மரப்பாச்சி சொன்ன ரகசியம்

நண்பர்களுக்கு வணக்கம்.

ஓர் புதிய அறிவிப்பு!

உலக புத்தக நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் எழுதிய, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நாவலை இன்றுமுதல் மக்களுக்கானதாக அறிவிக்கிறேன்.

குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பதற்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும், அவர்களுடைய உடல் மீதான அவர்களின் உரிமை என்ன என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும் இச்சிறுபடைப்பின் வழியாக முயன்றுள்ளேன்.

தமிழ் கூறு நல்லுலகம் இப்படைப்பை இருகரம் கொண்டு வரவேற்று, விருதளித்து கௌரவித்தது.

இன்னும் இன்னும் பல இடங்களில் குழந்தைகளின் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையும்,  தான் பாதிக்கப்படுகிறோம் என்பதை அறிவதில்லை. பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள், தங்களைத் தாங்களே குற்றவாளிகள் என்று  நினைக்கின்றனர். அப்படி எண்ணத் தேவை இல்லை என்பதையும் பிள்ளைகளுக்குப் புரியும் மொழியில்,  இந்த மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதையில் கூறி உள்ளேன். குழந்தைகள் மீது சமூகத்தின் தீவிர கவனம் கோரும் ஆவணம் இது.

இச்சிறார் நாவல், இன்னும் பல நூறு குழந்தைகளிடம், பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், பல சமூகத் தளங்களைச் சேர்ந்தவர்களையும் சென்று சேரவேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.

 à®Žà®©à®µà¯‡, மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்னும் இப்படைப்பை தமிழ்நாட்டு மக்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். 

இன்று முதல் தமிழில் எவரும் இந்த சிறார் நாவலை பதிப்பித்துக் கொள்ளலாம்.

இக்கதையை அச்சு தவிர்த்த (மின்னூல், கிண்டில் நூல், பி.டி.எப், ஆடியோ, வீடியோ, திரைப்படம், குறும்படம் போன்ற..) இதர வடிவத்தில் பயன்படுத்த, பிற மொழிகளில் இக்கதையை மொழியாக்கம் செய்ய, படைப்பாளராக என்னிடம் அனுமதி பெறவேண்டும் என்பதையும் இத்தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த அறிவிப்பு குறித்த என் முடிவை வரவேற்று, ஆலோசனைகள் வழங்கி, உற்சாகப்படுத்திய அண்ணன்கள் அப்பண்ணசாமிக்கும், யூமாவாசுகிக்கும் தோழமையின் பேரன்பு.

மரப்பாச்சி சொன்ன ரகசியம்- இனி மக்கள் சொத்து. இதைப் பரவலாகக் கிடைக்கச் செய்து,  நம் பிள்ளைகளுக்கு அவர்களின் உரிமையையும், சுரண்டல்களை எதிர்க்கும் தைரியத்தையும் வழங்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

அன்பன்

-யெஸ்.பாலபாரதி

23 ஏப்ரல் 2022

மரப்பாச்சி சொன்ன ரகசியம்- முழு சிறார் நாவலும் இங்கே:

முன்னுரை

அன்பான தம்பி, தங்கைகளே!

இந்த கதையின்வழி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும், ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினி தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடம் எளிதாகச் சொல்லிவிடமுடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது.

இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணிதான். இதை வெறும் கதையாக கடந்துபோய்விட வேண்டாம். இது பற்றி, உங்கள் அம்மா அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும்.

மரப்பாச்சி உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் சாகசத்தைப் படிக்க, உங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறேன். எப்போதும் என் எழுத்துக்குத் துணை நிற்கும் மனைவி லஷ்மிக்கும், மகன் கனிவமுதனுக்கும் அன்பு!

இன்றுமுதல் (23.04.2022) இந்த கதையை நாட்டுமக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இனி இக்கதை மக்கள் சொத்து, இக்கதை அச்சு வடிவில் பலருக்கும் சென்று சேரவேண்டும் என்னும் எனது ஆசை நிறைவேறட்டும்! நன்றி

ஹாப்பி ரீடிங்!

தோழமையுடன்

யெஸ். பாலபாரதி

yesbalabharathi@gmail.com

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மரப்பாச்சி சொன்னரகசியம் – 1

மரப்பாச்சி சொன்னரகசியம் – 2

மரப்பாச்சி சொன்னரகசியம் – 3

மரப்பாச்சி சொன்னரகசியம் – 4

மரப்பாச்சி சொன்னரகசியம் – 5

மரப்பாச்சி சொன்னரகசியம் – 6

மரப்பாச்சி சொன்னரகசியம் – 7

மரப்பாச்சி சொன்னரகசியம் – 8

மரப்பாச்சி சொன்னரகசியம் – 9

மரப்பாச்சி சொன்னரகசியம் – 10

மரப்பாச்சி சொன்னரகசியம் – 11

மரப்பாச்சி சொன்னரகசியம் – 12

மரப்பாச்சி சொன்னரகசியம் – 13