Aug 17

சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன்.

புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் இன்னொரு புறம். இவை தான் இப்படியான படைப்புகளின் வெற்றி என்றும் நம்புகிறேன்.

தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் நமக்கு முழுமையாக கிடைத்திருப்பவை மூன்று மட்டுமே. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தானார் எழுதிய மணிமேகலை, திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணி. இதில் மணிமேகலை சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி.

இவை எல்லாம் செய்யுள் வடிவில் வடிக்கப்பட்ட இலக்கியங்கள். அருகில் ஒரு வாத்தியார் இருந்து நமக்கு சொல்லிக்கொடுக்காமல் எளிதில் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். ஏனெனில் நமக்கான தமிழறிவும் அப்படித்தான் இருக்கிறது. பாடங்களை மொட்டை உறு செய்தால் தேர்வில் வெற்று பெற்றுவிடக்கூடிய கல்வி முறையில் வேறு என்ன எதிர் பாக்க முடியும்.

சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்க தேவர் என்கின்ற சமணமுனிவர். இவரின் காலம் எது? கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.- என்ற ரீதியில் ஒருவரியில் விடையளிக்கும் அளவுக்கே எனக்கு இக்காப்பியங்கள் பற்றி தெரிந்திருந்தது.

எண்பதுகளின் மத்தியில் நூலகத்தில் சேர்ந்து வாசிப்பு பழக்கத்திற்கு வந்துவிட்டாலும், வாசிப்பு வசப்பட்டதென்னவோ தொண்ணூறுகளின் மத்தியில் தான். நூலகம் தவிர்த்து வெளியேவும் புத்தகங்களை தேடத்தொடங்கி இருந்த சமயம் அது. சென்னையில் அநுராகம் என்ற பெயரில் இயங்கிவந்த(இப்போதும் உள்ளது என நினைக்கிறேன்) பதிப்பகம் ஒன்று ரு.4.50க்கு நூல்கள் வெளியிட்டு வந்தது.

சோதிடம், சமையல் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள் வரை சகல விதமானவைகளையும் சிறு பிரசுரங்களாக, உரைநடை வடிவில் அவ்விலைக்கே கிடைக்க வழிசெய்தது. அப்படி அநுராகம் வெளிட்ட நூல்கள் வழிதான்.. தமிழின் தொன்மையான இலக்கியங்களை கதைவடிவில் அறிந்துகொண்டேன் நான். ஆனால்.. அவை முழுமையானதாக இருக்கவில்லை. பள்ளி பாடநூலில் சொல்லப்படும் கதை போலவே இருந்தது. அதுவும் 32 பக்கங்களுக்குள் எல்லாவற்றையும் சுருங்கச்சொல்லவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கிருந்தது. எனக்கோ செய்யுள் வழி இக்காப்பியங்களின் அடிப்படை கதைகளை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. அந்த வகையில் அப்புத்தகங்கள் என் ஆரம்பகால வாசிப்புக்கு விதையாக இருந்தன என்றால் மறுப்பதற்கில்லை.

அதன் பின் மூல உரையை தேடி பயணப்பட்டபோதும் என்னால் முழுமையாக அவற்றை வாசிக்க முடியாமல் என் தமிழறிவு தடுத்தது. உரையாசிரியர்களின் உரையும் கூட துண்டு துண்டாகவே நின்றன. சரி இது சரிப்படாது என்று ஓடி வந்துவிட்டேன். சமீபத்தில் பழங்காப்பியங்களை உரைநடைவடிவில் கிழக்கு வெளியிட்டு இருந்தது. அவற்றை வாங்கிவிட்டேன். நான் முதலில் வாசிக்க எடுத்தது சீவக சிந்தமணி.

முதலில் கதை சுருக்கத்தை கூறிவிடுகிறேன். சச்சந்தன் என்றும் மன்னனுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் மகனாக பிறக்கிறான் சீவகன். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். சமண குருவான அச்சணந்தி என்பவரிடம் குருகுல கல்வி பயில்கிறான். சீவகன் அழகும் அறிவும் வீரமும் ஒருங்கே பெற்ற யுவனாக வளர்கிறான். தந்தையை ஏமாற்றிக் கொலை செய்து ஆட்சியை பிடித்த கட்டியங்காரனை பழிவாங்குவது தான் மீதிக் கதை. இடையிடையே சீவகன் எட்டு பெண்களை மணந்து கொள்கிறான். இப்படி பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், உறவுகளையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். முப்பது ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்யும் சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் மேற்கொள்கிறான். அவனோடு அவனது எட்டு மனைவியரும் துறவறம் மேற்கொள்கின்றனர். எட்டு திருமணங்களை சீவகன் செய்தாலும் காமக்களியாட்டங்களில் கதை பயணிக்காமலும் சீவகனை காமுகனாக காட்டாமலும் இப்படைப்பு இயற்றப்பட்டிருப்பதை இன்றைய நவீன எழுத்தாளர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று தோன்றுகிறது. :)

நாவல் வடிவ இந்நூலில் தொடக்கமே சுஜாதா கையாளும் பாணியான அதிர்ச்சியை கொடுக்கும் வரிகளில் தொடங்குகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் நடை. படிக்க படிக்க சோர்வு ஏற்படுத்திவிடாத மொழி.

சீவகனின் பிறப்பில் தொடங்கி, அவனது வாலிப பருவம் என எல்லாமும் படுவேகமாக நகர்கிறது. இக்காலத்தில் அதிகம் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைப் பிரயோகங்களும் இடையிடையே இருக்கிறது. பழங்கால இலக்கியமென்பதால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனாலும் கல்கி மாதிரியானவர்களின் எழுத்துக்களை அதிகம் படித்தறியாத வாசகவட்டம் இன்னும் இங்கே இருக்கிறது. அதனால்.. முன் பின் வார்த்தைகளை வைத்து சில இடங்களில் சொற்களுக்கு பொருள் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு சிறு குறிப்புகள் கொடுத்திருக்கலாம்.

உதா:

”மாலுமி! இன்னும் எவ்வளவு தூரம் நாம் போகவேண்டும்? என்ன நாம் கிளம்பி ஒரு மாதம் ஆகி இருக்குமா” சீதத்தன் சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் மாலுமி முகத்தில் இருந்த கலவரம் அவரை பயமுறுத்தியது.

‘என்ன ஆயிற்று? ஏன் இந்த கலக்கம்?’

‘ஐநூறு காத தூரத்தைக் கடந்துவிட்டோம். ஏமாங்கத்தை அடைய இன்னும் ஒரு யோசனை தூரம் தான் இருக்கிறது. இப்போது பார்த்துத்தானா இப்படி ஆகவேண்டும்?’(பக்கம்.63)

இதில் காத தூரம், யோசனை தூரம் என்பது எவ்வளவு என்று எத்தனை பேரால் உணர்ந்துகொள்ள முடியும்? குத்துமதிப்பாக கணக்கு பண்ணிக்கொள்ள வேண்டியது தான் போல. அதுபோலவே சமணசமய கதையான இதில் அருகர் என்று ஒரு தெய்வத்தை பற்றிய செய்திகள் வருகின்றன. இந்த அருகர் குறித்து எங்கும் குறிப்பு படித்தது போல நினைவு இல்லை. இத்தெய்வம் குறித்து விவரணைகளோ, குறிப்போ இல்லாதது நூலின் குறையென எனக்கு படுகிறது.

மேலும் மூல ஆசிரியரான திருத்தக்கத்தேவர் பற்றிய குறிப்பு இல்லாததும், நாவலாசிரியரின் அனுபவக் குறிப்பு இல்லாததும் பெரிதும் வருத்தமே. அவை வாசகனை இன்னும் நூலோடு ஒன்றச்செய்யும் விசயமாக இருந்திருக்குமென்பது என் எண்ணம்.

நூலாசிரியர் ராம்சுரேஷின் உழைப்பும், எழுத்தாற்றலும் பல இடங்களில் பளிச்சிடுகிறது. காட்சியின் விவரிப்புகள் அப்படியே நம்மையும் அக்களத்திற்குள் அழைத்துச்செல்லுகின்றன. சினிமா பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. (சீவகன் கேரக்டரில் எனக்கு மனதிற்குள் ஓடிய உருவம் கருப்பு வெள்ளை காலத்து ஜெமினி :) )

செய்யுள் விருத்தங்களாக உள்ள எழுத்துக்கள் விரிவான உரைநடையாக மாறும்போது என் போன்ற பாமரர்களும் இது போன்ற இலக்கியங்களைச் சுவைக்க முடிகிறது. இது போன்ற புது முயற்சிகளுக்காக நன்றி பத்ரி & பாரா! :)

பழந்தமிழ் காப்பியங்களை படிக்க விரும்புகின்றவர்களுக்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும். உரைநடையில் படிக்கும் போதே இவ்வளவு சுவையாக இருக்கும் நூல், செய்யுள் வடிவில் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இதைப் படிக்கும் பத்தில் ஒருவருக்காவது வரும் என்பது நிச்சயம்.

நூல்: சீவக சிந்தாமணி- (நாவல்)
நாவல் வடிவ ஆசிரியர்- ராம் சுரேஷ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம். பக்கம்: 256
விலை: ரூபாய்.125/-

இணையச்சுட்டி:- https://www.nhm.in/shop/978-81-8493-448-9.html

ஆசிரியர் குறிப்பு: ராம் சுரேஷ் 2004ல் இருந்து இணையத்தில் பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதி வருகிறார். :) )

Popularity: 5% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Aug 12

உலக சினிமா பார்க்கலாம் வாங்க! The Patient – சோமாலிய திரைப்படம்!!

டிஸ்கி: The Patient – படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் எண் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். சினிமாவில் பார்த்த அந்த காட்சியை நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே எண் வரிசையில் கொடுத்திருக்கிறேன். பின்ன..  உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை நினைவு படுத்தவே இக்குறிப்பு.

கதையின் நாயகன் ஒரு மருத்துவர். க்யூபாவைச் சேர்ந்தவன். பணக்காரக்குடும்பத்தின் வாரிசு என்றாலும், கம்யூனிஸ நாடான க்யூபாவில் பிறந்ததால் ஏழை நாடுகளின் மேல் எப்போதும் கருணைக்கண் கொண்டு பார்ப்பவன் தான் ஜான்மிக்கேலி. சோமாலியாவிலிருக்கும் டோலோ ஓடோ(dolo odo) என்ற நாட்டு ஏழைக்களுக்கு உதவ க்யூபாவிலிருந்து ஒரு மருத்துவக்குழு பயணப்படுகிறது. அதில் ஜான்மிக்கேலியும் பயணமாகிறான்.

சோமாலியாவில் மருத்துவக்குழு பலருக்கும் வைத்தியம் பார்க்கிறது. காசநோயால் பாதிக்கப்படிருப்பவர்கள், பால்வினை நோய், கண் நோய்கள், தலையில் ஏற்பட்டிருக்கும் புழுக்கடி, உடலில் ஆங்காங்கு தடித்து வீங்க காரணமான பூச்சிகடி என சகல நோய்களினால் பீடித்திருப்பவர்களுக்கும் அக்குழு மருத்துவ உதவிகளை செய்கிறது (1).

அப்போது தான் ஜான்மிக்கேலி அவளை சந்திக்கிறான். நான்கு வயது பெண் குழந்தைக்கு தாயான அவளின் பெயர் க்வாமி ஸோபி. குழந்தையின் சிகிச்சைக்காக ஜான் மிக்கேலியின் குழு நடத்தும் மருத்துவ முகாமுக்கு வருகிறாள். அதிகமாய் விவரிக்க வேண்டிய அவசியமற்ற மிகச் சாதாரணமான பெண் அவள்.(உலகப் படத்தின் நாயகிகள் அதிரூப சுந்தரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சப்பை பிகராகவும் இருக்கலாம்) அவளுக்கு க்யூப மொழி தெரியவில்லை. இவனுக்கு அவள் பேசும் சோமாலி மொழியும் புரியவில்லை. நமக்கு சப் டைட்டில் கை கொடுக்கிறது.

குழந்தைக்கான குறிப்புகளை எழுதும் போது குழந்தையின் அப்பாவைப்பற்றி விசாரிக்கிறான் ஜான். பக்கத்து நாட்டுக்கு திருடப் போனபோது பிடிபட்டு, பழுக்க காய்ச்சிய கம்பியை குதத்துக்குள் ஏற்றி கொலை செய்யப்பட்டுவிட்டான் என்று அவள் தன் கணவனைப் பற்றிய கதையை சொல்லுகிறாள் (2). தகப்பனை இழந்த குழந்தையோடு பல இடங்களில் பற்றுப்பாத்திரம் தேய்த்தும்,தேவாலயங்களில் கூட்டிப் பெருக்கியும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பதாக சொல்கிறாள் க்வாமி ஸோபி.

இவளின் பூரிக்கும் இளமையின் மீது வெறி கொண்ட ஒரு மதகுரு இவளை சூறையாடி விடுகிறான் (3). ஒரு முறை வன்புணர்வுக்கு ஆளாகிவிட்டதால்… அடிக்கடி இவளை தன் அறைக்கு அழைத்து தனது வேட்கையை தணித்துக்கொள்கிறான். அதன்பின் இவளுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறது.

மருத்துவம் பார்த்துக் கொள்ள வசதிகளும் இல்லை. இந்தக் கதைகளையெல்லாம் கேட்டறிந்த ஜான் மிக்கேலியோ சுருட்டை புகைத்த படியே சிந்தனையில் ஆழ்கிறான். க்வாமி ஸோபி மீது பரிதாப உணர்வு தோன்றுகிறது.

வைத்தியம் பார்க்க வந்த குழந்தையை விட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மிக்கேலியை நிகழ்காலத்துக்குத் திரும்ப அழைத்து வருகிறாள் க்வாமி ஸோபி. சுயநினைவுக்கு திரும்பியவன் குழந்தைக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்புகிறான். மறுநாள் அவளையும் சிகிச்சைக்கு வரும்படி அழைக்கிறான்.

மறுநாள் சிகிச்சைக்கு க்வாமி ஸோபி வரும் போது மருத்துவமுகாமில் ஜான்மிக்கேலி இல்லை. அவனுக்காக அவள் வெளியே காத்திருக்கிறாள். கொஞ்ச நேரத்தில் ஜான் திரும்பிவந்ததும் இவளை சிகிச்சை அறைக்கு உள்ளே அழைத்துச்சென்று படுக்க வைக்கிறான். அவளது ஸ்கர்ட் போன்ற ஆடையை மேலே உயர்த்தி அவளது பிறப்புறுப்பை பார்க்கிறான். (இந்த இடத்தில் யோனின்னு எழுதனும்.) அதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடுகிறது அது முற்றிப்போன பால்வினை நோய் என்று (4). சில களிம்புகளை தடவி விட்டு அனுப்பி வைக்கிறான் ஜான்மிக்கேலி.

மறுநாள் ஜான்மிக்கேலியும் க்வாமி ஸோபியும் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவனை அழைத்து வருகிறார்கள். ஒரு வாரகாலமாக கக்கா போகவில்லை என்பதால் மருத்துவ முகாமுக்கு கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் பேசுவதை இவனுக்கு மொழிபெயர்த்து சொல்கிறாள் க்வாமி ஸோபி. அவனை சோதித்து பார்த்த ஜான்மிக்கேலி சில மருந்துகளை கொடுத்து, சாப்பிடச்சொல்கிறான். மறுநாள் வந்து பார்க்கும் படி சொல்லி அனுப்புகிறான். ஆனால் அவனை அதற்கு அடுத்த நாள் அழைத்துவருகிறார்கள். இன்னமும் கக்கா வரவில்லையென சொல்கிறார்கள்.

சரி இனி உட்கொள்ளும் மருந்து பயன்படாது, இம்முறை எனிமா கொடுத்து பார்த்துவிடுவது என முடிவு செய்து, தண்ணீரை சூடு பண்ணிக்கொடிருக்கும் போது க்வாமி ஸோபி வருகிறாள். அவளை வெளியே உட்காரச்சொல்லி விட்டு, அறைக்கு உள்ளே வந்து கக்கா போகாதவனை குனியவைத்து எனிமா ட்யூபை சொருகுகிறான் ஜான். எனிமா குடுவையை அவன் கையிலேயே கொடுத்து உயர்த்தி பிடித்துக்கொள்ள சொல்கிறான். குடுவையில் உள்ள நீர் முழுவதும் இறங்கியதும் தன்னை அழைக்கும் படி சொல்லிவிட்டு, வெளியே வந்து க்வாமி ஸோபியுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தொடர்ந்து பூசி வந்த களிம்புகளால் தனக்கு வந்த பால்வினை நோய் குணமடைந்து வருவதாக அவள் கூறுகிறாள்.

உள்ளே இருப்பவன் சத்தம் போட.. ஜான் ஓடிச்சென்று பார்க்கிறான். பின்னாடியே கூம்பலும் போகிறாள். அறை முழுவதும்.. ஏற்றப்பட்ட எனிமா தண்ணீர் வேறு வண்ணத்தில் பிசுபிசுக்கிறது. என்னது நான் எனிமா கொடுத்த தண்ணிமட்டும் தான் வந்திருக்கு.. என்று ஆச்சரியத்துடன் ஜான்மிக்கேலி கேட்க, எனிமா ஏற்றப்பட்டவன் அடிவயிற்றிலிருந்து ஏதோ சொல்லி கத்துகிறான். குழப்பமாய் க்வாமி ஸோபியை பார்க்கிறான் ஜான்.

”சோறுத்திண்ணே.. இருபது நாள் ஆச்சாம். இப்ப எனிமா கொடுத்து.. என் என் குடலையும் வெளியே கொண்டுவர திட்டம் போட்டுயிருக்கியான்னு திட்டுறான்..” என்று அவள் மொழிபெயர்த்து சொல்கிறாள். மிகப்பெரிய மருத்துவர் என்ற கர்வம் காணாமல் போகிறது. தன் தவற்றை உணர்கிறான் ஜான்மிக்கேலி.

ஆஹா… இப்படி ஒரு புத்திசாலியை, பல மொழிகள் பேசக்கூடியவளை கூடவே வைத்திருந்தாள் எவ்வளவு நல்லது.. என்று அவளின் கரம்பிடிக்கிறான் ஜான்மிக்கேலி. அவர்களது பயணம் தொடர்கிறது கக்கா வராத புதிய நோயாளிகளைத் தேடி..!

*******************************

மேலும் சில சேர்ப்புகள்:-

மேற்சொன்னது தான் தி பேஷண்ட் படத்தோட கதை. சோமாலிய தேசத்தில் இருக்கும் வறுமையையும், சுரண்டலையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள். இதில் யார் பேஷண்ட் என்ற சந்தேகம் உங்களுக்கு வருமானால்.. நீங்கள் உலக திரைப்படம் பார்க்க லாயக்கற்றவர். பின்ன.. க்வாமியின் மகள், க்வாமி ஸோபி , கக்கா போகாமல் கதையின் திருப்பு முனையாக வருபவர் இவர்கள் மூவரும் நேரடியான பேஷண்ட் என்றாலும் கூட.. வறுமைக்காக திருடப்போன ஒருவனை கொடுரமாக கொலை செய்தவர்கள், இளம்பெண்ணை வன்புணர்ச்சி செய்த மதகுரு இப்படி சமூகத்தில் புரையோடி இருக்கின்ற நோயாளிகளைப் பற்றித்தான் இப்படம் பதிவு செய்கிறது.

———

படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் எண் கொடுக்கப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த காட்சியை சினிமாவில் பார்த்த நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே எண் கொடுத்திருந்தேன். எண்ணுக்கான விளக்கம் கீழே..

(1) நாயகன் மருத்துவரென்பதால் நிறைய நோயாளிகளை அம்மணமாக பார்க்கும் வாய்ப்பை பெறுவதோடு அதை நமக்கும் அருள்கிறார் என்பதால்.. இக்காட்சிகளை நன்கு உள்வாங்கிக்கொள்ளவேண்டும். விமர்சனம் எழுதும் போது இது பற்றி கொஞ்சம் விரிவான விசாரணை நடத்தலாம்.

(2) திரையில் எட்டு நிமிடங்கள் வரக்கூடிய இந்த ப்ளாஷ் பேக் காட்சியைப் பற்றி.. கொஞ்சம் விரிவாக, படிப்பவர்கள் பயப்படும்படி எழுதவேண்டும். அப்படி எழுதினா தான் நாங்க ஒங்களை ஆட்டத்துக்கு சேர்த்துப்போம்.

(3) இக்காட்சியும் சம்பவங்களாக விரிகிறது என்பதால்.. இதுவரை படிச்சிருந்த எல்லா சரோஜா தேவிக்கதைகளையும் மனசுக்குள் கொண்டு வந்து க்வாமியின் மேலாடை கிழிபடுவதில் தொடங்கி, மதகுரு வேகமாக மூச்சு விட்டு ஓய்ந்து போகும் வரை.. இதைப் பற்றியும் ஒரு எண்பது முதல் நூறு வார்த்தைகளில் விரிவாக எழுதனும். அப்பதான் உலக சினிமா பார்த்த எபெக்ட் வாசகர்(!)களுக்கு வரும்.

(4) இங்கே பெண்குறியினை க்ளோஸ் அப் ஷாட்டில் காட்டப்பட்டிருப்பதால்.. கேமராவின் நுட்பமான ஒளிப்பதிவினை புகழ்வதோடு, பால்வினை நோய் வந்த பிறப்புறுப்பு எப்படி இருந்தது என்பது குறித்த விவரணைகளை எழுதவேண்டும். படிக்கிறவன் சாப்பாடு
என்ன.. சமையலறை பக்கம் கூட ஒரு வாரத்துக்கு ஒதுக்கக்கூடாது.

இப்படி கதைக்கு நடுநடுவே சொல்லிகிட்டு வந்தாதான் உங்களை ஒலக சினிமா பார்க்குற ஆளுன்னு நம்புவாங்க.

இன்னும் சில வகைகள் உண்டு. அது பற்றிய குறிப்புகள் கீழே!

# சென்சார் போர்டுக்கு போட்டுக் காமிச்சு சர்டிபிகேட் வாங்கறா மாதிரி, நம்மகிட்டயும் எதோ சர்டிபிகேட் வாங்கன்னு படத்த எடுத்த பொழப்பத்தவனே கொண்டு வந்து ப்ரிவ்யூ தியேட்டரில் போட்டுக் காமிச்சது போல ஒரு பந்தாவோட ஒரு பத்திருவது நொட்டை நொள்ளையெல்லாம் சொல்லிட்டு (தி பேஷண்ட் படத்தில் அந்த எனிமா பேஷண்ட் பற்றி முழுமையாக சொல்லவில்லை என்பதையும் கவனிக்க) அப்போதைய நமது மன/உடல் நிலைக்கேத்தா மாதிரி பரவால்ல, ஏதோ பரவால்ல, கேவலம், வாந்தி வரா மாதிரி இருக்குன்னும் சொல்லிக்கனும்.

# எல்லா படத்துக்கும் இப்படியே சொல்லாம, ஓகோ, ஒகோகோ, இது உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு அற்புத படம் வந்திருக்குன்னோ சொல்லிரணும். நடு நடுவில ஏழ்மை, மூன்றாம் உலகநாடுகள், ஏழாம் உலக ஊர்கள், செவ்வாய் கிரகவாசிகள்ன்னு எல்லாம் எழுதனும்.

# இப்படி சொல்லி எழுதும் போதே நடுநடுவுல தான் படத்தோட மொத்த கதையும் சொல்லிரணும். முழுப் படத்தோட கதையைச் ஒரே சமயத்துல (நான் மேற்சொன்ன மாதிரி) சொன்னா.. உங்களுக்கு விமர்சனம் எழுதத்தெரியலைன்னு புறந்தள்ளிவிட வாய்ப்பு இருப்பதால்… சுருக்கமா சொல்ற மாதிரி விரிவா சொல்லனும். அப்பதான் நீங்களும் உலகப்பட விமர்சகனாக மதிக்கப்படுவீங்க.

# கடைசில க்ளைமாக்சில் ஏதேனும் திடுக்கிடும் திருப்பம் இருந்தா அத மட்டும் சஸ்பென்ஸ் வச்சு விட்டுரணும் – பின்ன படிக்கறவனும் நாம யூஸ் பண்ணின அதே தேஞ்சு போன திருட்டு டிவிடிய கேட்டு நம்ம கிட்ட தொங்க வேணாமா?

# ஒலக சினிமா வரிசையில நாம பார்க்குற படத்தை எடுத்த இயக்குனருக்கே தெரியாத பல விசயங்களை நாம புட்டு புட்டு வைக்கனும்… அவனுக்கு தமிழ் மட்டும் தெரிஞ்சது.. அசந்துருவான். அப்படி சொல்லனும்.

# இன்னொரு முக்கியமான விசயத்தை நினைவில் கொள்வது அவசியம். பொதுவா நூல் விமர்சனம் எழுதுறப்போ.. பதிப்பகம் முகவரி, புக்கோட விலை எல்லாத்தையும் குறிப்பிடனும். ஆனா.. ஒலக சினிமா எழுதுறப்போ.. மட்டும் இந்த மாதிரி சி.டி வெளியிட்டவன் பேரு, என்ன விலை என்ற மேலாதிக்க தகவல்களை எல்லாம் கொடுக்க வேண்டாம். ஏன்னா.. அனேகமா மாயாபஜார்ல.. சாரி… பர்மா பஜார்ல ரூ.பத்துக்கோ, இருபதுக்கோ வாங்குன திருட்டு டிவிடியா தான் இருக்கும். அதுல என்னன்னு முகவரி கொடுக்குறது. பர்மாபஜார் முகவரி கொடுத்தா நல்லா இருக்காது பாருங்க. அதனால இந்த தொல்லை இல்லை.

# தமிழ் சினிமா திருட்டு வீடியோவினால் அழியுதுன்னு கத்திட்டு, அதுக்காக.. சண்டையும் போட தயாரா இருக்குற மக்கள் பலர்(இதில் சினிமா துறை சார்ந்தவர்களும் அடக்கம்) ஒலக சினிமாக்களை மட்டும் திருட்டு டிவிடியில தான் பாக்குறாங்க என்பதால்.. கவலை இல்லை.

—–

போஸ்டர் உதவி:- இங்கே

—-

The Patient – படத்தின் கதையை முழுவதுமாக படித்திருப்பீர்கள். இக்கதை என் சொந்த கற்பனையில் எழுதப்பட்டது. இதுவரை இப்படி ஒரு சினிமா வரவில்லை என்பதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஹிஹிஹி!

Popularity: 7% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Aug 10

இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

ஆள்பாதி ஆடை மீதி

க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு.

பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி ஜிப்பா வாங்கி வச்சுகுங்க. மேலுக்கு ஜிப்பாவும், கீழுக்கு ஜீன்ஸும் ஓகே!-ஜீன்ஸ் கொஞ்சம் அழுக்காகவும் இருக்கனும்.

அப்படியே ஒரு ஜோல்னா பை. இது இருந்தா மட்டும் தான் உங்களை நாங்க கணக்கிலேயே எடுத்துப்போம்.

அச்சுடகங்கள் குறித்த தெளிவு

வெகுஜன பத்திரிக்கைகள்/இதழ்கள் Vs சிறு பத்திரிக்கைகள் என்ற வார்த்தையை குறைந்தது ஒரு வார காலத்துக்கு ஒரு நாளைக்கு நூறு முறைக்கு குறையாமல் எழுதிப் பார்த்துக் கொள்ளவும். அவ்வப்போது பேச்சிலும், எழுத்திலும் இடைச்சொருகலாக பயன்படுத்திக்கொள்ளலாம். நம்மூர் சினிமா நடிகைகள்/இயக்குனர்கள் படத்தை அட்டையில் போட்டல் அது வெகுஜன பத்திரிக்கை/இதழ். ஈரானிய, ஹங்கேரி, மங்கோலிய நாட்டு நடிகைகள்/இயக்குனர்களை அட்டையில் போட்டால் அது இலக்கிய பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை என்ற வித்தியாசத்தை உணர்க.

சில பிரபல பெரிய ஊடகக்காரங்களை தண்ணியா கவனிச்சா.. எழுதி கூட அனுப்ப வேண்டாம். போனிலேயே கூட சொல்லிக்கலாம். அப்படியும் படைப்பு அந்த ஊடகத்தில் வரும். உலகம் போற்றும் எழுத்தாளர்னு சொல்லிக்கலாம்.

சொல்லறிவு

உலகம்- பிரபஞ்சம், நடுராத்திரி- நிசி என்று மாற்று வார்த்தைகளை சரியாக தேர்வு செய்ய பழகிக்கொள்ளவும். ”பார்க்கில் அவன் நடந்தான்” அப்படின்னு எழுத வேண்டிய இடத்தில்  “புற்தரையில் அவன் கால்களால் அளவளாவினான்”னு எழுதனும். அப்ப தான் நீங்க பெரிய ஆளாக மதிக்கப்படுவீங்க. தொடக்கத்தில் கஷ்டமாக தெரிந்தாலும் தொடர் பயிற்சியின் மூலம் வெற்றி பெற முடியும்.

உலக திரைப்பட விமர்சனம்

உலக சினிமா-ங்கிறது என்னென்னா. . வெள்ளைக்காரர்கள் நடித்த நல்ல ப்ளூ பிலிம் டிவிடியா பார்த்து பதினாலு வாங்கிக்கிடனும். அதுல துளியாவது கதையோட இருக்குற மாதிரி பார்த்துக்கிடனும். எடுத்த எடுப்பிலேயே.. ஆடைகளை அவிழ்த்துப்போட்டுட்டு ஜிங்கு ஜிக்கான் ஜிக்கான்னு ஏதும் வராதமாதிரி பார்த்துக்குங்க.

குறிப்பா.. அமெரிக்கர்களோட படத்தை தவிர்த்துடனும். அதுலேயும் துன்புறுத்தி இன்புறும் சைக்கோத்தனமான டிவிடி கிடைக்கும். அதை தேர்வு செஞ்சுட்டா பெட்டர். (அதை பார்த்தா நாலு நாளைக்கு சோறு திங்க முடியாது. அடவிடுங்க பாஸு  இது மாதிரி தியாகம் பண்ணினாத்தான் இலக்கியவாதியாக முடியும்) அப்புறம் அந்த படங்களில் இருக்கும் விசயங்களை எழுத்தில் கொண்டு வந்து எழுதினா.. அது தான் “உலக திரைப்பட விமர்சனம்”. எவனாவது கேட்டா உனக்கு பின்நவீனத்துவ அறிவே இல்லைன்னு சொலீடனும். நடுநடுவுல.. பாலியல்வறட்சி, பாலியல் தாகம், பாலியல் மோர், பாலியல் தயிர் என்று இடையிடையே கொஞ்சம் தூவ மறந்திட வேண்டாம்.

ரே, Samira Makhmalbaf, அகிரா, Giuseppe Tornatore, சித்திக் பர்மக், மஜித் மஜிதி- போன்றோரின் படங்களை பார்க்க நேரிட்டாலும் இதைவிட.. குருவி, அதிசிய பிறவி போன்ற தமிழ்ப் படங்களே மேல் என்று சொல்லிக்கனும். அப்போதான்.. படிக்கிறவன்.. என்னமோ இருக்குடா… நமக்கு பின்நவீனம் தெரியாதுன்னு சொல்லீடுவாய்ங்க போலன்னு அமைதியாக ஓடிடுவாங்க.

கவிதை

இலக்கியவாதி ஆகனும்னா எதாவது எழுததெரியனுமேன்னு கேட்பீங்க.. அது ரொம்ப ஈஸிங்க. ஒரு கவிதைய உதாரணத்துக்கு சமைச்சு காட்டறேன் பாருங்க (கவிதய சமைக்கறதான்னு ஆச்சரியப்படாதீங்க, இப்படித்தான் அப்பப்ப படிக்கறவங்கள அதிர்ச்சியடைய வைக்கணும்) ஒங்க தெருவை இந்த பக்கத்திலிருந்து, அந்த பக்கம் வரை மெதுவா கவனிச்சுகிட்டே நடங்க.. கண்ணில் படுவதையெல்லாம் எழுதிகிட்டே வாங்க.. இதுல ரொம்ப முக்கியம் ஒண்ணுக்கு கீழ ஒண்ணா எழுதிகிட்டு வரனும். இப்படி..

பந்துவிளையாடும் சிறுவர்கள்
இடிந்த வீடு.
மணியடித்தபடி செல்லும் பால்காரன்
ஆளுயரம் வளர்ந்த எருக்கஞ்செடிகள்
சைக்கிள் பழகும் சிறுமி
பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும் ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும் வீடு
தெருநாய்
வீதியில் கிடக்கும் சானிட்டரி நாஃப்கின்
பிளாஸ்டிக் கழிவு திண்ணும் மாடு
பழங்கால பங்களாவின்முன்
வெகு நேரமாய்
யாசகம் கேட்டுகொண்டிருக்கும்

குருட்டு பிச்சைக்கார கிழவி

குனிந்து கோலம் போடும் எதிர்வீட்டுப் பெண்

குனியாமல் அதை வேடிக்கை பார்க்கும் இளைஞன் (இது நீங்களாக் கூட இருக்கலாம், படைப்பாளியும் பிரதிக்குள்ள வரலாம், தப்பில்ல)

**

இப்படி பார்த்தவற்றை எழுதிய பின் சில வரிகளை நடுநடுவே அடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு கவிதை கிடைத்து விடும். சில இடங்களில் முன்னும் பின்னுமாக வார்த்தைகளை மாற்றியும் போட வேண்டியதிருக்கும். கீழே பாருங்கள்

பந்துவிளையாடும் சிறுவர்கள்
இடிந்த வீடு.
மணியடித்தபடி செல்லும் பால்காரன்
ஆளுயரம் வளர்ந்த எருக்கஞ்செடிகள்
சைக்கிள் பழகும் சிறுமி

பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும் ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும் வீடு
தெருநாய்
வீதியில் கிடக்கும் சானிட்டரி நாஃப்கின்
பிளாஷ்டி கழிவு திண்ணும் மாடு
பழங்கால பங்களாவின்முன்
வெகு நேரமாய் யாசகம் கேட்டுகொண்டிருக்கிறாள்
அந்த குருட்டு பிச்சைக்கார கிழவி

குனிந்து கோலம் போடும் எதிர்வீட்டுப் பெண்

குனியாமல் அதை வேடிக்கை பார்க்கும் இளைஞன்

இப்படி எடிட் பண்ணிட்டீங்களா.. இனி கவிதை ரெடி.

முழுமையான சாம்பிள் கவிதை கீழே

ஆளுயரம் வளர்ந்த
எருக்கஞ்செடிகள்
பட்சிகள் புணரும் படபடப்புச்சத்தம்
காற்றில் திறந்து மூடும்
ஒற்றைச் சன்னல்
செங்கல் பல்லிளிக்கும்
அந்த பழங்கால பங்களாவின்
முன்
வெகு நேரமாய்
யாசகம் கேட்டுகொண்டிருக்கிறாள்
அந்த குருட்டு பிச்சைக்கார கிழவி.

கவிதை எழுதியாச்சு. இனி கவிஞன்னு சொல்லிக்கொள்ளலாம். உங்களை யாராவது இன்னொருவரிடம் அறிமுகப்படுத்தும் போது கவிஞர் என்று சொல்லி அறிமுகப்படுத்தும்படி கூறிவிடுங்கள். அவ்வளவு தான் நீங்களும் கவிஞர் ஆகிடலாம்.
கேள்விக்கு பதில் (விவாதங்களின் போது/உரையாடலை முன்வைத்து)

உங்களிடம் யாராவது ஏதாவது கேள்விகளை வைத்தால்.. தொடர்பு இருக்குறமாதிரியே.. தொடர்பு இல்லாமல் பதில் சொல்லனும். சில சமயம் எதிர் கேள்வியையும் கேட்டு வைக்கணும்.

சில உ.தா பாருங்கள்.

கேள்வி: நீங்கள் ஆணாதிக்கவாதின்னும், பின்நவீனத்துவவாதின்னும் சொல்லிக்கிறீங்களே.. பின்நவீனத்துவம் ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லையே?

பதில்: நன்றி. எனக்கு பின்நவீனத்துவம் பற்றி நன்கு தெரியும்.

கேள்வி: உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா இல்லையா?

பதில்: யோனியை பற்றி எழுதுவதால் எனக்கு மணமாகிடுச்சுன்னு தீர்மானத்து வருவது தப்பு. யோனியை பற்றி பேசாமல் இருக்குறவங்களுக்கெல்லாம் மணமாகலைன்னும் சொல்லீட முடியாது.

கேள்வி: சமீப காலமா உலகத்திரைப்படங்கள் குறித்து அதிகம் எழுதுகிறீர்கள்.. அப்ப இந்திய திரைப்படங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கலாம். கிட்டப்பார்வைக்கு குழி லென்சும் தூரப்பார்வைக்கு குவி லென்சும் தான் பயன்படுத்துகிறார்கள். அதெல்லாம் தப்புன்னு யாரும் சொல்லலையே.. என்னோட பார்வை எனக்கு. என்னைய மட்டும் ஏன் இப்படி கேக்குறீங்க?

-இப்படி நாலு இடத்தில் பதில் சொல்லிப் பாருங்க.. அப்புறம் ஒரு பய கேள்வியே கேட்க மாட்டான். அவரு பெரிய பின்நவீனத்துவ எலக்கியவியாதிப்பான்னு ஓட ஆரம்பிச்சுடுவான்.

கூட்டங்கள்

இது ஏதோ ஆவி எழுப்புதல் கூட்டம் மாதிரின்னு முன்முடிவுக்கு வந்துட முடியாது. வராமலும் இருக்க முடியாது. நான் சொல்ல வருவது இலக்கிய கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழா, கவிதை அரங்கம், விமர்சன கூட்டம் இது மாதிரி எங்க போவதாக இருந்தாலும் மேலே சொன்ன ஆடைகளில் போகனும் என்பதை நினைவில் கொள்க.

அப்புறம்.. இலக்கிய கூட்டங்களுக்கு வரும் பெரிய எழுத்தாளர்/சிந்தனையாள்ர்/அறிஞர்/விஞ்ஞானி யாரோ ஒரு ஆளுன்னு வச்சுக்குங்க.. அவரது புகழ்பரப்பும் தொண்டரடிப்பொடிகள் நிறைய பேரு இருப்பாங்க.. அவங்களையும் தெரிஞ்சு வச்சுக்குங்க. புகைப்படம் எடுக்க, புத்தகத்துல கையெழுத்து வாங்கன்னு உதவுவாங்க. (கமிசனா அரை குவாட்டர் கொடுத்தா போதும்)

கொண்டாட்டம்

இது தான் ரொம்ப முக்கியமான கட்டம்/சதுரம்/வட்டம்/நீள்வடிவம் எப்படியோ முக்கியமான ஒண்ணு. கண்டிப்பாக தண்ணியடிக்க தெரிஞ்சிருக்க வேண்டும். அதுவும் அடுத்தவன் காசில். அப்ப தான் நீங்க சரியான இலக்கியாவாதியா உருவாக முடியும். கொண்டாட்ட மனநிலையை உணர்ந்தவராக கருதப்படுவீர்கள்.

தண்ணிவாங்கி கொடுக்கும் ஸ்பான்ஸரிடம் பேசும் போது காப்கா, ஈஷ்கார், தெரிதா, தெரியலையா,  ஜெ.கே, மார்க்ஸ், முல்லர், கில்லர்  என்று ஏகப்பட்ட பெயர்களை நடுநடுவே சொல்லவேண்டும். அப்போது தான் அவர் உங்களை பெரிய ஆளாக நினைத்து பயப்படுவார். அவசியமெனில் திராவிடம், ஆரியம், பார்ப்பனியம், பெரியார் பெயர்களையும் இடையிடையே தூவிக்கலாம். நிஜமான பின்நவீனத்துவ ஆளாக காட்டிக்க இது உதவும்.

அதுக்காக ஒரேடியா இப்படியே பிளேடு போட்டுறக் கூடாது. அப்புறம் அந்த பலியாடு எஸ்ஸாகிரும். அதுனால அப்பப்ப அவங்க ரேஞ்சுக்கு சில சினிமா கிசு கிசுக்களையும் இடையிடையே தூவணும். அப்பத்தானே காசு செலவழிக்கறவனும் கொஞ்சம் திருப்தியாவான். இதில் இன்னொரு விஷயம். உள்ளூர் சினிமா கிசுகிசுவா இருக்கணும். நீங்க பாட்டுக்கு உலக சினிமா கிசு கிசுவ சொன்னா அவன் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடிடுவான்.

சிறுபத்திரிக்கைகள் & வலைப்பதிவு

தமிழில் ஏகப்பட்ட சிறுபத்திரிக்கைகள் வருகிறது. அதில் சிலவற்றிற்கு சந்தா கட்டி விடுங்கள். அப்புறம் நீங்கள் அதிலும் தொடர்ந்து எழுதலாம். அதில் வரும் அறிவிப்புகளையும், நூல்விமர்சனங்களையும் தழுவியோ, காப்பி எடுத்த உங்கள் வலைத்தளத்தில்/பஸ்ஸில்/பேஸ்புக்கில்……. போட்டு விட்டால் நீங்களும் கூட இலக்கியவாதிக்கான அந்தஸ்த்தை பெற முடியும். எவனை பிடிக்கலையோ.. அவனையும் அவன் எழுதுனதையும் கூட திட்டி எழுதிட்டு, எள்ளல், பகடி, கபடி-ன்னு சொல்லிக்க வேணும்.

எவன் உங்களுக்கு டீ, தண்ணி வாங்கித்தரலையோ அவன் குசு விட்டால் கூட.. நிலப்பரப்புத்துவ, முதலாளித்துவ, தரகு முதலாளித்துவ, நவீனத்துவ, பின் நவீனத்துவ, குண்டூசி நவீனத்துவ, ஆணி நவீனத்துவ மற்றும் கூறுகள் கூறு இல்லாதவைகள்னு கட்டுரைஎழுதனும் /பதிவு போடனும்.

உங்களோடு பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தனுக்கு அவசரமா சிறுநீர் வந்து, சிறுநீர் கழிக்க ஓடினான்னு வச்சுக்குங்க… உடனே… கார்ப்ரேட் கம்பெனியில் இருப்பதால் தான் இப்படி ஓடுறார். சாதாரண ஆளா இருந்திருந்தால்.. இப்படி ஓரமாக போய் இருப்பார். ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் திமிர் அதனால் இப்படியெல்லாம் செய்கிறார் என்று கூவவேண்டும்.

நடுநடுவுல மானே தேனே போடுறமாதிரி.. ஆயா சுட்ட வடை கெட்டு போச்சு, அப்பத்தா செத்துப்போச்சு, தமிழ்ச்சூழல் நசுங்கிப் போச்சு, மலையாள சூழல் வீங்கிப் போச்சு, மராட்டி சூழலுக்கு விரை வீங்கிப்போச்சுன்னு சொல்லிகிட்டே இருக்கனும்.

அரசியல், சினிமா மாதிரி இங்கேயும் சில சமயங்களில் வாரிசுகள் களமிறங்கினாலும்.. உலகம் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்ளாது. அதனால.. அவங்களைப் பத்தி பயப்பட வேண்டாம். வழக்கமா அவங்க பரம்பரை பூச்சாண்டி காட்டிட்டு போய்டுவாங்க. அவர்கள் வேறு இடம் சென்று வாரிசு உரிமையை நிலைநாட்டிக் கொள்வார்கள்.

அதைவிட மிக முக்கியமான ஒன்னு இருக்குங்க.. அது என்னென்னா.. வலை உலகில் நீங்க படைப்பு ஏதும் எழுதுனீங்கன்னா.. பல பொஸ்தவம் போட்ட ஆளுகளுக்கு எரிச்சல் வந்துடும். சகட்டு மேனிக்கு திட்டினாலும் திட்டுவாங்க. அதனால்.. நீங்க நூல் அறிமுகம், இலக்கிய வாசிப்பு, எழுத்தாளர் அறிமுகம்னு மட்டும் எழுதிகிட்டு வந்தீங்கன்னா.. சிறந்த ஆளுன்னு பணமுடிப்பும் பரிசும் கொடுத்து.. கவுரவிக்கப்படுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்க.

படங்கள்:

இலக்கியவாதிகள் போல பொருத்தமான படங்களை சரியான இடத்துல போடத்தெரியாததினால்.. இங்கு சுட்டி கொடுத்திருக்கிறேன். அதை பார்த்து, நீங்களே சரியான இடத்தில் பொருத்தி படித்துக்கொள்ளவும். இந்த படங்கள் சரியான தேர்வு இல்லை எனில் நீங்களே கூட தேடிக்கொள்ளலாம். சுட்டி கட்டக்கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

http://tamizharivu.files.wordpress.com/2010/03/literature_1_large_by_james119.jpg

http://static.hfholidays.defacto-cms.com/hfholidays/assets/images/2010/01/Writing_6_jpg_220×145_crop–10,0_q85.jpg

http://oglobo.globo.com/blogs/arquivos_upload/2006/12/55_alienista.jpg

http://www.booksyouwant.net/Images/00530%281%29R.jpg

இங்கே போய் தேடலாம்.

—–

மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில்…

Popularity: 13% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

« Newer Entries - Older Entries »

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly