30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்!

“அடேய் பசங்களா பரிட்சை மட்டுமே உங்க வாழ்க்கை மாற்றாதுடா, போய் ஜாலியா பரிட்சை எழுதிட்டு வாங்கடா” இவை +2 தேர்வுக்கு முன்தினம் தூத்துக்குடி அருகே இருந்த ஏதோ ஒரு தேனீர் கடையில் எழுதப்பட்ட வாசகம்.
இவற்றை இப்பொழு பார்க்கும் பொழுது உங்களிடம் சொல்லிவிட தோன்றுவது இதுதான் ” அன்பிற்கினிய பெற்றோர்களே சிகிச்சை என்பதும், பயிற்சிகள் என்பதும், பள்ளி என்பதும் மட்டுமே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள் இல்லை, உங்கள் மனமகிழ்ச்சியே அவற்றை தீர்மானிப்பவை. ஆக உங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு இருங்கள்”
இதனை சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெற்றோர்கள் தங்களின் தொடர்ந்த வருத்தங்கள் மற்றும் பதற்ற உணர்வுகளால் தங்களின் உண்மையான தன்மையை இழந்து தவிக்கிறார்கள். இந்த ஒரு உளவியல் சிக்கல்களை வைத்தே உங்களிடம் உள்ள அத்தனை வளங்களையும் சுரண்டுவதற்கு ஏராளமான, நவீனமயமான ஒரு குழு இயங்கிக்கொண்டிருக்கிறது. கவனம் மிக கவனமாக இருங்கள்.
இது நிச்சயமாக உங்களை பயமுறுத்துவது எழுத்தப்பட்டதல்ல. உங்கள் பதற்றம் என்பது உங்களையே நீங்களே மற்றவர்களிடம் சுரண்ட சொல்வதற்கு ஒப்பாகும். “உங்கள் பதற்றமே எங்கள் குறிக்கோள்; உங்கள் பதற்றமே எங்கள் இலாபம்” என்ற ஒற்றை கொள்கையோடு பல்வேறு மையங்களும், அதன் பிரதிநிதிகளும் பல்வேறு தளங்களில் விரவிக்கிடக்கிறார்கள். ஆக கவனம் மிக கவனம்.

எப்படி சரியான நிபுணர்களை/ மையங்களை தெரிவு செய்தல்

1. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் தான் காரணம் என்ற பழிசுமத்தும் படடலத்தை எந்தவொரு மொழிநடையிலும் வெளிப்படுத்தாத தன்மை

2. குழந்தைக்கான பிரட்சனைகள் குறித்தான சந்தேகங்களுக்கு அறிவியல் ரீதியியான விளக்கங்கள். தேவை ஏற்படின் அதை தெளிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்ட வலைதளங்கள் மற்றும் நூல்களை பரிந்துரைத்தல்

3. தான் வழங்குகின்ற சிகிச்சை, பயிற்சி குறித்தான சரியான விளக்கம் மற்றும் திட்டங்கள்.

4. எந்த நேரத்திலும் அதிகபட்சமாக இரு தினங்களுக்குள்ளாக உங்களுக்கான நேரத்தை செலவிட்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்துதல்.

5. உங்களின் கல்வி மற்றும் புரிதல் திறன்களுக்கு ஏற்ப நேரடியான பயிற்சியை அளிக்கவும், அவர்கள் வழங்கும் பயிற்சியை நேரடியாக/ ஜன்னலுக்கு வெளியே நின்று கவனிக்கவும் அனுமதி வழங்குதல்.

6. உங்கள் குழந்தைகளை உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகாவோ காயப்படுத்தாமல் இருத்தல்.

7. எந்தவொரு நிலையிலும் பயிற்சிகளிலிருந்து முழுமையாகவும், தன்னிச்சையாகவும் நிறுத்திக்கொள்ளும் உரிமையை தொடர்ந்து வலியுத்துதல்

8. உங்கள் அனுமதியின்றி உங்கள் குழந்தைகளின் அடையாளங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் இருத்தல்.

9. சிகிச்சை/ பயிற்சிகள் தேவைப்படும் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாவிட்டாலும் கூட நிச்சயமாக ஒரு எல்லையை வரையறை செய்தல்

10. உங்கள் இயலாமையை ஒருபோதும் பயன்படுத்தாமல் உங்கள் திறன்களை மேம்படுத்தி உங்களை தன்னிச்சையாக செயல்பட செய்வது.

11. பல வருடங்கள் கழிந்த பிறகு தங்களின் இயலாமையை அன்புடனோ/ அதிகாரத்துடனோ வெளிப்படுத்தாது இருத்தல்

12. எந்த நிலையிலும் தங்களின் தகுதி, நிபுணத்துவம் சார்ந்த தகுதியை உங்களிடம் உறுதிப்படுத்த விளைதல்.

13. தன் பயின்ற துறை சாராத எந்தவொரு துறை பயிற்சிகளையும் தான் செய்வதில்லை என்ற தெளிவோடு இருத்தல்.

14. பூட்டிய அறைக்குள் குழந்தையை அனுப்பிவிட்டு மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வெளியில் அமரச்செய்யாது இருத்தல்.

இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்தக்கூடிய அரசு சார்ந்த, அரசு சாரத பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவற்றை கண்டறிய இதுபோன்ற எண்ணற்ற குழுக்கள் இருக்கின்றன. ஆக பதற்றம் மட்டுமே தீர்வல்ல, ஏற்றுக்கொள்ளலும், தேவை ஏற்படின் எதிர்வினை செய்தலுமே இன்றைய தேவை. அதுவே உங்களுக்கும், குழந்தைகளுக்குள்ளும் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.
நன்றி:-
தனபாண்டியன், மறுவாழ்வு உளவியல் நிபுணர் ( நடத்தை சீராக்கல் பயிற்றுநர்)

This entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.