Jun 08

குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

ன் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது.

குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ர்ர்ர்ம்ம்ம்ம் என்று முக்கியபடி குழந்தையோ மலம் கழிப்பதை விடவில்லை.

கையில் ஒரு பிளாஸ்டிக் தொட்டில் கூடை, மருத்துவ ரிப்போர்ட் அடங்கிய பிளாஸ்டிக் பை, இன்னொரு கையில் குழந்தை என்றிருந்த இந்த பெண்மணிக்கோ என்ன செய்வது, எதை பிடிப்பது என்று குழப்பம். குழந்தையின் இடுப்பில் கட்டியிருந்த துணிக்கோமணத்தையும் தாண்டி, மலத்துளிகள் மருத்துவமணை தரையில் விழத்தொடங்கியது.

மருத்துவமணை ஆயா வந்து சத்தம் போட, இப்பெண் அவரை பரிதாபமாக பார்க்க, தனியா வந்திருக்கியா? வா.. என்று அந்த தாயிடமிருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு, வாசல் பக்கம் நடந்தார். ஆயா உதவியுடன் குழந்தையை சுத்தம் செய்து முடித்தபின் குழந்தையோடு வந்து தனிருக்கையில் அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் வெளியே போன கணவரும் வந்து அமர்ந்துகொண்டார்.

ண்பருக்கு ஆறு மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அப்பவே பார்க்கப் போக நினைத்து, முடியாமல் போக சமீபத்தில் ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தது. முன்னமே போன் செய்துவிட்டு, அவரின் இல்லம் போய்ச்சேர்ந்தோம். குறைவான சத்தத்தில் நண்பர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் குழந்தை தூளியில் தூங்கிக்கொண்டிருந்தது.

எங்களுக்கான மதியவுணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார் நண்பரின் மனைவி. கனிவமுதனை என் கையில் கொடுத்துவிட்டு, என் துணைவியும் சமையல் கட்டுக்குள் புகுந்துவிட்டார். நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அங்கே கிடந்த விளையட்டுப் பொருட்களின் பால் தன் கவனத்தை திருப்பிக் கொண்ட கனிவமுதன் அவற்றுடன் ஒன்றி விட்டான். நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களிலேயே தூளியில் இருந்த குழந்தை சிணுங்கியபடி அழத்தொடங்கியது.

எழுந்து தூளியை ஆட்டிவிடப்போன என்னை தடுத்து, ‘ஏய்.. குழந்தை அழுகுறது கேட்கலையா.. வந்து என்னன்னு பாரு..” என்று சமையலறை பக்கம் பார்த்து சத்தம் கொடுத்தார் நண்பர்.

- மேற்சொன்ன சம்பவங்கள் இரண்டும் சமீபத்தில் நடந்தவை. இந்த கணவன்களின் செய்கை எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

குழந்தை வளர்ப்பு விசயங்களில் நான் அறிந்த வகையில் ஆண்களின் ஈடுபாடு அதிகம் பார்த்ததில்லை. ஏதோ அந்த வேலையும் கூட பெண்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்று நினைக்கும் நிறைய நண்பர்களை சந்தித்திருக்கிறேன்.

வீட்டிலேயே இருக்கும் மனைவியானாலும் சரி, வேலைக்குப் போகும் மனைவியானாலும் சரி.. இந்த வேலைகளையும் அவர்கள் தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏனிப்படி ஆண் சிந்திக்கிறான் என்று யோசனை செய்து பார்த்ததில் ஒரு விசயம் பளிச்சென புரிந்தது. இவர்கள் குழந்தையுடன் செலவிடும் நேரம் குறைவு. குழந்தை வளர்ப்பு என்பது பெண்களுக்கானது மாதிரியான தோற்றத்தை நம் சமூகம் கற்பித்திருக்கிறது. இதனை சொல்லுவதால், கொஞ்சுவதற்காக மட்டும் குழந்தையை கையில் எடுக்கும் தகப்பன்களுக்கு கோபம் வரலாம். ஆனால் அது தான் உண்மை.

எத்தனை தகப்பன்களுக்கு குழந்தை மலம் கழித்தால் சுத்தப்படுத்த தெரிகிறது. எத்தனை அப்பாக்களுக்கு ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தையை குளிப்பாட்ட தெரிந்திருக்கிறது. பால்பொடி கலந்து கொடுக்கவேண்டிய குழந்தைகளுக்கு பால் தயாரிக்க எவ்வளவு பால்பொடி தேவை என்ற விபரம் எத்தனை அப்பாக்களுக்கு தெரியும். டயப்பர்கள் கூட சரியாக மாட்டிவிடத் தெரியாத தகப்பன்களையும் பார்த்திருக்கிறேன். (இவை எல்லாம் பெண்கள் பிறந்தவுடனேயே அறிந்துவிடவில்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ளல் அவசியம். அவர்களும் குழந்தை பிறந்த பிறகு தான் கற்றுக்கொள்கிறார்கள். ஆண்களும் கற்றுக்கொள்ளுவதில் என்ன குறை வந்துவிடப்போகிறது.)

அடுத்த சப்பை வாதம் பெண்கள்தான் தாய்மையோடு இதையெல்லாம் பொறுப்பாக செய்ய முடியும். நாம் செய்தால் அவ்வளவு பாந்தமாக வராது என்பது. எப்போதும் ஆண்கள் செய்ய வேண்டும் என்பது கூட இல்லை – ஒரு அவசரத்துக்கேனும் இதையெல்லாம் செய்ய எத்தனை ஆண்கள் தயாராக இருக்கின்றனர் என்பதே கேள்வி.

குழந்தை வளர்ப்பு என்பது தாய், தகப்பன் இருவருக்கும் பொதுவான ஒன்று. இங்கே இன்னொரு கதையும் நினைவுக்கு வருக்கிறது. எங்களுக்கு தெரிந்த அந்த தம்பதியினர் மூன்று வருடங்களாக வெளிநாட்டில் வசித்துவிட்டு இப்போது தான் திரும்பி உள்ளனர். அவர்களை பார்க்கப்போன போது, அந்த தோழி தன் கணவனைப்பற்றி ஒரு பாட்டம் அழுதார். அங்கே இருந்தவரை எல்லாவேலைகளிலும் உதவி செய்தவர்.. இங்கே வந்ததும் சிறுதுரும்பைக்கூட நகர்த்துவதில்லை என்று. ஏண்டா.. என்று நண்பனிடம் கேட்டால்.. கூலாக பதில் வந்தது.

அமெரிக்காவுல இதெல்லாம் சகஜம். அதனால நான் ஹெல்ப் பண்ணினேன். இங்கேயும் அதே மாதிரி எதிர்பார்த்தா.. என்ன பண்ணுறது? என் கவுரவம் என்னாவது.. இவளுக்கு நீங்களாவது புரியவைங்கப்பா?

அடப்பாவிகளா… வெளிநாட்டில் எல்லா உதவிகளையும் செய்யலாமாம்.. இங்கே வந்தால் அது கூடாதாம். இது நாட்டின் கோளாறா.. அல்லது மனதின் கோளாறா தெரியவில்லை. என்னைக் கேட்டால்(யாரு கேட்டா?) நான் என் குடும்பத்திற்குள் எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு தானே.. ஒழிய.. அண்டைவீட்டாருக்கோ, சொந்தங்களுக்கோ, தெருவில் கீரை விற்கவருபவருக்கோ இல்லை என்று தான் சொல்லுவேன்.

என் விடுமுறை நாளில் நான் தான் பையனை குளிப்பாட்டி விடுவேன் என்று சொன்னபோது என் மூத்த சகோதரி அதிர்ச்சியில், ‘என்னது குழந்தையை நீ குளிப்பாட்டுறியா..? இதையெல்லாம் நீயே செஞ்சு உன் பொண்டாட்டியை கெடுத்துடாத’ என்று அறிவுரை வழங்கினார்.

இதே சகோதரியின் வீட்டில் நான் சில ஆண்டுகாலம் தங்கி இருந்த போது, வீட்டு வேலைகளுக்கோ, குழந்தை பராமரிப்புக்கோ துறும்பைக்கூட நகர்த்தாத அத்தான் குறித்து எவ்வளவு புலம்பினார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

இங்கே பிரச்சனை எங்கே வருகிறது என்று பார்த்தால்.. ஓர் உண்மை பளிச்சென தெரியவரும். மனைவியை மதிக்காத கணவன், குழந்தை வளர்ப்பு உட்பட எதிலுமே உதவாத கணவன் என்று வாழ்ந்து பழகிய அம்மாவுக்கும், அக்காவுக்கும்.. தன் வீட்டு பையன் மாத்திரம் நேரெதிராய் இருப்பது கண்டு கோபம் வருகிறது.

இதனால் பல பிரச்சனைகளும் வெடிக்கிறது. (இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும், வீட்டு மாப்பிள்ளை இதுபோல ஒத்தாசை செய்பவராக இருந்தால் அவரை நல்லவர் என்றும், அதே பணியை மகன் செய்தால் பொண்டாட்டி தாசனாக பார்க்கப்படுவதும் நிதர்சனம்- இது தனி சப்ஜெட் நிறைய எழுதலாம்.)

பலரின் இந்த மனநிலை பொதுபுத்தியாக மாற்றப்பட்டு, வீட்டு வேலைகளும், குழந்தை வளர்ப்பும் பெண்களுக்கானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதையே ஆண்களும், பெண்களும் நம்புகின்றனர். அதனால் தான் தன் வீட்டில் இருக்கும் போது, அம்மாவின் முன்னால் எந்த பையனும் மனைவியிடம் அனுசரணையாக நடந்துகொள்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது. தனியாக வாழும் போது கணவன் வேலைகளை பகிர்ந்துகொள்வதும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்னால் கண்டுகொள்ளாமல் நடப்பதும் இதன் காரணத்தினால் தான்.

மேலை நாடுகளில் Maternity விடுமுறை பெண்களுக்கு பணிபுரியுமிடத்தில் கொடுப்பது போல ஆண்களுக்கும் Paternity விடுப்பு இருப்பதாக அறிகிறேன். அந்த வழக்கம் இங்கே சில கார்பரேட் நிறுவனங்களில் இருப்பதாகவும் ஒரு நண்பர் சொன்னார். ஆனால் Paternity விடுப்பு பரவலாக்கப்படாமைக்கு முக்கிய காரணம் பொதுபுத்திமட்டுமல்ல, ஏழாவது மாசத்தில் பிறந்த வீட்டுக்கு வரும் மகள், பிரசவம் முடிந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் அங்கேயே இருக்கிறார். பிறந்த வீட்டில் இருக்கும் தன் மனைவியை கவனித்துக்கொள்ள.. அச்சமய செலவுக்கு என மாப்பிள்ளை பணம் அனுப்பும் வழக்கம் சில சாதிகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

நிறை மாசத்தில் நம்மவர்கள் உடனிருப்பதுமில்லை. முதல் மூன்று மாதங்கள் குழந்தையின் வள்ர்ச்சி எப்படி என்று அறிந்துகொள்வதுமில்லை.( புள்ள பொறந்த தகவல் கிடைத்ததும், அறக்கபறக்க வந்து எட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் திரும்பி விடுகிற ரகம் தானே நாம!)

கணவன் உடனிருக்க வேண்டிய அவசியம் கூட இல்லததினால் தான் இங்கே Paternityயின் முக்கியத்துவம் கவனிக்கப்படவில்லை.




இங்கே குழந்தைகளுக்கான சோப்பு, பவுடர் முதல்கொண்டு எல்லா வேலைகளையும் பெண்கள் செய்வது போலத்தான் விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் வெளிநாட்டில் குழந்தை வளர்ப்பில் தாய்,தகப்பன் இருவரும் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால்.. இருவரின் படம் போட்டு விளம்பரங்கள் வருகின்றன.

அதனை பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. இப்படியொரு பதிவு எழுதுவதற்கான சிந்தனைகளை தூண்டி விட்டதே இப்படங்கள் தான்.

படம் கீழே..



——

Popularity: 13% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Jun 04

விடுபட்டவை 04 ஜூன்2010

ஒரு வருடங்களுக்கு மேலாக யோசித்து யோசித்து.. கடைசியாக திரட்டிகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனி விடுபட்டவையை .. இங்கு நேரடியாகவோ அல்லது ரீடர் மூலமாகவோ பார்த்துக்கொள்ளலாம்.

என்னிக்கோ ஒன்னு எழுதுறோம்.. அதையும் தூக்கிட்டுப் போய் திரட்டியில் இணைக்க வேண்டியதிருக்கு.. பல சமயம்.. நெட் படுத்தும் பாட்டில் இணைக்க முடியாமல் திரும்பி வரும் படி ஆகிடுது.

சரி.. கொஞ்ச நாட்கள் இப்படியும் இருந்து பார்ப்போம்.

இலக்கிய(!) கட்டுரைகளை ஆரம்பத்தில் படிக்கும் போது இருக்கும் மோகம் சில நாட்கள் கழித்து படிக்கும் போது இருப்பதில்லை. எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா.. இல்லை எல்லோருக்குமான்னு தெரியலை. அதே சமயம் புனைவுகள் அப்படி தோன்றுவதில்லை.

உதா= எஸ்ரா விகடனில் எழுதிய தொடர்களை எழுதிய போது படிக்கும் போது நன்றாக இருந்தது. பின் அது தொகுப்பாக வந்தபோதும் கூஉட பிடித்து தான் இருந்தது. ஒரு வருடங்கழித்து திரும்பவும் அந்த நூல்களை எடுத்தால் ஒரு கட்டுரையைக்கூட முழுமையாக வாசிக்க முடியவில்லை. இது ஏதோ எஸ்ரா எழுத்தில் மட்டும் என்று மற்றவர்கள் சந்தோசப் பட வேண்டாம். ஜெமோ, சாரு, மனுஷ்ய புத்திரன் என அது எந்த எலக்கியவியாதிக்காரர்கள் எழுதிய கட்டுரைகளாக இருந்தாலும் அப்படித்தான் தோன்றுகிறது.

இனி இந்த ஆட்களின் கட்டுரைகளை வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

—-

பஸ்ஸுல எழுதியது..

நான்: பொதுவா.. எல்லோரும் சொம்பை தூக்கிட்டு வரானுங்கன்னு சொல்லும் போது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.

எங்களூரில் பஞ்சாயத்துக்கள் வீரபத்திரன் கோவில் வாசலிலோ, பத்திரகாளி கோவில் மண்டபத்திலோ தான் நடக்கும்..

காலைக்கடன்களை கழிக்க போகும் போதும் எவனும் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. ஏனெனில் எங்களூரில் தெற்கு தெரு பக்கம் ஒரு கடற்கரையை அதற்கென ஒதுக்கி வைத்திருந்தார்கள்.. தமிழ் சினிமா பார்த்து தான் சொம்பின் மகத்துவம் புரிந்தது.. பிறகு வலையுலகம் வந்தபின்..

சங்கர நாராயணன் - அப்படியே சொம்புகளை நசுங்க விடாமல் பார்த்துக்கொள்வதன் ‘முக்கிய’த்துவத்தையும் :) )

bala bharathi - ஆமா சங்கர் அண்ணே, அப்படியே பிரச்சனை தீவிரமா இருக்கையில் சொம்பை லாக்கருக்குள் வைத்து பூட்டிவிட்டு, பின் பிரச்சனை திசை மாறியதும் அதை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு மாங்குயிலே பூங்குயிலே என்று வெளியே வருபவர்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. :) )

Popularity: 7% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Jun 03

பதிவர் சந்திப்பு: அலைகடலென திரண்டு வாரீர்!! (ஜூன் 5.2010)

எதிர் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள பதிவர் சந்திப்பில் பிரபல பதிவரும், ஜெமோ தள நிர்வாகியும்.. எனக்கு ஆங்கில ஆசானுமாகிய.. நண்பர் சிறில் அலெக்ஸ் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்கிறார்.

நீண்ட நாள் கழித்து சென்னைக்கு வரும் சிறில் இனி சென்னை வாசியாக மாறப்போகிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.

வாய்ப்பு இருக்கும் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வோம்! வாருங்கள்!!

இது பற்றி டாக்டர்.புருனோ எழுதிய இடுகை:- http://www.payanangal.in/2010/06/05-2010-5.html

இடம்: காந்திசிலை அருகில், மெரினா.

நாள்: 05/06/2010

நேரம்: மாலை 05.30 முதல் 7.30 வரை.

அனைவரும் வரலாம்… அனுமதி இலவசம்…!

Popularity: 26% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

« Newer Entries - Older Entries »

FireStats icon Powered by FireStats
Video & Audio Comments are proudly powered by Riffly