சாமியாட்டம் – ஒரு பார்வை -க.ரா

சாமியாட்டம்சாமியாட்டம்

முதலில் ஒரு சொல். இந்த கட்டுரையை தயவு செய்து ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வாசகனாக நான் வாசித்து உணர்ந்ததை மற்றவர்களுக்கும் கடத்தும் ஒரு சிறு முயற்சி மட்டுமே இக்கட்டுரை.

கதாசிரியர் தாம் பிறந்த மண்ணிலும் தன் தொழில் பொருட்டு தான் தங்க நேர்ந்த ஊர்களிலும் தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளை எழுத்தில் கோர்த்திருக்கிறார். அவர், அவர் வாழ்வில் கடந்து வந்த இந்த தருணங்களில்  சிலவற்றையாவது நாம் கடந்து வந்திருக்கக்கூடும். அவற்றை நம் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து வெளிகொணர்ந்திருக்கிறார் ஆசிரியர்.  பெரும் பாலான கதைகளில் படர்ந்திருக்கும் மென் சோகம் நம் மீதும் படர்கிறது இந்த கதைகளை வாசிக்க வாசிக்க.

புத்தகம் முழுதும் உள்ள கதைகளை பற்றி உங்களிடம் நான் சொல்லப்போவதில்லை. புத்தகத்தில் என்னை பாதித்த பக்கங்களை மட்டும் உங்களிடம் பகிர்கிறேன்.

தொகுப்பின் முதல் கதையான கோட்டி முத்துவில் வறும் கோட்டி முத்து எனக்கு என் ஊரில் இருந்த பாலுவை நியாபகப்படுத்துகிறான். தெருவில் உள்ள குழந்தைகளுக்கு சோறுட்ட குழந்தைகளின் அம்மாக்களால் பூச்சாண்டி பட்டம் சூட்டப் படும் அவனே , அக்குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட யானையாகவும் , கோமாளியகாவும் மாறிப்போனான்.  ஊரில் உள்ளவருக்கு எல்லாம் வேலையாளும் அவனே. கதையின் முடிவில் கோட்டி முத்துவின் முடிவு மனதை அதிரச்செய்கிறது.

இரண்டாவது கதை பாரதியின் ஒரு பாட்டு பாரதி நினைத்த பெண் சுதந்திரம் நம் நாட்டில் வந்து விட்டதா என்ற கேள்வியை மனதில் எழுப்பிவிட்டு செல்கிறது.   பதில் சொல்லத்தான் யாரும் தயராயில்லை.

தண்ணீர் தேசம் கதையில் ஒரு ஊரே குடிநீருக்கு நாயாய் அலையும் போது அங்கு குடிக்க கிடைப்பது பெப்ஸி என முடிக்கிறார். பன்னாட்டு கம்பெனிகள் நம் நீராதரத்தை சுரண்டி நம்மளுக்கே அதை திரும்பி வேறு பெயரில் விற்பதையும் ,  அதை உணராத நம் மக்களின் அறிவின்மையையும் சுட்டிக்காட்டுகிறது இந்த கதை ஒரு எள்ளலுடன்.

இந்த தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த இரண்டு கதைகளில் ஒரு கதை துரைப்பாண்டி. குடும்ப சூழ்நிலையால் தன் பால்யத்தை தொலைத்து வீட்டை விட்டு தொலைவில் வந்து அல்லல் படும் ஒரு சிறுவனின் கதை. கதையின் முடிவில் மாயமாக மறைந்து போகிறான் துரைப்பாண்டி.  அவனை நம்மில் யாராவது எங்கேயாது காணக்கூடும்.  நிச்சயம் மனதை கனமாக்க கூடிய கதையிது.

பேய் வீடு கதை ஒன்றுதான் இந்த தொகுப்பில் சோகத்தை தூண்டாத கதை. எல்லோருடைய பால்யத்திலும் அவரவர் ஊரில் இதை மாதிரி ஒரு பேய்வீடு அறிமுகப்படுத்தபட்டிருக்கும்.  யாருமில்லாத அந்த வீடுகளில் பேய்கள் உலாவுவதாக நம்பவைக்கப்பட்டிருப்போம்.

நம்பிக்கை என்ற கதையில் காலம் காலமாக மக்களின் மனதில் பால்யத்திலயே எப்படி மூடநம்பிக்கைகள் பதியவைக்கபடுகிறது என்பதை ஒரு சிறுவனின் கதாபாத்திரத்தின் மூலமாக தெரியப்படுத்துகிறார் ஆசிரியர்.  கதை முடியும் போது அழுது அரற்றும் சிறுவன் பாண்டியை தூக்கி வைத்து சமாதானப்படுத்த மட்டுமே நமக்கு தோன்றுகிறது.

புத்தகப் பெயரை தாங்கி வரும் சாமியாட்டம் கதை மிக முக்கியமானது. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் சமுகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர். கதையின் முடிவில் நமக்கே ஒரு விதமான எரிச்சல் வரக்கூடும் சில மனிதர்கள்மீது.

இன்னொரு கதையான வேண்டுதலில் பையனை தொலைத்து விட்டு தேடும் பெற்றோரின் மனநிலையை தமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளும் மனிதர்களை பற்றிச் சொல்லியிருக்கிறார்.

ஆகமொத்தத்தில் தன் இயல்பான எழுத்து நடையினால் இந்த புத்தகத்தை எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகமாக்கியிருக்கிறார் பாலபாரதி. யெஸ்.  எல்லாரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமிது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளயும் சொல்லுங்கள்.

சாமியாட்டம் .

புத்தக் ஆசிரியர் – பாலபாரதி. யெஸ்.

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியீடு.

விலை – 70 ரூபாய்.

******************************************************************************************

கண்ணன் ராமசாமி

க ரா க ரா

இவர் நிறைய வாசிப்பதில் விருப்பம் உள்ளவர் . எப்பொழுதாவது எதயாவது எழுதுவதிலும் விருப்பம் உண்டு. சமீபத்தில்தான் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.

நன்றி:- http://atheetham.com/story/samiyattam

This entry was posted in சிறுகதை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.