June 3rd, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

இன்று சென்னையின் அனேக இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலும் (இதை இடையில் தடை பண்ணியதாக நினைவு!), ஸ்பீக்கர் பாக்ஸ்களிலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக கழக பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. “கட்டு கட்டா கள்ளப் பணம் வச்சிருக்குற கும்பல் இது, அத்தனையும் அள்ளிவிட்டு, ஓட்டு கேட்டு வீடு தேடி வருவாங்க.. விரட்டியடிங்க…” என்றும், ”உப்புக் கருவாடும், ஊறவச்ச சோறும் கூட கிடைக்கலையே எனக்கு.. கொள்ளை கொள்ளையா பணத்தை சேர்க்குறியே ஒனக்கு!” என்றும் ஆளும் அரசை விமர்சிக்கின்ற பாடல்கள். கொஞ்சம் நின்று கவனித்தால் தான் தெரியும் இவை கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின் போது அ.தி.மு.க அரசை விமர்சித்து எழுதப்பட்டவைகள் என்று! இல்லாவிட்டால்.. நடப்பு அரசுக்கும் பொருந்துகின்ற மாதிரித்தான் இருக்கிறது வரிகள். :) இதை எல்லாம் விட காமெடி, கருணாநிதி என்றோ.. பேசிய பேச்சுக்களையும் பல இடங்களில் ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில், ”…மானங்கெட்ட இந்த காங்கிரஸ்காரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்..” என்று காங்கிரசை விளாசிக்கொண்டிருந்தார். :))

(இப்போது தி.மு.க காங்கிரசுடன் கூட்டனியில் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்)

-OoO-

1975 ஜூன் 25 ல் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட எமெர்ஜென்சி காலத்தை பற்றி ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறிய பல சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. அப்போது அவர் பள்ளி மாணவனாக இருந்தாராம். அவரோடு பேசியதில் அன்றைய நிலை குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. 1975ல் நன்கு விபரம் தெரிந்த வயதில் இருந்த பதிவர்கள்.. அப்போது நெருக்கடி நிலையை தமிழக மக்கள் எப்படி உணர்ந்தார்கள்.. எதிர்கொண்டார்கள். என்னென்ன அடக்குமுறைகள் இங்கு நிகழ்தது என்பதை எழுதலாம். என் போன்ற விபரம் தெரியாத பலருக்கும் அது உபயோகமானதாக இருக்கும். அச்சமயம் தமிழக சூழல் குறித்து சரியான பதிவுகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

-oOo-

விழுப்புரம் பயிரலங்கு போய் இருந்த போது தூரிகா வெங்கடேஷ் கூகிள் ரீடர் பற்றிய வகுப்பு எடுத்தார். அதில் ஒருவரின் பதிவுகள் எவ்வளவு பேரால்.. சேர்க்கப்பட்டிருக்குன்னு பார்க்க முடியும்னு சொன்னார். சரி.. நம்ப பதிவை எத்தன பேரு ரீடர் மூலம் படிக்கிறாங்கன்னு சோதிச்சுப் பார்த்தேன். http://blog.balabharathi.net/feed/ (இது தான் சரியான ஃபீட்) என்ற முகவரியில் 29 பேரும்! http://blog.balabharathi.net/ என்ற முகவரியில் 9 பேரும் இருந்தாங்க! ஆக.. 38 பேர் என் பதிவையும் பார்க்கிறார்கள் என்ற போது கொஞ்சம் மகிழ்ச்சி வரத்தான் செய்தது. :)

உண்மையில் எல்லோரும் இந்த தின குறிப்புகள் நல்லா இருக்குன்னு சொல்லும் போது கொஞ்சம் பயம் வருது. ஒரே மாதிரியே எழுதனுமேன்னு. யாருக்காகவும் நான் இதை எழுத வில்லை. என் மன ஆறுதலுக்காகவே எழுதுகிறேன்னு சொல்லிகிட்டு எழுத வேண்டியதிருக்கு. அதனால.. சுவாரஸ்யம் இல்லைன்னு யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க! :) எனக்கு நேரமும், மனசும் ஒத்துழைச்சா.. தினம் என் எண்ணங்களை பதிவு செய்து கிட்டே இருப்பேன். பின்னூட்டங்கள் இல்லைன்னாலும் கூட எழுதிகிட்டே இருப்பேன்!

-OoO-

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கமும் ஒருவர். அவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் மிகவும் பிடிக்கும். அது போல எல்லாம் என்னால எழுதமுடியுமான்னு தெரியலை. அவரின் 77 சிறுகதை கொண்ட தொகுப்பின் மின்னூல் வடிவம் நூலகம். டாட் காமில் கிடைக்கிறது. அதன் சுட்டி இதோ!

-oOo-

June 2nd, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

வீட்டை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். சமைத்த சமயங்களிலும் கூட வேலைக்கு போகும் அவசரத்திற்கு தகுந்த மாதிரி கலவைச் சோறு சமைத்து ஓடி  இருக்கிறேன். வீட்டில்  சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன்.  வீட்டு சாப்பாட்டிற்கு ஒரு மணம் உண்டு! தொடர்ந்து வீட்டுச்சாப்பாடு ருசித்து வருபவர்களுக்கு அது  பிடிபடாமல் போய் இருக்கலாம். ஆனால்.. என்னைப் போல.. ஆளற்றவர்களுக்கு அதன் வாசம் நிச்சயம் நன்கு தெரிந்திருக்கும்.

நான் வசிக்கும் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி ஒரு வீட்டில் விசேசம்.  திருமணவிழா அது. யார் எவர் என்று எல்லாம் எனக்கு தெரியாது. வாழையிலையில் பதார்த்தங்களுடன் சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆனதால்.. உள்ளே போய் சாப்பிட்டு விடுவது ஆசை வந்து விட்டது. ஐம்பத்தி ஒரு ரூபாயை எடுத்து மொய்கவரில் போட்டுக் கொண்டேன். மணவிழா விட்டுக்குள் நுழைந்தேன். என்னையை யாரும் அடையாளம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஷ்டிக் நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டேன். எல்லோருக்கும் ஏதாவதொரு வேலை இருந்தது. உள்ளே போன சில நிமிடங்களிலேயே.. அது பெண் வீட்டாரின் வீடு என்பதை உணர்ந்து கொண்டேன். அருகில் இருந்தவரிடம் பெண்ணின் அப்பா எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார். ‘அவரு போய் பல வருசமாச்சுங்களே..!பொண்ணுக்கு  அண்ணன் தான் இருக்கான்’ என்றார். நானும் விடாமல் ‘சரி..அவரு எங்கே?’ என்று கேட்க, தூரத்தில் வெள்ளைச் சட்டை போட்டு நின்ற ஒருவரைக் காட்டினார். எழுந்து அவரிடம் போனேன். ‘சார்.. ஒரு நிமிசம்’ என்று அவரை அழைத்தேன். புதிய முகமாக தெரிந்த என்னைப் பார்த்து குழம்பியவராக..”சொல்லுங்க சார்” என்றார். ‘சார்.. இங்கே பக்கத்து தெருவுல தான் குடி இருக்கேன். என் பேரு பாலா. —– நிறுவத்துல வேலை பார்க்கிறேன். தனிக்கட்டை. வீடு, வாசல் சொந்தம் பந்தம்னு யாரும் பக்கத்துல இல்ல, தினமும் வெளியில ஓட்டல் சாப்படுல நாக்கு செத்துப் போச்சு. இங்கே கல்யாண சாப்படு சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு வந்துட்டேன். மொய் எல்லாம் வச்சு இருக்கேன். சாப்பிடலாங்களா..?’ என்றேன். என் அணுகுமுறை அவர் வியப்பில் ஆழ்த்தி இருக்க வேண்டும். ஒரு நிமிடம் வித்தியாசமாகப் பார்த்தார். ஒருவரி அழைத்து, ‘தம்பியை பந்தியில ஒக்கார வையுங்க.. நமக்கு வேண்டப்பட்டவர்’ என்று சொல்லி விட்டு, என் காதருகில் குனிந்து சொன்னார்…, ‘ சாப்பிடுங்க தம்பி, மொய் கிய் எல்லாம் வேணாம்.. வயிறும் மனசும் நிறையிற மட்டும் சாப்பிடுங்க!’ என்று சொல்லி விட்டு, போய் விட்டார். என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது. ( சாப்படு பிரமாதமாக இருந்தது என்பதை சொல்லாவிட்டால் எப்படி)

-OoO-

இனி தினம் இந்த குறிப்புகளை எழுத முடியுமா தெரியவில்லை. :(  வேலைப் பளு அதிகமாகி விடும். இணையத்தின் பக்கம் வருவதற்குள்ளாகவே நாக்கு தள்ளப் போகிறது. வாரம் முன்று முறையாவது எழுதி விடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனாலும் தினம் எழுதுவதற்கான முனைப்பும் இருக்கிறது. பார்க்கலாம் சமயம் வாய்க்கவேண்டும்.

-OoO-

சென்னையில் இரவு நேரங்களில் குல்பி ஐஸ் விற்பவரை பார்த்திருப்பீர்கள். அவரின் ஒரு நாள் கலெக்சன் (மாலை 4மணி முதல் இரவு 11வரை) எவ்வளவு தெரியுமா..? சாதாரணமாக ரூ.800/- என்றார் ஒரு குல்பிகாரர். அதுபோல.. பானிபூரி தயாரித்து கொடுக்கும் ஒருவர் தினம் ரூ. 400/-க்கு குறையாமல் சம்பாதிப்பதாக சொன்னார். பாண்டிபஜார் பகுதியில் ரோட்டோர சப்பாட்டுக்கடை நடத்தும் ஒருவரின் தினவருமானம் ரூ. 8000/- என்பது நம்ப முடியாத உண்மை.  அதிகம் படிக்காமல்வெளிமாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் போய் கஷ்டப்படும் நம்மவர்கள் சென்னையில் சின்னதாக சாப்பட்டுக் கடை திறந்த.. (எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருக்கு) பிச்சுக்கிட்டு ஓடும். பேச்சுலர்கள் இருக்கும் வரை நோ ப்ராபளம்.

-OoO-

சில வருடங்களுக்கு முன் சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம்.(மும்பை , டெல்லி வேலையை விட்டு விட்டு சென்னையில் செட்டில் ஆகவேண்டும் என்ற கனவுடன் வந்திறங்கி இருந்தேன்.) நண்பரின் நண்பர் அறையில் எம்.ஜி.ஆர் நகரில் சில  மாதங்கள் தங்கி இருந்தேன்.அந்த நண்பர் மருந்து விற்பனை பிரதிநிதி. அவர் வேலைக்குப் போன பின், நான் கிளம்பிப் போவேன் வேலை தேடி! அப்போது பக்கத்து அறையில் சில இளைஞர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் சினிமாவில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தவர்கள் இருவரும். வாய்ப்பு தேடும் இருவருமென மொத்தம் நால்வர் குழு அது. அவர்களில் ஒருவர் எனக்கு நெருக்கமான நண்பராக மாறிப் போனார். நிறைய நூல்கள் குறிது பேசிக்கொள்வோம். ‘எப்படியும் படம் பண்ணியாகனு பாலா’ என்று அடிக்கடி சொல்லுவார். என் சிறுகதை ஒன்றை சினிமா ஸ்டைலில் திரைக்கதையாக சொல்ல.. நான் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். என் கதையை எனக்கே வேறு வடிவில் சொல்லுவார். பெரிய ஆளாக வருவார் என்று நம்பினேன். எனக்கு வேலை கிடைக்காமல் போகவே.. மீண்டும் மும்பைக்கு ஓடிப் போனேன்.

சமீபத்தில்  வடபழனி பிரசாத் ஸ்டியோவுக்கு ஒரு வேலையாக போய் இருந்தேன் நண்பருடன். மதிய நேரமானதால்.. சாப்பிட்டுப் போகலாம் என்று முடிவு செய்து.. ஒர் ஓட்டலுக்குள் நுழைந்தோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே.. அந்த பழைய நண்பர் இன்னொருவருடன் அங்கே சாப்பிட வந்தார். அவரின் பெயரைச் சொல்லி அழைத்ததும், என்னை திரும்பிப்ப் ஆர்த்தவர் சில வினாடிகளுக்குப் பின் அடையாளம் கண்டு கொண்டு பேசினார். புதியதாக ஒரு படம் பண்ணப் போவதாகவும், பட பூஜைக்கு வா என்று சொல்லி அழைப்பிதலும் கொடுத்தார். மொபைல் எண்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம். அந்த நண்பரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தேன். படத்தின் பெயர் என்ன தெரியுமா? “வெண்ணிலா கபடி குழு”

-oOo-

சோபா சக்தியின் பிரபலமான கொரில்லா நாவல் மென்நூலாக கிடைக்கிறது. நன்றி:- நூலகம்

May 31st, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

உங்களில் பலருக்கும் கென் தெரிந்தவராக இருக்கலாம். அனேக குழுமங்களில் சண்டைக்கோழி சேவலாக வலம் வரும் கோபக்காரன். ஆனால்.. மெல்லிய மனதுக்கு சொந்தகாரன். எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில் அவனுக்கு தகராறு உண்டு. அது அன்பாக இருக்கட்டும், கோபமாக இருக்கட்டும். கவிதைகள் மட்டுமே தன் வலைப்புக்களில் எழுதிக்கொண்டிருக்கும் கென், அவ்வப்போது உரைநடைபக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு. கவிதைகளை விட அவனது உரைநடைக்கு நான் வாசகன்.

இந்த வாரத்தில் பண்புடன் குழுமத்தில் அவன் எழுதி இருந்ததை பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

-OoO-

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செளரிராசன் தொடக்கப்பள்ளியில் படித்தேன்,

செளரிராசன் தந்தைப்பெரியாரின் சீடர் , தீவிரமான நாத்திகவாதி தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் நிறுவியவர்.

தம் தோட்டம் முழுவதையும் அழித்து ஆதிதிராவிட மக்களுக்கான காலனி வீடுகளை கட்டித்தந்தவர். இன்றும் செளரிராசன் காலனி என்ற பெயரில் வெகு சிறப்பாக இருக்கிறது.

அவர் வாழ்கின்ற காலத்தில் எவரெல்லாம் அவரை எதிர்த்தார்களோ கொலைச்செய்ய முயற்சித்தார்களோ அவர்களின் பிள்ளைகள் இன்று அதே பள்ளிகளில் ஆசிரியர்களாக, தலைமை ஆசிரியர்களாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்திய ஆண்டில் நானிருந்தேன்.

ஆறாம் வகுப்பில் எனக்கு வகுப்பாசிரியர் திரு . வைத்திலிங்கம் எனக்கான இலக்கிய ஆர்வத்தை வெகுவாக ஊட்டியவர், சிறப்பான முற்போக்காளர், சாதி மறுப்பாளர். தமிழ் ஆர்வமிக்கவர். எல்லா அடிப்படை தண்டனைகளிலும் நான் எப்போதும் சிக்கிக்கொள்வதுண்டு.

பெண்களுக்கான வழியாய் பள்ளிக்குள் வருவது, ரேங்க் சீட்டில் அப்பாவின் கையெழுத்துப்போடுவது, திடீர் சண்டைக்குள் குதிப்பது, பெண்களை கெட்டவார்த்தையால் திட்டுவது.

கடைசியாய் சொன்ன குற்றச்சாட்டுக்கு அதிக தண்டனை கிடைக்கும். பள்ளியில் உள்ள எல்லா மரங்களுக்கும் செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றவேண்டும் , பிரேயர் ஹாலில் முட்டிப்போடுதல் போன்றவை.

முட்டிப்போட்டுருக்கையில் நாம் திட்டிய பெண் அவள் தோழிகளுடன் வந்து சிரித்தபடி போகையில் உள்ளுக்குள் இன்னும் வண்டையாக திரளும் கோபம்.

எட்டாம் வகுப்பில் பள்ளி ஆரம்பமாகி ஒரு மாதத்திற்குப்பின் வந்து சேர்ந்தாள் ஒரு பட்டாம்பூச்சி பெண் , செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கிறாளென்றும் எவரும் எந்த கேலியும் செய்திடகூடாதென்றும் அறிமுகப்படித்தி வைத்தார் ஆசிரியர்.

அந்த பெண் ஆசிரியர்க்கு உறவுக்காரியாக வேறு இருந்தபடியால் எச்சரிக்கைப்பலமாக இருந்தது.

பச்சைக்கலர் பாவாடையும் வெள்ளைச்சட்டையும் பெண்களுக்கான சீருடை..,

வெள்ளைக்கலர் சட்டையும் காக்கி நிற பேண்ட்டும் ஆண்களுக்கானது.

வெகு திருத்தமாக இருப்பாள் , எதைக்கேட்டாலும் உங்கையில கொடுத்தேன், தாழ உட்கார்ந்தேன் என்பதான பேச்சு வழக்கில் நாங்கள் சிரிக்கையில் அவள் முறைத்தப்படி போய்விடுவாள்.

சிறிது நாட்கள் கழித்துப்பள்ளிக்கு வந்ததினால் எழுதப்பட்ட நோட்ஸ்களுக்கான தேவையில் என் நோட்ஸ் அவளிடம் யாராலோ தரப்பட்டிருந்தது.

( குறிப்பு : என் தமிழ்க்கையெழுத்து கொஞ்சம் அழகாக இருக்கும் , வகுப்பில் ஒழுங்காக குறிப்பெடுத்துக்கொண்டிருப்பேன்)

வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குப்பின் நேரடியாக என்னிடம் நோட்ஸ் கேட்டாள் , அங்கு பெண்களிடம் பேசுவது பெரிய குற்றம் அதுவும் இல்லாமல் என்னைப்போன்ற வன்முறையாளர்களிடம் பெண் பேசுவது மிகப்பெரிய குற்றம்.

மிகத்தெளிவாக தரமுடியாது போடி என்றேன், உடனே அழுது விட்டாள் அவள் என்னை ஏன் போடின்னு சொல்றன்னு கேட்டப்படி தேம்பி தேம்பி அழத்துவங்கினாள்.

இன்னைக்கு உனக்கு இருக்குடா என்றபடி என் நண்பர்கள் மிரட்டியபடி இருந்தார்கள், மதிய உணவு இடைவேளைக்கும் அவள் சாப்பிட போகாமல் அழுதபடி இருந்தாள் ,

மதிய கணக்கு வகுப்பிலும் அவள் கண்கள் கசிந்தபடி இருக்க கணக்கு வாத்தியார் ஒரு உறுமலுடன் என்னம்மா ஏன் அழற

டேய் யாருடா அந்த பொண்ணுக்கிட்ட தகராறு பண்ணீங்க என்றார்,

மொத்த வகுப்பறையும் அமைதியாய் என்னை நோக்கியது , நான் மெனமாக எழுந்து நின்றேன், உனக்கு இதே வேலையாய் போச்சுடா, டிசி கொடுத்தாதான் நீ சரிப்பட்டு வருவ என மிரட்டத்துவங்க

நித்யா எழுந்து இல்லை சார் எனக்கு உடம்பு சரியில்லை அதான் அழுதேன் என்றாள், கணக்கு வாத்தியோ நீ பயப்படாத நான் இவனை பாத்துக்கிறேன் என்றபடி சொல்டா என்னப்பண்ணிட என மிரட்டலைத்தொடர்ந்தார்.

அவளோ விடாமல் இல்லை சார் , நான் உடம்பு சரியில்லாமல்தான் அழுதேன் என சாதித்துவிட்டாள். என்னை முறைத்த வாத்தி இந்த முறை தப்பிச்சிட்டடா உனக்கு இருக்கு என்றார்.

அதற்கடுத்த நாட்களில் வெகு நட்பாகிப்போனோம் டியுசன்களில் பக்கத்து இருக்கைப்பிடித்து வைத்திருப்பாள், பள்ளிக்கு வரும் நாட்களில் டிபன்பாக்ஸ் பிடுங்கி தின்கையில் சிரித்தப்படி இருப்பாள் , தினமும் இரு இட்லிகளும் சீனியும் மட்டுமே இருக்கும்.

எப்போதும் ஜாமெண்டிரி பாக்ஸில் பணம் வைத்திருப்பாள் , அப்போதெல்லாம் ஐந்து ரூபாய் இருந்தாள் போதுமாயிருக்கும் எனக்கு .

வாரக்கடைசியில் வெள்ளிக்கிழமையில் பணம் எடுத்துக்கொள்வேன் எதுக்கு சொல்லிட்டு எடுத்துக்க என்பாள் , போடி காரணம் மயிரெல்லாம் சொல்லனும்னா நீ தேவையேயில்லை என்கையில் ,

மயிறு என்ற வார்த்தையில் காது பொத்திக்கொள்வாள் , முகம் எல்லாம் சிவந்து போய்விடும் , பணம் தந்து விட்டு அழுதபடி போய்விடுவாள், திங்கள் பள்ளிக்கு வந்தாலும் என் முகம் பார்க்காமல் இருப்பாள் .

என் வீட்டில் ஜெனியா பூக்கள் பூத்திருந்த காலம் அது . ஜெனியா பூக்கள் பிளாஸ்டிக் பூக்களைப்போன்றவை , வாடாமல் இரு நாட்களுக்கு மேல் இருக்கும் அவை பல நிறத்தில் பூக்கும்.

சண்டைப்போட்ட நாட்களில் ஒரு பூவை எடுத்துச்சென்று என் டெஸ்க்கின் மேல் வைப்பேன். ஓரக்கண்ணால் பார்த்தபடி இருப்பாள், சில நிமிட மாயஜாலங்களில் அவள் தலையில் சிரித்தபடி இருக்கும் அந்த பூ.

வெகு ஆண்டுகளுக்குப்பிறகு வீட்டிற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் ஒரு பெண் அடம்பிடிக்கும் மகளோடும் கைக்குழந்தை ஒன்றோடும் இருந்தாள்.

ஏதோ ஞாபகத்தில் அவளையே பார்த்தப்படி இருக்க திடிரென அந்த பெண் தன் கணவனிடம் என்னைக்கைக்காட்டி ஏதோ சொல்லியபடி தன் கைக்குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.

சாலையை ஒரு சிறுமியின் குதூகலத்துடன் கடந்து வந்து என்னைத்தெரியுதா என்றாள். சில ஆண்டுகளில் அவள் வெகுவாய் மாறிப்போயிருந்தாள் , அந்த குழந்தை முகம் அப்படியே இருந்தது. உங்கையில சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நீ எங்க இருக்க உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று ஏதேதோ கேட்டபடி இருந்தாள்.

என் வீட்டுப்பக்கம் திரும்பி பார்த்தேன் , வீடு கட்டுவதற்காய் இடித்துப்போடப்பட்டிருந்த செங்கற்கள் எல்லாம் ஜெனியா பூக்களாய் மாறிப்போயிருந்தது.

அதே பள்ளியில் படித்த என் தம்பி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டானாம் , காலையில் தொலைப்பேசினான்.

-OoO-

கென், உங்கள் வலைப்பதிவிலேயே இப்படி எழுதுங்கள். அல்லது உரைநடைக்கு என்று தனி வலைப்பதிவாவது தொடங்குங்கள்!