உள்ளம் கவர் கோமாளி – வேலு சரவணன்

 

“………………………….”

பள்ளியின் பிரார்த்தனை மைதானம் மாணவர்களால் நிரம்பி வழிகிறது. வழக்கமாக மாணவர்கள் கூடுமிடத்தில் இருக்கும் சிறு சத்தம்கூட அங்கே இல்லை. எல்லோரும் எதையோ எதிர்பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் பின் வரிசையில் ஆசிரியர்கள் டேபிள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

தூணில் மறைந்திருந்த கோமாளி ஒருவர், பலத்த ’ஹோய்’ ஓசையுடன் மாணவர்களின் மத்தியில் குதித்து வருகிறார். உடனடியாக ஆயிரம் வாட்ஸ் பாய்ந்த உற்சாகத்தில் மாணவர்கள் பதிலுக்கு எழுப்பும் குரல் விண்ணைத் தொடுகிறது. இத்தனை நேர நிசப்தம் இந்த ஆரவாரத்திற்கான முன் தயாரிப்புதானோ என்று சந்தேகம் எழுகிறது. அடுத்த ஒரு மணி நேரமும் அந்தக் கோமாளி, தன் குழுவினருடன் கதை சொன்னபடி நாடகம்போல நடித்துக் காட்டுகிறார். இடையிடையே மாணவர்களிடம் கேள்விகளையும் வீசுகிறார். அவர்களும் மிகுந்த உற்சாகமாக அக்கோமாளியின் கேள்விகளுக்குப் பதில் சொன்னபடி கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது, தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைத்து விடாதீர்கள். ‘வேலு மாமா’ என்று குழந்தைகளால் அன்புடன் கொண்டாடப்படும் பேராசிரியர் வேலு சரவணன் செல்லுமிடம் எல்லாம் இதே கதைதான். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லியாகவும், நாடகக் கலைஞராகவும் அறியப்பட்டு வரும் வேலு சரவணன், இந்த ஆண்டின் ‘செல்லமே‘ விருது நாயகனாகிறார். அவரிடம் பேசுவதற்காக உதவிப் பேராசிரியராக அவர் பணியாற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கே சென்று சந்தித்தோம்.

”புதுக்கோட்டை பக்கத்துல இருக்குற கம்பர் கோயில்ங்கிற கிராமம்தான் நான் பிறந்த ஊர். எனக்கு எங்க ஊர்னா ரொம்பப் பிடிக்கும். ஒரு கடை கூட அங்கே கிடையாது. அம்புட்டு சின்ன ஊரு. எவ்வளவுதான் சுத்தினாலும் எல்லா முகங்களுமே தெரிஞ்ச முகங்களாக இருக்கும். எல்லோரையும் உறவுமுறை சொல்லி கூப்பிட்டுக்குவோம். பன்னிரண்டாவதுக்கு அப்புறம் மேலே படிக்க வைக்க, எங்க அண்ணன் என்னை அருப்புக்கோட்டைக்கு அனுப்பி வச்சார். அப்பத்தான் இந்த ஊரையும் மக்களையும் பிரியுறோமேன்னு எண்ணம் வந்துச்சு. அதனால படிப்பு மேல எனக்குக் கோவம் வந்துச்சு. அந்தக் கோபம் இன்னமும் இருக்கு.

‘கட்டாயமா கல்லூரி போகணும்‘னு அண்ணன் ஏன் என்னைய அனுப்பினார்னா.. அந்த வருசம்தான் என்னோட அப்பா காலமானார். அப்பா இல்லாத பையனைப் படிக்கவிடாம தடுத்துட்டான்னு அண்ணனை யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, கஷ்டத்துலேயும் என்னைய கல்லூரிக்கு அனுப்பினார். நானும், அண்ணனுக்குக் கெட்டபேரு ஏதும் வந்துடக் கூடாதேன்னுதான் பி.எஸ்.ஸியே படிச்சேன். கல்லூரி ஆண்டுவிழாவுல நாடகம் எல்லாம் போட்டோம். அப்பத்தான் எனக்கு இதுல ஆர்வமே வந்தது. ஊருக்குள்ளேயும் நண்பர்களை வச்சுகிட்டு குட்டி குட்டியா நாடகங்கள் போட்டோம். கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு எழுதினதும், ஏதாவது வேலைக்குப் போயிடுவோம்னு தூத்துக்குடி பக்கம் பார்த்து வண்டி ஏறிட்டேன். ஏன்னா.. நான் பாஸாகவே மாட்டேன்னு நினைச்சேன். ரிஸல்ட் வர்ற அன்னிக்கு ’ரிசல்ட் பார்க்க வர்றியாடா?’ன்னு நண்பர்கள் போன் பண்ணி கூப்பிட்டாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன். ஆனா எப்படியோ பாஸாகிட்டேன். அதை நண்பர்கள் சொன்னபோது நம்பிக்கையே வரலை. அந்தச் சமயத்துலதான் தினசரி பத்திரிக்கைகளில் பாண்டிச்சேரியில நாடகத்துறை துவங்கப் போறாங்க. விருப்பமானவங்க விண்ணப்பிக்கலாம். பெரிய எதிர்காலமெல்லாம் இருக்குன்னு விளம்பரம் வருது. எனக்கு இந்த ஆட்டம் பாட்டத்துல ஆர்வம் இருக்குறது அண்ணனுக்கும் தெரியும். அவரு மனு போடச் சொன்னாரு. நானும் போட்டேன். இடம் கிடைச்சிடுச்சு. நாளைய சூப்பர் ஸ்டார் நாமதாண்டான்னு நினைச்சுகிட்டு வந்துட்டேன். ஆனா.. வந்த பிறகுதான் தெரிஞ்சது. இந்த உலகமே வேறன்னு. கொஞ்சம் மனசு சோர்வானாலும், சீக்கிரமே என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன்.

இங்கே வந்த பிறகுதான், நாடகத்துலேயே இத்தனை வடிவங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. நமக்கான இடம் இதுதான்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அதோட இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் மாதிரியான இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்திருக்காங்க. அதோட, இந்தத் துறையில படிக்க வந்தவங்களிலேயே நான்தான் வயசுலேயும் உருவத்துலேயும் சின்னப் பையன். மத்தவங்க எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க. இவங்க மூலமா வாசிப்புப் பழக்கமும் எனக்கு ஏற்பட்டுச்சு. பல புதிய விசயங்களும் அறிமுகமாச்சு.

அப்போ ஒரு நாடக விழா நடத்தினாங்க. அதுக்கு இயக்குனர் பாலச்சந்தர் எல்லாம் வந்திருந்தாங்க. மத்தவங்க நாடகங்களில் திரைக்குப் பின்னாடிதான் எனக்கு வேலை. நடிக்க வாய்ப்பு கிடைக்கலை. நான் ரொம்ப சின்னப் பையனா இருந்தது ஒரு காரணம். சின்ன வயசுல என்னோட தாத்தா சொன்ன கதை கடல் பூதம். என்னோட ஆசிரியர்கள்கிட்ட அனுமதி வாங்கி, அந்தக் கடல் பூதத்தை சிறுவர் நாடகமாக்கினேன். கூட படிச்சிகிட்டு இருந்தவங்கள வச்சே நாடகத்தைப் போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். எல்லோரும் பாராட்டினாங்க. அந்த விழாவுக்கு, பாண்டிச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் வந்திருந்தார். அவருக்கும் நாடகம் பிடிச்சிருந்தது. ‘பாண்டிச்சேரியில் இருக்குற எல்லா பள்ளிகளிலும் இதை நாடகமாகப் போடுங்க‘ன்னு சொல்லிட்டார். சந்து சந்தாக பாண்டிச்சேரி முழுக்க கடல் பூதம் போயிட்டு வந்தது. இதுவரைக்குமே சுமார் நாலாயிரம் தடவை போட்டிருக்கேன். அதேமாதிரி ‘குதூகல வேட்டை‘ன்னு ஒரு நாடகம். இதை மூவாயிரம் முறைக்கும் மேல் போட்டிருக்கோம். ‘தேவலோக யானை‘ன்னு ஒரு கதை. இதையும் ஆயிரம் முறைக்கு மேல போட்டிருக்கோம்.

வானரப்பேட்டைங்கற இடத்துலேயிருந்து நாடகம் போட ஒரு ஆசிரியை கூப்பிட்டாங்க. சரின்னு போய் இறங்கினா, அத்தனையும் பால்வாடி பசங்க. குட்டிக் குட்டி பாப்பாக்கள். அவங்களைச் சிரிக்க வைக்கணும். சவாலா எடுத்துகிட்டு கடல் பூதம் நாடகம் போட்டேன். அதுல ‘குபீர்‘னு பூதம் வந்தபோது, ஒரு பாப்பா ‘வீல்‘னு அலறிடுச்சு. அம்புட்டுதான்.. அங்க இருந்த ஆயா வெளக்குமாத்தைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. கடுமையா, ‘போங்கடா வெளியே‘ன்னு திட்டினாங்க. ஆனா, டீச்சர் ஆயாவைச் சமாதானப்படுத்தி, அந்தப் பாப்பாவைத் தூக்கிகிட்டு வெளியில போனாங்க. பூதம் வேடம் போட்டவன் ஒரு சின்னப் பையன். அவன் ஆயாவுக்குப் பயந்துகிட்டு தூணுக்குப் பின்னாடி போய் ஒளிஞ்சுகிட்டான். வெளியில வரல. அப்புறம் அவனையும் சமாதானப்படுத்தி அழைத்துவந்து நாடகம் போட்டோம். அந்த முழு நாடகத்தையும், பயந்து அழுத அந்தப் பாப்பா வெளியே இருந்த ஜன்னல் வழியா பார்த்துகிட்டே இருந்தது. கண்ணுல நீர் கோர்த்து இருந்த அந்தப் பாப்பா, ஒரு கட்டத்துல குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சது. இதை என்னால என்னிக்குமே மறக்க முடியாது.

பொதுவாகவே, நான் போற இடத்திலெல்லாம் பள்ளிக்கு ஒரு கோமாளி வேண்டும்னு பேசுவேன். ‘பாடம் பாடம்‘னு மாணவர்கள் சோர்ந்துபோய் இருக்கும் சமயம், திடீர்னு கலர் கலரா ஆடை அணிஞ்சுண்டு ஒரு பபூன் வகுப்பறைக்குள் வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்? பட்டுக்கோட்டையில் ஒரு பள்ளியில இதை நடைமுறைப்படுத்தி இருக்கோம்னு அவங்க எனக்குச் சொன்னபோது உண்மையிலேயே ரொம்ப சந்தோசப்பட்டேன்.

வேலு சரவணன்

வேலு சரவணன்

நாடகம்னாலே, அது இரவு நேரத்துல போட்டாதான் நல்லா இருக்கும்னு ஒரு கருத்து இருக்கு. ஆனால், என்னோட நாடகங்களில் பலவும் பகலில் வெளிச்சத்தில் போட்டதுதான். அதோட, ‘நாடகம் போடப்போற இடத்துல மேடை வேணுமா சார்?’னு கேப்பாங்க. நான், வேண்டாம்னு சொல்லிடுவேன். குழந்தைகளையும் உள்ளடக்கிச் செய்யறது என்னோட நாடகமுறை. அதுக்கு எதுக்கு தனியா மேடை? எனக்கு மேடையின்னா, என்னிக்குமே அது குழந்தைகளின் மனசுதான்.

படங்கள்: வேலுசரவணனின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து.

நன்றி: செல்லமே மாத இதழ் டிசம்பர்-2014

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , | Leave a comment

துலக்கம் – விமர்சனங்கள்

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து பரபரவென படித்து முடிக்கும்போது மணி 1.20. சமீபத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்ததாய் நினைவில்லை. பக்கங்கள் குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக வாசிக்க வைக்க சுவாரச்சியம் , எழுத்துநடை இல்லாவிட்டால் நிச்சயமாக முடியாது.

முதல் அத்தியாத்தில் க்ரைம் நாவல் போல் தொடங்கும் பரபரப்பு , பின் பதைபதைப்பாகி , கல்யாண் கமலாவோடு கலங்கி நின்று , கடைசியில் அஸ்வின் திரும்ப கிடைத்தும் ஆசுவாசம் அடைகிறோம்.

கதை ஊடே காவல்துறை குயர் நோட்டுக்கு பதில் , மொபைல் ரீசார்ஜ்க்கு மாறியதிலிருந்து , எதற்கெடுத்தாலும் வட மாநிலத்தவர் மீது குற்றம் சாட்டும் மனப்போக்கை சாடுவது வரை நடப்பு சங்கதிகளையும் சாடிக் கொண்டே செல்கிறார்.

ஆனால் , கதைக்கரு ஆட்டிசம் நிலை கொண்ட பையனை பற்றியதாக இருப்பது புதிது. கதைக்கருவாக ஆட்டிசம் நிலையை எடுத்ததற்கு காரணம் பாலாவுக்கு உண்டு , முன்னர் ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ கட்டுரை வழியே சொல்லிய பல சேதிகள் கதை வடிவில் கொடுத்தால் நிறைய பேருக்கு எளிதாக சென்று சேரும் என்பதுதான். அதை இந்த நாவல் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது.

ஆட்டிசம் குழந்தைகளுக்கான உணவு கட்டுப்பாடுகள் பற்றி பேச இந்த கதையில் வாய்ப்பிருந்தும் பாலா எப்படி அதை தவறவிட்டார் எனத் தெரியவில்லை.

ஆட்டிசம் என்ற சொல்லே பாலா சொல்லதான் முதன்முறை பரிச்சயம் எனக்கு , இங்கு ஆட்டிசம் என்றால் ஏதோ மனநோய் என்ற பிம்பம்தான் நிலவிக்கொண்டிருக்கிறது. அந்த பிம்பத்தை உடைத்து , அந்த பிள்ளைகளின் வலியை , அவர்களின் பெற்றோர்களின் மனநிலையை எல்லோருக்கும் விளங்க வைக்கும் நாவல்.

ஆட்டிசம் பற்றிய புரிதல் பெற்றோருக்கும் , அந்த பிள்ளைகளின் உறவினர்களுக்கு மட்டும் இருந்தால் போதாது , இந்த சமூகம் முழுமைக்கும் தேவை. அப்போதுதான் அந்த பிள்ளைகள் அவர்களின் உலகில் சுதந்திரமாக எல்லோரைப் போல வாழும் சூழல் உருவாகும்.

நீங்களும் படியுங்கள் , உங்களை சுற்றி இருப்பவர்களும் படிக்க பரிந்துரை செய்யுங்கள்.

துலக்கம் என்றால் தெளிவு என்று பொருள் – உண்மைதான் , ஆட்டிசம் நிலை பற்றிய தெளிவை உருவாக்கும் நாவல் இது.

நன்றி :- ப்ரியன் (கூகிள் ப்ளஸ்+ பேஸ்புக்கில்)

_____________________________

நண்பன் பாலபாரதியின் “துலக்கம்” நாவலை படித்தேன். சுவாரஸ்யமான நாவல். ஆட்டிஸம் குழந்தை ஒன்றை பற்றிய கதை. பாலாவின் மொழி மேலும் நுட்பமடைந்துள்ளது. வாழ்த்துகள் நண்பா… ஒரு சினிமாவாகவோ குறும்படமாகவோ எடுக்கலாம் அவ்வளவு இயக்கமும் சலனமும் உள்ள கதை.

நன்றி :- இளங்கோ கிருஷ்ணன் (பேஸ்புக்கில்)

————————————
’மதி இறுக்கம்’ என்று கூறப்படும் ‘ஆட்டிசம்’ தொடர்பாக கட்டுரைகள் தமிழில் மிகக் குறைவு. திரைப்படங்கள் கூட பெரிதாக எதுவும் வந்தது போல தெரியவில்லை.

ஆனால் அதனை மையப்படுத்தி ஒரு த்ரில்லர் நாவலே வந்திருக்கிறது.

’துலக்கம்’

நண்பர் யெஸ். பாலபாரதி எழுதியிருக்கும் இரண்டாவது நாவல் துலக்கம். விகடன் வெளியீடு. விலை ரூ. 85.

ஆட்டிசம் என்பது குறித்து தெரியாதவர்களுக்கு கூட எளிதில் புரியும் படியாக அருமையான எழுத்து நடை.

ஒருவகையில் பார்க்கப் போனால் இனிமேல் தமிழில் நாவல்கள், பெருங்கதைகள் எல்லாம் இனிமேல் இது போன்ற ஃபார்மட்டுக்கு மாறினால் தான் பிழைக்க முடியும்.

சுவாரசியத்திற்கு சுவாரசியம்.. விறுவிறுப்பு.. தகவல்கள்.. என்று பல்சுவை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தி.

நன்றி: மாயவரத்தான் கி ரமேஷ்குமார் (பேஸ்புக்கில்)

_______________________

நண்பர் யெஸ்பாலபாரதியின் `துலக்கம்’ நாவல் வாசித்தேன். தலைப்பே நாவலின் உள்ளடக்கத்தின் பல விசயத்தை சொல்கிறது.

போண்டாவை திருடி திண்ண கேஸுக்காக போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நையப்புடைக்கப்பட்ட இளைஞனிடம் விசாரணை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து நாவல் விறுவிறுப்பாக பயணிக்கிறது.

எந்த விசாரணைக்கும் அசராத அந்த இளைஞன் யார் என்பதில் பல்வேறு சஸ்பென்ஸ்கள்.

வட நாட்டு கள்ள நோட்டு கும்பலை சேர்ந்தவனாக இருப்பானோ என்றெல்லாம் சந்தேகத்துடன் பயணிக்கும் நாவலில் நம் காவல்துறையின் மெத்தனங்களும், விசாரணைமுறைகளும் விமர்சிக்கப்படுவதுடன், ஆட்டிஸம் பாதிப்பையும் இணைத்து விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் பாலபாரதி.

ஆட்டிஸம் பாதிப்பு குறித்து சமீபமாகதான் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

அந்த பணியை தனது இரண்டாவது நாவலான `துலக்கம்’ மூலம் சிறப்பாக செய்திருக்கும் நண்பர் பாலபாரதிக்கு வாழ்த்துகள்.

நன்றி : கார்டூனிஸ்ட் பாலா (பேஸ்புக்கில்)
———————

சில விஷயங்களை ஒரே பார்மட்டில் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடக்கூடாது. வேறு வேறு வடிவில் வேறு வேறு சுவையுடன் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். யெஸ்.பாலபாரதி அண்ணன் அதைத்தான் செய்கின்றார். ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ புத்தகம் தமிழ் சூழலில் நிச்சயம் ஒரு பொக்கிஷம். சுமார் 12-13 கட்டுரைகளில் ஆட்டிசம் பற்றிய புரிதலை எளிய வடிவில் பெற்றோர்களுக்கு கொடுத்தார். அந்த புத்தகத்தினை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்க்கும்போது தான் அந்த புத்தகத்திற்கான அண்ணனின் உழைப்பு இன்னும் புரிந்தது. ஆரம்பத்தில் அழுகையே மேலிட்டது. ஆட்டிச குழந்தையில் பெற்றோரில் வலியினை நினைத்து. அப்போது அண்ணனின் கம்பீர முகம் முன்வந்து Go ahead என்றார். (விரைவில் அந்த புத்தகம் வெளிவரும்)

துலக்கம் ஒரு த்ரில்லர் நாவல் வடிவில் ஆட்டிச குழந்தையின் அக உணர்வுகளை பேசும் நாவல். இதிலும் பெற்றோரின் வலிகள், தவிப்புகள், இயலாமை அத்தனையும் வெளிப்படும். நிச்சயம் நாவலை வாசிக்கும் முன்னரும் முடிக்கும்போதும் ஆட்டிசம் பற்றிய புரிதல் பெருமளவிற்கு மாறி இருக்கும். ஒரு நூல் வெளிவருவதற்கு முன்னரே அதனை வாசித்து அதை பற்றிய கருத்தினை கூறுவது அலாதியான அனுபவம். நாவல் எழுதப்பட்டு சுடச்சுட வாசித்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் மிகுந்த சந்தோஷம். நேற்று கைகளில் அச்சாகி பார்த்தபோது சந்தோஷமாய் இருந்தது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றவர்கள் உறவினர்கள் மட்டும் ஆட்டிசம் பற்றி அறிந்துகொண்டால் போதாது, எல்லா பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களும் நம்மைபோன்ற மனிதர்கள் தான், ஒரு சின்ன குறைபாடு உள்ளது அவ்வளவே என்பதனை உணரவேண்டும். in fact, அவர்களை சுற்றி இருப்பவர்கள் தான் அதிகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது. ‘துலக்கம்’ வரவேற்கப்படவேண்டிய நூல். அவசியம் வாங்கி வாசியுங்கள்.

நன்றி: உமாநாத் செல்வன் @ விழியன் (பேஸ்புக்கில்)

 

 

Posted in கட்டுரை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , , , , | Leave a comment

துலக்கம் – விமர்சனங்கள்

துலக்கம்

அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை பிறழ்ந்தவன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு பழகிய அனுபவம் கொண்டவரான பாலபாரதி இந்த செய்தியை ஓர் இணையத்தளத்தில் வாசிக்கிறார். அவருக்குள் ஒரு குறுநாவலுக்கான கரு தோன்றுகிறது. அதுதான் ‘துலக்கம்’.

சமீப பத்து, பதினைந்து வருடங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு மாற்றங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டு வருகிறது. வாழ்வு குறித்த புரிதல்களை தெளிவாக்கிக் கொண்டு, அதை எதிர்கொள்வது குறித்த தீர்வுகளை முன்வைப்பதே பொதுவாக இலக்கிய நாவல் மரபு. உயர்தர மொழி கட்டமைப்பில், எளிய வெகுஜனவாசகர்கள் சுலபத்தில் அணுகிவிட முடியாதபடி, அறிவுஜீவிகள் பொத்தி பொத்தி பாதுகாத்த இலக்கியம் இன்று அனைவருக்குமானதாக மாறிவருகிறது. குறிப்பாக சிறு பத்திரிகைகள் தங்களுடைய கறார்தன்மையில் சமரசம் செய்துகொண்டு ‘எல்லோருக்குமானது இலக்கியம்’ என்று செயல்பட துவங்கியிருக்கும் காலக்கட்டம் இது. இதன் மூலமாக இதுவரை தீவிர இலக்கியம் என்று பேசப்பட்டதற்கும், வெகுஜன வாசிப்புக்கான எழுத்துகளுக்கும் இடைநிலையில் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமாக உருவாகி வருகிறார்கள். மரபான நாவல்முறையை உடைத்து புதிய வடிவங்களை முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பின்நவீனத்துவ எழுத்தாளர்களும் இதே காலக்கட்டத்தில்தான் கோலோச்சி வருகிறார்கள் என்றாலும், அவர்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்பவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

இந்த புதிய போக்கில் பத்திரிகையாளர்களும் புனைவிலக்கியம் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருப்பது ஒரு முக்கியமான திருப்பம். குறிப்பாக பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற எழுத்தாளர் மனோஜை குறிப்பிடலாம். முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை தமிழில் எழுதியிருக்கும் இவரது எழுத்துப்பாணி ‘ரிப்போர்ட்டிங் ஸ்டைல்’ என்று சொல்லக்கூடிய வெகுஜன பத்திரிகை நடையில், இதுவரை இலக்கியம் என்று நம்பப்பட்ட மதிப்பீடுகளை கதையாக்குவது. ‘துலக்கம்’ நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். யெஸ்.பாலபாரதியும் சுமார் பதினைந்து ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர். குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதை நேரடியாக அங்கேயே சென்று, குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு ரிப்போர்ட்டிங் செய்தவர்.

‘துலக்கம்’ – காணாமல் போன ‘அஸ்வின்’ என்கிற சிறுவனைப் பற்றிய துல்லியமான ரிப்போர்ட்டிங். இருவேறு கிளைகளில் பிரிந்து பயணிக்கும் கதையை, கடைசி அத்தியாயத்தில் ஒன்றிணைக்கும் வழக்கமான பாணிதான் என்றால், பத்திரிகையாளருக்கே உரிய விவரணைகளோடு ‘ஆட்டிஸம்’ என்கிற மனகுறைபாடு குறித்த பார்வையை எல்லோருக்குள்ளும் ஆழமாக விதைக்கிறது.

நகரில் கள்ளநோட்டு கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் இதற்காக நகரெங்கும் ஊடுருவியிருப்பதாக ஒரு தகவல். இத்தகைய சூழலில் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒரு சிறுவன் மாட்டுகிறான். தோற்றத்திலும், நடவடிக்கையிலும் வித்தியாசமாக தோன்றும் அவன்மீது சந்தேகப்படுகிறார்.

இதே நேரம் சென்னை புறநகர் மடிப்பாக்கத்தில் கல்யாண் என்பவர் தன்னுடைய மகன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவனுக்கு ஆட்டிசப் பாதிப்பு இருப்பதாக விசாரணையில் கூறுகிறார். புகாரை வாங்கும் போலிஸ்காரர்களோ ஆட்டிஸம் என்பதை மனநிலை தவறியதாக புரிந்துக் கொள்கிறார்கள். இப்படியாக இரண்டு டிராக்குகளில் கதை நகர்கிறது.

முருகன் தன்னிடம் மாட்டிய சிறுவனை விசாரிக்கும் முயற்சியில் ‘ஆட்டிஸம்’ பற்றி அறிந்துக் கொள்கிறார். கல்யாண் தன்னுடைய மகன் தொலைந்த சோகத்தில் இருக்கும்போது ப்ளாஷ்பேக்கில், தன் குழந்தைக்கு ஆட்டிஸம் என்று கண்டறிந்ததில் இருந்து, அதிலிருந்து அவனை மீட்க செய்யும் போராட்டங்கள் என்று கதை விரிகிறது.

துலக்கம் என்கிற சொல்லுக்கு குத்துமதிப்பாக ‘விசாரணை’ என்று பொருள் கொள்ளலாம். ‘துப்புதுலக்குவது’ என்று ஏற்கனவே நமக்கு பரிச்சயமான வார்த்தையில் வரும் ‘துலக்குவது’தான் துலக்கம். ஆட்டிஸம் குறித்த விசாரணை என்று துலக்கத்தின் ஒன்லைனர் அமைந்திருப்பதால், மிக கச்சிதமாக கதைக்கு தலைப்பு பொருந்துகிறது.

கரணம் தப்பினாலும் டாக்குமெண்டரி ஆகிவிடக்கூடிய கதையை சுவாரஸ்யமான நடையில் சிறப்பான நாவலாக உருவாக்கியிருக்கிறார் பாலபாரதி. அனேகமாக ‘ஆட்டிஸம்’ குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவலாக இதுவாகதான் இருக்கக்கூடும். எழுதத் தெரிந்த யாருமே எதைப்பற்றியும் எழுதிவிடலாம் என்று தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் இம்மாதிரி குறிப்பிட்ட ஒரு பிரச்சினை சார்ந்த எழுத்தை எவ்வித தர்க்கப்பிழையுமின்றி எழுதுவதற்கு சலிக்காத உழைப்பும், அப்பிரச்சினை குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும். பாலபாரதிக்கு இருந்திருப்பதால் ‘துலக்கம்’ சாத்தியமாகி இருக்கிறது. எளிதில் வாசிக்கக்கூடிய நடையை மிகக்கவனமாக அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால், ‘ஆட்டிஸம்’ குறித்த விழிப்புணர்வு எல்லா தரப்புக்கும் போய்ச்சேர வேண்டும் என்கிற அக்கறை இருப்பதை உணரமுடிகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வாசித்தாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கச்சிதமான எடிட்டிங். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்துக்கு மட்டுமல்ல, சமூகம் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்த புரிதலுக்காகவும் துலக்கத்தை அனைவரும் வாசிக்கலாம்.

நூல் : துலக்கம்
எழுதியவர் : யெஸ்.பாலபாரதி
பக்கங்கள் : 128
விலை : ரூ.85
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணாசாலை, சென்னை-600 002
போன் : 044-42634283/84 மின்னஞ்சல் : books@vikatan.com
—-
நன்றி :- யுவகிருஷ்ணா

http://www.luckylookonline.com/2014/06/blog-post_28.html

 

Posted in கட்டுரை, புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வீடியோ | Tagged , , , , | Leave a comment