மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 9]

வகுப்பறைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்த பின்னும் நேத்ராவுக்கு மரப்பாச்சி நினைவாகவே இருந்தது. ஆசிரியர் எழுதிப் போட்டுக் கொண்டிருந்த கணக்குப் பாடத்தில் மனது செல்லவே இல்லை. என்னமோ வித்தியாசமாக நடப்பதாகத் தோன்றியது. மைதானத்தில் மரப்பாச்சி கைநழுவி விழுந்ததா? அல்லது கை நழுவி விழுந்ததா? மைதானத்திற்குள் அது உண்மையில் ஓடியதா, இல்லை காற்றில் பறந்ததா எதுவுமே புரியவில்லை. கேள்வி கேட்ட மிஸ்ஸிடமாவது எதையாவது சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லி, இப்படி மாட்டிக்கொண்டோமே என்பதை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. ஒரு பக்கம் கையில் ஏற்பட்ட சிராய்ப்பின் வலி. கைக்குட்டையை எடுத்து, கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

கைக்குட்டையை டேபிளில் வைக்கும்போது, மரப்பாச்சியைப் பார்த்தாள். அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. கண்களை மீண்டும் துடைத்துக்கொண்டு, அதைப் பார்த்தாள். இப்போது சிரிப்பது நன்றாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த மஹாவிடம் தலையைக்குனிந்தபடி, “இங்கபாருடி… இந்தப் பொம்மை என்னைய பார்த்து சிரிக்குது” என்றாள்.

மஹாவும் தலைகுனிந்தவாரே, அதைப் பார்த்தாள். அது சாதாரணமாக இருந்தது. “எங்கடி… சாதரணமாத்தானே இருக்கு…?” என்று கேட்டாள்.

நேத்ரா மரப்பாச்சியைப் பார்த்தாள். முன்பு இருந்த சிரிப்பு இப்போது இல்லை.

“இல்லடி… நிஜமாவே சிரிச்சுது…” என்றாள் நேத்ரா.

“ஒரு பொம்மை எப்படிடி சிரிக்கும். அதுக்கு உயிர் இருக்கா என்ன? உனக்கு மூளை குழம்பிடுச்சு போல…” என்று சொல்லும் போதே மஹாவின் குரலில் ஒரு ஏளனம் இருந்தது.

“என்னமோ தப்பு தப்பா நடக்குதுடி… நான் மிஸ்கிட்ட சொல்ல நினைச்சது வேற, ஆனா சொன்னது வேற; கொஞ்ச நேரம் முன்னாடி இது சிரிச்சது. இப்ப பார்த்தா சாதாரணமா இருக்கு. என்னமோ வித்தியாசமா இருக்குடி”

“எங்கே எங்கிட்ட கொடு” என்று அதை வாங்கியவள், மரப்பாச்சியை மேலும் கீழுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

“பேட்டரி கூடப் போடமுடியாது போலடி. சாதாரண மர பொம்மை. வித்தியாசம்னா பார்பிடால் ட்ரஸ் போட்டிருக்கு, சாஃப்டா இருக்கு…”

“என்னடி…” என்று ஷிவானி கேட்டாள்.

“இது சிரிக்குதுன்னு நேத்ரா சொல்லுறா…?”

“கொடு” என்று மஹாவின் கையில் இருந்து ஷிவானியின் கைகளுக்கு மாறியது. அடுத்து சம்யுக்தாவின் கைகளுக்கு. நேத்ராவும் அந்த வரிசையில் இருந்த தோழிகளும் தலைகுனிந்து பேசிக்கொண்டிருப்பதைக் கணக்கு ஆசிரியை பார்த்துவிட்டார்.

“ஏய்… அங்கே என்ன பேச்சு…?” என்று ஒரு குரல் கொடுத்தார். தோழிகள் அவசரமாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டனர். சம்யுக்தா மரப்பாச்சியை டேபிளின் உள்ளே பதுக்கி, அதன் மீது ஒரு கையை வைத்துக்கொண்டாள்.

“கேட்குறேன்ல… சொல்லுங்க…”

அவசரமாக நேத்ரா, “ஒண்ணுமில்லீங்க மிஸ்” என்றாள். இடது ஓரம் உட்கார்ந்திருந்த சம்யுக்தாவின் மீது பார்வையைப் பதித்தார் ஆசிரியை. அவள் மெதுவாக எழுந்து நின்றாள். அவளது கையில் மரப்பாச்சி இருந்தது.

“இந்தப் பொம்மையை வச்சித்தான் பேசிக்கிட்டு இருந்தோம் மிஸ்” என்று மரப்பாச்சியை எடுத்து, ஆசிரியையின் முன்னால் நீட்டினாள் சம்யுக்தா.

“க்ளாஸுல பொம்மை வச்சு விளையாடிக்கிட்டு இருக்கீங்களா? என்ன பொம்மைடி அது..” என்று சத்தம் போட்டபடியே, சம்யுக்தாவிடம் இருந்து அதைப் பிடுங்கிக்கொண்டு போய், தனது டேபிள் மீது வைத்தார். அப்போதுதான் மரப்பாச்சிக்குப் போட்டிருந்த பார்பி ஆடையும், அது மென்மையாக இருந்ததையும் உணர்ந்தார். மீண்டும் கையில் எடுத்துப் பார்த்தார். வித்தியாசமாகப்பட்டது.

“யாரோடது இது…?” என்று மாணவியரைப் பார்த்துக் கேட்டார்.

அமைதியாக ஷாலு எழுந்து நின்றாள்.

“என்னோடதுதான் மிஸ். இண்டர்வெல்ல நேத்ரா பிடுங்கிட்டு ஓடிவந்துட்டா…”

“ஏய்… நேத்ரா… இது அவளோடதுதானா…?”

“ஆமா மிஸ்” என்று நேத்ராவும் தலைகுனிந்தபடி எழுந்து நின்றாள்.

“ஓ… ஸ்கூலுக்குப் பொம்மை கொண்டு வந்து விளையாடுறீங்களா… கழுத வயசாச்சு… இன்னும் பொம்மையைத் தூக்கிட்டு திரியுதுங்க. படிக்கிறதைத் தவிர எல்லாம் செய்யுங்க. சரி… சரி… இப்பக் கிளாஸைக் கவனிங்க.” என்று மரப்பாச்சியை டேபிள் மீது வைத்துவிட்டு, முதலில் எழுதிய கணக்கை அழித்துவிட்டு, அடுத்ததை எழுதத் தொடங்கியபோதும், அடுத்தப் பிரீயடுக்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. மரப்பாச்சி பொம்மையை உடன் எடுத்துக்கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினார் கணக்கு ஆசிரியை.

“மிஸ்…” என்று பின்னாடியே ஓடினாள் ஷாலு.

“என்ன…?”

“அந்தப் பொம்மை…”

“ம்… ஈவினிங் வீட்டுக்குப் போகும் போது, வாங்கிட்டுப்போ…” என்று சொல்லிவிட்டு, அவர் போய்விட்டார்.

***

அடுத்தப் பிரீயட் சமூக அறிவியல். அதுவும் முடிந்த பின், உணவு இடைவேளையில் நேத்ராவும் அவள் தோழிகளும் ஷாலுவை சூழ்ந்துகொண்டனர்.

“ஏய்… உண்மையச் சொல்லுடி… அந்தப் பொம்மையில என்னவோ இருக்கு?”

“ஒன்னுமில்லையே…”

“பொய் சொல்லாதே… மொதல்ல… அது மர பொம்மை மாதிரி இருந்தாலும் சாஃப்டா இருக்கு. ரெண்டாவது கிரவுண்டுல ஓடிச்சு”

“ஓடலைடி… காத்துல பறந்துச்சு” என்றாள் மஹா.

“இல்லடி… ஓடிச்சு… நான் பார்த்தேன்” என்றாள் நேத்ரா.

“நாங்களும் தானடி இருந்தோம். அது காத்துலதான் உருண்டு ஓடிச்சு.” என்று விளக்கம் கொடுத்தாள் ஷிவானி.

“ஏய்… சும்மா இருங்கடி.. அதை அப்புறம் பேசிக்கலாம். மொதல்ல இவ கிட்ட கேட்போம்” என்று அவர்களை அமைதியாக்கிவிட்டு, ஷாலுவின் பக்கம் திரும்பி, “அந்தப் பொம்மையில என்னமோ இருக்கு. உண்மையச் சொல்லிடு! அதைக் கையில் வச்சிருந்தா… நாம நினைக்கிறதை பேசமுடியாமப் போகுது. உண்மை மட்டுமே சொல்லுறோம். பொய் பேசவே முடியலை.” என்று கேட்டாள் நேத்ரா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடி. அது சாதாரண மரப்பாச்சி பொம்மைதான்… நீங்க சொல்றது எல்லாம் எனக்குப் புதுசா இருக்கு” என்றாள் ஷாலு.

“சரி… விடுடி… இவ சொல்லுற மாதிரி, அது வெறும் மர பொம்மையாக்கூட இருக்கலாம்.” மஹா சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.

“இல்லடி…” என்று நேத்ரா ஏதோ சொல்ல முற்பட, “சொன்னாக் கேளுடி… அது வெறும் பொம்மையாகத்தான் இருக்கும்” என்று நேத்ராவின் கையைப் பிடித்து, இழுத்துக்கொண்டு போனாள் மஹா. மற்றவர்களும் பின்னாடியே போனார்கள்.

நேத்ராவும் மற்றவர்களும் போனது கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. சரியாகப் பூஜாவும் வந்து சேர்ந்தாள். அவளிடம் மரப்பாச்சி செய்த சேட்டைகளைச் சொல்லிச் சிரித்தாள் ஷாலு.

மதிய உணவுக்குப் பிறகான எந்த வகுப்பிலும் ஷாலுவால் கவனம் செலுத்தவே முடியவில்லை. ஆசிரியையிடம் மாட்டிக்கொண்டிருக்கும் மரப்பாச்சியின் நினைவாகவே இருந்தது. மாலை கடைசிப் பிரீயட் முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்தாள். அதுவும் முடிந்து மணி அடித்ததும், தனது ஷோல்டர் பேக்கை எடுத்துக்கொண்டு, முதல் ஆளாக வகுப்பறையில் இருந்து தப்பித்து, ஆசிரியர்களின் ஓய்வறை நோக்கி ஓடினாள் ஷாலு. அங்கே புத்தகம் படித்துக்கொண்டிருந்த, கணக்கு ஆசிரியை நிமிர்ந்து பார்த்தார்.

இவள் தயங்கித் தயங்கி, “மிஸ்… அந்த மரப்பாச்சி…” என்று இழுத்தாள்.

“அது ரொம்ப நல்லா இருக்கு. ஆனா… இனிமேல் இதை ஸ்கூலுக்கு எல்லாம் தூக்கிட்டு வரக்கூடாது. சரியா” என்று கேட்டார் கணக்கு ஆசிரியர்.

“சரி மிஸ்”

அவர் எழுந்துபோய், தனது அலமாரியைத் திறந்து அதிலிருந்து மரப்பாச்சியை எடுத்துக் கொண்டுவந்து இவளிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, “தாங்க்ஸ் மிஸ்” என்று சொல்லிவிட்டு, வேன் நிற்குமிடம் நோக்கி ஓடினாள்.

Box news

பார்பி பொம்மை: இளம்பெண் பொம்மை. இன்று இதன் தயாரிப்பாளர்கள் அமெரிக்கர்கள் என்றாலும் இவர்களுக்கு முன்னோடியாக இளம்பெண் பொம்மைகளை முதலில் ஜெர்மானியர்கள் உருவாக்கி வந்தனர். அதனைப் பார்த்த அமெரிக்கர்கள் இதனை உருவாக்கினர். அழகான இப்பொம்மை பலரையும் கவர்ந்தது. நடக்க முடியாத குழந்தைகளின் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட இந்நிறுவனம் அவர்களைப்போன்றே சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள பார்பியையும் உருவாக்கியது. மாற்றுத்திறனுடையோருக்கான முதல் பொம்மையை உருவாக்கியதும் இவர்களே! பார்பி மீது விமர்சனங்களும் பல்வேறு சர்ச்சைகளும் உண்டு. அதெல்லாம் தனிக்கதை!