10. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்..

ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார்.

நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள்.

வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார்.

மொட்டைத் தலையில் கொஞ்சமாய் முடி வளர ஆரம்பித்த நிலையில் இருந்த ராமசாமி கதவைத்திறந்தார். அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வெங்கட்டரோ.. ‘பிள்ளைவாள் இருக்காரா.., எங்கே என் பிள்ளை.. பிள்ளைவாள்.. பிள்ளைவாள்..’ என்று சத்தம் கொடுத்தபடியே ராமசாமியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணியத்துக்கும்

வெங்கட்டரைப் பார்த்ததும் மர்மாக இருந்தது. ‘வாங்க..வாங்க..’ என்று வாய் வரவேற்றாலும் மனதில் குழப்பங்கள் அதிகமானது. யார் சொல்லி வந்திருப்பார்? ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும்? தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

‘உட்காருவது இருக்கட்டும்.. மொதல்ல என் பையன் ராமசாமி இங்கிருக்கான்னு தகவல் கிடைச்சதே.. அவனைக் கூப்பிடுங்கோ.. நான் பார்க்கனும்..’

சுப்பிரமணியத்துக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரின் அருகிலேயே தலை குனிந்து நிற்கும் மகனை அடையாளம் காணமுடியாதவராக வெங்கட்டர் இருந்தார். இவர்கள் இருவரின் அமைதி வெங்கட்டருக்கு சற்று எரிச்சலைத் தந்தாலும், வெளிக்காட்டாமல், ‘பிள்ளைவாள்.. பையனை கூப்பிடுங்கோ.. அவனைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.. இப்படியே அமைதியா இருந்தா எப்படி..? ராமசாமீ.. ராமசாமீ.., வெளியில வாப்பா..” என்று குரல் கொடுத்தார் வெங்கட்டர்.

சுப்பிரமணியம் ராமசாமியின் முகத்தைப் பார்த்தார். இனிமேலும் அமையாக நிற்பது சரியல்ல என்று முடிவு செய்த ராமசாமி ஒரு அடி முன் வந்து நின்றார். இவர்களின் செயல்கள் வெங்கட்டருக்கு விளங்க வில்லை. ‘நைனா.. நான் தான் நைனா..’ என்று ராமசாமி.. சொன்னது தான் தாமதம்.. வெங்கட்டருக்கு குரல் அடையாளம் தெரிந்தது. அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் கண்ணீராக வெளிவந்தது. ஆசையாக மகனை இறுக்கித் தழுவிக்கொண்டார். தந்தையின் பாசமும், கண்ணீரும் ராமசாமியின் கண்களையும் ஈரமாக்கியது.

தந்தையும் மகனும் இணைந்தது சுப்பிரமணியத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. வெங்கட்டரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அமர வைத்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.


பெரியார் சில சம்பவங்கள்…

குத்தூசி குருசாமி விடுதலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். பெரியாரிடம் வந்தார் குத்தூசி, ‘அய்யா.. இன்னைக்கு செய்தி போடுவதற்கு ஏதும் சிறப்பான செய்தி இல்லையே என்ன செய்யலாம்? என்று கேட்டாராம்.

‘இவ்வளவு தானா… காலையில வந்த ‘இந்து’ பத்திரைக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எது எல்லாம் சரி என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் அனைத்தும் தவறு என்று பதில் எழுதுங்கள். எது எல்லாம் தவறு என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் எல்லாம் சரி என்று பதில் கட்டுரை எழுதுங்கள்.’ என்றாராம் பெரியார்.

அடுத்த நாளே கிளம்புவது என்பது வெங்கட்டரின் எண்ணம், ஆனால் சுப்பிரமணியோ சில நாட்கள் தங்கிவிட்டுப் போகும் படி வேண்டிக் கொண்டார். ராமசாமியின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அப்போது தான் ஐத்ராபாத்தில் இருக்கும் நகைகளை வர வைக்க முடியும். அப்பாவையும், உடன் வந்தவர்களையும் படுக்க வைத்து விட்டு, சுப்பிரமணியத்திடம் வந்து ஐத்ராபாத் முருகேச முதலியாருக்கு தந்தி கொடுத்து தாம் கொடுத்துவிட்டுப் போன நகைகளை அனுப்பி வைக்கும் படி ஒரு தந்தி அனுப்பச் சொன்னார்.

சுப்பிரமணியமும் அதன் படி செய்ய, முருகேச முதலியார் தன் வேலையாள் மூலம் நகைகளை ஒரு பெட்டியில் போட்டு கொடுத்து அனுப்பினார். அந்த நகைப்பெட்டியை வெங்கட்டரிடம் கொண்டுவந்து கொடுத்தார் ராமசாமி.

இத்தனை நாட்களின் தம் மகன், நகைகளை விற்றுத்தான் ஊர்சுற்றி, சாப்பிட்டு இருப்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த வெங்கட்டருக்கு நகைகளைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது.

‘ராமசாமி… என்னப்பா.. இது.. நகை எல்லாம் அப்படியே இருக்கு போலிருக்கே…, அப்ப இத்தனை நாள் சாப்பாட்டுக்கு என்னப்பா செய்தாய்?’ என்று கேட்டார் வெங்கட்டர். ‘ஈரோட்டில் நீங்கள் போட்ட அன்ன தானங்களை எல்லாம் காசியில் வசூலித்தேன் அப்பா’ என சிரித்த படியே விளக்கிச் சொன்னார் ராமசாமி. காசியில் அவர் செய்திருந்த கலாட்டாக்களைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர். வெங்கட்டருக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ராமசாமி பட்ட துயரங்களை நினைத்தால் துக்கமாக இருந்தது.

எல்லா நகைகளையும் திரும்பக்கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார் வெங்கட்டர். ராமசாமியோ மறுந்தார். நகைகளை விற்றுத்தான் இத்தனை நாள் சாப்பிடிருப்பான் என்று ஊரில் இருக்கும் மற்றவர்கள் கருதாமல் இருக்கவாவது நகைகளை அணிந்துகொள் என்று வற்புறுத்தி அணிந்து கொள்ளச் சொன்னார். வெங்கட்டரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, நகைகளை அணிந்துகொண்டார் ராமசாமி.

எல்லோரும் எல்லூரை விட்டு சென்னை வழியாக ஈரோடு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் ஏக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. வந்திறங்கிய சில தினங்களிலேயே ராமசாமிக்கு பொறுப்பு வரவேண்டும் எனில் ஏதாவது பெரிய பொறுப்பு கொடுக்க எண்ணினார் வெங்கட்டர்.

சின்னதாய்யம்மையாரிடம் கலந்து பேசி, ‘வெங்கட்ட நாயக்கர் மண்டி’ என்றிருந்த பெயரை ‘ஈ.வெ.ராமசாமி மண்டி’ என்று பெயர் மாற்றி, கடையின் சாவியை ராமசாமியின் கையில் ஒப்படைத்தார் வெங்கட்டர்.


ஈ.வெ.ரா.வின் தனித்துவமாக உருப்பெற்றது அப்போது தான். கடைப் பொறுப்புக்கு வந்த பின் ஈ.வெ.ரா.வின் போக்கில் நிறைய மாற்றம் கண்டார் வெங்கட்டர். மண்டியை மகனுக்கு கொடுத்து விட்டாலும் தினமும் மண்டிக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெங்கட்டர். வியாபாரத்தில் ஈ.வெ.ரா.வின் நுட்பம் கண்டு வியந்தார்.

ஈ.வெ.ரா. பொறுப்பு ஏற்றபின் வியாபாரம் முன்பை விட சூடு பிடிக்கத்தொடங்கி இருந்தது. தோற்றத்திலும் ஈ.வெ.ரா மாறிப் போயிருந்தார். முறுக்கிவிட்ட மீசையும், தலையும் தலைப்பாகையுமாய் பணக்கார வியாபாரிகளுக்கான அடையாளத்திலிருந்தார். புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள். எல்லோரின் கணக்கு களையும் வெங்கட்டர் போல, தனி நோட்டு போட்டு எழுதாமல், துண்டுத் துண்டான காகிதங்களை- லேயே எழுதி வைத்திருந்தார் ஈ.வெ.ரா. அவரவர்க்கான கணக்கு பார்க்கும் போது சிரமமின்றி துண்டு காகிதத்தை எடுத்து சரி பார்த்துக்கொண்டார். கணக்கு நேர் செய்பப்பட்டவுடன் வாடிக்கையாளரின் முன்னாலேயே அவரின் கணக்குத் துண்டுப் பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார்.

வியாபரம், தன் குடும்பம் என்று மட்டும் இருந்து விடாமல். ஊரின் விசயங்களிலும் அக்கரை காட்டினார் ஈ.வெ.ரா. அவரின் சமயோசிதம், வழக்குகளில் சரியான தீர்ப்பு வழங்கும் முறையால்.. அவரின் புகழ் பரவத்தொடங்கியது. ஒரு வியாபாரியாக மட்டுமல்லாது, சமூக அக்கரையுள்ள மனிதனாகவும் அறியப்பட்டார்.

மகனின் வளர்ச்சி கண்டு பூரித்துப் போன வெங்கட்டர், இனி நிம்மதியாக ஆன்மீகத்தில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தவராய்.., மண்டிப் பக்கம் வருவதை குறைத்து, பூஜை, பஜனை என்று ஈடுபடலானார்.

(தொடரும்)

This entry was posted in பெரியார் வரலாறு. Bookmark the permalink.

3 Responses to 10. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்..

  1. இளா says:

    தந்தையே அடையாளம் காணமுடியாததாக இருந்தது.. கவலைதரும் விஷயம்

  2. தமிழ்மணத்தில் வருகிறதா இல்லையா உமது பதிவு ????

  3. சிவஞானம் ஜி says:

    வாரம் ஒரு பதிவு என்பது சொல்லளவில்தான் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.