மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 4]

நடன வகுப்பு முடிந்தது. சுவரில் சாய்ந்து ஓரமாக அமர்ந்திருந்த பூஜாவை அழைத்துக்கொண்டு, மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள் ஷாலு. ஷாலுவின் ஷோல்டர் பேக் அவளின் முதுகில் சவாரி செய்தது. மரப்பாச்சி பொம்மையைக் கையில் வைத்திருந்தாள். பூஜாவும் தனது ஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டி இருந்தாள். மறுகையில் அவளது சாப்பாட்டுக்கூடை இருந்தது.

“ஆமா… இன்னிக்கு சுடிதார் போடாமல், ஸ்கூல் யூனிபார்ம்லயே ஏண்டி வந்துட்ட…” என்று கேட்டாள் ஷாலு.

“அதுவா… ம்…” என்று சிறிது யோசித்த பூஜா, “ஸ்கூல் வேன் வந்ததே லேட்டு, இதுல சுடிதார் மாத்திட்டு கிளாஸுக்கு வர இன்னும் லேட் ஆகிடும்னுதான் வீட்டுக்குப் போகாமல் நேரா இங்கே வந்துட்டேன்.” என்றாள்.

“ஏண்டி… நானும் அதுலதானே வந்தேன். உனக்கு நிஜமாவே தலைவலிதானா? இல்ல, யூனிபார்ம்ல வந்ததுக்கு, நந்திதா அக்கா ஏதாச்சும் சொன்னாங்களா…? கொஞ்சநாளாவே உன் மூஞ்சியே சரியில்லை. வேனில் வரும்போதும் கூடப் பேசுறதில்லை. என்ன ஆச்சுடி?” என்று கேட்டாள் ஷாலு.

“நிஜமாவே தலைவலிதாண்டி…”

“அப்படின்னா… சரி! வேணும்னா, சாயங்காலம் உங்க அம்மா ஆபிஸ் விட்டு வந்ததும் டாக்டரைப்போய்ப் பாருடி. ஸ்கூல் போர்டுல எழுதுறத படிக்க முடியுதுல்ல? கண்ணுல ஏதுனா கோளாறாக இருந்தாலும் அடிக்கடி இப்படித் தலைவலி வரும். ஊரில் இருக்குற என்னோட கசின் சூர்யாவுக்கும் இப்படித்தான் தலைவலி வந்துகிட்டே இருந்துச்சாம். கண் டாக்டரைப் பார்த்து, ‘ஐ டெஸ்ட்’ எல்லாம் செஞ்சு, இப்ப கண்ணாடிப் போட்டிருக்கான். கண்ணாடி போட்டதுக்கு அப்புறம் தலைவலியே இல்லைன்னு சொன்னான்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லடி… கொஞ்சம் தொணத் தொணக்காமல் இருக்கியா, தலைய வேற வலிக்குது. அமைதியா வாயேன்.” என்று எரிச்சலாகச் சொன்னாள் பூஜா. இவள் மவுனமானாள்.

ஷாலுவிற்கு வியப்பாக இருந்தது. பூஜாவின் இயல்பு இது இல்லை. அவளே எப்பவும் பேசிக்கொண்டே இருப்பவள். அவள் அமைதியாக இருக்கிறாளே எனப் பேசப்போய், இப்போது கோபப்படுகிறாளே என்று யோசித்தபடி நடந்தாள் ஷாலு. அவளது மௌனம் என்னவோ போல் இருந்தாலும் ‘சரி இனி நாமாக எதுவும் கேட்கக்கூடாது. அவளாகப் பேசட்டும்.’ என்று நினைத்துக் கொண்டாள் ஷாலு. கொஞ்சதூரம் போனதும்,

“ஆபிஸுல இருந்து எங்க அம்மா வர்ற வரைக்கும் நான்.… உங்க வீட்டுல வந்து இருக்கட்டுமா?” என்று கேட்டாள் பூஜா.

“வாயேன்… ஆனால் நீ எப்பவும் உன் வீட்டுக்குக் கீழே இருக்கிற அந்தத் தாத்தா வீட்டுக்குத்தானே போவ…” என்று கேட்டாள் ஷாலு.

“ஆமாம். ஆனா இனிமே அங்க போகவேணாம்னு பார்க்கிறேன். எனக்குப் பிடிக்கலை” என்று சொல்லும்போதே பூஜாவின் குரல் கம்மியது.

“ஏய்…என்னடி… திடீர்னு அழுவுற மாதிரி ஆகிட்ட” என்று ஷாலு கேட்டதும், ”எதுவும் கேட்காதே” என்று கோபமாகச் சொன்னாள் பூஜா.

“சரி விடுடி.. எதுவும் கேட்கலை.”

வீடுவந்து சேரும்வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

**

அந்த அறைக்குள் ஷாலுவும் பூஜாவும் மட்டும் இருந்தனர். ஷாலுவின் அம்மா அமுதாவும். தம்பி ஹரியும் ஹாலில் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர். அம்மா கொடுத்துவிட்டுப்போன, சுண்டல் கிண்ணம் இருவரின் முன்னாலும் இருந்தது.

“இப்படியே பேசாம உட்கார்ந்திருந்தா என்னடி அர்த்தம். ஏன்னு தானே கேட்டேன். சொல்லுறதா இருந்தாச் சொல்லு. வேணாட்டிப்போ… நான் ஒன்னும் கேக்கலை. ஆனா இந்தச் சுண்டலைச் சாப்பிட்டுடு. இல்லாட்டி இதையும் என் தலையில கட்டிடுவாங்க, எங்க அம்மா” என்றாள் ஷாலு.

பூஜா எதுவும் பேசாமல், தன் அருகில் இருந்த சுண்டல் கிண்ணத்தை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள். தன்னுடைய பங்கு சுண்டலையும் மரப்பாச்சி இளவரசியைத் தூக்கிக்கொண்டு, அறையின் இன்னொரு பக்கமாகத் தள்ளிப் போய் அமர்ந்துகொண்டாள் ஷாலு.

அவள் போவதைப் பார்த்த பூஜா, அப்போதுதான் மரப்பாச்சியைக் கவனித்தாள். “ஏய்.. அது என்னடி.. புதுசா இருக்கு?” என்று கேட்டாள் பூஜா.

“ம்… போனமுறை ஊருக்குப் போனபோது, என்னோட தாத்தா கொடுத்த மரப்பாச்சிப் பொம்மை” என்றாள் ஷாலு.

“மரப்பாச்சிப் பொம்மையா… கவுன் எல்லாம் போட்டு… பார்க்கவே நல்லா இருக்கு ஷாலு. எங்கே கொடு பார்க்கலாம்” என்று இவளருகில் எழுந்துவந்தாள் பூஜா.

அவள் கையில் மரப்பாச்சியைக் கொடுத்துவிட்டு, ஷாலு அமைதியாகத் தன்னுடைய சுண்டலைச் சாப்பிடத் தொடங்கினாள். மரப்பாச்சிப் பொம்மையை வாங்கிப் பார்த்தவள், அதன் மூக்கைத் தொட்டுப் பார்த்தாள். “இது பொம்மை மாதிரியே இல்லடி. நிஜமான ஆளு மாதிரியே இருக்கு. இது மூக்கு, கை எல்லாம் தொட்டுப்பார்த்தா சாஃப்டா இருக்கிற மாதிரியே இருக்கு”

“ஆமாம்… அப்படித்தான் இருக்கு. சரி… சரி, அந்தப் பொம்மையைக் கொடு, நான் கேட்டா மட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கிற” என்று பூஜாவின் கையில் இருந்த மரப்பாச்சியை வாங்கிக்கொண்டாள்.

சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது.

“சொல்லலாமா… வேண்டாமான்னு தெரியல ஷாலு. எப்படிச் சொல்லுறதுன்னும் தெரியல.” என்ற பூஜா. சிறிதுத் தயக்கத்திற்குப் பின், “எங்க வீட்டுக்குக் கீழ இருக்குறவங்கள உனக்குத் தெரியும் தானே..?” என்று கேட்டாள்.

“ஆமா… ஒரு தாத்தாவும் பாட்டியும் இருக்காங்க.”

“அவங்க நல்லவங்க இல்லடி….”

“நல்லவங்க இல்லையா? அப்படின்னா அவங்க ரெண்டுபேரும் கெட்டவங்களா? என்ன சொல்லுற?”

“அந்தப் பாட்டி இல்லடி.. அந்தத் தாத்தாதான்.”

“தாத்தாவா?”

“ஆமாண்டி.. அவருதான்.” என்றபோதே பூஜாவின் கண்கள் கலங்கின.

“ஏண்டி என்னாச்சு?”

“—–”

“நீ ஏன் அடிக்கடி சைலண்ட் ஆகிடுற… உன்னைப் பேச வைக்கிறதுக்கு என்னிடம் ஒரு மந்திரம் இருக்கு” என்ற ஷாலு, “மரப்பாச்சி இளவரசியே… உயிருடன் வா. வந்து, பூஜாகிட்ட ஏன் அழுகிறான்னு கேளு” என்றாள் ஷாலு.

ஷாலுவின் செயல்கள் மர்மமாக இருக்கவே, அவளை வினோதமாகப் பார்த்தபடி, கண்களைத் துடைத்தாள் பூஜா.

ஷாலுவின் கையில் இருந்த மரப்பாச்சித் தன் கை, கால்களை அசைத்தது.

அதிர்ச்சியில் ஆவென வாயைத்திறந்தாள் பூஜா.

Box news

பார்வைக் குறைபாடு: கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடுவதைப் படிக்க, பார்த்து எழுதச் சிரமமாக இருந்தாலோ, அல்லது தொடர் தலைவலி இருந்தாலோ கண்பார்வையில் குறைபாடாக இருக்கலாம். கிட்டப்பார்வை (கிட்டத்தில் உள்ளது மட்டும் தெரியும், தூரத்தில் உள்ளது தெரியாது) அல்லது தூரப்பார்வை (தூரத்தில் உள்ளது தெரியும் கிட்டத்தில் உள்ளது தெளிவாகத் தெரியாது) குறைபாடாகவும் இருக்கலாம். இதற்குக் கண்ணாடி போட்டுக்கொண்டால் சமாளித்துவிடலாம். இது போன்ற சிக்கல்கள் ஏதாவது உங்களுக்கு இருந்தால், வீட்டில் அம்மா, அப்பாவிடம் சொல்லுங்கள்.