3. யாருடா இந்த தாசி..?- பெரியார் போட்ட நாடகம்.

ராமசாமி சொன்ன பெண் நாகம்மை. அவரின் மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள். சேலம் மாவட்டம் தம்மாப்பட்டியில் வசித்து வந்தவர். மாமா என்றால் நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது. சின்னத்தாயம்மையாரின் ஒன்று விட்ட சகோதரன் ரெங்கசாமி நாயக்கர். வெங்கட்டநாயக்கர் குடும்பம் ரெங்கசாமி நாயக்கர் வீட்டுக்கும், ரெங்கசாமி நாயக்கர் குடும்பம் இவர்கள் வீட்டுக்கும் போய் சில நாட்கள் தங்குவதும் உண்டு. அப்போதே ராமசாமிக்கு நாகம்மையை பிடித்துப் போனது.

இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ரெங்கசாமி நாயக்கரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வெங்கட்ட நாயக்கரின் குடும்பமோ செல்வச் செழிப்பான குடும்பம். மலை உச்சிக்கும் அடிவாரத்துக்குமான வித்தியாசம்.

வழக்கம் போல வெங்கட்ட நாயக்கர் கருத்து ஏதும் சொல்ல வில்லை. சின்னத்தாயம்மையாருக்குத் தான் சுத்தமாக இந்த யோசனை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நாகம்மையை அவருக்கு மிகவும் பிடிக்கும். அழகான பெண். புத்திசாலியும் கூட.., அதற்காக மருமகளாக்கிக் கொள்ள முடியுமா?, சமூக அந்தஸ்து என்று ஒன்று இருக்கிறதே.. அதை விட்டுக்கொடுக்க முடியுமா எனத் தயங்கினார். மகனிடம் பேசிப்பார்த்தார். பயனில்லை. கட்டினால் நாகம்மையைத் தான் கட்டுவேன். இல்லையெனில் ஆளை விடு என்பதாக இருந்தது ராமசாமியின் பதில்.

இதே சமயத்தில் தான் நாகம்மைக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கி இருந்தார் ரெங்கசாமி நாயக்கர். ஏழ்மையான நிலையில் இருந்தவர்களால் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத காலம் அது. இளம் மாப்பிள்ளைகள் யாரும் முன் வரவில்லை. இரண்டு மனைவிகளை இழந்து, தள்ளாடிக் கொண்டிருந்த வயசான பெரியவருக்கு மூன்றாம் தாரமாக நாகம்மையைக் கொடுக்க முடிவு செய்தார்.

நாகம்மைக்கு பெற்றோரின் முடிவில் சம்மதமில்லை. தலை பின்னாமல், குளிக்காமல், சாப்பிடாமல் இருந்து பெரிய அமளி செய்து விட்டார். “கட்டினால் மாமன் ராமசாமியைத்தான் கட்டுவேன். இல்லை என்றால் செத்துப் போய் விடுவேன்” என்று திடமாக சொல்லி விட்டார். இவரது உறுதி கண்டு பயந்து போனார்கள் அவரது குடும்பத்தினர்.

சகோதரி வீட்டு சம்பந்தம் நல்லதாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது அவர்கள் தான் வசதி படைத்தவர்களாயிற்றே.. சின்னத்தாயம்மை சம்மதிக்க மாட்டாரே.. என்ற கவலை ரெங்கசாமி-யாரின் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.

இதற்கிடையில் அம்மா ஒத்துக்கொள்ளாத காரணத்தால்.. ராமசாமியின் மைனர் விளையாட்டுக்கள் அதிகமாகிப்போனது. தொடர்ச்சியாக அவர் குறித்த புகார் செய்திகள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தது. சரி.. மகன் சொல்படியே கேட்போம் என்ற முடிவுக்கு ராமசாமியின் வீட்டார் வந்தார்கள்.

ராமசாமிக்கு பத்தொன்பது வயதும், நாகம்மைக்கு பதின்மூன்று வயதும் இருக்கும் போது, இருவீட்டார் சம்மததோடு 1898ம் ஆண்டு ராமசாமி நாயக்கர்-நாகம்மை திருமணம் நடந்தேறியது.

திருமணம் முடிந்த கையோடு எல்லாத் தாய்மார்களும் செய்வது போல, சின்னத்தாயம்மையாரும் ராமசாமியின் போக்கு குறித்து நாகம்மையின் காதில் ஓதினார். எல்லா விதத்திலும் அவனை திருத்தி, குடும்பத்திற்கு ஏற்ற மகனாக மாற்ற வேண்டியது நாகம்மையின் கடமை என்பது போல பேசி வைத்தார்.

ஒரே நாளில் இவர்கள் சொல்லும் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்று நாகம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும் மாமனார், மாமியார் மணம் கோணாமல் முதலில் நடந்துகொள்ள வேண்டும். அதன் வழி மாமனை மாற்றி விட நினைத்தார்.

ஆச்சாரத்தை கடைபிடிக்கும் அவர்களுக்கு சேவை செய்யும் போது தானும் அப்படியே இருக்க முடிவு செய்தார் நாகம்மை. வீட்டில் எல்லோரும் ஒரு பாதையில் போகும் போது, ராமசாமி மாமன் மட்டும் வேறு வழியில் போய் விடுவாரா என்ன? அதிகாலையிலேயே எழுந்து, குளித்த பின் தான் வீட்டு வேலைகளில் ஈடுபடுவார். பூப்பறித்து கொடுப்பது முதல், பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வது, சமையல் வேலைகள் என எல்லாவற்றிலும் மிகுந்த அக்கரையுடன் செய்யலானார். மாமியாருக்கு மிகுந்த நம்பிக்கை வந்தது. தன் மகன் ராமசாமியை எப்படியும் இவள் மாற்றி விடுவாள் என்று திடமாக நம்பத் தொடங்கினார்.

மனைவியின் இந்த போக்கு ராமசாமிக்கு அதிர்ச்சியை தந்தது. தன் காரியங்களுக்கு ஏற்றபடி நாகம்மை இருப்பார் என எதிர்பார்த்தவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. தம் மனைவி குடும்பத்தாரின் மூடச் செயல்களுக்கு எல்லாம் உதவி செய்கின்றவராக இருப்பது ராமசாமிக்கு உறுத்தியது. சில அதிரடி செயல்கள் மூலம் தான் மனைவியை மாற்ற முடியும் என்று சில திட்டங்களைப் யோசிக்கத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவை நடைமுறை படுத்தப்பட்டன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகம்மை விரதம் இருந்து வந்தார். இது அத்தை சின்னத்தாய்யம்மையார் போட்ட உத்திரவு. சீக்கரம் குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை தொடங்கச்செய்தார்.

கிட்டத்தட்ட அம்மாவைப் போலவே மனைவியும் மாறி வருவதைக்கண்ட ராமசாமி, மனைவியின் ஆச்சாரங்களை முதலில் கலைப்பது என்று முடிவு செய்தார். அதற்காகவே குளிக்க மாட்டார். ஏற்கனவே குளிப்பதில் இருந்த சோம்பேறித்தனம் இப்போது நாகம்மையை வெறுப்பேற்ற உதவியது. மண்டியில் மட்டுமே அதிக பொழுதை கழிக்க வேண்டி இருந்ததால்.. ஒரே சட்டையை அதிக நாட்கள் போடுவார். சட்டையை யாராவது மாற்றச் சொன்னால், கடையில் தானே இருக்கேன். வெளியே எங்காவது போனால் மாற்றிக் கொண்டு போகிறேன் என்று பதில் வரும் அவரிடமிருந்து.

இவரின் தொல்லை தாங்காமல், ஏற்கனவே சமையல் கட்டு பக்கம் வரக்கூடாது என்று வீட்டில் எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்தது. ஏனெனில் குளித்து சுத்தமாக திருமண் இட்டுக்கொண்டுதான் சமையலறைக்குள் நுழைவார்கள் வீட்டினர். இவர் மட்டும் அடிக்கடி குளிக்காமலேயே உள்ளே புகுந்து விடுவார்.

ராமசாமிக்கு தினமும் அசைவம் வேண்டும். அதனால் விரதமிருக்கும் நாட்களின் போது ராமசாமிக்கு என தனி சாப்பாடும், மற்றவர்களுக்கு தனியான சைவ சாப்பாடும் தயாரிப்பார் நாகம்மை. முதலில் சைவ சாப்பாடு தயாரித்து விட்டு, பின் அசைவ சாப்பாடு தயாரிப்பார்.

ராமசாமிக்கு பரிமாறிய பின், குளித்துவிட்டு வந்து, மாமனார்,மாமியாருக்கு சாப்படு போட்டுவிட்டு தானும் சாப்பிடுவார். இது தொடர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் ராமசாமிக்கு சாப்பாடு போட்டு விட்டு, குளிக்கப் போய் விட்டார். சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமசாமி, யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள் புகுந்தார். ஒரு சிக்கன் எலும்புத் துண்டை எடுத்து சோற்றுப் பானைக்குள் புதைத்து வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவராக வெளியே வந்து விட்டார்.

வீட்டில் பெரியவர்களுக்கு எல்லாம் உணவளித்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தார் நாகம்மை. சோற்றை இலையில் போடும் போது சோற்றுடன் எலும்பும் வெளியே வந்தது. அத்தையிடம் போய் முறையிட்டாள். குளித்து விட்டு வந்து மீண்டும் சமைத்து சாப்பிடுவது என்பது ஆகாத காரியம். அதனால் அன்றைய விரதம் முடிந்து போனது. தொடர்ந்து ராமசாமி இது போன்றே செய்து வர வெறுத்துப்போனார் சின்னதாயம்மையார். விரதமிருப்பதை நிறுத்தும்படி நாகம்மையை சொல்லிவிட்டார்.

நாகம்மைக்கான விரதம் தான் தடைபட்டது. சின்னதாய்யம்மையாரின் விரதம் தொடர்ந்தது. அதனால் நாகம்மை குளித்து மாமியாருக்கு சமைப்பார். சமையலறையில் வேலையாக இருக்கும் போது, உள்ளே புகுந்து ராமசாமி நாகம்மையை தொட்டு விடுவார். தீட்டு என்று மாமியார் சொல்லி விடுவார்களே என்று நாகம்மை போய் குளித்து விட்டு வருவார். இவர் மீண்டும் தொட்டு விடுவார். ஒரு வேளை சமையல் செய்து முடிக்கும் முன் பல முறை குளிக்க வேண்டிய நிலை.

நாகம்மை பார்த்தார் குளிக்காமல் இருந்தால் தானே இந்த பிரச்சனை என்று, கணவனை விரட்டிப் பிடித்து தண்ணீரை தலை வழியாக ஊற்றி விட்டு குளிக்க வைத்து விடுவார். அதன் பின், தானும் குளித்து சமையலறைக்கு போவார். காலையில் ராமசாமி தூங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு குடம் தண்ணீரை அவர் மீது ஊற்றி விட்டு தான் நாகம்மை குளிக்க கிளம்புவது வாடிக்கையானது.

மனைவியின் விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். அம்மாவைப் போலவே.. கோவிலுக்கு அடிக்கடி போகும் மனைவியை மாற்ற.., தன் மைனர் நண்பர்களின் உதவியோடு திட்டம் ஒன்றை தயாரித்தார்.

ஒரு சமயம் நாகம்மை கோவிலுக்கு போனார். அவரின் பின்னாலேயே வந்த ராமசாமி ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டு, தம் நண்பர்களை அனுப்பினார், “யாருடா இந்த தாசி.. அழகா இருக்காளே.. இவளை இதற்கு முன் பார்த்ததில்லையே.., புதுசா வேற தெரியிறா..” என்று நாகம்மையின் காதுகளில் விழும்படி அவர்களும் பேசினார்கள். இந்த காலிக்கூட்டத்தை கண்டு கோவிலில் இருந்த பிராமணப் பெண்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டனர். உதவிக்கு ஒருவர் கூட இல்லாது போனது.

நாகம்மை நடுங்கிப் போனார். இப்படி கோவிலில் தனியாளாக மாட்டிக்கொண்டோமே.. அடுத்து என்ன நடக்குமோ.. என்று அவருக்கு கலக்கம் உண்டானது. பயந்து போய் வேகமாக வெளியில் வந்தவரை எதிர் கொண்டு ஆறுதல் சொல்லி அழைத்துப்போனார் ராமசாமி. இங்கு வந்ததால் தான் இந்த கதி ஏற்பட்டதென்றும் ஒரு போடு போட்டார். நாகம்மைக்கும் அது சரி என்றே பட்டது. தாசிகள் நிறைந்த காலகட்டம் அது. தாசிகள் கோவில்களில் அடிக்கடி தென்பட்டு வந்த காலம் அது. அதனால்.. இந்த காலிக்கூட்டம் தன்னையும் தாசியாக நினைத்து, தவறாக பார்க்கிறது. அதுவும் கோவிலுக்கு வந்ததால் தானே.. என்று நினைத்தவர் கோவிலுக்குப் போவதை நிறுத்தினார்.

உள்ளுக்குள் மகிழ்ந்து போன ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். இச்சமூகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த விசயங்களை கேள்விக்குள்ளாக்குவது என்பது அவரது சிறுவயது பழக்கம்.

அது போலவே பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதற்கு திருமணமும், அதிலும் அதை ஒட்டி பெண்களுக்கு மாட்டிவிடப்படும் தாலி என்ற பொருளும் மிக முக்கிய காரணமாக இருப்பதாக உணர்ந்திருந்தார். மிகவும் புனித பிம்பத்தை தாலிக்கு ஏற்படுத்தி வைக்கப் பட்டிருந்ததை பலரிடம் விமர்சித்து வந்தவர் ராமசாமி. தன்னுடைய மனைவியே இப்படியான பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவருக்கு என்னொவோ போலிருந்தது.

ஒருநாள் இரவில் நாகம்மையுடன் இருக்கும் போது தாலியை கழட்டி கொடுக்கும் படி கேட்டார். ஆனால் அவரோ மறுத்து முரண்டு பிடித்தார். சிரித்துக்கொண்டே ராமசாமி, “அம்மா, உன்னிடம் இது பற்றி ஏதும் சொல்லவே இல்லையா?” கேட்டார். நாகம்மையும் அப்பாவியாக “இல்லையே.., ஏங்க.. நீங்களே தான் சொல்லுங்களேன்” என்று ராமசாமியிடமே கேட்டார். இதைத்தானே எதிர்பார்த்தார்.

“கணவன் உடன் இருக்கும் போது தாலி தேவையில்லை. கணவன் வெளியூர் எங்காவது போகும் போது மட்டும் தாலி அணிந்தால் போடும்.” என்று ஒரு போடு போட்டார். நாகமையால் நம்ப முடியவில்லை. தாலியை கழட்டினால் கணவன் உடனே இறந்து விடுவான் என்று பயந்தார். ராமசாமி கட்டாயமாக அவர் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக்காட்டினார். தனக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்றும்… அப்படி சொல்லப்பட்டு வருவது பொய் என்றும்.. தான் ஊரில் இருக்கும் சமயத்தில் தாலி தேவை இல்லை என்றும் அறிவுருத்தினார். அவர் சொன்னதை உண்மை என்று நம்பிய நாகம்மையும் தாலியை கழட்டி கொடுத்துவிட்டார். இவரும் வாங்கி சட்டைப் பையில் போட்டுக்கொண்டவர். பொழுது புலர்ந்ததும் அதே சட்டையை மாட்டிக்கொண்டு, கடைக்கு போய் விட்டார். காலையில் குளிக்கும் போது தான் நகம்மைக்கு தாலியின் நினைவு வந்தது. இப்படியே அத்தை பார்த்தால் நல்லா இருக்காதே.., ஏதாவது சொல்லிவிட்டால்.. கொஞ்சம் பயந்து போன நாகம்மை சேலையின் தலைப்பால் உடலை மூடிக்கொண்டார்.

சமையல் கட்டில் புகுந்து வேலைகளை கவனிக்கத்தொடங்கினார். மதியம் மாமன் வீட்டுக்கு வந்ததும் மறக்காமல் தாலியை வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டும். யாராவது பார்த்து விட்டால்.. வேறு வம்பே வேண்டாம். மனதிற்குள் தாலி குறித்த சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், சமயல் வேலைகளையும் கவனித்த படியே இருந்தார். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன? பூஜை அறையில் இருந்து சின்னத்தாய்யம்மையாரின் குரல் நாகம்மையை அழைத்தது.

“நாகா.. கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா”

___________தொடரும்___________

This entry was posted in பெரியார் வரலாறு. Bookmark the permalink.

7 Responses to 3. யாருடா இந்த தாசி..?- பெரியார் போட்ட நாடகம்.

  1. தொடர்கதை பாணியில் வேகமாக பயணிக்கிறது அய்யாவின் வரலாறு. வாரத்துக்கு இருமுறையாக பதிந்தால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  2. தலை கலக்குரீங்க லக்கியின் கருத்தை வழிமொழிகிறேன்

  3. சிவஞானம்.ஜி says:

    //சின்னத்தாயம்மை சம்மதிக்க மாட்டாரே என்ற கவலை வெங்கட்டரின் மனதில்//

    ரெங்கசாமியார்மனதில் என்றுதானே இருக்கவேண்டும்?

  4. லக்கி, முரளி.. தங்கள் கருத்துக்கு நன்றி!
    ஆனால்.. நண்பர்களே.. புதிய அலுவலகப் பணி டவுசரை கிழிக்குது. முன் போல இணையத்து பக்கமோ, கணிணி பக்கமோ வரமுடிவதில்லை. இதனை எழுதுவதற்குள்ளேயே.. போதுமென்றாகி விடுகிறது. அதனால்.. வாரம் ஒருமுறை என்பதனை குறைக்க இயலாது. வேண்டுமென்றால்.. 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ளலாம். 🙂

    **
    சிஜி,
    திருத்தி விட்டேன். தூக்கம் கெட்டு நடு இரவு எழுதியதால்.. தவறு நிகழ்ந்து விட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

  5. பாலா,

    ஒவ்வொரு பகுதியும் முந்தைய பகுதியை தாண்டிய சிறப்பும் விறுவிறுப்பும் கொண்டுள்ளது.

    ‘தன்னுடைய கொள்கைகளை தன் குடும்பத்தினர் மீது, தன்னைச் சார்ந்தவர்கள் மீது திணிக்கக் கூடாது’ என்பது இன்றைய தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. கலைஞர் முதல், வைகோ, ராமதாசு எல்லோருமே தமது கொள்கைகள் தம் குடும்பத்துக்குப் பொருந்தாது என்றே செயல்படுவதாகப் படுகிறது.

    கொள்கை முக்கியமா, குடும்பம் முக்கியமா?

    அன்புடன்,
    மா சிவகுமார்

  6. Arun/அருண்குமார் says:

    உங்க தலைவனும் குளிக்கலை, நீங்களும் குளிக்கலை. இதில் பெருசா பாப்பானை திட்ட வந்துட்டீங்க!

  7. மேற்கண்ட பின்னூட்டம்..

    பிராக்ஸி ஐ.பி 137.238.193.101-யிலிருந்து வந்திருகிறது.

    தங்கள் கருத்துக்கு நன்றி அருண்குமார்.

    மா.சி அண்ணை “நோ’ கமெண்ட்ஸ்! :)))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.