மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 3]

கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதுமே மரப்பாச்சி அப்படியே அசைவற்று உரைந்து போனது.

“என்னடி.. இன்னுமா எழுது வச்சுகிட்டு இருக்க.. டான்ஸ் கிளாஸ் போகவேண்டாமா?” என்று உள்ளே வந்த அம்மாவின் மரப்பாச்சியைப் பார்த்தார்.

“எப்பப் பார் இதை வச்சுகிட்டு விளையாடிக்கிட்டு..” என்றபடியே மரப்பாச்சியை எடுக்கப்போனார் அம்மா. அதற்குள் பாய்ந்து அதை எடுத்து, ஓரமாக வைத்தாள் ஷாலு.

“ம்மா.. அது பேசுது” என்றான் ஹரி.

““எதுடா..”

“அக்கா வச்சிருக்கிற பொம்மை. அது பேசுது..”

“இல்லம்மா.. அவன் பொய் சொல்றான்” என்று அவசரமாக மறுத்தாள் ஷாலு.

“நெசம்மாம்மா.. அந்தப் பொம்மை பேசிச்சும்மா..” என்றான் ஹரி.

“அது எப்படிடா பேசும்… அது வெறும் மரக்கட்டைதான். பேட்டரி கூடப் போடமுடியாது. பிறகு எப்படிப் பேசும். பகல் கனவு காண்றியா?” என்ற அம்மா; “அதைக்காட்டுடி.. அவன்கிட்ட” என்றார்.

அவனிடம் மரப்பாச்சியை நீட்டினாள் ஷாலு. அதைக் கையில் வாங்கிப் பார்த்த ஹரி, முன்னும் பின்னுமாகப் பார்த்தான். குழப்பத்துடன், “பேசிச்சும்மா… வேணும்னா அக்கா கிட்ட கேளுங்க” என்றான்.

“மரப்பாச்சி எங்காச்சும் பேசுமா… கொடுடா” என்றபடியே அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள் ஷாலு.

“சரி..சரி.. சுண்டல் கிளறி வச்சிருக்கேன். ரெண்டு எடுத்து வாயில போட்டுவிட்டு, டிரசை மாத்திட்டு, நீ டான்ஸ் கிளாஸுக்குக் கிளம்பு” என்று ஷாலுவை அனுப்பிவிட்டு, ஹரிக்கு அருகில் அமர்ந்து அவனது நோட்டைத் திருப்பினார் அம்மா.

***

“நல்லவேளை, அம்மா வரும்போது நீ அசையாமல் இருந்துட்ட.. தொட்டுப் பார்த்திருந்தா.. கண்டுபிடிச்சிருப்பாங்க…!” என்று பெருமூச்சு விட்டாள் ஷாலு.

அவளின் கைப்பிடிக்குள் இருந்தது, மரப்பாச்சி இளவரசி. “அவ்வளவு சீக்கிரத்தில் நான் மாட்டிவிடுவேனா என்ன? எனக்கு உன்னைப் பிடித்திருந்தது. அதனால் உன்னிடம் பேசினேன். ஆனால் உன் தம்பி இப்படிச் செய்வான் என்று நினைக்கவே இல்லை.” அதன் குரலில் வருத்தம் தெரிந்தது.

“ஆமாம்ப்பா… நானும் கூட ரொம்பவே பயந்து போயிட்டேன். இனிமேல் அவன் முன்னாடி நீ பேசாமலேயே இரு. அதுதான் நல்லது.”

“அதுவும் சரிதான். நீ மட்டும் இருந்தால் பேசுவேன். இல்லாட்டி நீ சொன்னால் பேசுவேன்” என்று சொன்னது இளவரசி. அதனுடன் பேசியபடியே நடன வகுப்பு நடக்கும் மண்டபத்தை அடைந்தாள் ஷாலு.

இவள் வீடு இருக்கும் அதே தெருவில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. கோவிலை ஒட்டி சின்னதாக ஒரு திறந்தவெளி மண்டபமும் இருந்தது. அந்த மண்டபத்தில்தான் நடனவகுப்பு நடக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் என்று வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடைபெறும். தனித்தனி குழுக்களாகப் பல சிறுமியர் அங்கே நடனம் கற்க வருவர்.

சில சமயம் நடன ஆசிரியை வர, தாமதம் ஆகும்போது, ஏற்கனவே நடனம் கற்று, அரங்கேற்றம் செய்த அக்காக்களில் யாரவது ஒருவர் இவர்களுக்கு வகுப்பு எடுப்பார்கள். ஷாலு மண்டபத்தினுள் நுழையும்போதே பார்த்தாள். இன்று இன்னும் ஆசிரியர் வரவில்லை. நந்திதா அக்காதான் அடவு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தனது ஷோல்டர் ஹேண்ட் பேக்கை மண்டபத்தின் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அதன்மேல் மரப்பாச்சியைப் படுக்க வைத்து, “இங்கேயே இருந்து வேடிக்கை பார்த்துக்கோ… நான் கிளாஸ் முடிஞ்சு வந்து உன்னை எடுத்துக்கிறேன்” என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ஓடினாள் ஷாலு.

மண்டபத்தின் ஒரு பக்கத்தில் டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த, சின்ன நடராஜர் சிலைக்கு முன் அபிநயம் பிடித்து, வணக்கம் வைத்து விட்டு, ஆடிக்கொண்டிருந்த மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டாள்.

இவளைப் பார்த்த நந்திதா, சைகையால் அழைத்தாள். இவள் அருகில் போனதும், “அங்க பாரு, உன் பிரண்டு… வந்ததுல இருந்து தனியாவே உட்கார்ந்துகிட்டு இருக்கா. பிராக்டீஸ் பண்ணவும் வர மாட்டேங்கிறா போய்… அவளைக் கூப்பிட்டுட்டு வா…” என்றாள்.

நந்திதா காட்டிய பக்கம் அப்போதுதான் பார்த்தாள் ஷாலு. அங்கே மண்டபத்தின் தூணில் சாய்ந்தபடி, ஏதோவொரு சிந்தனையில் அமர்ந்திருந்தாள் பூஜா.

ஷாலுவும் பூஜாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். ஒரே வகுப்புதான் என்றாலும் பிரிவு வேறு. இவளின் வீடு இருந்த அடுத்த தெருவில்தான் அவளின் வீடும் இருந்தது. ஷாலு, பூஜாவின் அருகில் சென்றாள். ஆனால் அவளோ, இவளை கவனிக்கக்கூட இல்லை. மண்டபத்தின் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

ஷாலு, பூஜாவின் தோளில் கை வைத்து உலுக்க நினைத்து, அவளைத் தொட்டாள். அவ்வளவுதான். சடக்கெனப் பதறியபடி விலகிப்போனாள் பூஜா. இவளைப் பார்த்த பின், தொட்டது ஷாலு என்பதை அறிந்ததும் கொஞ்சம் ஆசுவாசமானாள்.

“ஏய்… நான்தான்டி… பயந்துட்டியா, சரிவா பிராக்டிஸுக்கு போவோம்.” என்று அழைத்தாள் ஷாலு.

“இல்லடி.. கொஞ்சம் முடியலை.”

“ஏன்டி.. என்ன ஆச்சு?”

“கொஞ்சம் தலை வலிக்குதுடி… நீ போய்ப் பிராக்டீஸ் பண்ணு. நான் லேட்டா வந்து ஜாய்ண்ட் பண்ணிக்கிறேன்” என்றாள் பூஜா.

“ஸ்கூல்லையும் பார்த்தேன்; ரெண்டு மூணுநாளா ஒரு மாதிரியாவே இருக்கியேடி… என்ன ஆச்சுடி?”

“தலைவலின்னு சொல்லுறேன்ல… நீ போடி… போ. நான் வாரேன்” என்றாள் பூஜா. இவள் எதுவும் பேசாமல் நந்திதாவிடம் வந்து, “அவளுக்குத் தலை வலியா இருக்காம்க்கா… அப்புறமா வாரேன்னு சொல்லிட்டா” என்று சொல்லிவிட்டு, ஆடிக்கொண்டிருந்த பிள்ளைகளின் வரிசையில் போய்ச் சேர்ந்துகொண்டாள்.

(Box News)

பரதநாட்டியம்: பல ஆண்டுகளுக்கு முன், கூத்து, சதிர் (அ) சதிராட்டம், தாசி ஆட்டம் எனப் பலப் பெயர்களில் அழைக்கப்பட்டது. இசையும் நடனத்தையும் பிரிக்கமுடியாது. இதில் மூன்று பிரிவுகள் முக்கியமானவை. நிருத்தம், நிருத்தியம், நாட்டியம். அதாவது உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தாளக்கட்டுடன் மட்டுமே ஆடுவதை நிருத்தம் என்றும், உணர்ச்சிகளும் அபிநயங்களும் கலந்து ஆடுவதை நிருத்தியம் என்றும் உயிர்களைக் கதாபாத்திரமாக்கி, இசையுடன் நடித்துக் காட்டுவதை நாட்டியம் என்றும் அழைப்பர். தென்னிந்தியாவிற்கான தனிப்பட்ட நடன முறைகளில் இதுவும் ஒன்று.