மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 1]

முன்னுரை

அன்பான தம்பி, தங்கைகளே!

இந்த கதையின்வழி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஷாலினி என்ற சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. ஒருநாள் திடீரென அது பேசவும், ஆடவும் ஓடவும் செய்கிறது. ஷாலினி தோழி பூஜா என்பவளுக்கு ஒரு சங்கடம் நேர்கிறது. அதுவும் வெளியில் எல்லோரிடம் எளிதாகச் சொல்லிவிடமுடியாத பிரச்சனை. அவளுக்கு ஷாலுவின் மரப்பாச்சி உதவுகிறது.

இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல. நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணிதான். இதை வெறும் கதையாக கடந்துபோய்விட வேண்டாம். இது பற்றி, உங்கள் அம்மா அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும்.

மரப்பாச்சி உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் சாகசத்தைப் படிக்க, உங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறேன். எப்போதும் என் எழுத்துக்குத் துணை நிற்கும் மனைவி லஷ்மிக்கும், மகன் கனிவமுதனுக்கும் அன்பு!

இன்றுமுதல் (23.04.2022) இந்த கதையை நாட்டுமக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இனி இக்கதை மக்கள் சொத்து, இக்கதை அச்சு வடிவில் பலருக்கும் சென்று சேரவேண்டும் என்னும் எனது ஆசை நிறைவேறட்டும்! நன்றி

ஹாப்பி ரீடிங்!

தோழமையுடன்

யெஸ். பாலபாரதி

yesbalabharathi@gmail.com

++++++++++++++++++++++++++
1.



கடந்த வாரம் ஊருக்குப் போயிருந்த போது, பாட்டி தன்னிடம் கொடுத்த மரப்பாச்சி பொம்மையையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஷாலினி. பாட்டியின் சின்ன வயதில் அது அவருக்குக் கிடைத்தாம். இதனுடன் இருந்த இன்னொன்று தொலைந்துபோய்விட்டதென்றும், இதுவும் சமீபத்தில்தான் கிடைத்தது என்றெல்லாம் கூறியவர், கண்டிப்பாக உனக்கும் இதைப் பிடிக்கும் என்றபடியே எடுத்து நீட்டினார். அப்போது முதல் இவள் அதைப் பிரிய மனமில்லாமல் இருக்கிறாள்.

செம்மரக்கட்டையில் செய்யப்பட்ட பொம்மை அது என்று பாட்டி சொன்னார். மூக்கில் அருகில் வைத்து முகர்ந்து பார்த்தாள். சந்தன வாசனை ஏதும் வரவில்லை. அது சிவப்பு வண்ணத்தில் இல்லை. நல்ல அடர்கருப்பு வண்ணத்தில் இருந்தது.

அது ஒரு பெண் பொம்மை. அதன் சின்ன உருவம் ஷாலினியை மிகவும் கவர்ந்திருந்தது. அதை எப்போதும் தன்னுடனேயே வைத்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய மூக்கைப்போலவே அதற்கும் கூர்மையான மூக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டாள். அதற்கு அணிவித்திருந்த புடைவையைக் கழட்டிவிட்டு, பார்பி பொம்மையின் கவுனை அணிவித்திருந்தாள். இப்போது, அது பார்ப்பதற்கே இன்னும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

பொம்மையின் கை, கால், தலை எதையுமே அசைக்க முடியாது. இதை வைத்து எப்படி விளையாடுவது? பிளாஷ்டிக் பொம்மைகளை விட, இதுதான் நல்லது என்று பாட்டி சொன்னார். அசையாமல் இருக்கும் இதைவைத்து எப்படி விளையாடினார்கள் என்று கேட்டிருக்கலாமோ, யோசித்தபடியே… அந்தப் பொம்மையை மீண்டும் முன் பின் என்று ஆராயத் தொடங்கினாள்.

“ஷாலு..”

உள்ளிருந்து அம்மா அமுதா கூப்பிடும் சத்தம் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்.

“ஏய்… ஷாலு, கூப்பிடுறது கேக்கலையா… இங்கே வாடி..!”

“இதோ வாரேம்மா..” கையில் இருந்த பொம்மையை அப்படியே சுவர் ஓரமாய்ச் சாய்த்து வைத்துவிட்டு, எழுந்தவள். என்ன நினைத்தாளோ அதையும் தூக்கிக் கொண்டு உள் அறைக்கு ஓடினாள்.

“ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு.. இன்னும் என்னடி அந்த மரப்பாச்சியை வச்சுட்டு ஆராய்ச்சி..? இதுல கவுன் வேற மாட்டிவிட்டுட்டு… ஒருதரம் கூப்பிட்டா உடனே வரமாட்டியா?”

“—–”

“ம்… வாயத்திறக்காதே, இந்தா… தம்பி கைப் பிடிச்சு, இந்த ஹோம் ஒர்க்கை எழுதிகிட்டு இரு… அம்மாவுக்குக் கிச்சனில் கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடியே பென்சிலை ஷாலுவிடம் நீட்டினாள்.

“என்னோட ஹோம் ஒர்க்கை நான் தானே, எழுதுறேன். அதுமாதிரி இவனோடதை இவன் தானே எழுதனும்.. என்னைய ஏன் எழுதச் சொல்லுறீங்க..?”

“அவன் சின்னவன்டி.. நீயும் அவன மாதிரி இருந்தப்ப.. உன் கையைப் பிடிச்சு.. அம்மா தான் எழுதினேன்.. இப்ப நீ பெரிய பொண்ணாகிட்டல்ல… குட் கேர்ள் இல்ல… முரண்டு பண்ணாம தம்பிக்கு, சரி வேணாம்… அம்மாவுக்காக இந்த ஹெல்ப் பண்ணுடி தங்கம்! நீ டான்ஸ் கிளாஸ் போறதுக்குள்ள, அம்மா உனக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் பண்ணிட்டு வந்துடுறேன்.” என்று அம்மா தாஜா செய்ததும், மறுபேச்சில்லாமல் பென்சிலை வாங்கிக்கொண்டு, தம்பியின் பக்கம் அமர்ந்தாள்.

கையில் இருந்த மரப்பாச்சியை ஓரமாக வைத்துவிட்டு, அவன் கையில் பென்சிலைத் திணித்து, அவன் கையைப் பிடித்து, “ம்.. சொல்லிக்கிட்டே.. எழுதனும் என்ன?” என்றபடியே விடுபட்ட இடத்தில் இருந்து நோட்டில் எழுதத் தொடங்கினாள்.

“ஈ…”

“ஈ..”

“எப்…”

“எப்..”

“ஜீ…”

“ஜீ..”

“ஹெச்…”

“அச்..”

“அச் இல்லடா.. ஹெச்..”

“எச்..”

“இல்லடா… இப்ப நான் சொல்லுற மாதிரி சொல்லு. சரியா”

“—–”

“ஹா.. சொல்லு”

“ஹா..”

“ஹே.. சொல்லு”

“ஹே..”

“ம்.. இப்ப ஹெ… இச், ஹெச் சொல்லு..”

“ஹெ… இச்… எச்சு..”

“டேய்.. மண்டையில ஓங்கிக் கொட்டினேன் வீங்கிப் போயிடும்..” குரலைக் கடுமையாக்கிக் கொண்டு, தம்பி ஹரியை அதட்டினாள் ஷாலு.

இதற்காகவே காத்திருந்தவன் போலக் கைகால்களை உதறி, ரைட்டிங் டேபிளைத் தள்ளிவிட்டான். “ஹே….” என்று அழுதபடியே தரையில் படுத்துக்கொண்டு, உருளவும் ஆரம்பித்துவிட்டான். இவளுக்குப் பயம் வந்துவிட்டது.

“டேய்.. உஸ்.. உஸ்.. கத்தாதடா… அம்மா வந்தா எனக்கும் அடி விழும்டா..” என்று கெஞ்சினாள்.

‘ஓ! உனக்கு அடிவிழுமா? என்னையா விரட்டுகிறாய், பார்.’ என்று இன்னும் பலம் கொண்ட மட்டும் சத்தம் போட்டு அழத் தொடங்கினான். அவசரமாக ஓடிச்சென்று அறையின் கதவைச் சாத்திவிட்டு, ஓடிவந்தாள் ஷாலு.

“இப்ப எதுக்குடா.. அழுகிற.. நீ தப்பாச் சொன்ன.. நான் சரியாச் சொல்லிக்கொடுத்தேன். இதுக்கு யாரச்சும் அழுவாங்களா?”

ஷாலுவின் எந்தச் சமாதானத்தையும் ஏற்கும் நிலையில் அவன் இல்லை. “யே…” என்று அழும் சத்தத்தைப் பெரிதுபண்ணினான். கால்களை உதைத்துக்கொண்டு, மீண்டும் உருண்டான். அவன் விட்ட உதையில் அங்கிருந்த வாட்டர் பாட்டில் சரிந்து மூடி திறந்துகொண்டது. தண்ணீர் எல்லாம் கீழே கொட்டியது. தரையில் கொட்டிய தண்ணீர் அப்படியே பரவத்தொடங்கியது.

“ஐயோ.. மரப்பாச்சி” என்று அது நனைவதற்குள் எடுத்துவிட முனைந்தாள் ஷாலு. ஆனால் அதற்குள்ளாகத் தண்ணீர் படுக்க வைக்கப்படிருந்த மரப்பாச்சியை நனைத்தது.

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று மரப்பாச்சியில் இருந்து புகைக் கிளம்பியது. “சர்க்… புர்க்..” என்று கம்பி மத்தாப்பில் இருந்து வருவது போல.. சின்னச்சின்ன நெருப்புப் பொறிகள் தோன்றின.

அழுதுகொண்டிருந்த ஹரி, இதைப் பார்த்ததும் பயந்துபோய், பதறியடித்து எழுந்து அக்காவின் பின்னால் மறைந்துகொண்டான். என்ன நடக்கிறது என்பதை அறியாமல் திகைத்துப்போய், ஷாலுவும் பயந்துப் பின் வாங்கினாள்.

அங்கே தோன்றியப் புகையை அறைக்குள் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி, அறை முழுவதும் பரவவிட்டது. சிறிது நேரத்தில் நெருப்புப் பொறி வருவதும், புகை வருவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றுபோனது.

புகை விலக, விலக படுக்க வைத்திருந்த மரப்பாச்சி நிற்பது தெரிந்தது.

(Box news)

மரப்பாச்சி : செஞ்சந்தனம் அல்லது கருங்காலி போன்ற மருத்துவக் குணமுடைய, அரிதான மரங்களில் செய்யப்படும் ஆண், பெண் மனித உருவமுடைய பொம்மைகள் இவை. பொதுவாகவே சின்னஞ்சிறு வயதில் எது கிடைத்தாலும் வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கமுடைய குழந்தைகள் இதையும் வாயில் வைத்துக்கொண்டால் கெடுதல் விளையாது. இருபாலாரின் உடை, உடல் வேறுபாட்டைப் பற்றியும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக இவற்றைப் பாதுகாத்து வருவார்கள். பின்னாளில் கொலுவில் வீற்றிருக்கும் அலங்காரப் பொம்மையாக மட்டுமே மரப்பாச்சி மாறிப்போய்விட்டது. ************************************