வீட்டு வாசலில் ஷாலுவை இறங்கிவிட்டு வேன் கிளம்பிப்போனது. வாசலில் எப்போதும் நிற்கும் அம்மாவைக் காணவில்லை. வெளிக்கதவைத் திறந்து உள்நுழையும் போதே யாரோ விருந்துனர்கள் வந்துள்ளனர் என்று தெரிந்துவிட்டது. வாசலில் கிடக்கும் செருப்புகளை வைத்து யார் வந்துள்ளனர் என்பதை யூகிக்க முடியவில்லை. வீட்டுக்குள் இருந்து பேச்சும் சிரிப்புமாகச் சத்தம் பலமாகக் கேட்டது. அதை வைத்து கண்டுபிடிக்கவும் முடியவில்லை. தனது ஷூக்களைக் கழட்டி, ஓரமாக வைத்துவிட்டு, தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள் ஷாலு.
“ஹாய்… ஷாலு” என்று எல்லோரும் ஒருமித்தக் குரல் எழுப்ப, கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். வியப்புடன் அவர்களைப் பார்த்தாள். ஊரில் இருந்து ரேவதி சித்தி, செல்வம் சித்தப்பா, சூர்யா எல்லோரும் வந்திருந்தனர். அவர்களோடு அப்பாவும் அமர்ந்திருந்தார். சூர்யா, தனது கண்ணாடியை சரி செய்தபடி இவளைப் பார்த்து, “உனக்காகத்தான் வெயிட்டிங்” என்றான். சூர்யா, இவளைவிட, ஆறு மாதங்கள் மூத்தவன். கடந்தமுறை பார்த்ததைவிட, இம்முறை கொஞ்சம் உயரம் கூடி இருந்தது மாதிரி இருந்தான். மெலிந்திருந்தான். எல்லோரையும் பார்த்து, “ஹாய்…” என்று சொல்லிவிட்டு, உள்ளே போகப்போனவள் முன்னால் குதித்து ஓடிவந்தான் சூர்யா.
“ஷாலு, நாளைக்கு நாம எல்லாம் ஏலகிரி போறோமே…” என்றான்.
“நாளைக்கா…”
“ஆமா… நாளைக்குத்தான்” என்றான் சூர்யா.
“டேய், மொதல்ல அவ, போய் ப்ரஷ் ஆகிட்டு வரட்டும்டா… மெதுவா சொல்லிக்கலாம். நீ போம்மா, போய் யூனிபார்ம் எல்லாம் மாத்திட்டு வா…” என்று ரேவதி சித்தி சொன்னார்.
“இதோ நிமிஷத்துட வந்துடுறேன் சித்தி” என்று உள்ளறைக்கு ஓடி, தனது ஸ்கூல் பேக்கை வைத்துவிட்டு, சாப்பாட்டுக் கூடையுடன் கிச்சனுக்குப் போனாள். அம்மா அங்கே அடுப்பில் ஏதோ வேலையாக இருந்தார்.
“ஏம்மா… நாளைக்கு நாம ஏலகிரி போறோமா என்ன…?”
“ஆமான்டி.. சித்தி சித்தப்பாவோடயே… காரில் போய்விட்டு, காரிலேயே வந்துவிடலாம்” என்று சொன்னார் அம்மா.
திரும்பவும் உள்ளறைக்குச் சென்று, முகம், கை கால்களைக்கழுவி, ஆடை மாற்றிக்கொண்டு, ஹாலுக்கு வந்தாள்.
“என்ன சித்தி.. சர்ப்ரைஸா வந்திருக்கீங்க..?” என்று சித்தியின் அருகில் போய் அமர்ந்தாள் ஷாலு.
“ஆமா செல்லம். திடீர் ப்ளான். சனி, ஞாயிறு லீவுல எங்கேயாவது போலாம்னு ப்ளான் போட்டோம். ஒரு வருஷமா எங்கேயுமே போகலையா… அதுதான். சூர்யாதான் ஏலகிரி போகலாம்னு யோசனை சொன்னான். போறவழி தானே எல்லோரும் சேர்ந்து போலாம்னு நினைச்சோம். அதுதான் சர்ப்ரைஸ் விசிட்” என்று சிரித்தார்.
“எப்போ கிளம்புறோம் சித்தி?”
“நாளைக்கு விடியக்காலையில…”
“அங்கே… பாரா க்ளைடிங் இருக்கு ஷாலு. வானத்துல அப்படியே பறக்கலாம். செம ஜாலியா இருக்குமாம்” என்று ஆர்வமுடன் சொன்னான் சூர்யா.
“பாராக்ளைடிங்கா… எனக்குப் பயமா இருக்குப்பா… நான் வரலை…”
“ஐயே… துணைக்கு ஆள் எல்லாம் வருவாங்க. அப்புறம், அங்க இருக்குற ஏரியில போட்டிங் எல்லாம் போகலாம்.” என்றான் சூர்யா.
“சரி! அதை அப்புறம் பார்க்கலாம். என்னோடு வா… உனக்கு ஒரு மேஜிக் காட்டுறேன்…” என்று சூர்யவை உள்ளறைக்கு அழைத்துச் சென்றாள் ஷாலு.
அறைக்குள் நுழைந்ததும், கதவை சாத்தினாள். ஸ்கூல் பைக்குள் வைத்திருந்த மரப்பாச்சியை, “டண்ட்டைங்ங்ங்ங்” என்று வெளியில் எடுத்து, அவன் முகத்துக்கு நேராக நீட்டினாள்.
“இதுல என்ன மேஜிக் இருக்கு…” என்று கேட்டான் சூர்யா.
“இரு அவசரப்படாதே… போனமுறை நீ சொன்னியே, சுண்டக்காய் பேசினது, அது இளவரசனாக மாறினது எல்லாம்.”
“ஆமா… நான் சொன்னது எல்லாம் நிஜம்.”
“ஆமா… நீ அப்ப சொன்னப்ப… நான் நம்பவில்லை. இப்ப நம்புறேன். அதுவும் இந்த மரப்பாச்சியாலதான்” என்று பூடகமாகச் சிரித்தாள்.
“மரப்பாச்சியா… ஓ! இந்தப் பொம்மையோட பெயரா… வித்தியாசமா இருக்கே.”
“ஐயோ… இந்தப் பொம்மைக்குப் பேரு மரப்பாச்சிடா… ஆனா இதோட பேரு இளவரசி. உன்னோட சுண்டக்காய் இளவரசன்* மாதிரியே இதுவும் பேசும்” என்றாள்.
“நிஜமாவா…”
“ஆமாண்டா, இப்பப் பாரேன்” என்றவள், மரப்பாச்சியை தரையில் இறக்கிவிட்டாள். பின், “இளவரசி… ப்ளீஸ்… இவனுக்காக ஒரு தரம் பேசிக்காட்டேன்.” என்று வேண்டினாள் ஷாலு. சில நிமிடங்களுக்குப் பின், மரப்பாச்சி உயிர்பெற்றது. “ஹாய் சூர்யா… நல்லா இருக்கியா?” என்று அவனைப் பார்த்து கேட்டது.
சூர்யாவிற்கு முன்னமே சாகச அனுபவம் இருந்தாலும்… இது வேறுமாதிரி அனுபவம் அல்லவா… வியப்பாக மரப்பாச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஷாலு… நான் பேசினதும், சூர்யாவுக்குப் பேச்சே வரமாப்போயிடுச்சே..” என்று சிரித்தது. “அதுதானே” என்ற ஷாலு, “டேய் சூர்யா” என்று ஒரு அதட்டும் தொனியில் குரல் கொடுத்தாள். சுயநினைவுக்கு வந்தான் சூர்யா.
“ஏய்… சூப்பரா இருக்கு. இது எப்படிப் பேசுது…” என்று ஷாலுவிடம் கேட்டான். அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னாள் ஷாலு. வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த சூர்யா, உள்ளங்கை நீட்டினான். அதில் வந்து ஏறிக்கொண்டது மரப்பாச்சி.
முகத்துக்கு அருகில் கொண்டுவந்து பார்த்தான். குட்டிக்கண்கள், கூர்மையான மூக்கு, காதுகள் எல்லாம் பார்க்கப் பார்க்க… அவனுக்கு, சுண்டைக்காய் இளவரசன் நினைவு வந்தது.
உள்ளங்கையில் இருந்த மரப்பாச்சியைப் பார்த்து “ஏய்… நம்பவே முடியலை.” என்றான் சூர்யா.
“சுண்டக்காய் பேசியே பார்த்தவன் நீ. மரப்பாச்சி பேசுவதையா நம்ப முடியவில்லை என்கிறாய்?” என்று கேட்டது மரப்பாச்சி.
“அப்படி இல்லை. மற்றவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று சொன்னேன்”
“இன்னிக்கு காலையில ஸ்கூல செம கலாட்டா…” என்று ஆரம்பித்து, நடந்த எல்லாவற்றையும் சொல்லி சிரித்தாள் ஷாலு. மரப்பாச்சியும் சிரித்தது. அவர்களுடன் சூர்யாவும் சேர்துகொண்டான்.
“ஏய்… ஷாலு… சாப்பிடவாடி… சூர்யா நீயும் தான்… காலையில சீக்கிரமா கிளம்பனும்” என்று வெளியில் அம்மா குரல்கொடுத்து, கதவைத் தட்டினார்.
“இதோ வரேன்மா…” என்று பதிலுக்குச் சத்தமாகச் சொன்னாள் ஷாலு.
*‘சுண்டைக்காய் இளவரசன்’ கதை தனி நூலாக வந்துள்ளது.
(box news)
ஏலகிரி: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழிடம். சென்னையில் இருந்து 230 கி.மீட்டருக்குள் உள்ள இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து 1050 மீட்டர் உயரத்தில் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொரு வளைவிற்கும் வள்ளுவர் தொடங்கி கம்பர், பாரதி என்று தமிழ்ப்புலவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதனைக் கடந்து போனால் ஏலகிரியை அடையலாம். கடும் கோடைகாலத்திலும் இங்கே குளுகுளுவென்றுதான் இருக்கும். இங்கே படகுக்குழாம், குழந்தைகள் பூங்கா, செயற்கை நீர் ஊற்று போன்றவை உள்ளன. சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கே மலையேற்றம், பாராகிளைடிங்க் போன்ற சாகச விளையாட்டுக்களும் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.
(box news)
ஏலகிரி: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழிடம். சென்னையில் இருந்து 230 கி.மீட்டருக்குள் உள்ள இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து 1050 மீட்டர் உயரத்தில் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொரு வளைவிற்கும் வள்ளுவர் தொடங்கி கம்பர், பாரதி என்று தமிழ்ப்புலவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதனைக் கடந்து போனால் ஏலகிரியை அடையலாம். கடும் கோடைகாலத்திலும் இங்கே குளுகுளுவென்றுதான் இருக்கும். இங்கே படகுக்குழாம், குழந்தைகள் பூங்கா, செயற்கை நீர் ஊற்று போன்றவை உள்ளன. சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கே மலையேற்றம், பாராகிளைடிங்க் போன்ற சாகச விளையாட்டுக்களும் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.