மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 5]

மரப்பாச்சி சொன்ன அதன் கதையை எல்லாம் கேட்ட பிறகும் பூஜாவால் நம்ப முடியவில்லை. இமைகளை மூட மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள்.

“ஏய்… என்னடி… இப்படி உட்கார்ந்திருக்க…?” என்றபடியே பூஜாவின் தோள் தொட்டு உலுக்கினாள் ஷாலு.

“என்ன சொல்லுறதுன்னே தெரியலையேடி… இப்படி ஒரு மரப்பாச்சி பேசினால்… ஷாக் ஆகாம இருக்க முடியுமா?”

“ஹா…ஹா…” என்று சிரித்த மரப்பாச்சி, “பூஜா நீ இன்னும் ஷாலுவின் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே…? எதுவானாலும் சொல்லு. நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொன்னது.

“எப்படிச் சொல்லுறதுன்னு தெரியலை.”

“அந்தத் தாத்தாவைப் பத்தித்தானே பேசிக்கிட்டு இருந்தோம். அதுக்குல்ல மறந்துபோச்சா?” என்று கேட்டாள் ஷாலு.

“அதெல்லாம் இல்லடி… அந்தத் தாத்தா ரொம்ப மோசம்டி… கெட்டவரா இருக்காரு…” என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கியபடி.

“ஏன் என்னாச்சு..?” என்றது மரப்பாச்சி.

“தினமும் ஸ்கூல் வேனில் இருந்து இறங்கியதும், அவங்க வீட்டுக்குப் போய் ஸ்கூல்பேக்கை வச்சுட்டு, ஃப்ரஷ் ஆகிட்டு, டான்ஸ் கிளாஸோ, டியூசனோ எது இருக்கோ… அதுக்குக் கிளம்பிடுவேன்.”

“ம்”

“அப்படி அவங்க வீட்டுக்குப் போகும் போது, அந்தத் தாத்தா…” என்று பேசுவதை நிறுத்தினாள் பூஜா.

“சொல்லுடி..” என்று கேட்டாள் ஷாலு.

“அவங்க வீட்டுக்குப் போகும் போதெல்லாம் என்னைய கூப்பிட்டு, மடியில உட்கார வச்சி, இங்க, இங்கன்னு எல்லா இடத்துலையும் தொடுறார். எனக்கு வலிக்குது தாத்தா விடுங்கன்னு சொன்னாலும் விடமாட்டார். அவரைப் பார்த்தாவே பயமா இருக்கு…” என்று அவர் தொடும் இடங்களை எல்லாம் தொட்டுக்காட்டினாள் பூஜா.

“ஐயே.. அங்க எல்லாம் ஏன் தொடுறார்”

“யாருக்கு தெரியும். இறுக்கி பிடிச்சுக்குவார். அவர் பிடியில் இருந்து தப்பிக்கவும் முடியாது. இதை வெளியே யார் கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்”

“அம்மாகிட்ட சொல்ல வேண்டியதுதானே?” என்று கேட்டது மரப்பாச்சி.

“அதுதான் அவர் சொல்லி இருக்காரே… யார்கிட்டயாச்சும் சொன்னா… என்னையத்தான் அடிப்பாங்களாம். ஸ்கூலுக்குக் கூட அனுப்பாம, வீட்டுக்குள்ளயே பூட்டி வச்சிடுவாங்கன்னு அந்தத் தாத்தாதான் சொல்லி இருக்காரே… அப்புறம் எப்படி அம்மாகிட்ட சொல்லுவேன். எனக்குப் பயமா இருக்கே…!” என்றாள் பூஜா.

என்ன பதில் சொல்வது என்று ஷாலுவுக்குத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் அங்கே மௌனம் நிலவியது.

மரப்பாச்சி, “சரி, நான் ஏதாவது சொல்லுறதுக்கு முன்னாடி, சில கேள்விகள் கேட்கிறேன். ரெண்டு பேரும் பதில் தெரிஞ்சா சொல்லுங்க” என்று பேச்சைத் தொடங்கியது. இருவரும் சரி எனத் தலையை ஆட்டினர்.

“நம்ம போடுற ட்ரஸுல ரெண்டு வகை இருக்கு தெரியுமா?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ‘தெரியவில்லை’ என்பது போல உதட்டைப் பிதுக்கினர்.

“அதாவது, வெளியாடை, உள்ளாடை அப்படின்னு ரெண்டு வகை இருக்கு. இல்லையா?

“ஆமா…”

“இந்த உள்ளாடைகள் மறைக்கிற பகுதிகள் அந்தரங்கமானது. நம்மைத்தவிர வேற யாரும் அங்கே தொடக்கூடாது. அது தப்பு. நம்மைக் குளிக்க வைக்கும்போது, அம்மாவோ, அப்பாவோ அங்கே தொடலாம். மற்ற நேரங்களில் யாரும் அந்தப் பகுதியைத் தொடக்கூடாது” என்றது மரப்பாச்சி.

“ஆனால்… நீ சொல்ற எல்லா இடத்துலையும் அந்தத் தாத்தா கை வைக்கிறாரே…?” என்று வருத்தமாகச் சொன்னாள் பூஜா.

“அப்படி… யாராச்சும்… அந்தரங்கமான இடத்தில் தொட்டால்… உடனடியா… நாம சத்தம் போட்டு கத்தனும்”

“கத்தனுமா?”

“ஆமா… ‘ப்ளீஸ் ஹெல்ப்…’ ‘காப்பாத்துங்க… காப்பாதுங்க’ன்னு சத்தம் போட்டு கத்தனும்.”

“அப்புறம்..”

“அந்த இடத்தை விட்டு, ஓடிவந்துடனும். கண்டிப்பாக அம்மா கிட்டப்போய்ச் சொல்லனும்.”

“சொன்னா… என்னைத்தான் அடிப்பாங்கன்னு அந்தத் தாத்தா சொன்னாரே…”

“நிச்சயமா அடிக்க மாட்டாங்க…. ஏன்னா.. நாம தப்பு எதுவுமே பண்ணலை இல்லையா… அந்தத் தாத்தா செய்றதுதான் தப்பு. அந்த மாதிரி தப்புச் செய்றவங்களைப் போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவாங்க. அதனாலதான் அவர் பொய் சொல்லி உன்னை மிரட்டிப் பார்க்கிறார்.”

“அப்படின்னா.. நான் தாத்தாவைப் பத்தி, அம்மாகிட்ட சொல்லட்டுமா..?”

“கண்டிப்பாகச் சொல்லு. பயப்படாதே… அதே மாதிரி, அம்மாகிட்ட சொல்லக்கூடாதுன்னு அவர் மிரட்டினதையும் சொல்லிவிடு.”

பூஜா தலை குனிந்த ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். ஷாலுவும், இளவரசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்ன யோசிக்கிற பூஜா?” என்று கேட்டாள் ஷாலு.

“அம்மாட்ட சொல்ல பயமா இருக்கு. என்னையை ரூமுக்குள்ள அடைச்சு வச்சுட்டாங்கன்னா…” என்று இழுத்தாள் பூஜா.

“அப்படி எல்லாம் நடக்காது. தைரியமாக இன்னிக்கே போய் அம்மாகிட்ட சொல்லிவிடு. என்னையும் கூட்டிக்கிட்டு போ… உனக்குத் தைரியம் வரும். அம்மாகிட்டேயும் சொல்லிடலாம். அப்புறம் நாளையில இருந்து, அந்தத் தாத்தா உன் பக்கமே வரமாட்டார்” என்றது மரப்பாச்சி.

“மரப்பாச்சி சொல்லுறதுதான்டி… சரி… நீ இதை எடுத்துகிட்டு போ… நாளைக்குத் திருப்பிக்கொண்டுவந்து கொடு” என்றாள் ஷாலு.

பூஜா விடைபெற்று கிளம்பினாள். ஹோம் ஒர்க் எல்லாம் செய்து முடித்துவிட்டு, இரவு உணவையும் முடித்துவிட்டு, உறங்கிப்போனாள் ஷாலு.

(box news)

பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் (Safe Touch – Unsafe Touch) : நமது உடலில் சில உறுப்புகள் அந்தரங்கமானது. நீங்கள் ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ உங்கள் அந்தரங்கப் பகுதியை யாரையும் தொட அனுமதிக்கக்கூடாது. உங்களைக் குளிப்பாட்டும்போது அம்மாவோ, அப்பாவோ அப்பகுதிகளைத் தொடுவது வேறு. உடலின் அந்தரங்கமான பகுதியை உங்களுக்கு ரொம்பவும் கூசும் படியோ, வலி எடுக்கும்படியோ பிறர் எவர் தொட்டாலும் உடனடியாகச் சத்தம் போடவேண்டும். நீங்கள் சொல்வதைக் கேட்காமல் யாரேனும் மீறி தொட்டால், உடனடியாக ஓடிப்போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடவேண்டும். இன்னும் தெரிந்துகொள்ள அப்பா இல்லாட்டி அம்மா கிட்ட கேளுங்க.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 4]

நடன வகுப்பு முடிந்தது. சுவரில் சாய்ந்து ஓரமாக அமர்ந்திருந்த பூஜாவை அழைத்துக்கொண்டு, மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள் ஷாலு. ஷாலுவின் ஷோல்டர் பேக் அவளின் முதுகில் சவாரி செய்தது. மரப்பாச்சி பொம்மையைக் கையில் வைத்திருந்தாள். பூஜாவும் தனது ஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டி இருந்தாள். மறுகையில் அவளது சாப்பாட்டுக்கூடை இருந்தது.

“ஆமா… இன்னிக்கு சுடிதார் போடாமல், ஸ்கூல் யூனிபார்ம்லயே ஏண்டி வந்துட்ட…” என்று கேட்டாள் ஷாலு.

“அதுவா… ம்…” என்று சிறிது யோசித்த பூஜா, “ஸ்கூல் வேன் வந்ததே லேட்டு, இதுல சுடிதார் மாத்திட்டு கிளாஸுக்கு வர இன்னும் லேட் ஆகிடும்னுதான் வீட்டுக்குப் போகாமல் நேரா இங்கே வந்துட்டேன்.” என்றாள்.

“ஏண்டி… நானும் அதுலதானே வந்தேன். உனக்கு நிஜமாவே தலைவலிதானா? இல்ல, யூனிபார்ம்ல வந்ததுக்கு, நந்திதா அக்கா ஏதாச்சும் சொன்னாங்களா…? கொஞ்சநாளாவே உன் மூஞ்சியே சரியில்லை. வேனில் வரும்போதும் கூடப் பேசுறதில்லை. என்ன ஆச்சுடி?” என்று கேட்டாள் ஷாலு.

“நிஜமாவே தலைவலிதாண்டி…”

“அப்படின்னா… சரி! வேணும்னா, சாயங்காலம் உங்க அம்மா ஆபிஸ் விட்டு வந்ததும் டாக்டரைப்போய்ப் பாருடி. ஸ்கூல் போர்டுல எழுதுறத படிக்க முடியுதுல்ல? கண்ணுல ஏதுனா கோளாறாக இருந்தாலும் அடிக்கடி இப்படித் தலைவலி வரும். ஊரில் இருக்குற என்னோட கசின் சூர்யாவுக்கும் இப்படித்தான் தலைவலி வந்துகிட்டே இருந்துச்சாம். கண் டாக்டரைப் பார்த்து, ‘ஐ டெஸ்ட்’ எல்லாம் செஞ்சு, இப்ப கண்ணாடிப் போட்டிருக்கான். கண்ணாடி போட்டதுக்கு அப்புறம் தலைவலியே இல்லைன்னு சொன்னான்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லடி… கொஞ்சம் தொணத் தொணக்காமல் இருக்கியா, தலைய வேற வலிக்குது. அமைதியா வாயேன்.” என்று எரிச்சலாகச் சொன்னாள் பூஜா. இவள் மவுனமானாள்.

ஷாலுவிற்கு வியப்பாக இருந்தது. பூஜாவின் இயல்பு இது இல்லை. அவளே எப்பவும் பேசிக்கொண்டே இருப்பவள். அவள் அமைதியாக இருக்கிறாளே எனப் பேசப்போய், இப்போது கோபப்படுகிறாளே என்று யோசித்தபடி நடந்தாள் ஷாலு. அவளது மௌனம் என்னவோ போல் இருந்தாலும் ‘சரி இனி நாமாக எதுவும் கேட்கக்கூடாது. அவளாகப் பேசட்டும்.’ என்று நினைத்துக் கொண்டாள் ஷாலு. கொஞ்சதூரம் போனதும்,

“ஆபிஸுல இருந்து எங்க அம்மா வர்ற வரைக்கும் நான்.… உங்க வீட்டுல வந்து இருக்கட்டுமா?” என்று கேட்டாள் பூஜா.

“வாயேன்… ஆனால் நீ எப்பவும் உன் வீட்டுக்குக் கீழே இருக்கிற அந்தத் தாத்தா வீட்டுக்குத்தானே போவ…” என்று கேட்டாள் ஷாலு.

“ஆமாம். ஆனா இனிமே அங்க போகவேணாம்னு பார்க்கிறேன். எனக்குப் பிடிக்கலை” என்று சொல்லும்போதே பூஜாவின் குரல் கம்மியது.

“ஏய்…என்னடி… திடீர்னு அழுவுற மாதிரி ஆகிட்ட” என்று ஷாலு கேட்டதும், ”எதுவும் கேட்காதே” என்று கோபமாகச் சொன்னாள் பூஜா.

“சரி விடுடி.. எதுவும் கேட்கலை.”

வீடுவந்து சேரும்வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

**

அந்த அறைக்குள் ஷாலுவும் பூஜாவும் மட்டும் இருந்தனர். ஷாலுவின் அம்மா அமுதாவும். தம்பி ஹரியும் ஹாலில் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர். அம்மா கொடுத்துவிட்டுப்போன, சுண்டல் கிண்ணம் இருவரின் முன்னாலும் இருந்தது.

“இப்படியே பேசாம உட்கார்ந்திருந்தா என்னடி அர்த்தம். ஏன்னு தானே கேட்டேன். சொல்லுறதா இருந்தாச் சொல்லு. வேணாட்டிப்போ… நான் ஒன்னும் கேக்கலை. ஆனா இந்தச் சுண்டலைச் சாப்பிட்டுடு. இல்லாட்டி இதையும் என் தலையில கட்டிடுவாங்க, எங்க அம்மா” என்றாள் ஷாலு.

பூஜா எதுவும் பேசாமல், தன் அருகில் இருந்த சுண்டல் கிண்ணத்தை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள். தன்னுடைய பங்கு சுண்டலையும் மரப்பாச்சி இளவரசியைத் தூக்கிக்கொண்டு, அறையின் இன்னொரு பக்கமாகத் தள்ளிப் போய் அமர்ந்துகொண்டாள் ஷாலு.

அவள் போவதைப் பார்த்த பூஜா, அப்போதுதான் மரப்பாச்சியைக் கவனித்தாள். “ஏய்.. அது என்னடி.. புதுசா இருக்கு?” என்று கேட்டாள் பூஜா.

“ம்… போனமுறை ஊருக்குப் போனபோது, என்னோட தாத்தா கொடுத்த மரப்பாச்சிப் பொம்மை” என்றாள் ஷாலு.

“மரப்பாச்சிப் பொம்மையா… கவுன் எல்லாம் போட்டு… பார்க்கவே நல்லா இருக்கு ஷாலு. எங்கே கொடு பார்க்கலாம்” என்று இவளருகில் எழுந்துவந்தாள் பூஜா.

அவள் கையில் மரப்பாச்சியைக் கொடுத்துவிட்டு, ஷாலு அமைதியாகத் தன்னுடைய சுண்டலைச் சாப்பிடத் தொடங்கினாள். மரப்பாச்சிப் பொம்மையை வாங்கிப் பார்த்தவள், அதன் மூக்கைத் தொட்டுப் பார்த்தாள். “இது பொம்மை மாதிரியே இல்லடி. நிஜமான ஆளு மாதிரியே இருக்கு. இது மூக்கு, கை எல்லாம் தொட்டுப்பார்த்தா சாஃப்டா இருக்கிற மாதிரியே இருக்கு”

“ஆமாம்… அப்படித்தான் இருக்கு. சரி… சரி, அந்தப் பொம்மையைக் கொடு, நான் கேட்டா மட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கிற” என்று பூஜாவின் கையில் இருந்த மரப்பாச்சியை வாங்கிக்கொண்டாள்.

சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது.

“சொல்லலாமா… வேண்டாமான்னு தெரியல ஷாலு. எப்படிச் சொல்லுறதுன்னும் தெரியல.” என்ற பூஜா. சிறிதுத் தயக்கத்திற்குப் பின், “எங்க வீட்டுக்குக் கீழ இருக்குறவங்கள உனக்குத் தெரியும் தானே..?” என்று கேட்டாள்.

“ஆமா… ஒரு தாத்தாவும் பாட்டியும் இருக்காங்க.”

“அவங்க நல்லவங்க இல்லடி….”

“நல்லவங்க இல்லையா? அப்படின்னா அவங்க ரெண்டுபேரும் கெட்டவங்களா? என்ன சொல்லுற?”

“அந்தப் பாட்டி இல்லடி.. அந்தத் தாத்தாதான்.”

“தாத்தாவா?”

“ஆமாண்டி.. அவருதான்.” என்றபோதே பூஜாவின் கண்கள் கலங்கின.

“ஏண்டி என்னாச்சு?”

“—–”

“நீ ஏன் அடிக்கடி சைலண்ட் ஆகிடுற… உன்னைப் பேச வைக்கிறதுக்கு என்னிடம் ஒரு மந்திரம் இருக்கு” என்ற ஷாலு, “மரப்பாச்சி இளவரசியே… உயிருடன் வா. வந்து, பூஜாகிட்ட ஏன் அழுகிறான்னு கேளு” என்றாள் ஷாலு.

ஷாலுவின் செயல்கள் மர்மமாக இருக்கவே, அவளை வினோதமாகப் பார்த்தபடி, கண்களைத் துடைத்தாள் பூஜா.

ஷாலுவின் கையில் இருந்த மரப்பாச்சித் தன் கை, கால்களை அசைத்தது.

அதிர்ச்சியில் ஆவென வாயைத்திறந்தாள் பூஜா.

Box news

பார்வைக் குறைபாடு: கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடுவதைப் படிக்க, பார்த்து எழுதச் சிரமமாக இருந்தாலோ, அல்லது தொடர் தலைவலி இருந்தாலோ கண்பார்வையில் குறைபாடாக இருக்கலாம். கிட்டப்பார்வை (கிட்டத்தில் உள்ளது மட்டும் தெரியும், தூரத்தில் உள்ளது தெரியாது) அல்லது தூரப்பார்வை (தூரத்தில் உள்ளது தெரியும் கிட்டத்தில் உள்ளது தெளிவாகத் தெரியாது) குறைபாடாகவும் இருக்கலாம். இதற்குக் கண்ணாடி போட்டுக்கொண்டால் சமாளித்துவிடலாம். இது போன்ற சிக்கல்கள் ஏதாவது உங்களுக்கு இருந்தால், வீட்டில் அம்மா, அப்பாவிடம் சொல்லுங்கள்.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 3]

கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதுமே மரப்பாச்சி அப்படியே அசைவற்று உரைந்து போனது.

“என்னடி.. இன்னுமா எழுது வச்சுகிட்டு இருக்க.. டான்ஸ் கிளாஸ் போகவேண்டாமா?” என்று உள்ளே வந்த அம்மாவின் மரப்பாச்சியைப் பார்த்தார்.

“எப்பப் பார் இதை வச்சுகிட்டு விளையாடிக்கிட்டு..” என்றபடியே மரப்பாச்சியை எடுக்கப்போனார் அம்மா. அதற்குள் பாய்ந்து அதை எடுத்து, ஓரமாக வைத்தாள் ஷாலு.

“ம்மா.. அது பேசுது” என்றான் ஹரி.

““எதுடா..”

“அக்கா வச்சிருக்கிற பொம்மை. அது பேசுது..”

“இல்லம்மா.. அவன் பொய் சொல்றான்” என்று அவசரமாக மறுத்தாள் ஷாலு.

“நெசம்மாம்மா.. அந்தப் பொம்மை பேசிச்சும்மா..” என்றான் ஹரி.

“அது எப்படிடா பேசும்… அது வெறும் மரக்கட்டைதான். பேட்டரி கூடப் போடமுடியாது. பிறகு எப்படிப் பேசும். பகல் கனவு காண்றியா?” என்ற அம்மா; “அதைக்காட்டுடி.. அவன்கிட்ட” என்றார்.

அவனிடம் மரப்பாச்சியை நீட்டினாள் ஷாலு. அதைக் கையில் வாங்கிப் பார்த்த ஹரி, முன்னும் பின்னுமாகப் பார்த்தான். குழப்பத்துடன், “பேசிச்சும்மா… வேணும்னா அக்கா கிட்ட கேளுங்க” என்றான்.

“மரப்பாச்சி எங்காச்சும் பேசுமா… கொடுடா” என்றபடியே அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள் ஷாலு.

“சரி..சரி.. சுண்டல் கிளறி வச்சிருக்கேன். ரெண்டு எடுத்து வாயில போட்டுவிட்டு, டிரசை மாத்திட்டு, நீ டான்ஸ் கிளாஸுக்குக் கிளம்பு” என்று ஷாலுவை அனுப்பிவிட்டு, ஹரிக்கு அருகில் அமர்ந்து அவனது நோட்டைத் திருப்பினார் அம்மா.

***

“நல்லவேளை, அம்மா வரும்போது நீ அசையாமல் இருந்துட்ட.. தொட்டுப் பார்த்திருந்தா.. கண்டுபிடிச்சிருப்பாங்க…!” என்று பெருமூச்சு விட்டாள் ஷாலு.

அவளின் கைப்பிடிக்குள் இருந்தது, மரப்பாச்சி இளவரசி. “அவ்வளவு சீக்கிரத்தில் நான் மாட்டிவிடுவேனா என்ன? எனக்கு உன்னைப் பிடித்திருந்தது. அதனால் உன்னிடம் பேசினேன். ஆனால் உன் தம்பி இப்படிச் செய்வான் என்று நினைக்கவே இல்லை.” அதன் குரலில் வருத்தம் தெரிந்தது.

“ஆமாம்ப்பா… நானும் கூட ரொம்பவே பயந்து போயிட்டேன். இனிமேல் அவன் முன்னாடி நீ பேசாமலேயே இரு. அதுதான் நல்லது.”

“அதுவும் சரிதான். நீ மட்டும் இருந்தால் பேசுவேன். இல்லாட்டி நீ சொன்னால் பேசுவேன்” என்று சொன்னது இளவரசி. அதனுடன் பேசியபடியே நடன வகுப்பு நடக்கும் மண்டபத்தை அடைந்தாள் ஷாலு.

இவள் வீடு இருக்கும் அதே தெருவில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. கோவிலை ஒட்டி சின்னதாக ஒரு திறந்தவெளி மண்டபமும் இருந்தது. அந்த மண்டபத்தில்தான் நடனவகுப்பு நடக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் என்று வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடைபெறும். தனித்தனி குழுக்களாகப் பல சிறுமியர் அங்கே நடனம் கற்க வருவர்.

சில சமயம் நடன ஆசிரியை வர, தாமதம் ஆகும்போது, ஏற்கனவே நடனம் கற்று, அரங்கேற்றம் செய்த அக்காக்களில் யாரவது ஒருவர் இவர்களுக்கு வகுப்பு எடுப்பார்கள். ஷாலு மண்டபத்தினுள் நுழையும்போதே பார்த்தாள். இன்று இன்னும் ஆசிரியர் வரவில்லை. நந்திதா அக்காதான் அடவு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தனது ஷோல்டர் ஹேண்ட் பேக்கை மண்டபத்தின் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அதன்மேல் மரப்பாச்சியைப் படுக்க வைத்து, “இங்கேயே இருந்து வேடிக்கை பார்த்துக்கோ… நான் கிளாஸ் முடிஞ்சு வந்து உன்னை எடுத்துக்கிறேன்” என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ஓடினாள் ஷாலு.

மண்டபத்தின் ஒரு பக்கத்தில் டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த, சின்ன நடராஜர் சிலைக்கு முன் அபிநயம் பிடித்து, வணக்கம் வைத்து விட்டு, ஆடிக்கொண்டிருந்த மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டாள்.

இவளைப் பார்த்த நந்திதா, சைகையால் அழைத்தாள். இவள் அருகில் போனதும், “அங்க பாரு, உன் பிரண்டு… வந்ததுல இருந்து தனியாவே உட்கார்ந்துகிட்டு இருக்கா. பிராக்டீஸ் பண்ணவும் வர மாட்டேங்கிறா போய்… அவளைக் கூப்பிட்டுட்டு வா…” என்றாள்.

நந்திதா காட்டிய பக்கம் அப்போதுதான் பார்த்தாள் ஷாலு. அங்கே மண்டபத்தின் தூணில் சாய்ந்தபடி, ஏதோவொரு சிந்தனையில் அமர்ந்திருந்தாள் பூஜா.

ஷாலுவும் பூஜாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். ஒரே வகுப்புதான் என்றாலும் பிரிவு வேறு. இவளின் வீடு இருந்த அடுத்த தெருவில்தான் அவளின் வீடும் இருந்தது. ஷாலு, பூஜாவின் அருகில் சென்றாள். ஆனால் அவளோ, இவளை கவனிக்கக்கூட இல்லை. மண்டபத்தின் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

ஷாலு, பூஜாவின் தோளில் கை வைத்து உலுக்க நினைத்து, அவளைத் தொட்டாள். அவ்வளவுதான். சடக்கெனப் பதறியபடி விலகிப்போனாள் பூஜா. இவளைப் பார்த்த பின், தொட்டது ஷாலு என்பதை அறிந்ததும் கொஞ்சம் ஆசுவாசமானாள்.

“ஏய்… நான்தான்டி… பயந்துட்டியா, சரிவா பிராக்டிஸுக்கு போவோம்.” என்று அழைத்தாள் ஷாலு.

“இல்லடி.. கொஞ்சம் முடியலை.”

“ஏன்டி.. என்ன ஆச்சு?”

“கொஞ்சம் தலை வலிக்குதுடி… நீ போய்ப் பிராக்டீஸ் பண்ணு. நான் லேட்டா வந்து ஜாய்ண்ட் பண்ணிக்கிறேன்” என்றாள் பூஜா.

“ஸ்கூல்லையும் பார்த்தேன்; ரெண்டு மூணுநாளா ஒரு மாதிரியாவே இருக்கியேடி… என்ன ஆச்சுடி?”

“தலைவலின்னு சொல்லுறேன்ல… நீ போடி… போ. நான் வாரேன்” என்றாள் பூஜா. இவள் எதுவும் பேசாமல் நந்திதாவிடம் வந்து, “அவளுக்குத் தலை வலியா இருக்காம்க்கா… அப்புறமா வாரேன்னு சொல்லிட்டா” என்று சொல்லிவிட்டு, ஆடிக்கொண்டிருந்த பிள்ளைகளின் வரிசையில் போய்ச் சேர்ந்துகொண்டாள்.

(Box News)

பரதநாட்டியம்: பல ஆண்டுகளுக்கு முன், கூத்து, சதிர் (அ) சதிராட்டம், தாசி ஆட்டம் எனப் பலப் பெயர்களில் அழைக்கப்பட்டது. இசையும் நடனத்தையும் பிரிக்கமுடியாது. இதில் மூன்று பிரிவுகள் முக்கியமானவை. நிருத்தம், நிருத்தியம், நாட்டியம். அதாவது உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தாளக்கட்டுடன் மட்டுமே ஆடுவதை நிருத்தம் என்றும், உணர்ச்சிகளும் அபிநயங்களும் கலந்து ஆடுவதை நிருத்தியம் என்றும் உயிர்களைக் கதாபாத்திரமாக்கி, இசையுடன் நடித்துக் காட்டுவதை நாட்டியம் என்றும் அழைப்பர். தென்னிந்தியாவிற்கான தனிப்பட்ட நடன முறைகளில் இதுவும் ஒன்று.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 2]

ஷாலுவும், ஹரியும் அப்படியே உறைந்துப் போய் இருந்தார்கள். இவர்களின் முன்னால் அந்த மரப்பாச்சி பொம்மை குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தது. இருவரும் பயந்துபோய் இருந்தனர். அது அவர்களின் உடல் நடுக்கத்தில் தெரிந்தது.

மரப்பாச்சி நடப்பதைப் பார்த்ததுமே, வீறிட்டு கத்த நினைத்தார்கள். ‘ஐயோ.. அம்மா’ என்று அழைக்க நினைத்தனர். ஆனால், “ஐ…” என்று குரல் எழும்பியதும் மரப்பாச்சி அவர்களை நோக்கி, கை ஆட்டியது. அவ்வளவுதான் சத்தமிட முடியாமல் போனது. அறைக்கு வெளியே ஓடிவிடலாம் என்று முயன்றபோதும் முடியவில்லை. அப்படியே இருவரையும் உறையச்செய்து ஓர் ஓரமாக உட்கார வைத்துவிட்டது.

“நான் சொல்வதை நீங்கள் இருவரும் கேளுங்கள். நீங்கள் என்னைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. நான் ஒன்றும் செய்யமாட்டேன். நீங்கள் சத்தம் போடமாட்டேன் என்று சொன்னால்… உங்களைச் சுற்றி, நான் போட்டிருக்கும் மந்திரக்கட்டை அவிழ்ப்பேன். இல்லையெனில், இப்படியே இருக்க வேண்டியதுதான். உறுதியாகச் சத்தம் போடக்கூடாது சரியா?” என்று அவர்களைப் பார்த்து தனது கீச்சுக் குரலால் கேட்டது மரப்பாச்சி.

அசையமுடியாத போது எப்படிப் பதில் சொல்ல முடியும். சரி! ஒப்புக்கொள்கிறோம் என்பதைக் கண்கள் வழியேதான் தெரிவிக்க வேண்டும். ஷாலு விழிகளைத் திறந்து மூடினாள். ஹரி சைகை ஏதும் செய்யாமல் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சிறுவன் என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை போல. மரப்பாச்சி முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. மீண்டும் கையை உயர்த்தி ஏதோ முணுமுணுத்தது. மந்திரக்கட்டு அவிழ்ந்துவிட்டது.

இருவரும் கைகால்களை அசைத்துப் பார்த்தனர். அசைக்க முடிகிறது. வியப்புடன் அந்த மரப்பாச்சியைப் பார்த்தனர். இவர்களின் அருகில் வந்து கை நீட்டியது. இருவரும் கை குலுக்கினர். அதன் கை மரம் போல் இல்லாமல் மென்மையாக இருப்பதை உணர்ந்தாள் ஷாலு.

“மரம் தானே நீ… ஆனால் ஸாஃப்ட்டா இருக்கியே எப்படி..?”

“ஆமாம்… நான் பேசத்தொடங்கிவிட்டால் இப்படி ஆகிவிடுவேன்” என்றது.

“அதெப்படி… நீ பேசுற..” என்று கேட்டாள் ஷாலு.

“ம்… சொல்கிறேன். மரங்களுக்கு உயிர் உண்டு என்று படித்திருப்பாயே.. நான் அதற்கு ஒரு சாட்சி. எனது காடு செவ்வனம். ஆம்! செம்மரம் என்று அழைக்கப்படும் செஞ்சந்தன வகையைச் சேர்ந்தவள். நாங்கள் நினைத்தபோது உயிர்பெற்றுவிடும் சக்தி வாய்ந்தவர்கள். எங்கள் மருத்துவக் குணத்தினால் மனிதர்களுக்குப் பல விதங்களில் உதவி வந்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த மரப்பாச்சி பொம்மை. அதனால்; என்னைக் கண்டு நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என்றது மரப்பாச்சி.

அக்காவும் தம்பியும் விழிகளை இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரின் கண்களிலும் இப்போது பயம் குறைந்து, வியப்புத் தெரிந்தது.

“இப்பப் பயம் போயிடுச்சு… நீ செம்மரம்ன்னா… உனக்கு என்று ஏதும் பெயர் இல்லையா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் ஷாலு.

“ம்… இருக்கிறதே… செம்மரக்காட்டின் இளவரசி நான். என்னை எல்லோரும் அப்படித்தான் அழைப்பார்கள்”

“ஹா..ஹா… அது இல்லை. இப்போ என்னுடைய பெயர் ஷாலினி. ஆனால் என்னை ஷாலுன்னு கூப்பிடுவாங்க; கண்ணம்மான்னு கூப்பிடுவாங்க. இதோ இவன் என்னோட தம்பி, இவன் பெயர் ஹரி. இவனைப் பட்டப்பா, தங்கப்பான்னு எல்லாம் கூப்பிடுவாங்க. அது மாதிரி உன் பெயர் என்னன்னு கேட்டேன்?”

“ஓ… அப்படியா… எங்களிடம் அப்படிப் பெயர் வச்சு அழைக்கும் வழக்கம் எல்லாம் இல்லை. இப்படித்தான் அழைப்பார்கள்” என்றது இளவரசி.

“அப்படியா… சரி… இத்தனை நாளாய் மரப்பாச்சியாகத்தானே இருந்த… இப்ப மட்டும் எப்படி உனக்கு உயிர் வந்துச்சு.”

“நாங்க எப்ப நினைக்கிறோமோ.. அப்ப உயிர் பெற்றுவிடுவோம். அதுவரை மரமாகவே இருந்தாலும் சுற்றிலும் நடப்பதைக் கேட்டும் பார்த்தும் காலத்திற்கேற்ப புதுப்பித்துக்கொண்டே இருப்போம். என்னைக் கையில் வைத்திருப்பவர் யாராக இருந்தாலும் நல்ல குணம் வந்துவிடும். பொய் பேசமாட்டர்கள்.” என்று சொன்னது.

“என்னடி… ஆச்சு.. எழுதியாச்சா..?” அம்மாவின் குரல் கேட்டது.

“எழுதிக்கிட்டே இருக்கான்மா…!” என்று பதிலுக்குக் குரல் கொடுத்த ஷாலு; தம்பியின் பக்கம் திரும்பி, “டேய், சீக்கிரம் எழுதிடுடா” என்றாள்.

“போ… எனக்குக் கை வலிக்குது…”

“பென்சில் பிடிச்சு எழுதுறதுக்கே… கை வலிக்குதாக்கும். நீ அக்கா மாதிரிப் பெரியவனா ஆனபிறகு பேனா எல்லாம் பிடிச்சு எழுதனுமே… அப்ப என்ன செய்வ..? ப்ளீஸ்டா… எழுதிடு…”

“கை வலிக்குதுன்னு சொல்லுறேன்ல… போ…!”

“பொய் சொல்லாதடா… இந்தப் பென்சிலைப் பிடி…” என்று ஓர் அதட்டல் போட்டாள் ஷாலு.

“அவனைச் சத்தம் போடாதே ஷாலு. நிஜமாகவே அவனுக்குக் கை வலிக்கலாம்” என்று சொன்னது மரப்பாச்சி.

“அதெல்லாம் இல்லை. இவன் டூப்பு விடுறான்”

“நிஜமாத்தான் சொல்லுறேன்” என்றான் ஹரி.

“ஆமாம். அவன் பொய் பேசுவதாகத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் விரல்களின் பயிற்சிக்கு மண்ணில் எழுதிப் பழகச் சொல்வார்கள். ‘கிச்சு கிச்சுத் தாம்பாளம்’ என்று ஒரு விளையாட்டுக் கூட உண்டு. அந்த விளையாட்டில் விரல்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். அப்படிப் பலம் கிடைச்சதுன்னா… எளிமையாகப் பென்சில் எல்லாம் பிடிச்சு எழுதலாம்”

“இப்படி எல்லாம் விளையாட்டா… நான் கேள்விப்பட்டதே இல்லையே…?” என்று வியப்புடன் கேட்டாள் ஷாலு.

“அதுதான் சொன்னேனே… அந்தக் காலத்தில் இருந்தது. இப்ப எல்லாம் மறைஞ்சுப் போச்சு…” என்றது இளவரசி.

“இன்னுமாடி… எழுதிகிட்டு இருக்கீங்க…” சத்தம்போட்ட படியே அம்மா கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

(Box news)

நுண் இயங்குத் திறன் (ஃபைன் மோட்டர் ஸ்கில்ஸ்-fine motor skills) : விரல்களைக்கொண்டு சிறிய பொருட்களைப் பிடித்து வேலை செய்யும் திறனே நுண் இயங்குத் திறன் ஆகும். சட்டைப் பட்டன் போடுவது, பென்சில் பிடித்து எழுதுவது, நான்குவரிக் கோட்டுக்குள் எழுதுவது எனப் பல்வேறு செயல்களைச் செய்ய இந்தத் திறன் அவசியம். இத்திறனை வளர்க்க, மணலில் விரல்களைக்கொண்டு விளையாடுவது, விரல்களைக் கொண்டு எடை தூக்குவது போன்ற பயிற்சிகள் உதவும்.

Posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , | Leave a comment

மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 1]

முன்னுரை

அன்பான தம்பி, தங்கைகளே!

இந்த கதையின்வழி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும், ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினி தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடம் எளிதாகச் சொல்லிவிடமுடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது.

இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணிதான். இதை வெறும் கதையாக கடந்துபோய்விட வேண்டாம். இது பற்றி, உங்கள் அம்மா அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும்.

மரப்பாச்சி உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் சாகசத்தைப் படிக்க, உங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறேன். எப்போதும் என் எழுத்துக்குத் துணை நிற்கும் மனைவி லஷ்மிக்கும், மகன் கனிவமுதனுக்கும் அன்பு!

இன்றுமுதல் (23.04.2022) இந்த கதையை நாட்டுமக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இனி இக்கதை மக்கள் சொத்து, இக்கதை அச்சு வடிவில் பலருக்கும் சென்று சேரவேண்டும் என்னும் எனது ஆசை நிறைவேறட்டும்! நன்றி

ஹாப்பி ரீடிங்!

தோழமையுடன்

யெஸ். பாலபாரதி

yesbalabharathi@gmail.com

++++++++++++++++++++++++++
1.



கடந்த வாரம் ஊருக்குப் போயிருந்த போது, பாட்டி தன்னிடம் கொடுத்த மரப்பாச்சி பொம்மையையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஷாலினி. பாட்டியின் சின்ன வயதில் அது அவருக்குக் கிடைத்தாம். இதனுடன் இருந்த இன்னொன்று தொலைந்துபோய்விட்டதென்றும், இதுவும் சமீபத்தில்தான் கிடைத்தது என்றெல்லாம் கூறியவர், கண்டிப்பாக உனக்கும் இதைப் பிடிக்கும் என்றபடியே எடுத்து நீட்டினார். அப்போது முதல் இவள் அதைப் பிரிய மனமில்லாமல் இருக்கிறாள்.

செம்மரக்கட்டையில் செய்யப்பட்ட பொம்மை அது என்று பாட்டி சொன்னார். மூக்கில் அருகில் வைத்து முகர்ந்து பார்த்தாள். சந்தன வாசனை ஏதும் வரவில்லை. அது சிவப்பு வண்ணத்தில் இல்லை. நல்ல அடர்கருப்பு வண்ணத்தில் இருந்தது.

அது ஒரு பெண் பொம்மை. அதன் சின்ன உருவம் ஷாலினியை மிகவும் கவர்ந்திருந்தது. அதை எப்போதும் தன்னுடனேயே வைத்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய மூக்கைப்போலவே அதற்கும் கூர்மையான மூக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டாள். அதற்கு அணிவித்திருந்த புடைவையைக் கழட்டிவிட்டு, பார்பி பொம்மையின் கவுனை அணிவித்திருந்தாள். இப்போது, அது பார்ப்பதற்கே இன்னும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

பொம்மையின் கை, கால், தலை எதையுமே அசைக்க முடியாது. இதை வைத்து எப்படி விளையாடுவது? பிளாஷ்டிக் பொம்மைகளை விட, இதுதான் நல்லது என்று பாட்டி சொன்னார். அசையாமல் இருக்கும் இதைவைத்து எப்படி விளையாடினார்கள் என்று கேட்டிருக்கலாமோ, யோசித்தபடியே… அந்தப் பொம்மையை மீண்டும் முன் பின் என்று ஆராயத் தொடங்கினாள்.

“ஷாலு..”

உள்ளிருந்து அம்மா அமுதா கூப்பிடும் சத்தம் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்.

“ஏய்… ஷாலு, கூப்பிடுறது கேக்கலையா… இங்கே வாடி..!”

“இதோ வாரேம்மா..” கையில் இருந்த பொம்மையை அப்படியே சுவர் ஓரமாய்ச் சாய்த்து வைத்துவிட்டு, எழுந்தவள். என்ன நினைத்தாளோ அதையும் தூக்கிக் கொண்டு உள் அறைக்கு ஓடினாள்.

“ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு.. இன்னும் என்னடி அந்த மரப்பாச்சியை வச்சுட்டு ஆராய்ச்சி..? இதுல கவுன் வேற மாட்டிவிட்டுட்டு… ஒருதரம் கூப்பிட்டா உடனே வரமாட்டியா?”

“—–”

“ம்… வாயத்திறக்காதே, இந்தா… தம்பி கைப் பிடிச்சு, இந்த ஹோம் ஒர்க்கை எழுதிகிட்டு இரு… அம்மாவுக்குக் கிச்சனில் கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடியே பென்சிலை ஷாலுவிடம் நீட்டினாள்.

“என்னோட ஹோம் ஒர்க்கை நான் தானே, எழுதுறேன். அதுமாதிரி இவனோடதை இவன் தானே எழுதனும்.. என்னைய ஏன் எழுதச் சொல்லுறீங்க..?”

“அவன் சின்னவன்டி.. நீயும் அவன மாதிரி இருந்தப்ப.. உன் கையைப் பிடிச்சு.. அம்மா தான் எழுதினேன்.. இப்ப நீ பெரிய பொண்ணாகிட்டல்ல… குட் கேர்ள் இல்ல… முரண்டு பண்ணாம தம்பிக்கு, சரி வேணாம்… அம்மாவுக்காக இந்த ஹெல்ப் பண்ணுடி தங்கம்! நீ டான்ஸ் கிளாஸ் போறதுக்குள்ள, அம்மா உனக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் பண்ணிட்டு வந்துடுறேன்.” என்று அம்மா தாஜா செய்ததும், மறுபேச்சில்லாமல் பென்சிலை வாங்கிக்கொண்டு, தம்பியின் பக்கம் அமர்ந்தாள்.

கையில் இருந்த மரப்பாச்சியை ஓரமாக வைத்துவிட்டு, அவன் கையில் பென்சிலைத் திணித்து, அவன் கையைப் பிடித்து, “ம்.. சொல்லிக்கிட்டே.. எழுதனும் என்ன?” என்றபடியே விடுபட்ட இடத்தில் இருந்து நோட்டில் எழுதத் தொடங்கினாள்.

“ஈ…”

“ஈ..”

“எப்…”

“எப்..”

“ஜீ…”

“ஜீ..”

“ஹெச்…”

“அச்..”

“அச் இல்லடா.. ஹெச்..”

“எச்..”

“இல்லடா… இப்ப நான் சொல்லுற மாதிரி சொல்லு. சரியா”

“—–”

“ஹா.. சொல்லு”

“ஹா..”

“ஹே.. சொல்லு”

“ஹே..”

“ம்.. இப்ப ஹெ… இச், ஹெச் சொல்லு..”

“ஹெ… இச்… எச்சு..”

“டேய்.. மண்டையில ஓங்கிக் கொட்டினேன் வீங்கிப் போயிடும்..” குரலைக் கடுமையாக்கிக் கொண்டு, தம்பி ஹரியை அதட்டினாள் ஷாலு.

இதற்காகவே காத்திருந்தவன் போலக் கைகால்களை உதறி, ரைட்டிங் டேபிளைத் தள்ளிவிட்டான். “ஹே….” என்று அழுதபடியே தரையில் படுத்துக்கொண்டு, உருளவும் ஆரம்பித்துவிட்டான். இவளுக்குப் பயம் வந்துவிட்டது.

“டேய்.. உஸ்.. உஸ்.. கத்தாதடா… அம்மா வந்தா எனக்கும் அடி விழும்டா..” என்று கெஞ்சினாள்.

‘ஓ! உனக்கு அடிவிழுமா? என்னையா விரட்டுகிறாய், பார்.’ என்று இன்னும் பலம் கொண்ட மட்டும் சத்தம் போட்டு அழத் தொடங்கினான். அவசரமாக ஓடிச்சென்று அறையின் கதவைச் சாத்திவிட்டு, ஓடிவந்தாள் ஷாலு.

“இப்ப எதுக்குடா.. அழுகிற.. நீ தப்பாச் சொன்ன.. நான் சரியாச் சொல்லிக்கொடுத்தேன். இதுக்கு யாரச்சும் அழுவாங்களா?”

ஷாலுவின் எந்தச் சமாதானத்தையும் ஏற்கும் நிலையில் அவன் இல்லை. “யே…” என்று அழும் சத்தத்தைப் பெரிதுபண்ணினான். கால்களை உதைத்துக்கொண்டு, மீண்டும் உருண்டான். அவன் விட்ட உதையில் அங்கிருந்த வாட்டர் பாட்டில் சரிந்து மூடி திறந்துகொண்டது. தண்ணீர் எல்லாம் கீழே கொட்டியது. தரையில் கொட்டிய தண்ணீர் அப்படியே பரவத்தொடங்கியது.

“ஐயோ.. மரப்பாச்சி” என்று அது நனைவதற்குள் எடுத்துவிட முனைந்தாள் ஷாலு. ஆனால் அதற்குள்ளாகத் தண்ணீர் படுக்க வைக்கப்படிருந்த மரப்பாச்சியை நனைத்தது.

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று மரப்பாச்சியில் இருந்து புகைக் கிளம்பியது. “சர்க்… புர்க்..” என்று கம்பி மத்தாப்பில் இருந்து வருவது போல.. சின்னச்சின்ன நெருப்புப் பொறிகள் தோன்றின.

அழுதுகொண்டிருந்த ஹரி, இதைப் பார்த்ததும் பயந்துபோய், பதறியடித்து எழுந்து அக்காவின் பின்னால் மறைந்துகொண்டான். என்ன நடக்கிறது என்பதை அறியாமல் திகைத்துப்போய், ஷாலுவும் பயந்துப் பின் வாங்கினாள்.

அங்கே தோன்றியப் புகையை அறைக்குள் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி, அறை முழுவதும் பரவவிட்டது. சிறிது நேரத்தில் நெருப்புப் பொறி வருவதும், புகை வருவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றுபோனது.

புகை விலக, விலக படுக்க வைத்திருந்த மரப்பாச்சி நிற்பது தெரிந்தது.

(Box news)

மரப்பாச்சி : செஞ்சந்தனம் அல்லது கருங்காலி போன்ற மருத்துவக் குணமுடைய, அரிதான மரங்களில் செய்யப்படும் ஆண், பெண் மனித உருவமுடைய பொம்மைகள் இவை. பொதுவாகவே சின்னஞ்சிறு வயதில் எது கிடைத்தாலும் வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கமுடைய குழந்தைகள் இதையும் வாயில் வைத்துக்கொண்டால் கெடுதல் விளையாது. இருபாலாரின் உடை, உடல் வேறுபாட்டைப் பற்றியும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக இவற்றைப் பாதுகாத்து வருவார்கள். பின்னாளில் கொலுவில் வீற்றிருக்கும் அலங்காரப் பொம்மையாக மட்டுமே மரப்பாச்சி மாறிப்போய்விட்டது. ************************************

Posted in மரப்பாச்சி சொன்ன ரகசியம் | Tagged , , , , , | Leave a comment