மகிழ்ச்சியைப் பகிர்தல்!

ஈரோட்டில் இருந்து இன்று காலை ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் ஓர் அமைப்பாய் ஒன்று திரள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்த அமைப்பின் முதல் கூட்டம் இன்று தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். நானும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். நீங்கள் பள்ளிக்கு வந்து உரை நிகழ்த்திய பின்னர்தான் இப்படி அமைப்பாய் திரளவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது அதற்கு உங்களுக்கும் நன்றி எனப் பாராட்டினார். உண்மையில் அந்த பாராட்டு பெரும் மனமகிழ்வைக்கொடுத்தது. ஜெயபாரதி அம்மா ஏற்கெனவே பல நற்செயல்களைச் செய்துகொண்டிருப்பவர்தான். அவரது பார்வையை கொஞ்சம் இந்த மாற்றுத்திறன் குழந்தைகள்+ அவர்தம் பெற்றோர் பக்கமும் திருப்பி விட்டிருக்கிறேன் அவ்வளவுதான்.

ஆட்டிசம் என்னும் உலகினுள் நாங்கள் நுழைந்தபோது எங்களுக்கு கை நீட்டி உதவிட யாருமே இல்லை. தனித்து நின்றுகொண்டிருந்தோம். அதற்கு முன் இங்கே எந்த பெற்றோரிய செயல்பாடுகளும் தனித்து நடந்தேறியதில்லை. சிறப்புப்பள்ளிகள், தெரபி வழங்கும் தனி நபர்கள் ஆகியோர் அவர்கள் அளவில், தங்களை முன்னிலைப் படுத்தி மட்டுமே சில கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். அவற்றில் எந்த நிகழ்விலும் பெற்றோருடன் வரும் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள எந்த உதவியும் இருக்காது. கட்டணம் பெற்றுக் கொண்டு அவர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளுக்குக் கூட குழந்தைகளை அழைத்துச் செல்லமுடியாது. வாங்கும் காசுக்கு உணவு, தேநீர் அதுவும் high tea என்றெல்லாம் கொடுத்தாலும் கொடுப்பார்கள், குழந்தைகளுக்கு மட்டும் நோ எண்ட்ரி.

இந்த சிக்கல்களைப் பற்றி நாங்கள் தொடர்ச்சியாக விவாதித்து, சில முடிவுகளை எடுத்தோம். 2014ஆம் ஆண்டு முதன்முதலாகப் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்தோம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, பண்புடன் இணையக்குழுமத்தில் இருந்து நிறைய நண்பர்களை தன்னார்வலர்களாக அழைத்திருந்தேன். குழந்தைகள் விளையாடி மகிழ ஏர் பலூன் போன்ற ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இசைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஆட்டிச நிலைக் குழந்தைகளை மேடையேற்றிப் பாடல் பாடுவதற்கும் ஏற்பாடு செய்தோம்.

எப்போதும் சொற்பொழிவாற்றும் வழக்கமான நபர்களை நகர்த்தி வைத்துவிட்டு, ஒலிப்பெருக்கியை பெற்றோர் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தோம். இளைய பெற்றோர்கள் தங்கள் ஐயங்களை, அச்சங்களை கேள்விகளாக முன் வைத்தனர். மூத்த பெற்றோர்கள் தங்கள் பயணத்தை, அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள உற்சாகப்படுத்தினோம். மிகுந்த ஆரோக்கியமான உரையாடலாக அந்த நிகழ்வை நடத்தி முடித்தபோது நிறைவாக இருந்தது. சென்னை தவிர்த்து வேறு சில ஊர்களிலும் பெற்றோர் கூட்டங்களை ஏற்பாடு செய்து உரையாற்றினேன். தொடர்ச்சியாக நடந்த அந்த கூட்டங்களில் எல்லாம் பெற்றோர் தாமாகவே முன்னிருந்து சந்திப்புகளை நடந்தவேண்டும் என வேண்டிக்கொண்டோம். பின்னர் அந்நிகழ்விலிருந்து ஊக்கம் பெற்ற சில பெற்றோர் குழுக்களை ஏற்படுத்தி நடத்த ஆரம்பித்தனர்.

‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ எனும் எனது நூல் கிடைக்கும் தெரப்பிகள், உணவு முறைகள், களையப்பட வேண்டிய கற்பிதங்கள், நம்பிக்கையூட்டும் மனிதர்கள் என அடிப்படை விஷயங்களை விளக்கி, ஆட்டிசக் குறைபாட்டின் தன்மைகளைப் புரிந்து கொள்ள உதவும்படி எழுதப்பட்டது. அடுத்து வெளியான லக்ஷ்மியின் ‘எழுதாப் பயணம்’ நூலோ எங்கள் குழந்தை வளர்ப்பு அனுபவத்தை படிப்படியாக முன்வைத்து, ஒவ்வொரு கோணத்திலும் இளம் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய புள்ளிகளை அடையாளப்படுத்தியது.

அடுத்தது ‘அரும்பு மொழி’ செயலி. பேச இயலாத ஆட்டிச நிலைக் குழந்தைகளின் தகவல் தொடர்புத் துணைவனாக முன்வைத்த இந்த செயலி தொடர்ந்து பலருக்கும் பயன்தந்து கொண்டிருக்கிறது.

அதைப் போலவே சிறப்புக் குழந்தை வளர்ப்பில் தந்தையரின் பங்களிப்பு, அதன் தேவை, முக்கியத்துவம் குறித்து மட்டும் விரிவாகப் பேசும் கூட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தேன். இங்கே நம் சமூகம் பொதுவாகவே குழந்தை வளர்ப்பை பெண்களின் பொறுப்பாகவும், ஆண் அதில் உதவி செய்பவனாகவோ அல்லது பார்வையாளனாகவோ இருந்தால் போதும் என்றே நம் உள்ளத்தை வடிவமைக்கிறது. அந்த பொதுவான சிந்தனைகளை உதறி, தந்தையரும் பொறுப்புகளை கையிலெடுத்தால் வாழ்கைப் பயணம் எத்தனை எளிமையாக மாறும் என்பதை பல பெற்றோருக்கும் உணர்த்தக் கிடைத்த வாய்ப்பு அது. பல சகோதரிகள் நேரடியாக அளித்த பின்னூட்டங்கள் அந்த முன்னெடுப்பின் முக்கியத்துவத்தை உறுதிப் படுத்தின.

பெற்றோர் நடுவே செயல்படுவதைப் போலவே பொது சமூகத்தில் விழிப்புணர்வை முன்னெடுப்பதையும் இன்னொரு புறம் தொடர்ந்து செய்து வருகிறோம். துண்டு நோட்டீஸ் அச்சடித்து, ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என பல இடங்களில் ஆட்டிசம் விழிப்புணர்வு விநியோகம் செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துமே நட்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் ”ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் அன்று அது குறித்த ஒரு செய்தியோ, கட்டுரையோ அசியம் வெளியிடுங்கள்” என்று தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்துவிடுவேன். அவர்களில் பலரும் செய்கின்றனர். தொடர்ந்து அச்சு இதழ்களிலும், இணையத்திலும் எழுதுவது, பேசுவது என இச்சமூகத்தின் தேவைகளை, வலிகளை கவனப்படுத்தி வருகிறோம்.

அவ்வப்போது சிறப்புக் குழந்தைகள் காணாமல் போவதும், பிறகு கண்டுபிடிக்கப்படுவதும் நடக்கிறது. அதில் தருண் குப்தா போல சில சிறுவர்கள் நிரந்தரமாகவே காற்றில் கரைந்து போய்விடுவதும் நடக்கிறது. எனவே சமூக உதவியாளர்களான காவல் துறையினருக்கு இக்குழந்தைகளின் தன்மையை விளக்குவது அவசியம் என்பதால் அவர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் கலந்து கொண்ட ஒரு காவல் துறை அதிகாரி, காணாமல் போன ஒரு குழந்தையை சரியான விதத்தில் கண்டறிந்து, அவரது விடுதியில் சேர்த்தார். இதைப் பற்றி அறிந்து கொண்டபோது சரியான திசையில்தான் பயணிக்கிறோம் என்ற உணர்வு கிடைத்தது.

இதோ இப்போது ஈரோடு பெற்றோர் சங்கத்தின் தொடக்கம் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு உற்சாக வெகுமதி. இந்தப் புள்ளியில் நின்று இதுவரையிலான பாதையை, பயணத்தைத் திரும்பிப் பார்க்கையில் நம்மால் இயன்றவரை சிறப்பாகவே செய்திருப்பதாக நிறைவாக உணர்கிறோம். ஆனால் கொரோனாவாலும் வேலைப் பளுவாலும் சற்று வேகம் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. இன்னமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் பெரிது.

பதினெட்டு வயது நிறைந்த சிறப்புக் குழந்தைகளுக்கு சட்டரீதியிலான காப்பாளர் பொறுப்பேற்பது, பணம் சொத்து போன்றவற்றை நமக்குப் பின் குழந்தைகளுக்கு அளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விஷயங்களைப் பற்றி இன்னமும் இங்கே போதுமான விழிப்புணர்வு இல்லை. அதைப் பரவலாக்க வேண்டியுள்ளது. போலவே இக்குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிலும் நிறைய தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இது போன்ற விஷயங்களில் இனி வரும் நாட்களில் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்பதே எங்கள் இப்போதைய இலக்கு.

கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது எங்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே இப்பதிவு.

+++++++++++

தொடர்புடைய பதிவு

மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்