நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

-யெஸ்.பாலபாரதி

தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ இப்படியான குரல்களை உங்களில் பலரும் கேட்டிருக்கலாம். உண்மையில் எனக்கு இக்குரல்களைக் கேட்கும்போதெல்லாம் சிரிப்புதான் எழும்.

ஒரு குழந்தைக்கு கல்வியை சொல்லிக் கொடுக்கிறோம்; ஏதோ ஒரு அறிவுத் துறையை நாம் அறிமுகப்படுத்துகிறோம் என்றால், எப்படி அறிமுகப்படுத்துவோம்?

முதலில் அவர்கள் மழலையர் வகுப்புக்கு போகும்போது நாம் எண்ணும் எழுத்தும் சொல்லிக் கொடுக்கிறோம். பாடல்களின் மூலம் புதிய சொற்களையும் வார்த்தைகளையும் பழக்கப்படுத்துகிறோம். அதன் பிறகு வாக்கியங்கள், கூட்டல் கழித்தல், என வளர வளர ஒவ்வொரு படிநிலையிலும் பாடத்திட்டத்தின் அடர்த்தியை அதிகரித்துக் கொண்டே போகிறோம்.

இப்படியாக அக்குழந்தை கல்லூரி முடித்து வெளியில் வரும்போது, வளர்ந்த மனிதனாக, அந்த ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையில், நல்ல ஆழமான அறிவுள்ளவனாக வரவேண்டும் என்பது நம் கல்வித் திட்டத்தின் நம்பிக்கை. இது போன்ற ஒரு திட்டவட்டமான கற்பித்தல் ஒழுங்குமுறை இங்கே இலக்கியத்திற்கு உள்ளதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

சின்ன வயதில் ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம். அதன் பிறகு இலக்கியத்தின் தொடர்ச்சி எங்க வருகிறது குழந்தைகளுக்கு? பாடத்திட்டத்திலே ஆகட்டும் அல்லது வீட்டிலே ஆகட்டும் அதற்கான சூழலை நாம் கொஞ்சம் கூட கொடுப்பதே இல்லை.

என்னுடைய சிறு வயதில் சிறுகச்சிறுக சேமித்து, சிறார்களுக்கான மாதப் பத்திரிகைகளை வாங்கி இருக்கிறேன். என்னுடைய பள்ளி ஆசிரியர் சிறார் பத்திரிகைகள் பற்றி எல்லாம் வகுப்பில் பேசுவார். இது மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

எங்கள் தெருவில் இருந்து அடுத்த தெருவிற்கு சென்று கையில் இருக்கும் ஒரு இதழைக் கொடுத்து, அவர்களிடம் இருக்கும் இன்னொரு இதழைப் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். வீட்டிலும் அது போன்ற செயல்களை ஊக்குவித்தனர். என்னை எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, நூலகத்தில் உறுப்பினராக்கிவிட்டனர்.

அங்கிருந்து தொடர் வாசிப்பை கைக்கொண்டதால்தான் இன்று நான் இலக்கியம், பத்திரிக்கை என்று வாசிப்பு சார்ந்த துறைகளில் ஈடுபாட்டோடு வாழ முடிகிறது.

மழலையர் வகுப்பில் சொல்லித் தரும் சில பாடல்களைத் தவிர்த்து வேறெந்த கலை இலக்கிய அறிமுகமும் இல்லாது, சேனம் பூட்டிய குதிரை போல மதிப்பெண்களை நோக்கியே வெறியேற்றி வளர்க்கப்படும் ஒரு சிறுவன் அல்லது சிறுமி திடீரென பதினெட்டு அல்லது இருபது வயதானவுடன் இலக்கிய தாகம் கொண்டு வாசகனாகி விடவேண்டும் என்று எப்படி நம்புகிறோம்? எந்த போதி மரத்தின் அடியில் அவர்கள் அந்த ஞானத்தைப் பெற முடியும் என்பதுதான் எனக்கு எப்போதும் எழும் கேள்வி.

இலக்கியத்தைப் பற்றிய அறிதல் இல்லாத, அதில் ஈடுபாடு இல்லாத ஒரு சமூகம் நம் தமிழ்ச் சமூகம் என்று எல்லா நவீன இலக்கியவாதிகளுமே ஏதேனும் ஒரு கட்டத்தில் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். வளரும் பருவத்தில் ஒன்றுமே சொல்லிக் கொடுக்காமல் இருந்துவிட்டு, திடீரென நீ ஏன் இலக்கியம் படிப்பதில்லை என்று ஒரு மனிதனைப் போட்டு உலுக்கினால் அவரால் என்ன பதில் சொல்ல முடியும்?

குழந்தையாக வளரும்போதே நாற்றங்காலாய் இருக்கிற ஒரு இடத்தில் நாம் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கொடுத்து எடுத்தால்தான், அதை எடுத்து வயலில் நடும்போது அது நல்ல செழிப்பான பயிராக வளரும். நாற்றாக இருக்கையில் தரவேண்டிய ஊட்டச் சத்துக்களை தராது விட்டுவிட்டு, பின்னர் விளைச்சல் வரவில்லையென்று புலம்பிப் பயனில்லை. அதுபோலத்தான் இலக்கியமும் சிறு வயதிலிருந்தே படிப்படியாக, தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப் படவேண்டும்.  à®‡à®¤à®©à¯ முக்கியத்துவம் பற்றி மற்றவர்கள் அறியாமல் இருப்பது கூட எனக்கு ஆச்சரியமாக இருந்ததில்லை. சக இலக்கியவாதிகளே கூட சிறார் இலக்கியத்தை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.

அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இலக்கியத்தை சொல்லிக் கொடுப்பார்கள், அவர்களுக்கு வாசிப்பை ஊக்குவிப்பார்களே தவிர ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சிறார் இலக்கியம் என்ற ஒரு துறை தேவை எனும் எண்ணம் அவர்களுக்கே வருவது இல்லை. அது தான் பெரிய சிக்கல். தங்கள் வாசகர்களிடமும் சிறார் இலக்கிய தேவை குறித்து, அவர்கள் உரையாடுவதில்லை.

சிறார் இலக்கியம் என்ற அந்த நாற்றங்காலை வளப்படுத்துவதற்கு நாம் அனைவரும் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். இங்கே நான் இலக்கியவாதிகளை மட்டும் குற்றம் சொல்வதாக எண்ண வேண்டாம். ஆசிரியர்களும் பெற்றோர்களும், பள்ளிச் சூழல், வீட்டுச் சூழல் இரண்டிலும் குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்குத் தேவையான புத்தகங்களை உருவாக்கும் வண்ணம் நம் இலக்கியச் சூழல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் சிறார் இலக்கியத்தில் ஒரு சில பெயர்களே தட்டுப்படுவது மாறி, எல்லா இலக்கியவாதிகளும் இங்கும் இயங்க வேண்டும். அதற்கு சிறார் இலக்கியத்தை சற்று மாற்றுக் குறைந்த சரக்காக எண்ணும் இலக்கியவாதிகளின் மனப் போக்கும் மாற வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர்கள் எனும் இரு நிலையிலும் நின்று நாம் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளின் வாசிப்பார்வத்தை படிப்படியாக வளர்த்தெடுப்பதை மட்டுமே. பாடப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்து, அவற்றை அப்படியே காற்புள்ளி, அரைப்புள்ளி முதற்கொண்டு மாறாமல் தேர்வில் படியெடுத்து, மதிப்பெண்களை சுமக்க முடியாமல் சுமப்பது மட்டும் போதாது. அவை மட்டுமே நம் குழந்தைகளை அறிவாளியாகவோ, பக்குவமான மனிதனாகவோ மாற்றிவிட முடியாது என்பதை உணர வேண்டும்.

குழந்தைகள் சுயமாக சிந்திக்கும் திறன், படைப்பாற்றல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள நாம் உதவ வேண்டும். அதை விட முக்கியமாக பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும், அதில் நம் பெறுமதியையும் அவர்கள் உணரவும் வேண்டும்.  à®…தை உணரும் போது மட்டுமே உயர் விழுமியங்கள் கொண்ட வாழ்வை அவர்கள் அடைய முடியும். இவை எல்லாம் இலக்கிய அறிமுகத்தின் மூலமே சாத்தியப்படும்.

குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு கற்றுக் கொள்வதைக் காட்டிலும் நாம் செய்வதைப் பார்த்தே அதிகம் கற்றுக் கொள்வார்கள். சிறுவயதில் கேட்ட குரங்கும், குல்லா வியாபாரியும் கதை நினைவில் இருக்கிறதா? நம் முது மூதாதையினரான குரங்குகள் எப்படி குல்லா வியாபாரியைப் பார்த்தே போலச் செய்தனவோ, அந்தத் தன்மை மரபணுக்களின் மூலம் நமக்கும் வந்திருக்கிறது என்பதையே நரம்பியலில் கண்ணாடி நியூரான்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே நம் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த விரும்பினால் முதலில் நாம் அந்தப் பழக்கத்தைக் கைக் கொண்டிருக்கிறோமா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தினசரி சிறிது நேரமாவது நாமும் வாசித்து, நம் குழந்தைகளுக்கும் வயதுக்கு உகந்த புத்தகங்களை வாங்கித் தந்து வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். அல்லது அருகிலுள்ள நூலகங்களுக்கு அவர்களை அழைத்துப் போய் உறுப்பினராக்கி, வாசிப்பிற்கான வசதிகளை அளிக்கலாம். படி, படி என்று சொல்வதோடு அல்லாமல் அவர்கள் படித்த விஷயங்களை அவர்களையே சொல்ல வைக்கலாம். அதற்காக இலக்கிய வாசிப்பையும் இன்னொரு பாடம் போல ஆக்கி, மனப்பாடம் செய்ய வைக்க வேண்டியதில்லை. இயல்பாக வாசித்ததில் அவர்களின் புரிதல் என்ன என்பதை சொல்லச் சொல்லுவதன் மூலம் அவர்கள் வெறுமனே இயந்திரத்தனமாக வாசித்துச் செல்லாமல், வாசிக்கும் தகவல்களைச் செரித்து, தங்கள் சொந்தக் கருத்தாக மாற்றிக் கொள்ளும் வித்தை கைவரப் பெறுவார்கள்.

இப்படியான செயல்களின் மூலம்தான் வருங்கால சமூகத்தை அறிவுள்ள, வாசிப்புள்ள, பண்பட்ட சமூகமாக வளர்த்தெடுக்க முடியும். சிறார்களுக்கு வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவும் தேடலும் மட்டுமே பண்பட்ட சமூகக்குடிகளாக வளர்த்தெடுக்கும். அதற்கு இன்றே நாற்றங்கால்களுக்கு உரமிடும் வேலையைத் துவங்குவோம். குழந்தைகளுக்கு ஏற்ற இலக்கியப் படைப்புகளை உருவாக்கி, அதை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

(தீராநதி இதழில் வெளியானது. செப்.2022)

This entry was posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம் and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

  1. Rangarajan says:

    ஆஹா மேடம் .நானும் என் 6 வயது முதலே பத்திரிகைகள் படித்து நல்ல விஷயங்களை எழுதியவருக்கு பாராட்டு கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி இன்று வரை தொடர்கிறது. என் மகளை அவளின் 6 வயது முதல் 12 வயது வரை நூலகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்படுத்தினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over a year and a half old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.