மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டனர். ஆனால் ஷாலுவால் மரப்பாச்சி கை நழுவிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதிக்கு வந்த பின்னும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. யாரோடும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

“இதோ பார் ஷாலு… இப்படியே மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டு உட்கார்றதுல எந்த அர்த்தமும் இல்லை. அப்பா வேணும்னா… வேற மரப்பாச்சி வாங்கித்தாரேன்” என்றார். இவள் எதுவும் பேசவில்லை.

“அவகிட்ட என்ன கெஞ்சிகிட்டு இருக்கீங்க.. நாலு சாத்து சாத்தினா வழிக்கு வந்துடப்போறா… நீங்க இந்தப் பக்கம் வாங்க…” என்று அம்மா வந்தார்.

“அக்கா… நீ சும்மா இருக்கமாட்ட… பாவம் அவ… எவ்வளவு ஆசையா இருந்துச்சுன்னா… அந்த மரப்பாச்சியைக் கையிலயே தூக்கிட்டு வந்திருப்பா… ஸ்மார்ட் போன் கொடு, ரிமோட் கார் கொடுன்னா கேக்குறா… மரப்பாச்சி தானே…” என்று ஷாலுவுக்கு ஆதரவாக வந்தார் சித்தி.

“மரப்பாச்சிதாண்டி… வேற வாங்கித்தாரேன்னு எத்தனை தடவ சொல்லியாச்சு. ஆனா தொலைஞ்சு போன அதே மரப்பாச்சிதான் வேணும்னு சொல்றா, அப்பத்தான் சாப்பிடுவேன்னு அடம்வேற… நீ என்னடான்னா அவளுக்குச் சப்போர்ட் செய்யுற…?”

“சரிம்மா கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா…! இதோ பார் ஷாலு, நானும் செல்வமும் போய், தேடிப்பார்த்துட்டு வாரோம். கிடைச்சா சரி… ஆனால் கிடைக்காட்டி… அப்புறமாவும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. நாங்க சொல்லுறபடி நடந்துக்கனும் சரியா?” என்று அப்பா கேட்டார்.

“நானும் வாரேன்” என்று கிளம்பினாள் ஷாலு.

“அதெல்லாம் வேணாம்மா… நீ இங்கேயே இரு. அதுதான் நாங்க போறோம்ல… ட்ரஸ்ட் மீ” என்றார் செல்வம்.

விருப்பமே இல்லாமல் ‘சரி’ எனத் தலையசைத்தாள் ஷாலு.

அப்பாவும் சித்தப்பாவும் அறையில் இருந்து வெளியேறினார்கள். கொஞ்ச நேரத்தில் கார் கிளம்பிப்போகும் சத்தம் கேட்டது. அம்மாவும் சித்தியும் அந்தப்பக்கம் போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தான் சூர்யா. அவன் எதிர்பார்த்த தருணம் வந்ததும் ஷாலுவின் அருகில் வந்தான்.

பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்சநேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அப்புறம் மெதுவாக, “ஷாலு… மரப்பாச்சி கிடைச்சிடும். கவலைப்படாதே…” என்று சொன்னான். அவள் இவனை முறைப்பதுபோலப் பார்த்தாள்.

“என்னைய ஏன் முறைக்கிற…? நானா அதைக் கீழே போட்டேன்…”

“உனக்கென்ன… உன் சுண்டைக்காய் இளவரசன் எப்ப நினைச்சாலும் வருவாரு போவாரு… எனக்குக் கிடைச்ச ஒரே ஒரு மரப்பாச்சி அதுவும் போயிடுச்சு… அதனால சோகத்துல இருக்கேன். நீ பேசாம போயிடு, ஆமா…” என்று சூர்யாவைப் பார்த்துக் கோபமாகக் கத்தினாள் ஷாலு.

“கூல்… கூல்… சுண்டக்காய் இளவரசனை நான் கடைசியா பார்த்தே ஒரு வருசமாச்சு தெரியுமா?”

ஷாலுவிற்கு வியப்பாக இருந்தது.

“என்னது ஒரு வருசமாச்சா..?”

“ஆமாம்… நான் என்ன தெலுங்குலையா சொல்றேன். தமிழ்ல்லதான… அப்புறம் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டால்…?” இப்போது சூர்யாவின் குரலில் மாற்றம் இருந்தது.

“சரி… சரி… இப்போ நீ கூல்… கூல்” என்று இரு கைகளையும் தூக்கி ஆசிர்வதிப்பதுபோலச் செய்தாள் ஷாலு. சூர்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“கூலாகிட்டியா… இப்பச்சொல்லு… ஏன் அவர் உன்னைப் பார்க்க வரலையா?” என்று கேட்டாள் ஷாலு.

“அவர் சொன்ன மாதிரியே, ஒவ்வொரு அம்மாவாசைக்கும் வந்துட்டு இருந்தார். அப்புறம் ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை வந்தார். அப்படியே குறைஞ்சு போச்சு…”

“அவர் வருவது குறைஞ்சதுமே நீ கேட்கலையா…?”

“கேட்காம இருப்பேனா… கேட்டேன். அவர் சொன்ன பதில் சரியானதாகத் தோனிச்சு.. ஆரம்பத்துல நானும் உன்னைய மாதிரி, அழுதுட்டு இருந்தேன். அப்புறம் சமாதானமாகிட்டேன்”

“என்ன சொன்னார்?”

“அவங்களைப் போல, சூப்பர் பவர் இருக்கிறவங்க ஒரே இடத்துல தங்கிவிடக்கூடாதாம். நம்மளை மாதிரியே பலரையும் சந்திக்கிறதுதான் அவங்களோட முக்கியமான வேலையாம். ஒரே இடத்தில் தங்கி, நம்மை மட்டுமே சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது சுயநலமில்லையான்னு கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியலை. முதல்ல அழுகைவந்துச்சு… அப்புறம் யோசிச்சப்ப… அது சரின்னு தோணிச்சு.”

“- – – – – – -”

ஷாலு அமைதியாக இருந்தாள். அவளுக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சூர்யா தொடர்ந்தான். “இதைத்தான் நான், உனக்கும் சொல்ல நினைச்சேன் ஷாலு. சுண்டக்காய் ஆகட்டும் மரப்பாச்சி ஆகட்டும் அவங்களோட தேவை இன்னொரு இடத்திலையும் இருக்கும். அங்க அவங்க போவதுதான் சரி. அதே சமயம் அவங்களுக்கு நம்ம நினைப்பு வந்துச்சுன்னா… கண்டிப்பாக வந்து பார்ப்பாங்க. அந்த நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதே!” என்றான் சூர்யா.

சூர்யா சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும், மரப்பாச்சியைத் தேடிப் போய் இருக்கும், அப்பா, சித்தப்பா கையில் கிடைத்துவிடாதா… என்ற நப்பாசையுடன் அவர்களின் வரவுக்காகக் காத்திருந்தாள் ஷாலு.

*********

ஏலகிரியின் மலைகிராமம் ஒன்றில்…

“மயிலு… மயிலு..” என்று குரல் கொடுத்தவாறு வீட்டின் வாசல் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி, இறங்கினார் முருகன்.

“என்னப்பா…?” என்று உள்ளிருந்து வாசலுக்கு ஓடிவந்த மயிலுக்குப் பத்து வயதிருக்கும். இரட்டைச்சடைப் பின்னல் போட்டிருந்த அவள் ஒல்லியாக இருந்தாள்.

“அப்பா… உனக்கு என்ன கொண்டு வந்திருக்கேன்னு சொல்லு” என்று கையைப் பின்னாடி வைத்தபடியே கேட்டார்.

“முறுக்கு…”

“இல்லை…”

“அதிரசம்…”

“அதுவும் இல்லை…”

“கலர் பென்சில் கேட்டேனே… அதுவா…”

“ம்ஹூம்… இல்லை.”

“நீங்களே சொல்லிடுங்கப்பா…”

“மரப்பாச்சிப் பொம்மை” என்று அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த மரப்பாச்சியை அவளின் முகத்துக்கு நேராக எடுத்து நீட்டினார்.

“ஐ… கவுனு எல்லாம் போட்டிருக்கே… எங்கே இருந்துப்பா…” என்று ஆசையாக அதை வாங்கிப் பார்த்தாள்.

“கறந்த பாலை சொஸைட்டியில ஊத்தீட்டுச் சைக்கிளில் திரும்பி வரும்போது வானத்துல இருந்து பறந்து வந்து, என்னோட மடியில விழுந்துச்சும்மா… மொதல்ல அப்பா பயந்துட்டேன். சைக்கிளை நிப்பாடி, இறங்கிப் பாத்தால்… லுங்கியில மாட்டி இருந்துச்சும்மா… மரப்பாச்சின்னுத் தெரிஞ்சப் பின்னாடிதாம் பயம்போச்சு…”

தன் அப்பா சொன்னக் கதையை வியப்புடன் கேட்ட மயில், மரப்பாச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். அது இவளைப் பார்த்துச் சிரித்தது.

(முடிந்தது)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஆசிரியரின் பிற சிறார் நூல்கள்

 1. ஆமை காட்டிய அற்புத உலகம்
 2. சுண்டைக்காய் இளவரசன்
 3. புதையல் டைரி
 4. மரப்பாச்சி சொன்ன ரகசியம்
 5. சிங்கம் பல்தேய்க்குமா?
 6. சேர்ந்து விளையாடலாம்!
 7. யானை ஏன் முட்டை இடுவதில்லை?
 8. உட்கார்ந்தே ஊர் சுற்ற…
 9. தலைகீழ் புஸ்வாணம்
 10. பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
 11. மந்திரச் சந்திப்பு
 12. நான்காவது நண்பன் (மொழிபெயர்ப்பு)
 13. என்னதான் நடந்தது (மொழிபெயர்ப்பு
 14. எல்லைகள் (மொழிபெயர்ப்பு)
 15. ஆறு (மொழிபெயர்ப்பு)
This entry was posted in சிறுவர் இலக்கியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம் and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

 1. Sivamurugan Perumal says:

  அருமையான படைப்பு வாழத்துகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 2 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.