குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

என் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது.

குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ர்ர்ர்ம்ம்ம்ம் என்று முக்கியபடி குழந்தையோ மலம் கழிப்பதை விடவில்லை.

கையில் ஒரு பிளாஸ்டிக் தொட்டில் கூடை, மருத்துவ ரிப்போர்ட் அடங்கிய பிளாஸ்டிக் பை, இன்னொரு கையில் குழந்தை என்றிருந்த இந்த பெண்மணிக்கோ என்ன செய்வது, எதை பிடிப்பது என்று குழப்பம். குழந்தையின் இடுப்பில் கட்டியிருந்த துணிக்கோமணத்தையும் தாண்டி, மலத்துளிகள் மருத்துவமணை தரையில் விழத்தொடங்கியது.

மருத்துவமணை ஆயா வந்து சத்தம் போட, இப்பெண் அவரை பரிதாபமாக பார்க்க, தனியா வந்திருக்கியா? வா.. என்று அந்த தாயிடமிருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு, வாசல் பக்கம் நடந்தார். ஆயா உதவியுடன் குழந்தையை சுத்தம் செய்து முடித்தபின் குழந்தையோடு வந்து தனிருக்கையில் அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் வெளியே போன கணவரும் வந்து அமர்ந்துகொண்டார்.

நண்பருக்கு ஆறு மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அப்பவே பார்க்கப் போக நினைத்து, முடியாமல் போக சமீபத்தில் ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தது. முன்னமே போன் செய்துவிட்டு, அவரின் இல்லம் போய்ச்சேர்ந்தோம். குறைவான சத்தத்தில் நண்பர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் குழந்தை தூளியில் தூங்கிக்கொண்டிருந்தது.

எங்களுக்கான மதியவுணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார் நண்பரின் மனைவி. கனிவமுதனை என் கையில் கொடுத்துவிட்டு, என் துணைவியும் சமையல் கட்டுக்குள் புகுந்துவிட்டார். நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அங்கே கிடந்த விளையட்டுப் பொருட்களின் பால் தன் கவனத்தை திருப்பிக் கொண்ட கனிவமுதன் அவற்றுடன் ஒன்றி விட்டான். நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களிலேயே தூளியில் இருந்த குழந்தை சிணுங்கியபடி அழத்தொடங்கியது.

எழுந்து தூளியை ஆட்டிவிடப்போன என்னை தடுத்து, ‘ஏய்.. குழந்தை அழுகுறது கேட்கலையா.. வந்து என்னன்னு பாரு..” என்று சமையலறை பக்கம் பார்த்து சத்தம் கொடுத்தார் நண்பர்.

– மேற்சொன்ன சம்பவங்கள் இரண்டும் சமீபத்தில் நடந்தவை. இந்த கணவன்களின் செய்கை எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

குழந்தை வளர்ப்பு விசயங்களில் நான் அறிந்த வகையில் ஆண்களின் ஈடுபாடு அதிகம் பார்த்ததில்லை. ஏதோ அந்த வேலையும் கூட பெண்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்று நினைக்கும் நிறைய நண்பர்களை சந்தித்திருக்கிறேன்.

வீட்டிலேயே இருக்கும் மனைவியானாலும் சரி, வேலைக்குப் போகும் மனைவியானாலும் சரி.. இந்த வேலைகளையும் அவர்கள் தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏனிப்படி ஆண் சிந்திக்கிறான் என்று யோசனை செய்து பார்த்ததில் ஒரு விசயம் பளிச்சென புரிந்தது. இவர்கள் குழந்தையுடன் செலவிடும் நேரம் குறைவு. குழந்தை வளர்ப்பு என்பது பெண்களுக்கானது மாதிரியான தோற்றத்தை நம் சமூகம் கற்பித்திருக்கிறது. இதனை சொல்லுவதால், கொஞ்சுவதற்காக மட்டும் குழந்தையை கையில் எடுக்கும் தகப்பன்களுக்கு கோபம் வரலாம். ஆனால் அது தான் உண்மை.

எத்தனை தகப்பன்களுக்கு குழந்தை மலம் கழித்தால் சுத்தப்படுத்த தெரிகிறது. எத்தனை அப்பாக்களுக்கு ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தையை குளிப்பாட்ட தெரிந்திருக்கிறது. பால்பொடி கலந்து கொடுக்கவேண்டிய குழந்தைகளுக்கு பால் தயாரிக்க எவ்வளவு பால்பொடி தேவை என்ற விபரம் எத்தனை அப்பாக்களுக்கு தெரியும். டயப்பர்கள் கூட சரியாக மாட்டிவிடத் தெரியாத தகப்பன்களையும் பார்த்திருக்கிறேன். (இவை எல்லாம் பெண்கள் பிறந்தவுடனேயே அறிந்துவிடவில்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ளல் அவசியம். அவர்களும் குழந்தை பிறந்த பிறகு தான் கற்றுக்கொள்கிறார்கள். ஆண்களும் கற்றுக்கொள்ளுவதில் என்ன குறை வந்துவிடப்போகிறது.)

அடுத்த சப்பை வாதம் பெண்கள்தான் தாய்மையோடு இதையெல்லாம் பொறுப்பாக செய்ய முடியும். நாம் செய்தால் அவ்வளவு பாந்தமாக வராது என்பது. எப்போதும் ஆண்கள் செய்ய வேண்டும் என்பது கூட இல்லை – ஒரு அவசரத்துக்கேனும் இதையெல்லாம் செய்ய எத்தனை ஆண்கள் தயாராக இருக்கின்றனர் என்பதே கேள்வி.

குழந்தை வளர்ப்பு என்பது தாய், தகப்பன் இருவருக்கும் பொதுவான ஒன்று. இங்கே இன்னொரு கதையும் நினைவுக்கு வருக்கிறது. எங்களுக்கு தெரிந்த அந்த தம்பதியினர் மூன்று வருடங்களாக வெளிநாட்டில் வசித்துவிட்டு இப்போது தான் திரும்பி உள்ளனர். அவர்களை பார்க்கப்போன போது, அந்த தோழி தன் கணவனைப்பற்றி ஒரு பாட்டம் அழுதார். அங்கே இருந்தவரை எல்லாவேலைகளிலும் உதவி செய்தவர்.. இங்கே வந்ததும் சிறுதுரும்பைக்கூட நகர்த்துவதில்லை என்று. ஏண்டா.. என்று நண்பனிடம் கேட்டால்.. கூலாக பதில் வந்தது.

அமெரிக்காவுல இதெல்லாம் சகஜம். அதனால நான் ஹெல்ப் பண்ணினேன். இங்கேயும் அதே மாதிரி எதிர்பார்த்தா.. என்ன பண்ணுறது? என் கவுரவம் என்னாவது.. இவளுக்கு நீங்களாவது புரியவைங்கப்பா?

அடப்பாவிகளா… வெளிநாட்டில் எல்லா உதவிகளையும் செய்யலாமாம்.. இங்கே வந்தால் அது கூடாதாம். இது நாட்டின் கோளாறா.. அல்லது மனதின் கோளாறா தெரியவில்லை. என்னைக் கேட்டால்(யாரு கேட்டா?) நான் என் குடும்பத்திற்குள் எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு தானே.. ஒழிய.. அண்டைவீட்டாருக்கோ, சொந்தங்களுக்கோ, தெருவில் கீரை விற்கவருபவருக்கோ இல்லை என்று தான் சொல்லுவேன்.

என் விடுமுறை நாளில் நான் தான் பையனை குளிப்பாட்டி விடுவேன் என்று சொன்னபோது என் மூத்த சகோதரி அதிர்ச்சியில், ‘என்னது குழந்தையை நீ குளிப்பாட்டுறியா..? இதையெல்லாம் நீயே செஞ்சு உன் பொண்டாட்டியை கெடுத்துடாத’ என்று அறிவுரை வழங்கினார்.

இதே சகோதரியின் வீட்டில் நான் சில ஆண்டுகாலம் தங்கி இருந்த போது, வீட்டு வேலைகளுக்கோ, குழந்தை பராமரிப்புக்கோ துறும்பைக்கூட நகர்த்தாத அத்தான் குறித்து எவ்வளவு புலம்பினார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

இங்கே பிரச்சனை எங்கே வருகிறது என்று பார்த்தால்.. ஓர் உண்மை பளிச்சென தெரியவரும். மனைவியை மதிக்காத கணவன், குழந்தை வளர்ப்பு உட்பட எதிலுமே உதவாத கணவன் என்று வாழ்ந்து பழகிய அம்மாவுக்கும், அக்காவுக்கும்.. தன் வீட்டு பையன் மாத்திரம் நேரெதிராய் இருப்பது கண்டு கோபம் வருகிறது.

இதனால் பல பிரச்சனைகளும் வெடிக்கிறது. (இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும், வீட்டு மாப்பிள்ளை இதுபோல ஒத்தாசை செய்பவராக இருந்தால் அவரை நல்லவர் என்றும், அதே பணியை மகன் செய்தால் பொண்டாட்டி தாசனாக பார்க்கப்படுவதும் நிதர்சனம்- இது தனி சப்ஜெட் நிறைய எழுதலாம்.)

பலரின் இந்த மனநிலை பொதுபுத்தியாக மாற்றப்பட்டு, வீட்டு வேலைகளும், குழந்தை வளர்ப்பும் பெண்களுக்கானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதையே ஆண்களும், பெண்களும் நம்புகின்றனர். அதனால் தான் தன் வீட்டில் இருக்கும் போது, அம்மாவின் முன்னால் எந்த பையனும் மனைவியிடம் அனுசரணையாக நடந்துகொள்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது. தனியாக வாழும் போது கணவன் வேலைகளை பகிர்ந்துகொள்வதும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்னால் கண்டுகொள்ளாமல் நடப்பதும் இதன் காரணத்தினால் தான்.

மேலை நாடுகளில் Maternity விடுமுறை பெண்களுக்கு பணிபுரியுமிடத்தில் கொடுப்பது போல ஆண்களுக்கும் Paternity விடுப்பு இருப்பதாக அறிகிறேன். அந்த வழக்கம் இங்கே சில கார்பரேட் நிறுவனங்களில் இருப்பதாகவும் ஒரு நண்பர் சொன்னார். ஆனால் Paternity விடுப்பு பரவலாக்கப்படாமைக்கு முக்கிய காரணம் பொதுபுத்திமட்டுமல்ல, ஏழாவது மாசத்தில் பிறந்த வீட்டுக்கு வரும் மகள், பிரசவம் முடிந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் அங்கேயே இருக்கிறார். பிறந்த வீட்டில் இருக்கும் தன் மனைவியை கவனித்துக்கொள்ள.. அச்சமய செலவுக்கு என மாப்பிள்ளை பணம் அனுப்பும் வழக்கம் சில சாதிகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

நிறை மாசத்தில் நம்மவர்கள் உடனிருப்பதுமில்லை. முதல் மூன்று மாதங்கள் குழந்தையின் வள்ர்ச்சி எப்படி என்று அறிந்துகொள்வதுமில்லை.( புள்ள பொறந்த தகவல் கிடைத்ததும், அறக்கபறக்க வந்து எட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் திரும்பி விடுகிற ரகம் தானே நாம!)

கணவன் உடனிருக்க வேண்டிய அவசியம் கூட இல்லததினால் தான் இங்கே Paternityயின் முக்கியத்துவம் கவனிக்கப்படவில்லை.




இங்கே குழந்தைகளுக்கான சோப்பு, பவுடர் முதல்கொண்டு எல்லா வேலைகளையும் பெண்கள் செய்வது போலத்தான் விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் வெளிநாட்டில் குழந்தை வளர்ப்பில் தாய்,தகப்பன் இருவரும் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால்.. இருவரின் படம் போட்டு விளம்பரங்கள் வருகின்றன.

அதனை பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. இப்படியொரு பதிவு எழுதுவதற்கான சிந்தனைகளை தூண்டி விட்டதே இப்படங்கள் தான்.

படம் கீழே..



——


Comments

21 responses to “குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..”

  1. மிக அவசியமான பதிவு பாலா.

    இங்கு மனைவியை வேலைக்கு அனுப்புவதே தான் தரும் பெரும் சுதந்திரமாகத்தான் கணவர்கள் நினைக்கிறார்கள்(அதுவும் எதற்காக என்பது வேறு விடயம்).

  2. அருமையான இடுகை பாலா.

    ரெண்டு பேருமா சேர்ந்து தயாரித்த குழந்தையை ரெண்டு பேருமாச் சேர்ந்து பார்த்துக்கறதுலே என்ன தப்புன்னு எனக்குப் புரியலை. இங்கே கௌரவக்குறைச்சலாப் போயிருது:(

    நியூஸியில் முதல்முறை பெற்றோர் ஆகும் ஜோடிகளுக்கு குழந்தைப் பராமரிப்பு வகுப்புக்கள் ஆஸ்பத்திரியிலே நடத்துவாங்க. ஜோடிகள் கட்டாயம் ஜோடியாகவே போய் எல்லாத்தையும் கத்துக்கணும். டைபர் மாத்துதல், குழந்தையை எப்படிப் பிடிச்சுத் தூக்கணும் எப்படிக் குளிப்பாட்டணுமுன்னு எல்லாம் கத்துக்கிட்டால்தான் உண்டு அங்கே. ஒன்பதாம் மாசம் இந்த வகுப்பு ஆரம்பிக்கும். சில இடங்களில் 8 ம் மாசம்.

    சால்ஜாப்பெல்லாம் சொல்ல முடியாது. அதேபோல் 7 வேலை நாட்களுக்கு பெட்டர்னிட்டி லீவு உண்டு.

    குழந்தையைப் பார்த்துக்கணும் என்று காரணம் சொல்லி ஒரு வருசம் லாஸ் ஆஃப் பே எடுத்துக்கலாம். கணவனாவது இல்லை மனைவியாவது. யாரு வேணுமுன்னாலும். அதுக்குப்பிறகு வேலைக்குத் திரும்பினால் முந்தி செஞ்சவேலையைக் கட்டாயம் கொடுத்தே ஆகணும். இன்னும் நிறையச் சொல்லலாம். அப்புறம் ஒரு நாளில் …..பார்க்கலாம்.

  3. நன்றி ப்ரியன்.. இவர்கள் என்ன சுதந்திரம் கொடுப்பது..? :))

    நன்றி துளசியம்மா,
    சில நாட்களாக குழந்தையுடன் இருப்பதால் தான் இப்படி எழுத முடிந்தது. இன்னும் நிறைய கற்பிதங்களை காலி பண்ணியாகனும். முடிந்தால் ஒவ்வொன்றாய் பதிவு செய்றேன்…

  4. அப்படியே வீட்டில் நீங்க சமைக்கறதை, பாத்திரம் கழுவறதை எல்லாத்தையும் போட்டோவா மாத்தி பதிவுல ஏத்தணும்னு பாகச சார்பா வேண்டி விரும்பி கேட்டுக்கறோம். 🙂

  5. சென்ஷி.. போட்டோ.. எல்லாம் ஏத்த முடியாது. ஆனா.. இதையெல்லாம் செய்யலைன்னு பொய் சொல்ல மாட்டேன். நானாவது என் வீட்டில் செய்கிறேன். ஆனா…பலர்….

  6. மிக அருமையானப் பதிவு (மொட்ட) தல.
    என் ரெண்டு அண்ணண்களும் இந்த விசயத்தில் சூப்பர் முன் மாதிரிகள். ரெண்டு அண்ணணும் வீட்டுக்கு வந்துட்டா பசங்க அதுக்கு அப்பறம் இவங்கபின்னாடி தான் சுத்துவாங்க.

  7. nicely written and well said. Also, doing all these stuff brings you much closer to the baby.

    just a wild guess, this could also be one of the reasons as to why most of the children in india keep a distance from their fathers when it comes to sharing their real feelings.

    nice post bala. 🙂

  8. இந்தியாவிலும் 7 வேலை நாள் ‘பெட்டர்னிட்டி’ விடுப்பு உண்டு…அதேப் போல் குழந்தை தத்தெடுப்பதற்கும் ‘அடாப்ஷன்’ விடுப்பு உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியாது…

  9. ஆக மொத்தம் நீங்க ஒரு ஆணாதிக்கவாதி இல்லைன்னு சொல்லிகிறீங்க

  10. முத்துகணேஷ் Avatar
    முத்துகணேஷ்

    ரொம்ப அருமையான பதிவு. இன்றைய அப்பாக்கள் (ஆண்கள்) அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

  11. ஹுஸைனம்மா Avatar
    ஹுஸைனம்மா

    பாராட்டுகள்!!

  12. […] This post was mentioned on Twitter by venkatramanan, பாலபாரதி. பாலபாரதி said: குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு! http://bit.ly/bVlWsc […]

  13. பாலா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! பலர் கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்.. அதற்கு நீங்கள் கூறியது போல சமூகமும் ஒரு காரணம் … இதைப்போல கூறியே வளர்க்கப்படுகிறார்கள்.

    இந்த நிலை மாற இன்னும் காலம் எடுக்கும்.. உங்க இடுகையை படித்த பிறகு எனக்கு பல புரிதல்கள் வந்தது உண்மை.

  14. ஒரு முறை பொழிலனை தூக்கி கொண்டு வெளியே சென்றிருந்த போது என் மனைவிக்கு தெரிந்தவர் அவரிடம் ‘உன் புருஷன் ரொம்ப பொறுப்பாவனவர்மா.. புள்ளைய தூக்குறத வச்சே சொல்லிடலாம் என்றார்’. நான் அப்போ ‘இது என்ன கொடும, என் புள்ளைய தானே நான் தூக்குறேன். இதுல என்ன பெரிய பொறுப்பு என்று நினைச்சேன்.’. இப்போ தான் அதன் அர்த்தம் தெரியுது

  15. போட்டிருக்குற படங்களை பார்த்தால் சிரிப்பு தான் வருது. தவறு என்று போட்டிருக்கும் எடுத்துக்காட்டுகளை பாருங்கள்… (ஆனா அமெரிக்காவில் இதெல்லாம் நடந்தாலும் நடக்கும். இங்கே சின்ன வயதிலேயே குழந்தை பெற்று கொள்கிறார்கள். மேலும், பெரியவர்களும் துணைக்கு இருப்பதில்லை)

  16. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    எனக்கென்னவோ, நீங்க குழந்தையக் குளுப்பாட்டற அழகைப் பார்த்து வீட்டம்மா தான் அந்தப் படத்தை எல்லாம் கம்ப்யூட்டரில் வரைஞ்சு (forward மாதிரி) அனுப்பி இருக்காங்கன்னு ஒரு சந்தேகம்… !

  17. அருமையான பதிவு. அனைத்து ஆண்களும் இதைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளவேண்டும். இதை உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியுடன் என் ஃபேஸ்புக் நண்பர்களுடன் பகிரப்போகிறேன். மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

  18. நல்ல பதிவு தல!!!

    உங்களை மாதிரி பெரியவங்களைப் பாத்துதான எங்களை மாதிரி சின்னவங்கள்லாம் கத்துக்க முடியும் 🙂

  19. தாராளமாக செய்யுங்கள் ஆதித்தன், இப்பதிவு பல ஆண்களின் மனசாட்சியோடு பேசவேண்டும் என்பதே என் அவா.

  20. ஆமாமா… அவசியம் கத்துக்கோங்க நரேஷ். கத்துக்க வேண்டிய காலம் நெருங்கிகிட்டிருக்கில்லயா? :)))))

  21. படம் பிரமாதமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *