January 28th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை.

ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம்
எழுதினார் வெங்கட்டர். இவர் எதிர் பார்த்தபடி பதில் சாதகமாக வரவில்லை. அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் செல்வந்தர் பலருக்கும் போக்கிடமாக இருந்தது இரண்டு இடங்கள். ஒன்று டிராமாகக் கம்பெனி, இன்னொருன்று தாசிகள் வீடு. அதையும் விட்டு வைக்க வில்லை வெங்கட்டர். ஒவ்வொரு டிராமாக் கம்பெனியாக அலைந்தார். தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி தாசி வீடுகளில் சோதனை போனச்சொன்னார். எங்கும் ராமசாமி சிக்கவில்லை.

ராமசாமி அங்கு வந்திருக்கிறானா.. எனக்கு அவன் மீது கோபம் இல்லையென கூறுங்கள் என்று ஈரோட்டுக்கு வெளியே இருக்கும் பல மைனர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் எங்கிருந்தும் இவர் எதிர் பார்த்த பதில் இல்லை.

அனா கணக்கில் காசு புழங்கிய அக்காலத்தியேயே ராமசாமியைத் தேடி சுமார் இரண்டாயிரம் ரூபாய் வரையும் செலவளித்தார் வெங்கட்டர். ஆனால் அனைத்தும் பட்ட மரத்திற்கு விட்ட நீராகி விட்டது. இனி பையன் எங்கும் கிடைக்க மாட்டான். ஒரு பையனை இழந்தோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் குடும்பத்தினர்.

பெயருக்கு அப்படியான முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஈ.வெ.ரா.வைப் பற்றி பேசாத நாளே இல்லை எனலாம். கடைக்கு வந்து போகும் அனைத்து வியாபாரிகளிடமும் பையனைப் பற்றிய தகவல்களை சொல்லிக்கொண்டே இருந்தார் வெங்கட்டர்.

****

பெரியார் சில சம்பவங்கள்…

பெரியாரை வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள். நடக்கவே சிரமப்பட்டு தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வந்தார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறைக்குள் மற்றவர்கள் நுழைய, வாசலிலேயே நின்று விடுகிறார் ஈ.வெ.ரா.

உடன் நடந்து கொண்டிருந்தவர்களுக்கு குழப்பம். ஏன் நின்றுவிட்டார்.. காரணத்தை ஈ.வெ.ராவிடமே கேட்க, அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார்.

அதில் கொலை,புலை, தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம் என்று எழுதி இருக்கிறது.

பெரியாரோ சுத்த அசைவம். அறிவிப்பை மீறி எப்படி உள்ளே போக முடியும்?! ஊரன் அடிகளோ கட்டாயப்படுத்தி, ”பரவாயில்லை. நீங்கள் வாருங்கள். உங்கள் மீது எங்களுக்கு
மிகுந்த மரியாதை உண்டு” என்கிறார்.

”உண்மைதான் .. அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும், நான் மதித்தால் அல்லவா, நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ… அப்படி நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம். வாங்கய்யா.. மற்ற பகுதிகளைப் பார்ப்போம்..” என்று அவரின் அழைப்பையும் மீறி திரும்பி நடக்கலானார் ஈ.வே.ரா.

எல்லூரில் ராமசாமி இறங்கிய போது இரவு நேரமாகி விட்டது. சுப்பிரமணிய பிள்ளையின் சரியான விலாசமும் கையில் இல்லை. ஈரோட்டில் மராமத்து இலாக்காவில் பணியாற்றியவர் என்ற தகவலும், அவரது அடையாளமும் தவிர வேறு ஏதும் தெரியாது. ரயில் நிலையத்தில் சிலரிடம் இதை கூறி விசாரித்தார். உருப்படியான பதில் கிடைக்க வில்லை.

கால் போன போக்கில் அப்படியே நகரத்துக்குள் வந்தார். எதிர் பட்ட தமிழர்கள் சிலரிடம் விசாரித்த போது அவரது வீட்டு விலாசம் தெரிந்தது, சுப்பிரமனியம் வீட்டை நோக்கி நடக்கலானார் ஈ.வே. ராமசாமி.

நேரம் நள்ளிரவை தொட்டுக்கொண்டிருந்தது. வீட்டை அடையாளம் கண்டு, கதவைத் தட்டினார். ‘எவரூ..’ என்று சத்தம் வந்ததே ஒழிய கதவு திறக்கப்படவில்லை. ‘ஈரோட்டு ராமசாமி வந்திருக்கேன்’ என்று இவரும் தெலுங்கில் சொன்னபிறகு கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த சுப்பிரமணியத்துக்கு, உடல் மெலிந்து, மொட்டைத் தலையுடன் இருக்கும் ராமசாமியை அடையாளம் தெரியவில்லை. ‘நீங்க..’ என்று வார்த்தையை அவர் இழுத்தார். தன்னை அடையாளம் தெரியாமல் தான் சுப்பிரமணியம்
குழம்புகிறார் என்றுணர்ந்த ஈ.வெ.ரா, தன்னை விபரமாக அறிமுகம் செய்து கொண்டார்.

நம்பவே முடியாமல் அவரை கூர்ந்து நோக்கியதும், முகம் பிடிபட்டது. மகிழ்ந்து போன சுப்பிரமணியம் ராமசாமியை வீட்டுக்குள் அழைத்து உபசரித்தார். மாற்று உடைகளை கொடுத்து ஆண்டிக் கோலத்தில் இருந்து விடுதலையாக்கினார். நடுநிசியிலும் ராமசாமிக்காக அவசர அவசரமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

தந்தையோடு கோபம் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப் போனது தொடங்கி, மோதிரத்தை விற்று எல்லூர் வந்து சேர்ந்தது வரை எல்லா கதைகளையும் சுப்பிரமணியத்திடம் கூறினார்.

வியந்து போன அவர், ‘அப்பாவுக்கு தகவல் கொடுத்திடலாமா’ என்று கேட்க, ‘அப்படி
செய்வதாக இருந்தால் தான் மீண்டும் ஓடிவிடுவேன். உங்களுக்கு தொல்லையில்லை எனில் என்னை தங்க வைத்திருங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் ஈ.வே.ரா. தான் யாருக்கும் தகவல் கொடுக்க மாட்டேன் என்று சுப்பிரமணியமும் உறுதியளித்தார். அவர் வீட்டிலேயே விருந்தினராக தங்கிக்கொண்டார் ராமசாமி.

எத்தனை நாட்களுக்குத்தான் சும்மா உண்டு, உறங்கி, கதை பேசியே நாட்களை கழிக்க முடியும். ஒரு மாதம் தங்கியாகிவிட்டது. ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் காலாற நடக்கலானார் ராமசாமி. மார்க்கெட் பக்கம் வந்ததும், பழைய வியாபர உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு கடையாகப் போய் பொருட்களின் விலை கேட்டு, அதன் தரம் பார்த்தபடியே நடக்கலானார்.

ஒரு விடுமுறை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, வேலையாள் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சுப்பிரமணியமும், ஈ.வெ.ரா.வும் மார்க்கெட் பக்கம் போனார்கள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராமசாமி அடுத்த கடைக்கு போனார். அது ஒரு எள் கடை. அங்கே ஒருவர் எள்ளை அளந்து கொண்டிருந்தார். ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து இரண்டு கையாளும் கசக்கி நுகர்ந்து பார்த்தார் ராமசாமி. அளந்து கொண்டிருந்தவரிடம் எள்ளின் விலையை விசாரித்தார். அவர் விலை சொன்னதும் கையில் எடுத்த எள்ளை அப்படியே போட்டு விட்டு சென்றுவிட்டார். அது எள் வியாபாரியான ஸ்ரீராமுலு என்பவருடையது. அவருக்கு எள்ளின் தரம் பார்த்து, விலை கேட்டுச் சென்ற நபர் பெரிய வியாபரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார். கடையை விட்டு வெளியே வந்தௌ ராமசாமி எங்கே போகிறார் என்பதை நோட்டம் விட்டார். ராமசாமி அடுத்த கடைக்குள் போன சிறிது நேரத்தில் சுப்பிரமணியமுடன் வெளியே வந்தார். பின்னடியே பொருட்களை சுமந்தபடி வேலையாள்.

ஸ்ரீராமுலு, அவர்களின் பின்னால் போய்க் கொண்டிருந்த வேலையாளை நிறுத்தி ராமசாமியைப் பற்றி விசாரிக்க, ஈரோட்டு வெங்கட்ட நாயக்கர் மகன் இவர் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஸ்ரீராமுலுவால் பொறுக்க முடியவில்லை. எத்தனை முறை நான் ஈரோட்டுக்கு சென்று வெங்கட்டரிடம் வியாபரம் செய்திருப்பேன். ஆனால் அவரின் மகன் என் கடையில் பொருள் வாங்காமல் வேறு எங்கெல்லாமோ வாங்கிப் போகிறார். அன்றைய தினமே, ”உங்கள் மகன் என் கடைக்கு வந்து எள்ளை எடுத்துப் பார்த்து, விலை கேட்டு, வேறு எங்கேயே வாங்கிவிட்டுப் போகிறார். விலை படியவிஒல்லை என்றால் சொல்ல வேண்டியது தானே.. நான் குறைத்திருக்க மாட்டேனா… எத்தனை முறை உங்களிடம் வணிகம் செய்திருப்பேன். நாணயம் குறைவாக நடந்துகொண்டதுண்டா..நான்! தங்கள் மகனுக்கு கடிதம் எழுதுங்கள்.. என்னிடமும் வந்து வணிகம் செய்யுமாறு எழுதுங்கள்” என்று ஒரு கடிதத்தை எழுதி வெங்கட்டருக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீராமுலு.

கடிதம் பார்த்த வெங்கட்டர் நம்முடியாமல் கடிதத்தை மீண்டும் மீண்டும் பல முறை
வாசித்தார். வீட்டில் எல்லோருக்கும் தகவலைச் சொன்னார். குடுப்பத்தினர் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது. இனி கிடைக்கவே கிடைக்காது என்று முடிவு செய்து விட்ட ஒரு அவசியமான பொருள் திரும்பக் கிடைத்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுமோ, அது போல பலமடங்கு அதிகமான சந்தோசத்தில் துள்ளிக்குதித்தனர் குடும்பத்தினர். வெங்கட்டருக்கு இருப்பு கொள்ள வில்லை. உடனடியாக இருவரை உடன் அழைத்துக்கொண்டு ஸ்ரீராமுலுவைத் தேடி புறப்பட்டார்.

ராமசாமி வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால் என்ன செய்வது, அதனாலேயே இருவரை அழைத்துக்கொண்டார். மாலை வேளையில் ஸ்ரீராமுலுவின் கடைக்குப் போய் சேர்ந்தார். அவரிடம் விபரம் பெற்றுக்கொண்டு, சுப்பிரமணிய பிள்ளையின் முகவரியையும் பெற்றுக்கொண்டு, அவர் வீடு நோக்கி புறப்பட்டனர்.

(தொடரும்)

January 25th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.

சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவா போகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.. பசி.. காதை அடைக்க.., வேறு வழியின்றி.. ஒற்றை ஆடையுடன் வலம் வரும் தன் தோற்றத்தை வைத்து பிச்சை எடுத்து சில நாட்கள் கழித்தார் ராமசாமி.

மடங்களில் சாமியார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். நெய், பால், பழம் என்று உண்டு கொழுத்து திரிந்தனர். சிவனிடம் நேரடி தொடர்பு வைத்திருப்பவர்கள் போல பிரசங்கம் செய்து வந்தனர். இந்த சன்யாசிகளின் பிரசங்கத்தில் மயங்கிய செல்வந்தர்களும் நிலச்சுவாந்தார்களும் காணிக்கையாக பொன்னும் பொருளுமாக கொட்டினார்கள்.

முற்றும் துறந்து விட்டதாக சொல்லிக் கொண்டா சாமியார்களின் மடங்களில் எல்லாம் தனி கஜான வைக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் பாங்க் போன்ற போதை வாஸ்துக்களை உள்ளே தள்ளிக்கொண்டு, சம்போ,சிவ சம்போ என்று ஆடினார்கள் சன்யாசிகளும் அவர்கள் பக்தர்களும். சிவன் சொத்தாக மதிக்கப்பட்ட கஞ்சாவை கூச்சமின்றி ஆண்களும் பெண்களும் புகைத்து சிவத்தோத்திரம் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மடங்களின் நிலை இதுவென்றால்.. கங்கை கரையில் அமர்ந்து சிராத்தம் செய்யும் பண்டாக்களின்(பார்ப்பனர்கள்) நிலை வேறு விதமாக இருந்தது. இறந்து போன ஒருவர் சொர்க்கத்துக்கு போகவேண்டுமானால்.. கோ-தானம் செய்யுங்கள், அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால்.. பிண்டம் வைத்து பூஜை செய்யுங்கள், பித்ரு சாபம் போக பண்டாக்களுக்கு தட்சணையுடன் போஜனம் வழங்குங்கள் என்று மக்களின் அறியாமையை வியாபராக்கிக்கொண்டிருந்த கும்பலையும் கண்டார்.

சுத்தமாக இருப்பதாக காட்டிக்கொண்டு, வாயில் மந்திரங்கள் முணுமுணுத்தபடி இருந்த பண்டாக்கள் மாலையானதும்.. கஞ்சா குடிப்பதும், அசைவம் சாப்பிடுவதும், பிச்சை எடுத்து திரியும் பெண்களை கட்டாய பலாத்காரம் செய்வதுமாக வலம் வந்தார்கள். கங்கை கரையை ஒட்டி இருந்த காட் பகுதிகளில் பண்டாகள் மட்டுமின்றி அவர்களின்

மனைவியரும் மற்றும் சந்நியாசிகளும் சேர்ந்து போதை வஸ்துக்களை அருந்தி விட்டு காமக்களியாட்டம் போடுவதையும் கண்டார் ராமசாமி. மிகுந்த நம்பிக்கையும் ஆச்சரமுமான குடும்பத்திலிருந்த வந்த அவரால் இந்த காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. காசி மீதிருந்த.. மதிப்பும், மரியாதையும் வெகு விரைவாக கரையத்
தொடங்கியது. இனிமேலும் இங்கே நீடித்தால்.. அது மேலும் வெறுப்பை உண்டாக்கி விடும் என்றுணர்ந்த ராமசாமி காசியைவிட்டு கிளம்ப ஆயத்தமானார்.

பெரியார் சில சம்பவங்கள்..

ஒரு முறை ஜி.டி.நாயுடுவை சந்திக்க அவர் வீட்டிற்கு ஈ.வே.ரா., சென்றிருந்த போது, ஈ.வே.ரா.வின் பையில் வைத்திருந்த மணி பர்ஸை வெடுக்கென பறித்த நாயுடு அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை தன் ஆய்வுக்கு வேண்டுமென எடுத்துக்கொண்டார்.
வெறும் சில்லரைகள் நிறைந்திருந்த பர்ஸை ஈ.வே.ரா.விடம் திரும்பக்கொடுத்தார்.

அடுத்த முறை நாயுடுவை சந்திப்பு நிகழ்ந்த போது, பழையபடி பர்ஸை பறித்த நாயுடு ஏமாற்றம் அடைந்தார். உள்ளே சில்லரை காசுகளே இருந்தது. நாயுடுவை சந்திக்கப்போகிறோம் என்று தெரிந்தாலே ரூபாய் நோட்டுக்களை எடுத்து பத்திரப்படுத்தி விடுவார் ஈ.வே.ரா.

வேறு ஊருக்கு செல்லவேண்டுமானால் ரயில் டிக்கேட் எடுக்க பணம் தேவை. பிச்சை எடுத்து அதை செய்வதற்குள் போதும்,போதும் என்றாகி விடும். யோசனையில் புரண்டு படுத்த போது இடுப்பில் ஏதோ தட்டுப்பட்டது. தடவிப் பார்த்த போது என்றோ தான் மறைத்து வைத்த தங்க மோதிரம் என்று அறிந்து மகிழ்ந்தார் ராமசாமி.

அன்றைய சூழலில் அந்த மோதிரத்தை வெறும் பத்தொம்பது ரூபாய்க்கு விற்றார். கிடைத்த பணத்தைக்கொண்டு அப்படியே தெற்கு நோக்கி கிளம்பினார். சின்ன சின்ன ஊர்களை எல்லாம் பார்த்தபடியே ஒரு ரயில் நிலையத்தை அடைந்தார் ராமசாமி. ஆந்திரம் செல்லும் ஒரு ரயிலில் டிக்கேட் எடுத்துக்கொண்டு ஏறினார். வண்டி ஏலூர் என்ற இடத்தை அடைந்ததும் இவருக்கு சுப்பிரமணியபிள்ளை என்பவரின் நினைவு வந்தது.

சுப்பிரமணியம் ஈரோட்டில் வேலை பார்த்து வந்தவர். தன் மனைவியுடன் ஏலூரில் செட்டிலாகி இருந்தார். அவரைப் பார்த்து ஏதாவது வேலை கேட்கலாம் என்ற எண்ணம் வர.. ரயிலில் இருந்து இறங்கினார் ராமசாமி.

(தொடரும்)
———–
நண்பர்களே..
இந்த பகுதியிலிருந்து பெரியார் சில சம்பவங்கள் என்ற துணுக்குச் செய்தியை வாழ்க்கை வரலாற்றின் நடுவே தொகுக்க உள்ளேன். இவற்றிற்கு எந்த ஆதாரமும் இல்லை. சில நடந்த உண்மைகளாக இருக்கலாம். பலது கற்பனைகளாகக் கூட இருக்கலாம். இவை வாய் வழியாக சொல்லக்கேட்டு ஆங்காங்கே பதிவு செய்யப் பட்டிருப்பவை.

December 10th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் தலம். ஒவ்வொரு மண் துகளிலும் கடவுளின் உருவத்தை பார்க்க முடிகின்ற தேசம். பாலிலும் தேனிலும் குளித்து எழும் மனிதர்கள். செழிப்பும் வனப்புமாய் இருக்கும் குடிமக்கள். வாழும் காலத்திலேயே ஒருவன் சொர்க்கத்தை பார்க்க வேண்டுமென்றால் காசி போனால் போதும், எல்லா மனிதர்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை நதி ஓடும் பூமியின் சொர்க்கம். பசி என்று எவரும் இருந்து விட முடியாது.. செல்வந்தர்கள் பல அன்னதான சத்திரங்களை உருவாக்கி வருவோர், போவோர் எல்லோருக்கும் உணவு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி தான் கேட்டு பூரித்துப்போன காசி நகருக்கு வந்து சேர்ந்தார் ராமசாமி.

அதுவரை ராமசாமியுடன் இருந்த பிராமணர்கள் இருவரும் இவரை தனியே விட்டு விட்டு பிரிந்து போயினர். மொழியும் தெரியாமல் வழியும் புரியாமல் காசி நகர வீதிகளில் உலா வரத்தொடங்கினார். மாமிச மலைபோன்ற உடம்புடைய மனிதர்களை ரிக்சாவில் வைத்து எலும்பு மனிதர்கள் இழுத்து செல்லும் காட்சியைப் பார்த்தார் ராமசாமி. சாலையோரங்களில் ஆண், பெண் இல்லாத பிச்சைக்காரர்களும், உடலுறுப்புகள் பாதிப்படைந்து நோய் கண்ட வியாதிக்காரர்களும் தர்மம் கேட்டு குரல் கொடுத்தபடி கிடந்தார்கள்.

பண்டாரங்களும், பாராயணம் செய்பவர்களும் சொல்லித்தந்த காசி போல அந்த நகரம் இல்லை. தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு அவர்கள் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர் என்பது புரியத்தொடங்கியது. சத்திரங்களை தேடிப் பார்த்தார் ஏதும் கண்ணில் படவில்லை. கையில் இருக்கும் காசை செலவளித்து ஒரு நாளை ஓட்டி விட்டார்.

பசி அதன் வேலையை வயற்றுக்குள் செய்யத்தொடங்கி இருந்தது. மறுநாள் காலையிலேயே புறப்பட்டுப் போனார். லட்சுமண்காட், ஹஸ்சி காட் உட்பட்ட பல பகுதிகளில் சத்திரங்களைத் தேடி அலைந்த போது தான் அன்னதான சத்திரம் என்று தமிழில் எழுதப்பட்ட ஒரு சத்திரத்தைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி கொண்டார் ராமசாமி. இனி கொஞ்ச காலத்திற்கு கவலை இல்லாமல் காசியில் கழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த சத்திரம் நோக்கிப் போனார்.

இவரது மீசை உடைகளை கண்ட உடன் அத்திரத்தின் வாசலில் இருந்த காவலாளி உள்ளே விட மறுத்தான். அவனிடம் சண்டை போட்டார் ராமசாமி. ஆனால் அவனோ.. அந்த சத்திரம் பிரமணர்களுக்காகவே கட்டப்பட்டுள்ளது என்றும் மற்றவர்களுக்கு உணவளிக்க முடியாது என்றும் ராமசாமியை துரத்தி விட்டான்.

ஐத்ராபாத்திலிருந்து உடன் வந்த இரு பிராமணர்களும் தன்னை தனியே விட்டுப் போனதின் காரணம் புரிந்தது. தான் இல்லாமல் போய் இருந்திருந்தால் அவர்கள் நிச்சயம் பிச்சை மட்டுமே பெற்று சாப்பிட்டிருக்க முடியும். முருகேச முதலியார் மாதிரியானவர்களின் நட்பு கிடைத்திருக்காது. இவ்வளவு சீக்கிரம் காசி வந்திருக்கவும் மாட்டார்கள். தன்னால் உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் இப்படி நடு நோட்டில் நிற்க வைத்துவிட்டார்களே என்ற எண்ணம் சோர்வை ஏற்படுத்தியது. வெளியில் நடப்பது ஏதுமறியாத பெருங்குடல் சிறுங்குடலை திண்றுகொண்டிருக்கிறதோ என்ற அச்சம் கொள்ளும் அளவுக்கு வயிற்றில் வலி எடுத்தது. அது பசியால் ஏற்படும் வலி என்பதை உணர்ந்து கொண்ட ராமசாமி.. வேறு சத்திரங்களைத் தேடி அலைந்தார்.

நண்பகல் வரை கண்ணில் பட்ட எல்லா சத்திரத்திங்களில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். முதல் சத்திரத்தில் சொல்லப்பட்ட அதே பதிலைத் தான் எல்லா சத்திர காவலாளிகளும் சொன்னார்கள். கடைசியாக ஒரு சத்திர காவலாளியிடம் உள்ளே போக அனுமதி கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த போது.. மற்றவர்கள் சாப்பிட்டு முடித்த எச்சில் இலைகளை வெளியில் இருந்த குப்பைத்தொட்டியில் வந்து போட்டு விட்டுப் போனார்கள்.

ஒரு பக்கம் இனம் தெரியாத கோபம், மற்றொரு பக்கம் காதடைக்கும் பசி. காவலாளியுடன் ஈடுபட்டிருந்த வாக்குவாததை விட்டுவிட்டு குப்பைத் தொட்டி நோக்கிப் போனார் ராமசாமி. அங்கிருந்த தெரு நாய்களை விரட்டி விட்டு.. தொட்டிக்குள் இருந்த எச்சில் இலைகளை எடுத்து தரையில்வைத்தார். அதன் முன் நன்றாக அமர்ந்து கொண்டார். இலைகளில் மிச்சமிருந்த சோற்றை காலி செய்யத்தொடங்கினார். நெய் வாசமிக்க அந்த பதார்த்தங்கள் தன் வீட்டை நினைவு படுத்தின. கண்களில் கண்ணீர் பெருகி பார்வையை மறைத்தது. புறங்கையால் அதனை துடைத்து விட்டு சோற்றை வழித்து, வாயில் வைத்து வயிற்றுக்குள் தள்ளினார். இலைகள் மலமலவென காலியாகின.

கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்த்து. நிமிர்ந்து உட்கார்ந்தார். இனியும் புரட்டர்கள் பேச்சை நம்பி காசியில் பிழைக்க முடியாது. ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று வேலை தேடி அலைந்தார். மொழி தெரியாததினால்.. போன இடங்களில் இருந்து எல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்கள். சரி.. காசியை சுற்றிய போது பார்த்த மடங்கள் அன்னச்சத்திரங்களில் சென்று வேலை கேட்டார். அங்கும் இவரை ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் விரட்டி விட்டனர். முகத்தில் இருக்கும் பெரிய மீசையும், தன் கிராப் வைத்த தலை முடியினாலும் தான் இந்த நிலை என்று உணர்ந்துகொண்டு, மொட்டை போட்டு மீசையையும் மழித்து விட்டார். ஆடையும் காவிக்கு மாறி இருந்தது.

கங்கை ஆற்றின் கரையில் இறந்து போனவர்களுக்கு காரியம் செய்து முடித்த பின், பண்டாராங்களை அழைத்து சோறு போடுவதைக்கண்டார். ராமசாமியும் வரிசையில் நின்று சாப்பிட்டார். சில நாட்கள் பண்டாரங்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிடும். சீனியர் பண்டாரங்கள் இவரை ஓரங்கட்டி விடுவார்கள். வியாபரத்தில் கெட்டிக்காரராக இருந்து என்ன பயன்.. பண்டாரங்களுடன் போட்டி போட்டு.. சாப்பிட முடியாமல் போனது.

தனக்கு இது சரிப்பட்டு வராது என்று சாமியார்கள் மடங்களைத்தேடி போனார் வேலை கேட்டு.., ஒரு மடத்தில் பூஜைக்கு வில்வம் பறித்துக்கொடுக்கும் வேலை கிடைத்தது. அதோடு காலை மாலை இரு வேலைகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும், சம்பளம் கிடைக்காது. தினம் ஒரு வேலை மட்டும் சாப்பாடு போடுவோம் என்றார்கள். சரி என்று ஒப்புக்கொண்டார். வயிற்றுக்கு வஞ்சனை இருந்தாலும் வேலை கிடைத்து விட்டது.

தினம் அதிகாலை மூன்று மணிக்கே குளித்து சுத்தபத்தமாக வில்வம் பறித்து பூஜைக்கு தயாராகி விட வேண்டும். ராமசாமி வேலைக்கு சேர்ந்த சமயமோ கடும் பனி கொட்டும் குளிர் சமயம். சும்மாவே குளிப்பதற்கு ஆயிரம் சாக்கு போக்கு சொல்லும் ராமசாமியா குளிரில் குளிப்பார். கங்கை கரைக்குச் சென்று துண்டை கங்கையாற்றில் நனைப்பார். ஈரமாக்கிய துண்டைக்கொண்டு உடலை துடைத்துக்கொள்ளுவார். பின் வேஸ்டியை நனைத்து ஈரமாகவே அதையும் அணிந்து கொள்வார். இப்பொது குளியல் போட்ட எபெஃக்ட் வந்துவிடும். தயாராக வைத்திருக்கும் விபூதியை தண்ணீரில் குழைத்து பட்டை போட்டுக்கொள்வார். உடல் சூட்டில் தண்ணீர் காய விபூதி பளிச்சென்று தெரியத்தொடங்கும். அப்படியே வில்வம் பரித்து ஓலைக்கூடையில் போட்டுக்கொண்டு மடத்துக்கு வந்து விடுவார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற சொலவடை போல.. ராமசாமியில் இந்த வேலை அதிகநாள் நீடிக்க வில்லை. காலைக்கடனை முடித்து, கால் கழுவ கங்கைக் கரைக்கு வந்த சாமியார் ஒருவர், கரையில் நின்றுகொண்டு ராமசாமி போடும் வேசத்தைப் பார்த்து விட்டார். இத்தனை நாளாக குளிக்காமல் தான் இவன் வில்வம் பறித்து வ்ருகிறான.. அல்லது இன்று மட்டும் இப்படி நடந்து கொள்கிறான என்ற சந்தேகம் அந்த சாமியாருக்கு வந்தது. அவசர அவசரமாஅக் தன் பணியை குடித்துக்கொண்டு, மடத்துக்கு திரும்பி பெரிய சாமியாரிடம் தான் கண்டவற்ரை போட்டு உடைத்தார்.

இந்த விபரங்கள் ஏதும் தெரியாத ராமசாமி, வழக்கம் போல வில்வம் பறித்து முடித்து விட்டு மடத்துக்குள் நுழைய முற்பட்ட போது தான் கவனித்தார். மடத்துச்சாமியார்கள் எல்லோரும் கூடி வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். வில்வக்கூடையை கீழே வைத்து விட்டு என் கேள்விக்கு உண்மையான பதிலைச்சொல்லு என்று கேட்டார் பெரிய சாமியார். கூடையை கீழே வைத்து விட்டு கேளுங்கள் என்றார் ராமசாமி. இன்று குளிக்காமலா.. வில்வம் பறித்தாய்? ஆமாம் என்று அலட்சியமாக பதில் வந்தது. எத்தனை நாளாக இப்படி நடக்குது? கொள்ளை நாளாக இப்படித்தான் நடக்குது. அடப்பாவி!ஆண்டவனுக்கு செய்யப்படும் பூஜையில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது தெரியாதா..? இப்படி குளிக்காமல் இந்த பணியில் ஈடுபடுவது என்பது பெரிய குற்றம் என்பது தெரியாதா? நாங்கள் எல்லோரும் குளித்து சுத்தமாக இருப்பதை பார்த்துமா உனக்கு அறிவு வரவில்லை? என்று கேள்விகளை அடுக்கினார் பெரிசு. அது எல்லாம் சரி சாமி.. ஆனா.. உலகையே காக்கும் உங்க ஆண்டவன் ஒரு நாளும் குளித்துப் பார்த்ததே கிடையாதே. அப்ப அதுமட்டும் சரியா? அந்த ஆண்டவனையே உங்களில் ஒருவர் தானே குளிப்பாட்டி விடுகிறீர்கள்? என்று எதிர்க்கேள்வி கேட்க.. சாமியார்களுக்கும் ராமசாமிக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் சண்டையாகி மடத்தை விட்டு சாமியார்களால் வெளியேற்றப்பாட்டார் ராமசாமி.

(தொடரும்)
——————