விடுபட்டவை 27.மே.2008

‘கமல் கவிதை படிச்சு இருக்கீங்களா.. என்னமா யோசிக்கிறார்ண்ணே?’

“ம்..ஆமா..”

‘ஞாநிக்கு என்ன திறமைண்ணே.. நாமெல்லாம் ஏன் இப்படி சிந்திக்கக்கூட முடியல?’

” 🙂 ”

‘மதன் எழுதின இந்த வார பதில் படிச்சீங்களா? எவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சு இருக்காங்க.. வியப்பா இருக்குண்ணே’

”ம்..”

‘சுஜாதா எழுத்து என்ன எழுத்துண்ணே.. இருபது வருசத்துக்கு முந்தியே இப்படி எழுதி இருக்காரே.., நாமெல்லாம் எப்ப இப்படி ஆகுறது?’

“ம்..ஆவலாம்.”

‘என்ன ஆச்சுண்ணே.. எல்லாதையும் சாதாரணமா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுது! ஒங்களுக்கு ஆச்சரியமே வரலையா?’

”எப்படீடா.. ஆச்சரியாம் வரும்?”

‘ஏன்ணே?’

”ஒன்னோட அப்பா என்னடா வேலை பார்த்தாரூ?”

‘ஒரு கம்பெனியில பியூனா வேலை பார்த்தாரு’

“எங்க அப்பா.. ஓட்டல் வைச்சு இருந்தாரு. ஒன் அப்பாவோட அப்பா என்ன வேலை செஞ்சாருன்னு தெரியுமா?”

‘வேற என்ன செய்வாய்ங்க.. வெவசாயம் தான்’

”என்னோட தாத்தா மீன் பிடிச்சாரு. அவங்களோட.. அப்பாக்கள் என்ன வேலை பார்த்திருப்பாங்கன்னு சொல்ல
முடியுமா?”

‘வெவசாயக் கூலியா வேலை பார்த்து இருப்பாங்க’

“பரவாயில்லை. தெரிஞ்சு வச்சு இருக்க.. நீ சொன்னியே சுஜாதா, ஞாநி, மதன் இவங்களோட அப்பாக்களும் தாத்தாக்களும் என்ன வேலை பார்த்தாங்கன்னு தெரியுமா ஒனக்கு?”

‘எல்லாரைப் பத்தியும் தெரியாது. ஆனா.. ஒருத்தரோட.. அப்பா பெரிய வக்கீலா வேலை பார்த்து இருக்கார். அவரோட அப்பா வெள்ளைக்காரன் காலத்துல துபாசியாகவோ என்னவோ.. வெள்ளைக்காரங்க கூட வேலை பார்த்திருக்கார்’

“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட
என்ன இருக்கு சொல்லு?”

‘……….’

– oOoOoOo –

சென்னை நகரின் சாலைகளில் இரு சக்கர வாகனம் ஓட்டுகிறவரின் கவனம் குறைந்தால் மட்டும் ஆபத்தில்லை.

வண்டியில் உட்கார்ந்து போகிறவரும் உஷார் நிலையில் இல்லை என்றாலும் ஆபத்து தான் போல் இருக்கிறது. கடந்த வாரம் ஒரு நண்பருடன் போய்க்கொண்டிருந்தான். நல்ல வேகத்தில் போய்க்கொண்டிருந்த வாகனம் திடீரென ஒரு வேகத்தடையில் ஏற.. வண்டியோட்டியும் நானும் சில நிமிடங்கள் ஆகாயத்தில் மிதந்து.., மீண்டும் வண்டியில் வந்து பொருந்திக்கொண்டோம். அந்த பதட்டம் குறையும் முன் வண்டியோட்டி சொன்னான். “சாரிண்ணே.. முன்னாடி போன வண்டியை ஒரு பொண்ணு ஓட்டிகிட்டு போச்சு, ரியர்வியூ கண்ணாடியில அது முகத்தை பார்த்துடலாம்னு வந்த வேகத்துல.. ஸ்பீடு பிரேக்கை கவனிக்கல.” அவனின் பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், நேற்றைய சம்பவம் எனக்கு ஹார்டட்டாக்கை வரவழைத்தது.

வேறு ஒரு நண்பருடன் ஒருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிக்னலின் திருப்பத்தில் வலதுபக்கம் திரும்ப வேண்டிய எங்கள் வாண்டி மீது ஒரு லாரி மோதுவது போல வந்து நின்றது. சின்ன இடைவெளியில் அவசரமாக கால் ஊன்றி வண்டியை பின்னுக்கு இழுத்து தப்பித்தோம். லாரிக்காரன் திட்டிக்கொண்டே பறந்து போனான்.

எப்படி அந்த விபத்து ஏற்படவிருந்தது என்று எனக்குள்ளே நான் குழம்பிக்கொண்டே இருந்த போது, அந்த நண்பர், ‘முன்னாடி போன சிவப்பு சுடிதாரை பார்த்துக்கிட்டே.. வந்தேனா.. எதிரில் வந்த வண்டியை பார்க்கலை.

நல்ல வேலை. தப்பித்தோம்.’ என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா.. இனி ஒரு இரு சக்கர வாகனத்தின் பின் அமர்ந்து செல்லுபவர்களும் சாலையின் மீது கண் வைப்பது அவசியம் என்பது புரிந்து போயிற்று.

– oOoOoOo –

மிஸ்டர் A ஒரு பிரபல வலைப்பதிவர். அவர் பார்த்திராத இன்னொரு மதவெறி பதிவர் மிஸ்டர் B. இரண்டாம் நபர் முதல் நபரைப் பற்றி தவறான தகவல்களையும், அவர் வேலை செய்யும் பற்றியும் தன் பதிவில், பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டம் வாயிலாக சொல்லி இருப்பதால்.. அதனை சேமித்துகொண்டு, மிஸ்டர் A தன் வக்கில் ஒருவரிடம் பேசி, மிஸ்டர் B க்கு நோட்டீஸ் (அலுவலக முகவரிக்கு) அனுப்பும் முனைப்புடன் இருக்கிறார். எப்படியும் கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தானே ஆகும். வெயிட் அண்ட் ஸீ!

– oOoOoOo –

காதல் அல்லது கவிதை அல்லது காதல்கவிதை அல்லது காதல்கவிதை மாதிரியான ஒன்று. இதில் ஏதோ ஒன்றை பிடிக்காத ஹைத்ராபாத் நாய் ஒன்று, நான் எழுதிய “நீ நான் மற்றும் முத்தம்” பதிவை மிகுந்த ஆபாசம் என்று சொல்லி கெட்ட வார்த்தைகளால்.. திட்டி விட்டு போய் இருக்கிறது. எனக்கும் எத்தனை கெட்ட வார்த்தைகள் (ஒரு பத்தாயிரம் தமிழில் மட்டும்! 🙂 ) தெரியும் என்று சோதித்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அடேய்.. நாதாரி… தைரியம் இருந்தால் சொந்த முகத்துடன் நேரில் வாயேன்.

– oOoOoOo –

வெற்றிகரமாக இரண்டு மாத ஓய்வு முடிந்து விட்டது. வேலையில் இல்லாத நாட்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். சற்று பெரிதாகிக்கொண்டே வருவதால் கிடப்பில் போட்டு இருக்கிறேன். ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் புதிய அலுவலகம் ஒன்றில் வேலைக்கு சேரச்சொல்லி அழைப்பு வந்துள்ளது. சேர்ந்துவிடுவேன் என்றே நம்புகிறேன்.

– oOoOoOo –