நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..!

டிஸ்கி: The Patient – படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். சினிமாவில் பார்த்த அந்த காட்சியை நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே அப்படி கொடுத்திருக்கிறேன். பின்ன..  உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை நினைவு படுத்தவே இக்குறிப்பு.

கதையின் நாயகன் ஒரு மருத்துவர். க்யூபாவைச் சேர்ந்தவன். பணக்காரக்குடும்பத்தின் வாரிசு என்றாலும், கம்யூனிஸ நாடான க்யூபாவில் பிறந்ததால் ஏழை நாடுகளின் மேல் எப்போதும் கருணைக்கண் கொண்டு பார்ப்பவன் தான் ஜான்மிக்கேலி. சோமாலியாவிலிருக்கும் டோலோ ஓடோ(dolo odo) என்ற நாட்டு ஏழைக்களுக்கு உதவ க்யூபாவிலிருந்து ஒரு மருத்துவக்குழு பயணப்படுகிறது. அதில் ஜான்மிக்கேலியும் பயணமாகிறான்.

சோமாலியாவில் மருத்துவக்குழு பலருக்கும் வைத்தியம் பார்க்கிறது. காசநோயால் பாதிக்கப்படிருப்பவர்கள், பால்வினை நோய், கண் நோய்கள், தலையில் ஏற்பட்டிருக்கும் புழுக்கடி, உடலில் ஆங்காங்கு தடித்து வீங்க காரணமான பூச்சிகடி என சகல நோய்களினால் பீடித்திருப்பவர்களுக்கும் அக்குழு மருத்துவ உதவிகளை செய்கிறது. (நாயகன் மருத்துவரென்பதால் நிறைய நோயாளிகளை அம்மணமாக பார்க்கும் வாய்ப்பை பெறுவதோடு அதை நமக்கும் அருள்கிறார் என்பதால்.. இக்காட்சிகளை நன்கு உள்வாங்கிக்கொள்ளவேண்டும். விமர்சனம் எழுதும் போது இது பற்றி கொஞ்சம் விரிவான விசாரணை நடத்தலாம்.)

அப்போது தான் ஜான்மிக்கேலி அவளை சந்திக்கிறான். நான்கு வயது பெண் குழந்தைக்கு தாயான அவளின் பெயர் க்வாமி ஸோபி. குழந்தையின் சிகிச்சைக்காக ஜான் மிக்கேலியின் குழு நடத்தும் மருத்துவ முகாமுக்கு வருகிறாள். அதிகமாய் விவரிக்க வேண்டிய அவசியமற்ற மிகச் சாதாரணமான பெண் அவள்.(உலகப் படத்தின் நாயகிகள் அதிரூப சுந்தரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சப்பை பிகராகவும் இருக்கலாம்) அவளுக்கு க்யூப மொழி தெரியவில்லை. இவனுக்கு அவள் பேசும் சோமாலி மொழியும் புரியவில்லை. நமக்கு சப் டைட்டில் கை கொடுக்கிறது.

குழந்தைக்கான குறிப்புகளை எழுதும் போது குழந்தையின் அப்பாவைப்பற்றி விசாரிக்கிறான் ஜான். பக்கத்து நாட்டுக்கு திருடப் போனபோது பிடிபட்டு, பழுக்க காய்ச்சிய கம்பியை குதத்துக்குள் ஏற்றி கொலை செய்யப்பட்டுவிட்டான் என்று அவள் தன் கணவனைப் பற்றிய கதையை சொல்லுகிறாள். (திரையில் எட்டு நிமிடங்கள் வரக்கூடிய இந்த ப்ளாஷ் பேக் காட்சியைப் பற்றி.. கொஞ்சம் விரிவாக, படிப்பவர்கள் பயப்படும்படி எழுதவேண்டும். அப்படி எழுதினா தான் நாங்க ஒங்களை ஆட்டத்துக்கு சேர்த்துப்போம்)

தகப்பனை இழந்த குழந்தையோடு பல இடங்களில் பற்றுப்பாத்திரம் தேய்த்தும்,தேவாலயங்களில் கூட்டிப் பெருக்கியும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பதாக சொல்கிறாள் க்வாமி ஸோபி.

இவளின் பூரிக்கும் இளமையின் மீது வெறி கொண்ட ஒரு மதகுரு இவளை சூறையாடி விடுகிறான். (இக்காட்சியும் சம்பவங்களாக விரிகிறது என்பதால்.. இதுவரை படிச்சிருந்த எல்லா சரோஜா தேவிக்கதைகளையும் மனசுக்குள் கொண்டு வந்து க்வாமியின் மேலாடை கிழிபடுவதில் தொடங்கி, மதகுரு வேகமாக மூச்சு விட்டு ஓய்ந்து போகும் வரை.. இதைப் பற்றியும் ஒரு எண்பது முதல் நூறு வார்த்தைகளில் விரிவாக எழுதனும். அப்பதான் உலக சினிமா பார்த்த எபெக்ட் வாசகர்(!)களுக்கு வரும்)

ஒரு முறை வன்புணர்வுக்கு ஆளாகிவிட்டதால்… அடிக்கடி இவளை தன் அறைக்கு அழைத்து தனது வேட்கையை தணித்துக்கொள்கிறான். அதன்பின் இவளுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறது.

மருத்துவம் பார்த்துக் கொள்ள வசதிகளும் இல்லை. இந்தக் கதைகளையெல்லாம் கேட்டறிந்த ஜான் மிக்கேலியோ சுருட்டை புகைத்த படியே சிந்தனையில் ஆழ்கிறான். க்வாமி ஸோபி மீது பரிதாப உணர்வு தோன்றுகிறது.

வைத்தியம் பார்க்க வந்த குழந்தையை விட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மிக்கேலியை நிகழ்காலத்துக்குத் திரும்ப அழைத்து வருகிறாள் க்வாமி ஸோபி. சுயநினைவுக்கு திரும்பியவன் குழந்தைக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்புகிறான். மறுநாள் அவளையும் சிகிச்சைக்கு வரும்படி அழைக்கிறான்.

மறுநாள் சிகிச்சைக்கு க்வாமி ஸோபி வரும் போது மருத்துவமுகாமில் ஜான்மிக்கேலி இல்லை. அவனுக்காக அவள் வெளியே காத்திருக்கிறாள். கொஞ்ச நேரத்தில் ஜான் திரும்பிவந்ததும் இவளை சிகிச்சை அறைக்கு உள்ளே அழைத்துச்சென்று படுக்க வைக்கிறான். அவளது ஸ்கர்ட் போன்ற ஆடையை மேலே உயர்த்தி அவளது பிறப்புறுப்பை பார்க்கிறான். (இந்த இடத்தில் யோனின்னு எழுதனும்.) அதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடுகிறது அது முற்றிப்போன பால்வினை நோய் என்று (இங்கே பெண்குறியினை க்ளோஸ் அப் ஷாட்டில் காட்டப்பட்டிருப்பதால்.. கேமராவின் நுட்பமான ஒளிப்பதிவினை புகழ்வதோடு, பால்வினை நோய் வந்த பிறப்புறுப்பு எப்படி இருந்தது என்பது குறித்த விவரணைகளை எழுதவேண்டும். படிக்கிறவன் சாப்பாடு என்ன.. சமையலறை பக்கம் கூட ஒரு வாரத்துக்கு ஒதுக்கக்கூடாது). சில களிம்புகளை தடவி விட்டு அனுப்பி வைக்கிறான் ஜான்மிக்கேலி.

மறுநாள் ஜான்மிக்கேலியும் க்வாமி ஸோபியும் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவனை அழைத்து வருகிறார்கள். ஒரு வாரகாலமாக கக்கா போகவில்லை என்பதால் மருத்துவ முகாமுக்கு கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் பேசுவதை இவனுக்கு மொழிபெயர்த்து சொல்கிறாள் க்வாமி ஸோபி. அவனை சோதித்து பார்த்த ஜான்மிக்கேலி சில மருந்துகளை கொடுத்து, சாப்பிடச்சொல்கிறான். மறுநாள் வந்து பார்க்கும் படி சொல்லி அனுப்புகிறான். ஆனால் அவனை அதற்கு அடுத்த நாள் அழைத்துவருகிறார்கள். இன்னமும் கக்கா வரவில்லையென சொல்கிறார்கள்.

சரி இனி உட்கொள்ளும் மருந்து பயன்படாது, இம்முறை எனிமா கொடுத்து பார்த்துவிடுவது என முடிவு செய்து, தண்ணீரை சூடு பண்ணிக்கொடிருக்கும் போது க்வாமி ஸோபி வருகிறாள். அவளை வெளியே உட்காரச்சொல்லி விட்டு, அறைக்கு உள்ளே வந்து கக்கா போகாதவனை குனியவைத்து எனிமா ட்யூபை சொருகுகிறான் ஜான். எனிமா குடுவையை அவன் கையிலேயே கொடுத்து உயர்த்தி பிடித்துக்கொள்ள சொல்கிறான். குடுவையில் உள்ள நீர் முழுவதும் இறங்கியதும் தன்னை அழைக்கும் படி சொல்லிவிட்டு, வெளியே வந்து க்வாமி ஸோபியுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தொடர்ந்து பூசி வந்த களிம்புகளால் தனக்கு வந்த பால்வினை நோய் குணமடைந்து வருவதாக அவள் கூறுகிறாள்.

உள்ளே இருப்பவன் சத்தம் போட.. ஜான் ஓடிச்சென்று பார்க்கிறான். பின்னாடியே கூம்பலும் போகிறாள். அறை முழுவதும்.. ஏற்றப்பட்ட எனிமா தண்ணீர் வேறு வண்ணத்தில் பிசுபிசுக்கிறது. என்னது நான் எனிமா கொடுத்த தண்ணிமட்டும் தான் வந்திருக்கு.. என்று ஆச்சரியத்துடன் ஜான்மிக்கேலி கேட்க, எனிமா ஏற்றப்பட்டவன் அடிவயிற்றிலிருந்து ஏதோ சொல்லி கத்துகிறான். குழப்பமாய் க்வாமி ஸோபியை பார்க்கிறான் ஜான்.

”சோறுத்திண்ணே.. இருபது நாள் ஆச்சாம். இப்ப எனிமா கொடுத்து.. என் என் குடலையும் வெளியே கொண்டுவர திட்டம் போட்டுயிருக்கியான்னு திட்டுறான்..” என்று அவள் மொழிபெயர்த்து சொல்கிறாள். மிகப்பெரிய மருத்துவர் என்ற கர்வம் காணாமல் போகிறது. தன் தவற்றை உணர்கிறான் ஜான்மிக்கேலி.

ஆஹா… இப்படி ஒரு புத்திசாலியை, பல மொழிகள் பேசக்கூடியவளை கூடவே வைத்திருந்தாள் எவ்வளவு நல்லது.. என்று அவளின் கரம்பிடிக்கிறான் ஜான்மிக்கேலி. அவர்களது பயணம் தொடர்கிறது கக்கா வராத புதிய நோயாளிகளைத் தேடி..!

*******************************

மேலும் சில சேர்ப்புகள்:-

மேற்சொன்னது தான் தி பேஷண்ட் படத்தோட கதை. சோமாலிய தேசத்தில் இருக்கும் வறுமையையும், சுரண்டலையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள். இதில் யார் பேஷண்ட் என்ற சந்தேகம் உங்களுக்கு வருமானால்.. நீங்கள் உலக திரைப்படம் பார்க்க லாயக்கற்றவர். பின்ன.. க்வாமியின் மகள், க்வாமி ஸோபி , கக்கா போகாமல் கதையின் திருப்பு முனையாக வரும் நோயாளி.. இவர்கள் மூவரும் நேரடியான பேஷண்ட் என்றாலும் கூட.. வறுமைக்காக திருடப்போன ஒருவனை கொடுரமாக கொலை செய்தவர்கள், இளம்பெண்ணை வன்புணர்ச்சி செய்த மதகுரு இப்படி சமூகத்தில் புரையோடி இருக்கின்ற நோயாளிகளைப் பற்றித்தான் இப்படம் பதிவு செய்கிறது அப்படின்னும் கடைசியா ஒரு பிட்டை போட்டு விடனும். 🙂

———

இன்னும் சில வகைகள் உண்டு. அது பற்றிய குறிப்புகள் கீழே!

# சென்சார் போர்டுக்கு போட்டுக் காமிச்சு சர்டிபிகேட் வாங்கறா மாதிரி, நம்மகிட்டயும் எதோ சர்டிபிகேட் வாங்கன்னு படத்த எடுத்த பொழப்பத்தவனே கொண்டு வந்து ப்ரிவ்யூ தியேட்டரில் போட்டுக் காமிச்சது போல ஒரு பந்தாவோட ஒரு பத்திருவது நொட்டை நொள்ளையெல்லாம் சொல்லிட்டு (தி பேஷண்ட் படத்தில் அந்த எனிமா பேஷண்ட் பற்றி முழுமையாக சொல்லவில்லை என்பதையும் கவனிக்க) அப்போதைய நமது மன/உடல் நிலைக்கேத்தா மாதிரி பரவால்ல, ஏதோ பரவால்ல, கேவலம், வாந்தி வரா மாதிரி இருக்குன்னும் சொல்லிக்கனும்.

# எல்லா படத்துக்கும் இப்படியே சொல்லாம, ஓகோ, ஒகோகோ, இது உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு அற்புத படம் வந்திருக்குன்னோ சொல்லிரணும். நடு நடுவில ஏழ்மை, மூன்றாம் உலகநாடுகள், ஏழாம் உலக ஊர்கள், செவ்வாய் கிரகவாசிகள்ன்னு எல்லாம் எழுதனும்.

# இப்படி சொல்லி எழுதும் போதே நடுநடுவுல தான் படத்தோட மொத்த கதையும் சொல்லிரணும். முழுப் படத்தோட கதையைச் ஒரே சமயத்துல (நான் மேற்சொன்ன மாதிரி) சொன்னா.. உங்களுக்கு விமர்சனம் எழுதத்தெரியலைன்னு புறந்தள்ளிவிட வாய்ப்பு இருப்பதால்… சுருக்கமா சொல்ற மாதிரி விரிவா சொல்லனும். அப்பதான் நீங்களும் உலகப்பட விமர்சகனாக மதிக்கப்படுவீங்க.

# கடைசில க்ளைமாக்சில் ஏதேனும் திடுக்கிடும் திருப்பம் இருந்தா அத மட்டும் சஸ்பென்ஸ் வச்சு விட்டுரணும் – பின்ன படிக்கறவனும் நாம யூஸ் பண்ணின அதே தேஞ்சு போன திருட்டு டிவிடிய கேட்டு நம்ம கிட்ட தொங்க வேணாமா?

# ஒலக சினிமா வரிசையில நாம பார்க்குற படத்தை எடுத்த இயக்குனருக்கே தெரியாத பல விசயங்களை நாம புட்டு புட்டு வைக்கனும்… அவனுக்கு தமிழ் மட்டும் தெரிஞ்சது.. அசந்துருவான். அப்படி சொல்லனும்.

# இன்னொரு முக்கியமான விசயத்தை நினைவில் கொள்வது அவசியம். பொதுவா நூல் விமர்சனம் எழுதுறப்போ.. பதிப்பகம் முகவரி, புக்கோட விலை எல்லாத்தையும் குறிப்பிடனும். ஆனா.. ஒலக சினிமா எழுதுறப்போ.. மட்டும் இந்த மாதிரி சி.டி வெளியிட்டவன் பேரு, என்ன விலை என்ற மேலாதிக்க தகவல்களை எல்லாம் கொடுக்க வேண்டாம். ஏன்னா.. அனேகமா மாயாபஜார்ல.. சாரி… பர்மா பஜார்ல ரூ.பத்துக்கோ, இருபதுக்கோ வாங்குன திருட்டு டிவிடியா தான் இருக்கும். அதுல என்னன்னு முகவரி கொடுக்குறது. பர்மாபஜார் முகவரி கொடுத்தா நல்லா இருக்காது பாருங்க. அதனால இந்த தொல்லை இல்லை.

# தமிழ் சினிமா திருட்டு வீடியோவினால் அழியுதுன்னு கத்திட்டு, அதுக்காக.. சண்டையும் போட தயாரா இருக்குற மக்கள் பலர்(இதில் சினிமா துறை சார்ந்தவர்களும் அடக்கம்) ஒலக சினிமாக்களை மட்டும் திருட்டு டிவிடியில தான் பாக்குறாங்க என்பதால்.. கவலை இல்லை.

—–

போஸ்டர் உதவி:- இங்கே

—-

The Patient – படத்தின் கதையை முழுவதுமாக படித்திருப்பீர்கள். இக்கதை என் சொந்த கற்பனையில் எழுதப்பட்டது. தயாரிப்பாளர் கிடைத்தால் நானே எடுக்க தயாராக இருக்கிறேன் என்பதையும், இதுவரை இப்படி ஒரு சினிமா வரவில்லை என்ற தகவலையும் மிகுந்த பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஹிஹிஹி!

This entry was posted in சினிமாப் பார்வை, நகைச்சுவை, புகைப்படம் and tagged , , , . Bookmark the permalink.

14 Responses to நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.