மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -11]

மறுநாள். பொழுது புலர்ந்து சூரியன் சோம்பல் முறிக்கும் முன் பெரியவர்கள் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். ஷாலு, ஹரி, சூர்யா மூவரையும் தூக்கத்திலேயே காரில் ஏற்றி விட்டனர். செல்வம்தான் காரை ஓட்டினார். நகரைக் கடந்து கார் நெடுஞ்சாலையில் ஓடத்தொடங்கியது.

ஹெட்லைட் போட்டுக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. சாலைக்கு அந்தப்பக்கம் வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணைப் பறித்தது. நடுவே வைக்கப்பட்டிருந்த செடிகளினால் முழு விளக்கொளியும் அப்படியே நேராக விழவில்லை என்பது சற்று ஆறுதல்.

வேலூரைத் தாண்டி, ஆம்பூர் நெருங்கும்போது, ஷாலு கண்விழித்துப் பார்த்தாள். முன் சீட்டில் இருந்த அப்பாவும் சித்தப்பாவும் மட்டும் விழித்திருந்தனர். பின் இருக்கைகளில் இருந்த எல்லோரும் உறக்கத்தில் இருந்தனர். ஏ.சி இதமாக இருந்தது. வண்டிக்குள் மெல்லியதாக ஏதோவொரு திரையிசைப் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டாள்.

“இன்னும் ஏலகிரி எவ்வளவு தூரம்ப்பா..?”

“அடடே.. ஷாலுக்குட்டி முழிச்சுட்டியா… வெரிகுட். ஆம்பூர் பக்கத்துல வந்துட்டோம்டா… இன்னும் கொஞ்ச நேரம் தான். அடுத்து ஏலகிரிதான்.”

வெளிச்சம் ஏறத்தொடங்கி இருந்தது. ஏற்றப்பட்டிருந்த காரின் கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் ஷாலு. சீரான வேகத்தில் கார் ஓடிக்கொண்டிருந்தது. மிச்சமிருந்த உறக்கம் ஷாலுவின் இமைகளை இழுத்துப்பிடித்து மூடியது. கொஞ்ச நேரத்தில் திரும்பவும் தூங்கிப்போனாள். எவ்வளவு நேரம் தூங்கினாள் என்பது தெரியாது. கண் விழித்தபோது, சாலையின் ஒரு ஓரமிருந்த ஹோட்டலில் வண்டி நின்றிருந்தது. எல்லோரும் இறங்கிக்கொண்டிருந்தனர்.

ஷாலுவும் வண்டியை விட்டு இறங்கினாள். உடம்பெல்லாம் வலித்தது போலிருந்தது. கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தாள். சுற்றிலும் பார்த்தாள். நிறையக் கார்கள் நின்றுகொண்டிருந்தன. அம்மாவும் சித்தியும் தங்களது உடைகளைச் சரி செய்துகொண்டிருந்தனர். இவளைப் பார்த்த்தும், “ஏய்.. ஷாலு.. பாத்ரூம் போயிட்டு வந்திடலாம். வா… அடுத்து மலை ஏற ஆரம்பிச்சா.. வழியில எங்கேயும் வண்டியை நிறுத்த முடியாது. வா.. போகலாம்.” என்று அழைத்தார் அம்மா.

இவள் சூர்யாவைத் தேடினாள். அவன் அப்பா, சித்தப்பாவுடன் ஆண்கள் கழிவறைப் பக்கம் போய்க்கொண்டிருந்தான். அப்பாவின் தோளில் ஹரி சாய்ந்திருந்தான். இவளும் அம்மா, சித்தியுடன் சென்றாள்.

திரும்பி வந்ததும் செல்வம் மட்டும் ஒரு காபி வாங்கிப் பருகினார். மலை ஏறும் போது வாந்தி வரும் என்பதால் மற்றவர்கள் ஏதும் சாப்பிடவில்லை. ஷாலுவிற்கு எதையாவது சாப்பிட்டால் தேவலாம் என்று தோன்றியது. அம்மாவிடம் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். “வழியில வாந்தி எடுத்து வச்சிருவ… சும்மா இரு” என்று ஓர் அதட்டு போட்டதும் அமைதியானாள் ஷாலு.

அங்கிருந்து கிளம்பினர். மலையேறுவதே முதலில் தெரியவில்லை. ஏ.சி.யை அணைத்துவிட்டு, காரின் கண்ணாடிகளை இறக்கி விட்டிருந்தார் செல்வம். ஒரு பக்க ஜன்னலின் வழியே நுழைந்த காற்று முகத்தில் அறைந்து, அதே வேகத்தில் அந்தப்பக்கம் ஜன்னல் வழியே ஓடிற்று. இருபது நிமிடப் பயணத்திற்குப் பின்தான் மலை ஏறுவதை உணரமுடிந்தது. வழக்கத்தை விட வண்டியின் வேகம் குறைந்திருந்தது.

வாகனங்கள் போகவும் வரவும் ஒரே சாலை தான். இருபுறமும் ஓர் அடிக்கு நீண்ட சுவர் எழுப்பி இருந்தனர். சாலையின் நடுவில் வெள்ளை பெயிண்ட்டில் நீளமான கோடு போட்டிருந்தார்கள். நீண்டு போகும் சாலை. அப்புறம் ஒரு வளைவு. மீண்டும் நீண்ட சாலை. மறுபடியும் ஒரு வளைவு. இப்படியாக வண்டி மலையின் மேல் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

சூர்யாவும், ஷாலுவும் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்தனர். “ஏய்… இந்தப்பக்கம் குரங்கு பாரு”, “ஏய்… இந்தப்பக்கம் பாரு… வீடு எல்லாம் குட்டிக்குட்டியாகத் தெரியுது” என்று அவர்கள் பார்க்கும் காட்சிகளை எல்லாம் சொல்லிச்சொல்லி இருவரும் பரஸ்பரம் ஆவலைத் தூண்டிக்கொண்டிருந்தனர். நாற்பது நிமிடங்களில் எல்லாம் மலையை அடைந்து விட்டனர்.

செல்வம், ஏற்கனவே தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்துவிட்டார் என்பதால், தங்கும் விடுதிக்கான வழியை இரண்டொருவரிடம் விசாரித்து, அங்கே போய்ச்சேர்ந்தனர். வண்டியைவிட்டு கீழே இறங்கியதுமே குளிர்காற்று எல்லோரையும் தழுவி வரவேற்றது. ஷாலுவிற்கு நடுங்குவது போல இருந்த்து. மரப்பாச்சியைக் கையில் இறுகப் பற்றிக்கொண்டு பெரியவர்களின் பின்னால் நடந்தாள். ஹோட்டலுக்குள் போய், விபரம் சொன்னதும் இரண்டு அறைச்சாவியை எடுத்து நீட்டினார்கள். இரு குடும்பத்தினருக்கும் அடுத்தடுத்த அறைகள்.

*****

குளித்து, ஹோட்டலிலேயே கொடுத்த சிற்றுண்டியை சாப்பிட்டு ரெடியாகி, ஏலகிரியைச் சுற்றிவர கிளம்பினர். சிறுவர் பூங்காவிற்கு முதலில் போனார்கள். அங்கே ஊஞ்சல், சறுக்கு விளையாட்டுக்கான வசதிகள் என்று நிறைய இருந்தன. உயரமாக வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் கூட்டு சேர்ந்து, சூரிய ஒளியை பூமி மீது விழாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அப்படியும் காற்றின் உதவியுடன் கிளைகளை அசைத்து, பூமியை முத்தமிட்டுச் சென்றது சூரிய ஒளி.

ஏரியில் படகுசவாரி. ஷாலுவுக்குச் செம ஜாலியாக இருந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்ததினால் கையில் வைத்திருந்த மரப்பாச்சியை இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள். அது யாருக்கும் தெரியாமல், பற்றி இருந்த ஷாலுவின் கையை ‘பயப்படாதே’ என்பதுபோலத் தடவிக்கொடுத்தது. அப்பாவும் சித்தாப்பாவும் செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கும் சமயங்களில் எல்லாம் மரப்பாச்சியும் படத்தில் தெரியும்படி பிடித்துக்கொண்டாள். பன்னிரெண்டு மணிவாக்கில் பாராக்ளைடிங்கில் பறக்கும் இடத்தை அடைந்தனர்.

Box NEWS

பாராகிளைடிங்: பாரா சூட் அறிந்திருப்பீர்கள் தானே! அதைப்போன்றே காற்றின் உதவியால் இயங்கக்கூடிய அமைப்பு இதனுடையது. பாராகிளைடிங் என்பது பறக்கும் சாகச விளையாட்டு. இலகுவான காற்றில் கிழியாத துணியானது பலதரப்பட்ட கயிற்றினால் இணைக்கப்பட்டிருக்கும். அதன் நுனியில் உள்ள இருக்கைப் போன்ற அமைப்பில் அமர்ந்தோ அல்லது படுத்த நிலையிலோ உயரத்தில் இருந்து குதித்துப் பறப்பது. சாகச விளையாட்டு என்றாலும் இது ஆபத்தான விளையாட்டும் கூட! ஏனெனில் இது இயந்திரம் கொண்டு இயங்குவதில்லை. காற்றினால் மட்டுமே பறக்கிறது. தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தான் இவ்வீரர்கள் பறப்பார்கள்.