சிறார் இலக்கியத்திருவிழா -2023

பள்ளிக்கல்வித்துறையின் ஏற்பாட்டில் சிறார் இலக்கியத்திருவிழா-2023 நடந்துவருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவியரை சென்னைக்கு அழைத்து வந்து, ஆறு நாட்கள் தங்க வைத்து, சென்னையைச் சுற்றிக் காட்டி, எழுதுவதற்கும் உரைவீச்சு நிகழ்த்தவும் பயிற்சிப்பட்டறை நடத்தப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாணவர்களிடையே உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனது உரையினூடாக உருவக்கேலி, குறைபாட்டை வைத்து கேலி செய்வது போன்ற செயல்கள் கூடாது என்று கூறினேன். அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சமூகத்தில் வாழும் சகல உரிமைகளும் உண்டு என்பதை நாம் மறக்கலாகாது என்றும் பதிவு செய்தேன். நம்மால் இயன்ற அளவு மாற்றுத்திறன் உடைய சக மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்தேன்.

உரை முடிந்ததும் வேக வேகமாக சில மாணவர்கள் என்னிடம் ஓடிவந்து கை குலுக்கினர். அதில் ஒரு பாப்பா, “சார், மாற்றுத்திறனாளிகள் பற்றி இத்தனை பேர் மத்தியில் பேசியதிற்கு மிகவும் நன்றி சார்! எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். அவனும் மாற்றுத்திறனாளிதான். நீங்கள் சொன்னதை கேட்டபோது எனக்கு உண்மையே அழுகை வந்துவிட்டது.” என்று கூறினார். அதேபோல இன்னொரு சிறுமியும் “சார், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் இத்தனை தடைகளும், துயரங்களும் இருப்பது எங்களுக்கு இதுநாள் வரை தெரியவே இல்லை. இனி நாங்கள் அவர்களுக்கு எங்களால் ஆன சந்தர்ப்பத்தில் எல்லாம் உதவுவோம்.” என்று கூறினார்.

விதை பரவுதலில் காற்றின் மூலம் பரவுவதும் ஒரு வகை. வேலிப்பருத்தி போன்ற சில தாவரங்கள் தங்கள் விதைகளை காற்றில் பரவச் செய்வதன் மூலம் வெவ்வேறு இடங்களில் முளைக்க முயலும். ஆனால் அதில் வெற்றி சதவீதம் மிகக் குறைவு என்பதால், கொத்துக் கொத்தாகக் காய்த்து, பறக்க ஏதுவான பஞ்சு போன்ற அமைப்புடன் கூடிய ஏகப்பட்ட விதைகளைக் காற்றில் செலுத்தும். அப்போதுதான் அதில் ஒன்றிரண்டாவது உயிர் பிழைக்கும் என்ற கணக்கீட்டில் இயற்கை செய்துதரும் சாமர்த்தியமான ஏற்பாடு இது. விழிப்புணர்வு பரவலாக்கமும் அது போலத்தான். போய்ச் சேரும் மனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் என்பதாலேயே, வாய் ஓயாமல், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இவ்விஷயங்களைப் பேசியபடியே இருக்கிறேன். இன்று நல்ல ஈர நிலங்கள் சிலவற்றில் அவ்விதைகள் விழுந்துவிட்டன என்று புரிந்த போது எனக்கும் கூட கண்கள் பனித்தன. அக்குழந்தைகளிடம் அதைக் காட்டாமல் சமாளித்துக் கொண்டேன். மிகுந்த நிறைவுடன் முடிந்த நாள் இன்று.

+++++++++