veeram vilainthathu small tamil

வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி – தான் எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமானவர். அந்த நாவலின் பெயர், ‘வீரம் விளைந்தது’ உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவல் இது.

பாவெல் என்ற இளைஞனின் கதை இது. அவனது பிறப்பு, சிறுவயதில் அவன் அடையும் துயரங்கள், பின் ரஷ்ய ராணுவத்தில் அவன் பணியாற்றியபோது செய்த சாகசங்கள் பற்றி எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்; பின் ஒரு போரில் காயம்பட்டு, படுக்கையில் சாய்கிறான் பாவெல். ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பாசறைக்கு பொறுப்பேற்றுச் சிறப்பாக வழிநடத்துகிறான். கொஞ்ச நாட்களில் நடக்க இயலாமல் போகிறது. படுத்த படுக்கையில் வீழ்கிறான் பாவெல். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக அவனது பார்வையும் பறிபோகிறது. அந்தச் சமயத்தில் அவன் ஒரு கதை எழுத நினைக்கிறான். கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒரு உதவியாளரைக் கோருகிறான். உதவியாளரைக் கட்சி ஏற்பாடு செய்கிறது. பாவெல் சொல்லச்சொல்ல.. அந்த உதவியாளர் எழுதுகிறார். எழுதிமுடிக்கப்பட்ட அந்தப் புதினம், அச்சுக்குச் செல்கிறது. அதுதான் இந்த ’வீரம் விளைந்தது’புதினத்தின் கதைச்சுருக்கம்.

புனைவு போல எழுதப்பட்ட இது ஒரு தன் வரலாற்று நூல். 32 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தவர் ஆஸ்த்ரோவ்ஸ்கி. தனது கடைசி 12 ஆண்டுகள் பார்வையற்றவராகவும் படுக்கையிலும் கழித்தவர்.

இந்த நாவலை எழுதி முடித்ததும்,  “ இந்நாவலை எழுதி முடித்ததும், என்னைச் சுற்றிவளைத்திருந்த இரும்பு வளையமொன்றிலிருந்து விடுபட்ட உணர்வு பெற்றேன். அசைய முடியாமை என்ற துன்பத்தை வென்றேன். மறுபடியும் போர்வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்.” என்ற வாசகமும் பிரபலமானது.

இக்கதையை மையப்படுத்தி, திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. உலகின் சுமார் 48 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நிறையப் ஓவியங்களுடன், இக்கதையை ரஷ்யா இளையோர் பதிப்பாக வெளியிட்டிருந்தது. அதனை மறு ஆக்கம் செய்து, தமிழில் எழுதி உள்ளார் ஆதி. வள்ளியப்பன்.

உலகம் போற்றும் ஓர் உன்னதப்படைப்பை, பதின் வயதுடை பிள்ளைகளின் பெற்றோர், தங்கள் பிள்ளையின் நல்ல  வாசிப்பின் தொடக்கத்திற்கு இதனை  வாங்கிக் கொடுக்கலாம். சிறப்பான வடிவமைப்பில் முழு பக்கங்களும் வண்ணத்தில் அழகுற அச்சிட்டுள்ளனர்.

++++++++++++++++++++++++++

நூல்: வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)

தமிழில்: ஆதி. வள்ளியப்பன்

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்,

விலை: ரூ.50/-

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்)

நூல் தேவைக்கு: 044-24332924 / 24332424

#வாசிப்பு #வாசகப்பரிந்துரை #சிறுவர்_நூல்
#இளையோர்_நூல்