மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 2]

ஷாலுவும், ஹரியும் அப்படியே உறைந்துப் போய் இருந்தார்கள். இவர்களின் முன்னால் அந்த மரப்பாச்சி பொம்மை குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தது. இருவரும் பயந்துபோய் இருந்தனர். அது அவர்களின் உடல் நடுக்கத்தில் தெரிந்தது.

மரப்பாச்சி நடப்பதைப் பார்த்ததுமே, வீறிட்டு கத்த நினைத்தார்கள். ‘ஐயோ.. அம்மா’ என்று அழைக்க நினைத்தனர். ஆனால், “ஐ…” என்று குரல் எழும்பியதும் மரப்பாச்சி அவர்களை நோக்கி, கை ஆட்டியது. அவ்வளவுதான் சத்தமிட முடியாமல் போனது. அறைக்கு வெளியே ஓடிவிடலாம் என்று முயன்றபோதும் முடியவில்லை. அப்படியே இருவரையும் உறையச்செய்து ஓர் ஓரமாக உட்கார வைத்துவிட்டது.

“நான் சொல்வதை நீங்கள் இருவரும் கேளுங்கள். நீங்கள் என்னைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. நான் ஒன்றும் செய்யமாட்டேன். நீங்கள் சத்தம் போடமாட்டேன் என்று சொன்னால்… உங்களைச் சுற்றி, நான் போட்டிருக்கும் மந்திரக்கட்டை அவிழ்ப்பேன். இல்லையெனில், இப்படியே இருக்க வேண்டியதுதான். உறுதியாகச் சத்தம் போடக்கூடாது சரியா?” என்று அவர்களைப் பார்த்து தனது கீச்சுக் குரலால் கேட்டது மரப்பாச்சி.

அசையமுடியாத போது எப்படிப் பதில் சொல்ல முடியும். சரி! ஒப்புக்கொள்கிறோம் என்பதைக் கண்கள் வழியேதான் தெரிவிக்க வேண்டும். ஷாலு விழிகளைத் திறந்து மூடினாள். ஹரி சைகை ஏதும் செய்யாமல் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சிறுவன் என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை போல. மரப்பாச்சி முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. மீண்டும் கையை உயர்த்தி ஏதோ முணுமுணுத்தது. மந்திரக்கட்டு அவிழ்ந்துவிட்டது.

இருவரும் கைகால்களை அசைத்துப் பார்த்தனர். அசைக்க முடிகிறது. வியப்புடன் அந்த மரப்பாச்சியைப் பார்த்தனர். இவர்களின் அருகில் வந்து கை நீட்டியது. இருவரும் கை குலுக்கினர். அதன் கை மரம் போல் இல்லாமல் மென்மையாக இருப்பதை உணர்ந்தாள் ஷாலு.

“மரம் தானே நீ… ஆனால் ஸாஃப்ட்டா இருக்கியே எப்படி..?”

“ஆமாம்… நான் பேசத்தொடங்கிவிட்டால் இப்படி ஆகிவிடுவேன்” என்றது.

“அதெப்படி… நீ பேசுற..” என்று கேட்டாள் ஷாலு.

“ம்… சொல்கிறேன். மரங்களுக்கு உயிர் உண்டு என்று படித்திருப்பாயே.. நான் அதற்கு ஒரு சாட்சி. எனது காடு செவ்வனம். ஆம்! செம்மரம் என்று அழைக்கப்படும் செஞ்சந்தன வகையைச் சேர்ந்தவள். நாங்கள் நினைத்தபோது உயிர்பெற்றுவிடும் சக்தி வாய்ந்தவர்கள். எங்கள் மருத்துவக் குணத்தினால் மனிதர்களுக்குப் பல விதங்களில் உதவி வந்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த மரப்பாச்சி பொம்மை. அதனால்; என்னைக் கண்டு நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என்றது மரப்பாச்சி.

அக்காவும் தம்பியும் விழிகளை இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரின் கண்களிலும் இப்போது பயம் குறைந்து, வியப்புத் தெரிந்தது.

“இப்பப் பயம் போயிடுச்சு… நீ செம்மரம்ன்னா… உனக்கு என்று ஏதும் பெயர் இல்லையா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் ஷாலு.

“ம்… இருக்கிறதே… செம்மரக்காட்டின் இளவரசி நான். என்னை எல்லோரும் அப்படித்தான் அழைப்பார்கள்”

“ஹா..ஹா… அது இல்லை. இப்போ என்னுடைய பெயர் ஷாலினி. ஆனால் என்னை ஷாலுன்னு கூப்பிடுவாங்க; கண்ணம்மான்னு கூப்பிடுவாங்க. இதோ இவன் என்னோட தம்பி, இவன் பெயர் ஹரி. இவனைப் பட்டப்பா, தங்கப்பான்னு எல்லாம் கூப்பிடுவாங்க. அது மாதிரி உன் பெயர் என்னன்னு கேட்டேன்?”

“ஓ… அப்படியா… எங்களிடம் அப்படிப் பெயர் வச்சு அழைக்கும் வழக்கம் எல்லாம் இல்லை. இப்படித்தான் அழைப்பார்கள்” என்றது இளவரசி.

“அப்படியா… சரி… இத்தனை நாளாய் மரப்பாச்சியாகத்தானே இருந்த… இப்ப மட்டும் எப்படி உனக்கு உயிர் வந்துச்சு.”

“நாங்க எப்ப நினைக்கிறோமோ.. அப்ப உயிர் பெற்றுவிடுவோம். அதுவரை மரமாகவே இருந்தாலும் சுற்றிலும் நடப்பதைக் கேட்டும் பார்த்தும் காலத்திற்கேற்ப புதுப்பித்துக்கொண்டே இருப்போம். என்னைக் கையில் வைத்திருப்பவர் யாராக இருந்தாலும் நல்ல குணம் வந்துவிடும். பொய் பேசமாட்டர்கள்.” என்று சொன்னது.

“என்னடி… ஆச்சு.. எழுதியாச்சா..?” அம்மாவின் குரல் கேட்டது.

“எழுதிக்கிட்டே இருக்கான்மா…!” என்று பதிலுக்குக் குரல் கொடுத்த ஷாலு; தம்பியின் பக்கம் திரும்பி, “டேய், சீக்கிரம் எழுதிடுடா” என்றாள்.

“போ… எனக்குக் கை வலிக்குது…”

“பென்சில் பிடிச்சு எழுதுறதுக்கே… கை வலிக்குதாக்கும். நீ அக்கா மாதிரிப் பெரியவனா ஆனபிறகு பேனா எல்லாம் பிடிச்சு எழுதனுமே… அப்ப என்ன செய்வ..? ப்ளீஸ்டா… எழுதிடு…”

“கை வலிக்குதுன்னு சொல்லுறேன்ல… போ…!”

“பொய் சொல்லாதடா… இந்தப் பென்சிலைப் பிடி…” என்று ஓர் அதட்டல் போட்டாள் ஷாலு.

“அவனைச் சத்தம் போடாதே ஷாலு. நிஜமாகவே அவனுக்குக் கை வலிக்கலாம்” என்று சொன்னது மரப்பாச்சி.

“அதெல்லாம் இல்லை. இவன் டூப்பு விடுறான்”

“நிஜமாத்தான் சொல்லுறேன்” என்றான் ஹரி.

“ஆமாம். அவன் பொய் பேசுவதாகத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் விரல்களின் பயிற்சிக்கு மண்ணில் எழுதிப் பழகச் சொல்வார்கள். ‘கிச்சு கிச்சுத் தாம்பாளம்’ என்று ஒரு விளையாட்டுக் கூட உண்டு. அந்த விளையாட்டில் விரல்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். அப்படிப் பலம் கிடைச்சதுன்னா… எளிமையாகப் பென்சில் எல்லாம் பிடிச்சு எழுதலாம்”

“இப்படி எல்லாம் விளையாட்டா… நான் கேள்விப்பட்டதே இல்லையே…?” என்று வியப்புடன் கேட்டாள் ஷாலு.

“அதுதான் சொன்னேனே… அந்தக் காலத்தில் இருந்தது. இப்ப எல்லாம் மறைஞ்சுப் போச்சு…” என்றது இளவரசி.

“இன்னுமாடி… எழுதிகிட்டு இருக்கீங்க…” சத்தம்போட்ட படியே அம்மா கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

(Box news)

நுண் இயங்குத் திறன் (ஃபைன் மோட்டர் ஸ்கில்ஸ்-fine motor skills) : விரல்களைக்கொண்டு சிறிய பொருட்களைப் பிடித்து வேலை செய்யும் திறனே நுண் இயங்குத் திறன் ஆகும். சட்டைப் பட்டன் போடுவது, பென்சில் பிடித்து எழுதுவது, நான்குவரிக் கோட்டுக்குள் எழுதுவது எனப் பல்வேறு செயல்களைச் செய்ய இந்தத் திறன் அவசியம். இத்திறனை வளர்க்க, மணலில் விரல்களைக்கொண்டு விளையாடுவது, விரல்களைக் கொண்டு எடை தூக்குவது போன்ற பயிற்சிகள் உதவும்.