நூல்: கையறுநதி
ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்

வெளியீடு : கடல்வெளி பதிப்பகம், தொடர்புக்கு: 24332924

விலை : ரூ 220/-

கையறுநதி: நாவல் மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு தந்தையின் தன் வரலாற்று பக்கங்கள்

எப்போதும் படிப்பது போல இந்த நூலையும் என்னால் ஒரே மூச்சில் படித்துமுடித்து முடியவில்லை. சில இடங்களில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். சில அத்தியாயங்களில் என் கண்கள் கலங்கி, எழுத்துகள் மறைந்தன. மனத்திற்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. நூலை மூடிவைத்தேன். ரத்தக்கொதிப்பு உயர்வதை உணரமுடிந்தது. மென்நடை பயின்று சமநிலைக்கு வந்தேன். அன்று முழுக்க நூலைத்தொடவே இல்லை. வைத்துவிட்டு, மறுநாள் எடுத்தேன். மீண்டும் மூடிவைத்தேன். பழையபடி பாதிப்பு. மீண்டும் அதே விஷயங்கள். இப்படியாக 10 நாட்களுக்கு மேல் எடுத்து படித்துமுடித்தேன்.

ஒருகாலத்தில் உடல், மன ஊனங்கள் என்பது கடவுளின் கோபம், நாம் செய்த முன்வினைப் பயன் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டன. எனவே பொது சமூகத்திற்கு ஊனமுற்ற மனித உயிர்களைக் கையாள்வது ஒரு விதத்தில் எளிதாக இருந்தது. அவர்களை விலங்குகள் போல, அல்லது அதைவிடவும் கீழாக உயிர் வாழ அனுமதிப்பதே பெருந்தன்மை என்று நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ள முடிந்தது.

ஆனால் இன்றைய நவீன உலகில், எல்லா மனிதர்களுக்கும் மரியாதைக்குரியதொரு வாழ்வை வாழும் உரிமை உண்டு என்ற எண்ணம் வந்த பின்னர், சமூகம் புற ஊனங்கள் விஷயத்தில் மேம்பட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் கூட நம்மால் மனம் அல்லது மூளையின் சிக்கல்களை முழுதாக சுருளவிழ்த்துப் பார்த்துவிட முடியவில்லை என்பதால் மனரீதியிலான பாதிப்புகள் மனித சமூகத்தை தொடர்ச்சியாக அலைக்கழித்து வருகிறது எனலாம்.

எனவே ஒரு குழந்தைக்கு மன வளர்ச்சியில் ஏதேனும் சிக்கல் என்றாலோ, வளர்ந்த மனிதர்களுக்கு மனநல பாதிப்புகளோ ஏற்பட்டுவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முதன்மை உறவினர்களான பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத் துணைவர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்படும் பதற்றம் சொல்லால் விளங்க வைக்கக் கூடிய ஒன்றல்ல.

மற்ற நிலைகளில் இருந்து ஒரு மனநல பாதிப்புடைய நோயரைப் பார்த்துக் கொள்வதைவிடவும் துயர் மிகுந்தது பெற்றோராக இருந்து அல்லலுறும் நம் பிள்ளையைப் பேணுவது.

மனநல பாதிப்பு, மன பிறழ்வு, மூளை வளர்ச்சியின்மை என என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையையும் இச்சமூகம் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் அது எங்களுக்கு குழந்தை. எங்களின் குழந்தை.

இச்சமூகம் ஏற்படுத்தும் காயங்கள் கணக்கிலடங்கா… உறவுகளாகவே இருந்தாலும் சீண்டிப் பார்ப்பதில் தொடங்கி, உச் கொட்டி ஏளனம் செய்வது வரை பலவிதமான சீண்டல்களை செய்துகொண்டே இருப்பர். அந்த வலியை, இப்படியான ஒரு குழந்தையின் பெற்றோராக இருப்பாரால் தான் சரியாக புரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் முடியும்.

இப்படியான நூல்கள் தமிழில் நிறைய வரவேண்டும். அப்போதுதான் இச்சமூகம் விழிப்புணர்வு அடையும். மனப்பிறழ்வு என்றால் சினிமாவிலும் கதைகளிலும் நாடகங்களிலும் மூலமாகவும் நம்மில் பலரும் அறிந்துகொண்ட செய்திகளில் தவறானவற்றை தூக்கி எறியவும், சரியானதை அறிந்துகொள்ளவும் இந்நூல் துணை செய்யும்.