ரசித்துப் பார்க்க ஒரு படம்- ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”

இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்(In Ghost House Inn)- மலையாளம்

சமீபத்தில் மிகவும் ரசித்து, சிரித்துப் பார்த்த படம் ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”. மலையாளத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் ஒரு பேய் படம். ஒரு திகில் படத்தை இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா.. என்று ஆச்சரியப்படும் வகையில் எடுத்திருக்கிறார்கள்.

முகேஷ், அசோகன், ஜெகதீஷ் மற்றும் சித்திக் ஆகிய நால்வரும் தான் கதையின் நாயகர்கள். இதே கூட்டனி சுமார் இருபதுவருடங்களுக்கு  முன் (1990) ’இன் ஹரிகர் நகர்’ என்ற படத்தில் இணைந்தார்கள். சிக்ஸர் அடித்த இதே டீம் 1999ல் ’2ஹரிகர் நகர்’ (இரண்டாம் பாகம்) என்ற படத்தில் பட்டாசு கிளப்பினார்கள். ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்” மூன்றாம் பாகம்.

முந்தைய இரண்டு படங்களைப் போல, இதன் கதை ஹரிகர் நகரில் நடக்காமல் வேறு இடத்தில் நடக்கிறது. அதாவது ஊட்டியில் நடக்கிறது. அங்கு இருக்கும் ஒரு பாழடைந்த பேய் பங்களாவை குறைந்த விலைக்கு அசோகன் (தாமஸ் குட்டி) வாங்குகிறார். அந்த இடத்தில் ஒரு பெரிய ரிசார்ட் கட்டவேண்டும் என்பது அவரது ஆசை. அதனால் தன் கூட்டாளிகள் மூவரையும் அழைத்துக்கொண்டு வந்து அங்கு தங்குகிறார். அவர்கள் தங்குவதால்..பங்களா குறித்து உள்ளூரில் இருக்கும் பேய் பயம் போய் விடும் என்பதால்.. அப்படி ஒரு திட்டம் போடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன் அந்த பங்களாவில் ஒரு ஆங்கிலேயப் பெண் தண் கணவரையும், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற டிரைவரையும் கொலை செய்துவிட்டு, தானும் அதே வீட்டில் தற்கொலை செய்துகொள்கிறாள். அவளின் ஆவி.. அந்த பங்களாவில் யாரையும் தங்கவிடாது விரட்டியடித்து, பலியும் வாங்குகிறது. பங்களாவில் வந்து தங்கிய பின் இக்கதைகளை அறிந்துகொள்ளும் மற்ற நண்பர்கள் மூவரும் தப்பியோட நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாமல் போகிறது.

ஒரு நாள் இரவு தங்கிய பின், ஊருக்குள் போய் சொல்லுகிறார்கள். அங்கு பேய் இல்லை. நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்று. அதற்கு உள்ளூர் தேனீர்க் கடைக்காரர்.. அப்போ அந்த பேய் ஆண்களை ஏதும் செய்யிறதில்லை போல.. பெண்களும் ஓர் இரவு தங்கினால் இங்கு பேய் இல்லை என்று நம்பலாம் என்று சொல்கிறார். அதனால்,  அவர்களின் மனைவிமார்களும் அங்கே வந்து தங்கிவிட.. ஆவிபறக்கும் காமெடி காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

பேயை விரட்டும் பாதிரியாக நெடுமுடிவேணு நடித்திருக்கிறார். இப்படியொரு காமெடிப் படத்தில் இவ்வளவு சீரியஸாக நடித்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படுகிறது.

அந்த பங்களாவில் வேலைபார்க்கும் இளம்பெண்ணை அந்த ஆவி பிடித்துக்கொள்கிறது. அந்த ஆவியை விரட்ட சின்ன கண்ணாடிக் குடுவையில்  புனித நீர் எடுத்து வருகிறார் பாதிரி நெடுமுடிவேணு. ஆவியை விரட்ட நடக்கும் நடவடிக்கையில் ஆவியால் தூக்கி எரியப்பட்டு இறந்து போகிறார் நெடுமுடி வேணு. நான்கு நண்பர்களும் சேர்ந்து அந்த ஆவி பிடித்த பெண்ணை அடித்து உதைத்து, பாதிரியின் புனித நீரை அவள் மேல் ஊற்ற ஆவி பிரிந்து போய்விடுகிறது.

பங்களாவை வாங்கியதிலும் பாதி விலைக்கு விற்பனை செய்தவரே வங்கிக்கொள்ள வருகிறார். இவர்களும் கிடைத்தவரை லாபம் என்று நட்டமடைந்தாலும் கிடைத்த பணத்துடன் கிளம்புகின்றனர்.

***
– இதோடு படம் முடிவடைகிறது- என்று நினைத்தால் கடைசியில் வைக்கிறார்கள் ஆப்பு. அசத்தலான படம். கமர்சியல் படங்களில் இது வேறுபட்டது. நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு அழகு சேர்க்கிறது.

இந்த மூன்று படங்களையும் எழுதி இயக்கி இருப்பவர் யார் தெரியுமா..? லால்.

ஆமா..  சண்டக்கோழி படத்தில் வில்லனாக வருவாரே அவர் தான்.

யூடியூபிலும் படம் காணக்கிடைக்கிறது.

அதன் சுட்டி இங்கே

படம் உதவி:- விக்கி பக்கம்

This entry was posted in சினிமாப் பார்வை, தகவல்கள். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.