மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]

காரில் இருந்து இறங்கியதும் சுற்றிலும் பார்த்தாள் ஷாலு. அந்த இடம் மலையில் இருந்தாலும் சமதளமாக இருந்தது. மைதானம் போன்ற அந்த இடத்தின் முடிவில் மலையின் சரிவு தொடங்கியது. அதனால் அங்கே சில மைல்கல் நட்டு, மஞ்சள் வண்ணம் பூசி இருந்தனர்.

அங்கே இவர்களைப்போலவே பாராகிளைடிங்கில் பறக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் தங்கள் வந்த கார்களை ஒட்டி நின்று கொண்டிருந்தனர். பாராகிளைடிங் பயிற்சியாளரிடம் சென்று செல்வம் பேசிவிட்டு வந்தார். அம்மாவும் சித்தியும் பறக்க மறுத்து விட்டனர். பறந்து அனுபவம் இருப்பவர்களை மட்டும் தனியாகப் பறக்க அனுமதித்தனர். புதியதாகப் பறக்க விரும்புகிறவர்களுக்கு “டேன்டம் கிளைடிங்” முறையில் பயிற்சியாளர்கள் கிளைடரை மாட்டிக்கொண்டு, புதியவர்களைச் சுமந்து, பறப்பதற்கு உதவினார்கள். மலையேற்றத்தில் ஆர்வமுடைய செல்வம் சித்தப்பாவிற்குப் பறந்து முன் அனுபவம் இருப்பதால் பயிற்சியாளரின் துணையின்றித் தனியாகப் பறப்பதற்கு ஆயத்தமானார்.

அவருக்கு ஷோல்டர் பேக் மாதிரி பெரிய பேக் ஒன்றை மாட்டிவிட்டனர். அதிலிருந்து பெல்ட்டை கால்களுக்கு இடையே கொடுத்து மாட்டினர். ஷூக்களில் நீண்ட நைலான் கயிற்றைக் கொக்கிகள் மூலம் இணைத்தனர். அக்கயிற்றின் மறுமுனை நீண்ட நைலான் துணியில் இணைக்கப்பட்டிருந்தது.

செல்வம் கொஞ்சம் சரிவில் நின்றுகொண்டு, நைலான் கயிற்றை அப்படியும் இப்படியுமாக அசைத்து இழுத்தார். அந்தத் துணி பாராசூட் போலக் காற்றில் மேலே எழும்பியது. அப்படியே சரிவில் இருந்து கீழ்நோக்கி ஓடினார். காற்றுப் பலமாக வீச, அப்படியே கால்களை மடக்கிக்கொண்டார். இப்போது காற்று அவரை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு போனது. பார்ப்பதற்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே… பறந்தால்… ஷாலுவிற்கு நினைக்கும் போதே சிலிர்த்தது. மரப்பாச்சியையும் கையில் எடுத்துக்கொண்டு பயிற்சியாளரிடம் ஓடினாள் ஷாலு.

அடுத்தடுத்து அப்பாவும், சூர்யாவும் பயிற்சியாளருடன் பறந்து போனார்கள். இப்போது ஷாலுவின் முறை, முழுத்தயாரிப்புடன் பயிற்சியாளர் ஒருவர் வந்தார். அவரின் உடையில் இன்னொருவரை சுமந்து செல்லக்கூடிய பெல்ட் வசதிகள் இருந்தன. கூடுதலாக உடன் பறப்பவர் அமர்ந்து கொள்ளக்கூடிய தொட்டில் போன்ற வசதியும் அதில் இருந்தது. ஷாலுவையும் அதில் அமரச்செய்து, பெல்ட் எல்லாம் அணிவித்தார். அவர் சொன்னபடி கேட்டால் போதும் என்று சொல்லிவிட்டு, ஷாலுவை கொஞ்ச தூரம் ஓடலாம் என்று சொல்லிவிட்டு அவர் ஓட, இவளும் அவருடன் ஓடினாள். கால்களை மடக்கிக்கொள்ளும்படி அவர் சொன்னதும், இவளும் கால்களை மடக்கிக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாகக் கிளைடர் பறக்கத் தொடங்கியது.

முதலில் பயமாக இருந்தபோதும், அந்தரத்தில் பறப்பது சுகமான அனுபவமாக இருந்தது. காற்று முகத்தில் மோதி, ஷாலுவின் தலைமுடியை கோதிவிட்டுச் சென்றது. பயிற்சியாளர் இருகைகளிலும் கையுறை மாட்டியிருந்தார். அவரது இரண்டு பக்கமும் இருந்த சிவப்பு வண்ண நைலான் கயிற்றை பிடித்திருந்தார். அவ்வப்போது இடதும் வலதுமாக அவற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அவரின் இழுப்புக்கு ஏற்ப, காற்றில் பறந்தது கிளைடர்.

அதுவரை கைக்குள் மறைத்து வைத்திருந்த மரப்பாச்சியை வெளியே எடுத்தாள் ஷாலு. இவளைப் பார்த்து அது சிரித்தது. “இளவரசி, வானத்துல இருந்து கீழே பார்க்க எத்தனை அழகாக இருக்கு பார்” என்று மரப்பாச்சியைத் தூக்கி, கீழே காட்டினாள்.

க்ளைடரை இயக்கிக்கொண்டிருந்தவர் பார்க்கிறாரா என்று முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். அவரோ இது எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரது கவனம் முழுவதும் பறக்கும் க்ளைடரை காற்றுக்கு ஏற்றவாறு திசைதிருப்பி, இயக்குவதிலேயே இருந்தது.

“அதோ… அது என்னது தெரியுமா?” என்று பயிற்சியாளர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி கேட்டார். அவர் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்தாள். அங்கே தூரத்தில் வெள்ளையாக அரைக்கோளவடிவில் ஒரு கட்டடம் தெரிந்தது. உயரத்தில் இருந்து பார்க்கவே பெரியதாகத் தெரிந்தது. அப்படி என்னால் கிட்டே போனால் எவ்வளவு பெரியதாக இருக்குமென்று தோன்றியது.

“தெரியலையே!” என்றாள்.

”அதுதான். வானிலை ஆராய்ச்சி மையம். அங்கே போனா… டெலஸ்கோப்புல நிலாவை எல்லாம் கிட்டப் பார்க்கலாம்” என்றார்.

அந்த இடத்தைப் பார்த்தவாரே கீழே பார்த்தால்… மரங்கள் பாதைகளை மறைத்து எங்கும் காடுகளாகத் தெரிந்தன. இவ்வளவு உயரத்தில் இருந்து பறக்கிறோமே… அதுபற்றிப் பயம் இல்லாமல் இருக்கிறார் என்றால் சரி… பழகிப்போயிருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மகிழ்ச்சி கூடவா இருக்காது. எத்தனை முறை பறந்தாலும் இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு முறையும் புதிதல்லவா… யோசனை செய்தவாரே, நாலா பக்கமும் பார்த்துக்கொண்டே பறந்து கொண்டிருந்தாள் ஷாலு. கீழே குட்டி குட்டியாக மனிதர்கள் தெரிந்தார்கள். உண்மையில் அவர்கள் மனிதர்கள் தானா என்ற சந்தேகம் வந்தது.

“அங்கிள்… அதோ… கீழே தெரியுதே… அவங்க மனுஷங்க தானா… அல்லது… பொம்மை கிம்மையா” என்று கேட்டாள். அவளது குரல் பின்னால் பறந்தவருக்குக் கேட்கவில்லை.

இவள் அவரைத் தட்டினாள். அவர் குனிந்து, “என்னம்மா?” என்று கேட்டார். இவள் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டாள். அவரும் கீழே பார்த்துவிட்டு, “எதைக் கேக்குறன்னு தெரியலையே பாப்பா…” என்றார்.

இவள் மரப்பாச்சி வைத்திருந்த கையால் இடத்தைச் சுட்டிக்காட்டினாள். அந்த இடத்தைப் பார்த்தவர், “ஆமாமா… அது சின்னப்பசங்க… இங்கே மலைக்கிராமத்துல இருக்குற சின்னப்பசங்கதான். விளையாடிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

அப்போது, கிளைடர் கொஞ்சம் ஆடியது. ஷாலுவின் கையில் இருந்த மரப்பாச்சியின் பிடி நழுவியது.

“ஐயோ… என்… மரப்பாச்சி” என்று வீறிட்டாள்.

“என்ன ஆச்சு பாப்பா?” என்று குனிந்து கேட்டார்.

“என்னோட… பொம்மை கீழே விழுந்துடுச்சு…” என்று சொன்னாள்.

“பொம்மைதானே… விடுப்பா…” என்று கிளைடரை தரை இறக்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். காற்றில் மரப்பாச்சி பறந்து போவதுபோல இருந்தது. அதன் அருமை பற்றி இவரிடம் எல்லாம் சொல்ல முடியாது. சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது. கீழே விழுந்துகொண்டிருக்கும் மரப்பாசியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் ஷாலுவுக்குச் சூர்யாவின் நினைவு வந்தது. அவனைத் தேடினாள். தூரத்தில் சில கிளைடர் பறப்பது தெரிந்தது. அதில் அவன் எதில் பறக்கிறானோ… கீழே வந்ததும் விஷயத்தைச் சொல்லுவோம் என்று நினைத்துக் கொண்டாள். ஆனாலும் ஒருவித படபடப்பாகவே இருந்தது. எப்படியும் திரும்பவும் கையில் கிடைத்துவிடவேண்டும் என்று சாமியையும் வேண்டிக்கொண்டாள். கிளைடர் கீழே இறங்கத்தொடங்கியது.

Box news

வைணு பாப்பு வானிலை ஆராய்ச்சி மையம்: ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கி இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஏலகிரியை அடுத்த ஜவ்வாது மலையின் காவனூரில் அமைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வாளர்களின் முன்னோடியான வைணு பாப்பு பெயரே இம்மையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுக்குச் சிறந்த இடம் என்று இங்கு இடத்தைத் தேர்வு செய்தவரும் இவரே! சனிக்கிழமைகளில் வானம் தெளிவாக இருந்தால், இங்குள்ள வான் நோக்கி வழியாகப் பொதுமக்கள் நட்சத்திரங்களையும் நிலவையும் கண்டு மகிழலாம்.