந்தனை ஒன்றுதான். குழந்தையை தந்தையோடு அனுப்பிவிட்டு, அம்மாக்கள் ஓய்வில் இருக்கவேண்டும். நிகழ்வரங்கில் குழந்தைகளைப் பார்க்க தன்னார்வலர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி, சுமார் இரண்டுமணி நேரம் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அன்றி இரவே பல குழந்தைகளின் அம்மாக்களிடமிருந்து குழுமத்தில் தந்தையர் கூட்டத்திற்கு நன்றி தெரிவித்து தகவல்கள் வரத்தொடங்கின. முதல் முதலாக தங்கள் கணவர்கள் பிள்ளைகளைப் பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டவை, சொல்லமலேயே சில பொறுப்புகளை எடுத்துக்கொள்வது, குழந்தையோடு அதிக நேரம் செலவளிப்பதாக உறுதிகொடுத்தது என்று அவர்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தாய்மார்கள் அங்கே பகிரும் பின்னூட்டங்கள் உண்மையிலேயே என்னை மன நிறைவு கொள்ளச் செய்கின்றன.

சூழ வாழும் மனிதருக்குள் ஒரு தினையளவு மாற்றத்தையேனும் ஏற்படுத்த முடிகிறது என்பது தரும் நிறைவுதான் வாழ்கைச் சுழலின் இழுப்பையும் மீறி பயணிக்கும் ஆற்றலைத் தருகிறது. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் என்பதும் உணர்ந்தே இருக்கிறேன். இப்போதைக்கு மீ வெரி ஹாப்பி!

#ஆட்டிசம் #விழிப்புணர்வு

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , , , , | 3 Comments