விடுபட்டவை 17.07.09

என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. சோம்பேறியான நான் மகா சோம்பேறியா மாறி விட்டதாகவே எண்ணுகிறேன். அதை உதறி, கூடிய விரைவில்.. புதிய உற்சாகத்துடன் களத்தில் குதிக்கவேண்டும். தயாராகி வருகிறேன். அதனால் சுவாரஸ்யம் குறைந்தால் (எப்ப இருந்துச்சுன்னு கேட்ககூடாது) மன்னிக்க!

அருமை நண்பர் சிந்தாநதியின் இழப்பு வலையுலகத்திற்கு மட்டுமல்ல, கணிணித் தமிழுக்கும் பேரிழப்பு. விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட, நன்கு படித்து, சுய தொழில் செய்து, மிகுந்த பொருளாதார நஷ்டத்தை சந்தித்தும் உற்சாகம் குறையாமல் தன்னால் இயன்றவரை பிறருக்கும், தமிழுக்கும் உதவும் பொருட்டு இயங்கி வந்தவர். அவரது இரண்டாவது பெண் குழந்தைக்கு அநேகமாய் நான்கு வயதுக்குள்ளாகத் தான் இருக்கும். 2006ம் ஆண்டு வாக்கில் சென்னைக்கே குடி பெயர்ந்து, பொருளாதார நிலமைகளை சீர் படுத்திக் கொள்ள நினைத்திருந்தார். ஆனால் அது ஏனோ முடியாமல் போனது. எனக்கும் அவருக்கும் சிந்தனையோட்டத்தில் அதிக வேறுபாடு இல்லையென்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். பகுத்தறிவுவாதியான அவர் தமிழர்களையும், தமிழையும் ஏன் வலையுலகத்தையும் கூட அதிகமாக நேசித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை காணிக்கையாக்குகிறேன். நிச்சயம் இது மரணிக்கக் கூடிய வயது அல்ல.

என் அருமை தம்பி சென்ஷிக்கு எப்போதும் என்மீது அன்பு அதிகம். அதற்காக.. என்னை சுவரஸ்யமான பதிவர் லிஸ்டில் சேர்த்து இருப்பது எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. முன்மாதிரி அதிகம் நேரம் கிடைத்திருந்தால் அந்த விளையாட்டை நானும் தொடர்ந்திருப்பேன். ஆனால்.. இப்போது உள்ள சூழலில் பதிவுகளை பார்ப்பது கூட இல்லை என்பதால்.. என்னால் ஏதும் எழுதமுடியாத நிலையில் இருக்கிறேன். நிச்சயம் நன்றாக எழுதக்கூடிய பலர் இங்கே இருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் விட்டுவிட முடியாது. என்பதால் நான் எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன்.

—-

கொஞ்ச நாட்களாக வலை உலகில் நடந்துவரும் அலப்பறை குறித்து நண்பர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தேன். இணையத்தில் இதை எழுதலாம் இதை எழுதக்கூடாது என்று நாம் ஒருவரையும் தடை போட முடியாது என்றாலும், தாதாக்கள் போல மற்றவர்களை மிரட்டுவதும், தொல்லை கொடுப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒரே நேரத்தில் மனைவி, அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பியோடு உட்கார்ந்து உன் பதிவுகளை வாசித்துக்காட்ட துப்பிருக்கும் படியான எழுத்துக்களை வரவேற்கலாம். இல்லையெனில் கழிவறைகளே போதும்இவர்களுக்கு. விஞ்ஞான சாதனங்களை விரும்புகிறவன் என்ற முறையில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். இணைய வெளியை கழிவறை சுவர்களாக்க முயல்பவர்களை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் என்பது தான் எனது வேண்டுகோள்.

—-

நாடோடிகள் படம் பார்த்தேன். பரணி (அடிவாங்கி, செவிடனாக மாறும் பாண்டி) நடிப்பு மனதில் அப்படியே நிற்கிறது. படம் பார்த்து ஒருவாரத்திற்கும் மேலாகியும், பரணியின் முகம் பட்டும் மனதில் தங்கி இருக்கிறது. நாயகன் சசிக்குமாரின் தங்கையாக நடித்தவர் உண்மையில் வாய் பேசமுடியாத, காது கேளாதவர் என்ற செய்தி அறிந்ததும் வருந்தினேன். க்ளைமேக்ஸில் இவ்வளவு சவ்வு வேண்டாம். இருவரை கடத்திக்கொண்டு வந்து, பக்கம் பக்கமாக வசனம் பேசும் போது.. கொட்டாவி வருவதை தடுக்க முடியவில்லை. அதுபோலவே மாயாண்டி குடும்பத்தார் குறிப்பிட்ட சாதியினரின் பெருமையை தம்பட்டம் அடிக்கும் படமாக இருந்தாலும், அம்மக்களின் வாழ்முறையை அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர். இதில் தருண்கோபி (இயக்குனர்) மனதில் நிற்கிறார். கிராம பின்னனி கொண்ட தமிழ் படங்கள் இப்படி இருக்க. தோஸ்தான(Dostana) என்ற இந்தி படம் பார்த்தேன்.

வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களைப் பற்றிய படம். மிக அருமையான கதை, திரைக்கதை என படத்தை அசத்தி இருக்கிறார்கள். இது போன்ற கதையம்சம் கொண்ட படங்களை தமிழில் எதிர் பார்க்கவே கூடாது என்று மனசாட்சி சொல்கிறது. நாயகர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக நடித்து, வீடு வாடகைக்கு குடியேறுகிறார்கள். வீட்டுக்கு சொந்தக்காரியான கதையின் நாயகி இரண்டு ஆண்களையுமே அப்படியே பார்க்கிறார். இருவரும் அவளை காதலிக்கிறார்கள் வெளியில் சொல்லமலேயே.. முடிவு எப்படியாகிறது என்பது தான் கதை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போனது தான் மிச்சம். மிகவும் சீரியஸான கதையை எடுத்துக்கொண்டு, அதை காமெடியாக சொல்லி இருக்கும் விதம் அழகோஅழகு. ஓரினசேர்க்கையாளர்களாக நடிக்கும் கதாபாத்திரத்தில் இரண்டு முன்னனி நாயகர்கள் ஈகோ பார்க்கமல் நடித்திருக்கிறார்கள். இக்கதையை தமிழுக்கு பொருத்திப் பார்த்து ஏமாற்றமே மிச்சம்.
படத்தின் அதிகாரபூர்வ இணைய பக்கம்.. http://www.dostanathefilm.com/

This entry was posted in விடுபட்டவை and tagged , , . Bookmark the permalink.

21 Responses to விடுபட்டவை 17.07.09

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.